பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல்



எஸ்.எம்.எம்.பஷீர்



" ராஜீவ் காந்தி இரண்டு அங்குல வித்தியாசத்தில் உயிர் தப்பினார். நான் இரண்டு நிமிட வித்தியாசத்தில் உயிர் தப்பினேன். அதனால் இன்று உங்கள் முன்னிலையில் நாம் இருவரும் காட்சி தருகிறோம்" 
                            ஜே ஆர் ஜெயவர்த்தனா

                            ( நன்றி : தகவல்: அநாமிகன்) 

  (காட்மண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் ஜே ஆர் ஜெயவர்த்தனா ராஜீவை  இலங்கையில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பின் போது  விஜித ரோகன துப்பாக்கியால் அடித்து கொல்ல முற்பட்டதையும் , அதன் பின்னர் தனக்கும் நாடாளுமன்றத்தில் குண்டு எறிந்து   கொல்ல முற்பட்டதையும் பற்றி குறிப்பிட்டு  கூறியது.)


இந்திய அதிகாரத்துடன் வல்லாதிக்க மனோபாவத்துடன் செய்விக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பத்தத்தின் அடிப்படையில் உருவான  பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் பற்றி திரும்பிப் பார்க்கும் போது இந்திய  இதிகாசமான மகாபாரதத்தில் பதின்மூன்று வருடமும் பதிமூன்றாவது நாள் பாரதப் போரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதும் எனது ஞாபகத்துக்கு வருகின்றதையும் மீட்டிக்கொண்டு இக்கட்டுரை தொடரை நகர்த்த விரும்புகிறேன்.

மகாபாரதத்தில் தருமன் கவ்ரவருடன் சூதாடி தோற்றவுடன் பாண்டவர்களுக்கு விதித்த நிபந்தனையின்படி , பாண்டவர்கள்   பன்னிரு ஆண்டுகள் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாதவாசமும் செய்ய வேண்டும். அந்த ஒரு வருடத்தில் அவர்கள் வெளிப்பட்டால் மறுபடியும் வனவாசம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பதின் மூன்றாவது திருத்தச்சட்டத்தை இலங்கையின் அரசியல் அமைப்பில் அங்கமாக்க இந்திய அரசினை தூண்டியவர்கள், மற்றும் அந்த அடிப்படையில் அமைந்த வட கிழக்கு மாகான சபையில் ஆயுத அடாவடித்தனம் புரிந்து அங்கிருந்தது தப்பி ஓடியவர்கள் தமிழ் தேசிய அரசியல் அங்காடி வியாபாரிகள் என பலர் இப்போது தமது வனவாசம் முடித்து அதற்கு மேலும் சில ஆண்டுகள் அஞ்சாதவாசமும் புரிந்து மீண்டும் அரசியல் செய்ய புலம் பெயர் தேசங்களில் அதிலும் குறிப்பாக ஐக்கிய ராச்சியத்தில் ஏற்பட்டுள்ள புலிகளின் தொல்லையற்ற அரசியல் இடைவெளியை  நிரப்ப கங்கணம் கட்டி வியூகம் அமைத்திருக்கிறார்கள். இந்த அணியில் முன்னாள் தமிழ் ஆயுத இயக்க பிரகிருதிகளும் தமிழ் அரசியல் கட்சி பிரகிருதிகளும் அடங்குவர் இவர்கள் தமது தங்களின் அகங்காரங்களை மறந்து  ஒன்று சேர்ந்திருக்கிறோம் என்று வேறு பிரகடனம் செய்திருக்கிறார்கள். இவர்களின் கூட்டுக்கள் நிலைக்குமா என்பது குறித்த கேள்வி இவர்களின் தலைவர்களின் செல்திசைகளில் தான் தங்கியுள்ளது. மொத்தத்தில் எல்லா மாற்று இயக்கங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் புலிகளை எதிர்த்தாலும் தங்களை அரசுடன் சேர்ந்து அவ்வப்போது பாதுகாத்து கொண்டாலும் ,புலிகளின் தனி நாட்டு  கொள்கையை புலிகள் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்று மானசீகமாக பிரார்த்தித்த பலரும் இப்போது கூடி மீண்டும் பதின்மூன்றாவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஆனால் அவ்வப்போது தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் ,  தமிழ் தேசியவாத ஊடகங்களும் (தமிழர் முற்போக்கு  இயக்கங்கள் அரசியல் கட்சிகள் உட்பட) இந்திய இலங்கை ஒப்பந்தத்தினையும் அதனால் விளைந்த அரசியல் அமைப்பு திருத்ததினையும் தமது அடிப்படையான    திம்பு கோட்பாட்டுக்கு எதிரானதென்ற கருத்துக்களையும் முன் வைத்து வந்திருக்கிறார்கள்.

 இந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்குமிடையே இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி சில மாதங்களுக்குள் முரண்பாடுகள் வலுத்து பரஸ்பரம் ஆய்த தாக்குதல்கள் ஆரம்பித்தபின்னர் புலிகளுக்கான புலம் பெயர் ஆதரவுத்தளங்கள் தீவிரமாக செயற்பட்டு 1988  ஏப்ரல் இறுதி நாளிலும் மே முதலாம் நாளும் சர்வதேச தமிழ் மாநாட்டை ( International Tamil conference)  "தமிழ் தேசிய போராட்டமும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தமும்" ( Tamil National struggle and Indo-Lanka Peace Accord)  என்ற தலைப்பில்   உலகத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பினூடாக இலண்டனில் நடத்தினர். இந்த மாநாட்டில்தான்  தென்னிந்திய அரசியல் தலைவர் புலிகளின் பிரச்சாரகர் வை .கோபாலசாமி , ஓய்வு பெற்ற இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ண ஐயர் , புலிகளின் இன்னோமொரு பிரபல ஆதரவாளர் நெடுமாறன் ஆகியோர் உட்பட இன்னும் சிலரும் இந்தியாவிலிருந்து கலந்து கொண்டதுடன் அமெரிக்காவின் மனித உரிமை சட்டத்தரணி கரேன் பார்கர் (Karen Parker) என்பரும் கலந்து கொண்டார். (கரன் பார்க்கருக்கு இந்நாள்வரை புலிகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி மட்டும் எதுவும்     தெரியாது ) இந்த மாநாட்டின் சூத்திரதாரியாக செயற்பட்டவர் என். சீவரத்தினம் , பிரபல புலி ஆதரவு சட்டத்தரணியும் முன்னாள் டெலோ பேச்சாளருமான என்.சத்தியேந்திரா. இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் சகல நாடுகளையும் அங்கீகரிக்க கோரி மேற்கொள்ளப்பட்ட மூன்று பிரதான தீர்மானங்களில் இரு  தேச அடிப்படையிலான  தீர்வும் , தமிழ் தேசத்தின் உண்மை தலைவனாக எழுந்து நிற்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனை  அங்கீகரித்தலும் , உடனடி யுத்த நிறுத்தமும் திம்பு அடிப்படையிலான பேச்சுவார்த்தை அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பதுமாகும்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் புலிகளின் ஆயதக்களைவு நிபந்தனையால் புலிகளால் திட்டவட்டமாக செயலிழக்க செய்யப்பட்டதுடன் , அதன் பின்னணியில் ஆரம்பித்த சர்ச்சைகள் அதற்கான சூழ்நிலையை புலிகளின் குமரப்பா புலேந்திரன் உட்பட்ட குழுவினரின் தற்கொலையுடன்  எவ்வாறு அன்றைய தேசிய பாது பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி கூட அரசியல் தந்திரோபமாக  புலி இந்தியப்படை மோதலை எதிர்பார்த்திருந்தார் என்பது குறித்து லலித் தனது தனது ஆங்கில பிரித்தானிய நண்பருடன் செய்த ஒரு உரையாடல் நெருக்கடியான அரசியல், இராணுவ காய் நகர்த்தல்  அரசியல் அணுகுமுறையின் பிறிதொரு அம்சம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.   அது பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...