கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் ஓசைமிக்க வர்த்தகத்
தலைநகரான கொழும்பை மத்திய வியாபார கேந்திரமாக விரிவுபடுத்தும்
புத்தம்புதிய நகர வளர்ச்சித் திட்டமாகும். கொழும்பு துறைமுகத்திற்கும் பழைய நகர மத்திக்கும் இடைப்பட்ட 269 ஹெக்டயர்கள் பரப்பளவு கடல்
பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த
நகரமானது எதிர்காலத்தில் தென்னாசியாவின் பிரதான குடியிருப்பு,
சில்லறை வர்த்தக மற்றும் வியாபாரக் கேந்திரமாக அமைவதுடன், இந்து
சமுத்திரத்தின் மிதமான வெப்பமுள்ள தண்ணீரில் வாழக்கூடிய ஒப்புவமையற்ற திட்டமிட்ட நகருமாகும்.
இத்திட்டம் நிதிப் பிராந்தியம், மத்திய குடியிருப்பு தரிப்பிடம், தீவு வாழ்க்கை,
மரீனா மற்றும் சர்வதேச தீவு உட்பட ஐந்து வித்தியாசமான பகுதிகளாக
அமைந்துள்ளது. கொழும்பு துறைமுகத் திட்டம் பூர்த்தியானதும், அது 5.6
மில்லியன் சதுர மீட்டர்கள் பரப்பளவைக் கொண்டிருப்பதுடன், உலகத்தரம்
வாய்ந்த வைத்திய வசதி, கல்வி, பொழுதுபோக்கு, ஹோட்டல்கள், உணவு
விடுதிகள், சில்லறை வணிகம், அலுவலகங்கள் என்பனவற்றுடன்,
அவற்றுடன் இணைந்த கடற்கரையையும், கடல் வழங்கிய வாழ்க்கையை வாழும் வசதிகளையும் கொண்டிருக்கும்.
கொழும்பு துறைமுக நகரம் சீன முயற்சியான ஒரு தடம் மற்றும் ஒரு
பாதை திட்டத்துடன் பிரதான இணைப்பைக் கொண்டிருப்பதுடன்,
இலங்கையின் வளர்ச்சித் தந்திரோபாயத்துடன் இணைந்த, கூட்டான இலக்குகளைக் கொண்டதாகவும் இருக்கும். சீன தொடர்புகள் நிர்மாண கொம்பனி லிமிட்டெட்டின் ஒரு அங்கமான சீன துறைமுக பொறியியல் கொம்பனியின் ஒரு பிரிவான கொழும்பு துறைமுக நகர லிமிட்டெட் கடலிலிருந்து நிலத்தை மீட்டெடுக்கவும், சந்தைக் கேந்திரத்தையும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், 1.4 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை இதுதான் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு நேரடி வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்ட மிகப்பெரிய தனியொரு திட்டமாகும். இந்தத் துறைமுக நகரத்தில் மொத்தமாக 15 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன்,
உள்நாட்டவர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்குமாக 80,000 தொழில் வாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
269 ஹெக்டயர்கள் நிலம் கடலிலிருந்து மீட்டெடுக்கும் பணி 2019 ஜனவரியில்
பூர்த்தியடைந்த பின்னர், தற்பொழுது நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் வசதிகள் மற்றும் வசதிகளுக்கான பொதுக் கட்டமைப்பு வேலைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் 2041இல் முடிவடையும் என
எதிர்பார்க்கப்படுவதுடன், கொழும்பு துறைமுக நகரம் பூர்த்தி செய்யப்பட்ட
பின்னர் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வருடாந்தம் 11.8
பில்லியன் டொலர்கள் வருவாயைப் பங்களிக்குமென ( Price Water House Coopers) (PWC) என்ற நிறுவனம் செய்த சுயாதீனமான ஆய்வில் இருந்து தெரிய
வருகிறது. இந்தத் திட்டம் இலங்கையை தென்னாசியப் பிராந்தியத்தில்
வர்த்தக மற்றும் நிதிக் கேந்திரமாக மாற்றியமைக்கும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.
வரப்போகும் கொழும்பு துறைமுக நகரத்துக்குள் அமையவிருக்கும்
கரையோர நிதிப் பிராந்தியத்தின் கொழும்பு சர்வதேச நிதி நகரம் இலங்கைக்கு விளையாட்டு மாற்றுனராக இருக்கப்போகின்றது. இலங்கை
யுத்ததந்திர ரீதியில் பிரதான நிதிச் சந்தைகளுக்கு இடையிலும்,
பொருத்தமான நேர அமைவிடத்திலும் இருக்கின்றது. மேற்கே நியுயோர்க்,
இலண்டன், ஃபிராங்பேர்ட் மற்றும் துபாய் என்பனவற்றிலிருந்து கிழக்கே
டோக்கியோ, ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் சிட்னி வரை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் முக்கியமான நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகள், பிணைமுறிச் சந்தைகள், மூலதனச் சந்தை, காப்புறுதிக் கொம்பனிகள் மற்றும் மறுகாப்புறுதியாளர்கள் ஆகியோருக்கு சேவை வழங்கும் மத்திய நிதி நிலையமாக இது இருக்கப்போகின்றது.
கொழும்பு சர்வதேச நிதி நகரத்தின் பிரதான நோக்கம், தென்னாசிய
நாடுகளையும், வங்காளக் குடா நாடுகளையும் இணைக்கும் ஒரு
முக்கியமான நிதி நிலையாக வருவதே. இந்தியாவில் பகல் வேளைகளில்
செயற்படும் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச நிதி நிலையம் எதுவும் இல்லாததால்,
கொழும்பு சர்வதேச நிதி நகரம் அதைப் பயன்படுத்தி தன்னை பிராந்திய நிதி
நிலையமாக வளர்த்துக்கொள்ள முடிவதுடன், விசேடமாக 20 மைல்
தூரத்திலுள்ள இந்தியாவின் வளர்ந்து வரும் இயந்திரத்தை இலக்கு
வைப்பதாகவும் இருக்கும். கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு
செய்யுமாறு இலங்கை அரசாங்கம் உலகம் முழுமைக்கும் அழைப்பு
விடுத்துள்ளதுடன், கொழும்பு துறைமுக நகரம் சீன முதலீடுகளுக்கானது மட்டுமேயானதல்ல இங்கு எந்தவொரு நாடும் முதலீடு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
இந்தமாத (ஏப்ரல்) ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் ‘கொழும்பு துறைமுக
நகர பொருளாதார ஆணைக்குழு’ என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒரு
சட்டமூலத்தின்படி கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்த ஒரு விசேட பொருளாதார வலயம் உருவாக்கப்படும்.
இந்தச் சட்டமூலம் உருவாக்கப்படும் ஆணைக்குழுவுக்கு விசேட பொருளாதார வலயத்தில் பதிவுகளை வழங்குதல், அனுமதிப்பத்திரங்கள், அங்கீகாரங்கள் மற்றும் வியாபாரங்களுக்கான அங்கீகாரங்கள் என்பனவற்றுக்கான அதிகாரங்களை அளிக்கும். ஐந்து முதல் ஏழு பேர் வரையிலான அங்கத்தவர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழு பொருளாதார வலயத்தில் சிறிய முதலீடு செய்துள்ள வர்த்தக நிறுவனத்தைக் கூட அடையாளம் கண்டு அதை முன்னேற்றவும், விசேட பொருளாதார வலயத்திற்குள் வியாபார
தந்திரோபாயத்தின் முக்கியத்துவத்தை முன்னேற்றுவதற்கு சில
விதிவிலக்குகளை அளித்து முன்னேற்றுவது உட்பட விசேட பொருளாதார வலயத்தின் எல்லா நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்யும்.
நன்கு கட்டமைக்கப்பட்டதும் போட்டிபோடக்கூடிய சட்ட, வரி,
ஒழுங்கமைப்பு மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொறிமுறை மூலம்
முதலீட்டாளர்கள், தொழில்வல்லுனர்கள், புதுமுயற்சியாளர்கள், கொம்பனிகள், நிதி நிறுவனங்கள் என்பனவற்றைக் கவர்வதன் மூலம் துபாய், சிங்கப்பூர், ஹொங்கொங் போன்ற இடங்களிலுள்ள முதலீட்டு மையங்களுடன் கொழும்பு துறைமுக நகரம் போட்டிபோடுவதிலேயே இந்தத் திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது.
இருந்தபோதிலும், சீனாவின் ஒரு தடம் மற்றும் ஒரு வழி என்ற திட்டத்தின்
ஒரு பகுதியாக இலங்கையில் சீனாவின் திட்டங்கள் அதிகரித்து வருவதால்,
இலங்கை ‘சீனக் கடன்பொறி இராஜதந்திரத்துக்குள்’ சிக்கிக்
கொண்டுள்ளது என சில நியாயமான எண்ணிக்கையிலான விமர்சனங்கள்
முன்வைக்கப்படுகின்றன. 2006 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சீனா
இலங்கையில் செய்துள்ள உள்கட்டுமான முதலீட்டின் மொத்தத்தொகை 12.1
பில்லியன் டொலர்கள் எனக் குறிப்பிடும் Chatham House நிறுவன ஆய்வறிக்கை, இதனால் உள்ளுர் மக்கள் இலங்கை சீனாவுக்கு விற்கப்பட்டுள்ளதாக கருதுவதாகக் குறிப்பிடுகின்றது.