முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி

முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி
தலைமை: யோகரட்ணம்

எஸ். எம். எம். பஷீர்:
முஸ்லிம் மக்கள் என்று சொல்லுகின்ற பொழுது இவர்கள் ஒரு தேசிய இனமா? அல்லது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மாத்திரம்தான் ஒரு தேசிய இனமா? அல்லது முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்குட்பட்ட வெறும் குழுவா?
ஸ்டாலினியத் தத்துவத்துக்குட்பட்டு தேச வரையறைக்குட்பட்ட வரைவிலக்கணங்களுக்குள் தமிழர்களாக கருதப்பட வேண்டியவர்களா? என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. இது என்றுமே சர்ச்சைக்கு ரியதாக இருந்து வருகின்றது. ‘இலங்கைச் சோனகர் களின் இனவரலாறு’ என்ற புத்தகத்திலே, சேர் பொன் ராமநாதன் 1885ம் ஆண்டு முஸ்லிம்களை ‘இஸ்லாமியத் தமிழர்கள்’ என்று கூறியதற்கு எதிராக குரல் கொடுத்து தங்களை ‘இலங்கைச் சோனகர்கள்’ என்று சொல்ல வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. சிறுபான்மை இனத்தின்மீது இன்னொரு இனம் மேற் கொண்ட ஒரு பாரதூரமான விஷயம் வடக்கில் இருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் - இது வரலாற்றில் பதிவாகியிருப்பது ஒரு துரதிர்ஷ்டமான உண்மை.
இந்தப் பின்னணியில் இருந்து பார்த்தால், படிமுறையாக வடகிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் தங்களைத் தமிழ் மக்களுடன் இணைத்துக் கொண்டு தாங்களும் தமிழ் பேசும் மக்களாக அடையாளப் பட்டார்கள். ஆனால் வேறுபாடுகள் ஏற்பட்டு இப்போது எவ்வாறு அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று பல்வேறுபட்ட அம்சங்களில் ஊடுருவி தங்களை ஒரு தனித்த தேசிய இனம் என்று வரையறுத்துக் கொள்ளும் அளவுக்கு கூர்மையடைந்திருக்கின்றது.
இவர்கள் இப்படித்தான், ஆகவே நீங்கள் இவர்களை இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று சொல்லுவதும் அடிப்படையில் மனித உரிமை மீறலாகும். ஒரு சமூகம் தன்னைத்தான் எவ்வாறு அழைப்பது என்பதை அதுதான் தேர்ந்தெடுக்க வேண்டும் அதுதான் சுயநிர்ணய உரிமை.
அடையாளம் எதுவுமே இல்லாத பொழுது மதம் அவர்களுக்கு உடனடி அடையாளத்தை வழங்கு கிறது. இப்படி கருத்தியல்ரீதியான பல விளக்கங்கள் உள்ளன.
இவைகளிற்கு அப்பால் முஸ்லிம்கள் தமிழ்க் கட்சிகளில் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். அரசியலில் போட்டி இட்டிருக்கிறார்கள் பாராளுமன் றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆளும் கட்சிகளோடு மாறி தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டும் உண்டு. முஸ்லிம்கள் ‘தொப்பி பிரட்டிகள்’ என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். ஆனால் ஏன் அந்த நிலைக்குப் போனார்கள் அல்லது ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான அரசியல் காரணங்களைத் தேடவில்லை.
ஒரு ராஜதுரையும் கனகரட்ணமும் கட்சி மாற முடியும் என்றால் ஏன் ஒரு அப்துல் மஜீத் கட்சி மாற முடியாது. அப்படி என்றால் அவர்கள் என்ன பிரட்டிகள். இது ஒரு இனவாதரீதியான சிந்தனை.
என்னதான் தமிழர்களுடன் இணைந்து முஸ்லிம்கள் செயற்படுவதற்கு முன்வந்தாலும்கூட தமிழ்த் தலைவர்கள் அவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதற்குத் தயக்கம் காட்டினார்கள். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. எனவே முஸ்லிம்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்துக்குப் பின்னரும் கூட வுருடுகுஉடன் பேச்சுவார்த்தைக்கு முற்பட்ட பொழு தும் தமிழ்க்கட்சிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
எல்லா சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் முஸ் லிம்கள் ஒரு தரப்பினராக இதுவரையும் கருதப் படவில்லை. அவர்களுடைய அரசியல் அபிலாஷை களை இதுவரை அரசோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரோ கருத்தில் கொள்ளவில்லை.
இன்றைய காலகட்டத்தில், ஒரு தனித்துவத்தை வரையறுக்கும் நிலைக்கு வந்துள்ள காலகட்டத்தில், இலங்கைக்கான எந்தத் தீர்வுமானது முஸ்லிம்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கவேண்டும்.
தான் புறக்கணிக்கப்படுகின்றதென்று தமிழ் சமூகம் கருதியபொழுது அந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். இன்றைக்கு முஸ்லிம்களும் புறக்கணிக்கப்படுவதாக உணரத் தொடங்கி தனித்துவமான ஒரு அடையாளத்தைக் கோரும் நிலையில் இருக்கிறார்கள். இது ஒரு ஆயுதப் போராட்டத்தை நோக்கியும் தள்ளக்கூடும். இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அப்படி ஒரு நிலை வருவது யாருக்குமே ஆரோக்கியமானதல்ல என்பதை எங்களுக்கு ஏற்கனவேயுள்ள அனுபவங்கள் சுட்டி நிற்கின்றன. எனவே இவையெல்லாவற்றையும் தவிர்ப்பதென்றால் இந்தத் தனித்துவம் கோருகின் றவர்கள் எதுவாகத் தங்களை அடையாளப்படுத்த விரும்புகின்றார்களோ அதுவாக அவர்களை அங்கீகரிக்க வேண்டும். அல்லாது தவிர்த்து ஒரு நெருக்கு வாரத்துக்குள்ளாக்குவார்களானால் அந்த நிலைமை பொது எதிரிக்குத்தான் சாதகமாக அமையும்.
ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமைகளுக் கெதிராக செயற்படமுடியாது. அவர்களுடைய அரசியல் சுதந்திரத்தை மதிக்கவேண்டும். அந்த அடிப்படையில்தான் முஸ்லிம்களுடைய தனித்துவத் திற்கான அடையாளம் வளர்ந்திருக்கின்றது. இதற்கு மேலும் திணிப்புகள் செய்வது மனித சுதந்திரத்திற் கெதிரானது. “ஒரு தேசம் இன்னொரு தேசத்தை அடக்கும்போது அது தனக்குத் தானே விலங்கு மாட்டிக் கொள்கிறது” - கார்ல் மார்க்ஸ்.


நன்றி: உயிர்நிழல் VOL VI, No.1 ISSUE 22, JANUARY-MARCH 2006

புகலிட இலக்கியச் சந்திப்பின் 32வது தொடர் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம், 13ம் திகதிகளில் பாரிஸில் நடை பெற்றது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...