என்று தணியும் இந்த கொலைஞரின் தாகம்.

எஸ்.எம்.எம் பஷீர்-

"அக்கறைப்படவேண்டிய விடயங்கள்பற்றி நாங்கள் மௌனம் சாதித்தால் அந்த நாள் எங்களுடைய வாழ்க்கை முடிவிற்கான ஆரம்பமாகும்"
                                                                         மாட்டின் லூதர் கிங்
ஞாயிற்றுக்கிழமை சுமார் 7.30 மணியளவில் மருதமுனை மஸ்ஜிதுல்  மஸ்சிதுல் கபீர் பள்ளிவாசல் வீதியில் இரவுத் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பியவுடன் தனது மகளுடன் வீட்டிற்கு அண்மையிலுள்ள கடைக்கு மோட்டார் பைசிக்களில் சென்ற மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி இயக்குனரும் பொலிஸ் அத்தியட்சகருமான எச்.எல் ஜமால்தீன் இரண்டு இனவெறிகொண்ட புலிப்பயங்கரவாதிகளால் நித்தாட்சன்யமாக கொல்லப்பட்டுள்ளார். என்ற செய்தி எனது காதுகளில் இடியாய் வீழ்ந்தது.


ஏனெனில் இவர் எனது பல்கலைக்கழக நண்பர்.  முஸ்லிம் சமூகத்தின் உயர்கல்விகற்ற, உயர் பதவிவகித்த மருதமுனையின் ஒரு மைந்தன். இவருடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அறிமுகமான காலத்தில் பொலிஸ் இன்ஸ்பெக்டராக வர வேண்டுமென்னும் லட்சியத்தினைக் கொண்டிருந்தவர். உதைபந்தாட்டத்தின்மீது அளவில்லாப் பிரியமும் , அதற்காக  தினசரி பயிற்சியும் மேற்கொண்டவர். இறந்த தினத்தன்றும் உதைபந்தாட்டம் விளையாடி விட்டுத்தான் அவர் வீடு திரும்பியிருந்தார்.

இவரது மறைவு கிழக்கிலங்கை உதைபந்தாட்டப் பிரியர்களுக்கும்; இவர் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட தலைவராக இருந்தபோது மறைந்தது எத்தகைய இழப்பு என்பதனை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எத்தனையோ தனக்கு ஆபத்தான சந்தர்ப்பங்களை எல்லாம் தாண்டி உயிர் பிழைத்து தனக்கான பாதுகாப்பாளர்களையும் தள்ளிவைத்து துணிச்சலாக எவ்வாறு அன்று அவர் எனக்கு மாணவராக தெரிந்திருந்தாரோ , அதே துணிச்சலுடன்தான் இறுதிவரை வாழ்ந்திருக்கின்றார். இவரது கொலையினை அடுத்து பல்வேறு ஊகங்கள் கிளம்பின.

அதில் ஒன்று புலிகள் அல்லாது வேறு ஒரு ஆயதபாணிகள்தான் செய்திருக்கவேண்டுமென்பது, இந்த ஊகம் அரசியல்சார்பு நிலையில் உலாவவிடப்பட்டது என்பது தெளிவாகியது. சம்பவம் நடந்த அன்று இரவு இக்கொலையில் சம்பந்தப்பட்ட இரு புலிக் கொலைஞர்கள் இன்னுமொரு முஸ்லிம் மோட்டார் பைசிக்களில் சென்ற பயணியுடன் சறுகலாக மோதியபோது அவரையும் அங்கு காணப்பட்ட சிலரையும் மிரட்டுவதற்காக ஆகாயத்தில் துப்பாக்கி வேட்டினைத் தீர்த்துவிட்டு ஓடித் தப்பியுள்ளார்கள்.

இவர்கள் இருவரும் தமிழ் புலிக் கொலைஞர்கள். இவர்கள் அவரது மகளைத் தள்ளிவிட்டு மார்பில் சரமாரியாக சுட்டுள்ளார்கள். இந்தக் கொலை முஸ்லிம்கள்மீதான புலிப்பயங்கரவாதிகளின் நீண்ட தொடர் கொலைகளின் அங்கமாக உள்ளது. முஸ்லிம் சமூகத்தினரில் அரச உயர்பதவிகள் வகிப்போர், கல்விமான்கள், புத்திஜீவிகள், காவல்துறையினர் என சமுகத்தின் தூண்களாக விளங்குபவர்களை கொன்றொழித்து கிழக்கிலே இடம்பெயர்க்கமுடியாமல்போன முஸ்லிம்களை அச்சுறுத்தி வைக்கின்ற முயற்சியில் புலிகள் இன்னும் சளைக்கவில்லை என்பதனை இந் நிகழ்ச்சி கோடிட்டுக் காட்டுகின்றது.

மறுபுறம் முஸ்லிம்களின்மீது இத்தகைய மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை புலிகள் தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொண்டபோதும் முஸ்லிம் சமூகம் இந்த இனவிரோதப் பயங்கரவாதிகளுக்கு எதிராக இவர்களை அழிப்பதற்காக முற்பட்டிருக்கின்ற சக்தியுடன் சமரசம் செய்துகொள்ளாமல் கற்பனைவாத அரசியலில் பயணம் செய்வதுபோல் புலப்படுகின்றது. முஸ்லிம்கள் காவல்துறையில் இணைந்து கொள்வதனை தடுப்பதற்காக எச்சரிக்கை செய்கின்ற செயற்பாடுகளை செய்வதில் சகட்டுமேனிக்கு அனைத்து இயக்கங்களும் ஏற்கனவே செயற்பட்டிருக்கின்றன. 17.01.1989ம் ஆண்டு கல்முனை, சம்மாந்துறை, காரைதீவு, பொத்துவில், அக்கரைப்பற்று, சவளைக்கடை பொலிஸ் நிலையங்கள் உப பொலிஸ் நிலையங்கள் இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் தாக்கப்பட்டு முஸ்லிம் உத்தியோகஸ்தர்கள் 39 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 52தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் தப்பிய ஒரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்சுதீன் என்பவர் மாத்திரமே. இவ்வுத்தியோகஸ்தர்களில் பெரும்பான்மையானோர் சம்மாந்துறையினைச் சேர்ந்த இளைஞர்களாவர். இந்தத்திட்டமிட்ட படுகொலையில் ஈ.என்.டி.எல்எப்பினுடைய கைரேகைகள் அதிகமாக பதிந்திருந்தன. 1987ல் புலிகள் மூதூர் கபீப் முகமட் உதவி அரசாங்க அதிபர், மன்னார் அரச அதிபர் எம்.எம் மக்பூல் முதலாவது மன்னாரின் முஸ்லிம் அரச அதிபர் 02.01.1998.ல்லும் 1992-26 டிசம்பரில் மட்டக்களப்பு ஓட்டமாவடி முஸ்லிம் பிரதேசத்திற்கான உதவி அரச அதிபர் வை அஹமட், சட்டத்தரணி முகைதீன் உட்பட ஆறு போ புலிப்பயங்கரவாதிகளின் கண்ணி வெடியில் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் மட்டக்களப்பின் சிறந்த அரசாங்க அதிபராக விளங்கிய அந்தோனிமுத்து என்பவருமாகும். 1990ம் ஆண்டு யூலை மாதம் 3 ந்திகதி மட்டக்களப்பு பிரஜைகள் குழு உறுப்பினரும் அலிகார் கொத்தணிப் பாடசாலை அதிபருமான யூ.எல்.எம் தாவூத் மற்றும் முஸ்லிம் மத நீதிவானுமான எம்.எல்.ஏ கபூர் போன்றவர்களை கடத்திக் கொன்றனர். அவ்வாறு கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம் பிரமுகர்கள், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்த இளைஞர்கள் ஏராளம், ஏராளம் இந்த சூழ்நிலையில்தான் இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிரான போரினை தீவிரமாக மேற்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில்தான் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பவேண்டிய நேரம் வந்திருக்கின்றது, சார்க் மகாநாட்டின்போது கற்பனைத் தமிழீழத்தின் அரசாங்கம் தென் ஆசிய நாடுகளுக்கு போர்நிறுத்த அறிவிப்பினை ஒருதலைப்பட்சமாக செய்தபோது அது நல்ல அறிகுறியாகப்போற்றி அரசாங்கத்திற்கு  சமிக்ஜை   கொடுத்தவர்கள் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினர். இன்று ஜனநாயக மக்கள் முன்னணி என்னும் ;புலிகளின் மேல்மாகாண முகவர்களுடன் தேர்தல் ஒப்பந்தம் ஒன்றினை  செய்யப்போவதாக  ஒருதலைப்பட்சமாக தெரிவிதுள்ளார்கள் .

முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து விரட்டியதனையும் கிழக்கில் படுகொலை செய்தமையினையும் மறுதலித்து விடுதலைப் புலிகள் என்னும் சர்வதேசப் பயங்கரவாதிகளையும் அதன் தலைமையை தமிழர் தேசியப் போராட்ட சக்தியாக அடையாளப்படுத்தும் முன்னாள் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் பிரமுகரும் இந்நாள் ஜனநாயக மக்கள் முன்னணி பிரமுகருமான குமரகுருபரனும், மனோ கணேசனும சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்.  இதேவேளை இன்று நல்லடக்கம் செய்யப்பட்ட எச்.எல் ஜமால்தீன் அவர்களின் கொலைக்கான உரிமையினை பயங்கரவாதிகளான புலிகள் தங்களது “சங்கதி ”  “புதினம்,” ஆகிய இணையத்தளங்களில் கோரியுள்ளனர்.

ஆனாலும் வழக்கம்போல் வீரகேசரி நாழிதழ் ”அடையாளந் தெரியாதோரால்  மேற்கொள்ளப்பட்டதென்றும்” மறுபுறம் தினக்குரல் “இனந் தெரியாதோரால”; என்றும் பத்திரிகை தர்மத்திற்கு எதிராக தங்களது புலிகளையும் மீறிய தேசியவாத உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். எது எவ்வாறெனினும் எச்.எல் ஜமால்தீன் அவர்களின் இழப்பில் துயருறும் அவரது நான்கு பிள்ளைகள், மனைவி மருதமுனை வாழ் மக்கள் மேலும் இவர் பணிபுரிந்த பிரதேசங்களிலுள்ள அதிலும் குறிப்பாக களுலாஞசிக்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு, வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் அனுதாபங்களுடன் மீண்டும் ஒரு அனுதாபச் செய்தி எழுதாமலிருக்க நான் விரும்புகின்றேன்.

unmaikal April 2009


No comments:

Post a Comment

The UK and the Pandora papers: A cesspit of the super-rich by Thomas Scripps

  No one in the UK needed to be told that the Johnson government is beholden to the interests of the super-rich. Indeed, it is a government ...