கறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்

எஸ்.எம்.எம்.பஷீர்

சிங்கள அபிலாஷய இடு கரமி;
ரட தெகட கடன்னட இட நொதிமி”

(“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு இரண்டாக துண்டாடப்படுவதற்கு இடமளிக்க மாட்டேன்.”)

(28.ஜுலை 1983 ஜே. ஆர் . ஜெயவர்தனா “நாட்டு மக்களுக்கு” தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் ஆற்றிய உரையிலிருந்து)

கறுப்பு ஜூலை 83

இலங்கையில் தமிழர்கள் மீதான சகல இன வண்முறைகளில் ஜே ஆரின் முத்திரை இருப்பதை -ஐக்கிய தேசிய கட்சியின் அடையாளமிருப்பதை- வரலாறு தெரிந்தவர்கள் மறுக்கமுடியாது. கறுப்பு ஜூலை எனப்படும் ஜூலை கலவரங்கள் தொடங்கி முடிவுற்ற நான்காம் நாள் இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் (28.ஜுலை 1983) ஜே. ஆர் . ஜெயவர்தனா தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் “நாட்டு மக்களுக்கு” என்று ஆற்றிய உரையில் காட்டமாக வெளிப்படுத்திய மேற்சொன்ன செய்தி அவரின் பிரதிக்கினைக்கு  அப்பால் அவரின் வண்மத்தையும் துல்லியமாகவே எடுத்துக்காட்டியது.

ஒரு புறம் பிரபாகரன் நாட்டை துண்டாட பெரும் தாக்குதலுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஜூலை 23ல் 1 3 இரானுவத்தினரை திருநெல்வேலியில் கொன்று குதூகலிக்க , ஜே ஆரும் அவரின் பரிவாரங்களும் நாடு துண்டாடுவதை “தடுக்க” பிள்ளயார் சுழி போட்டுத்தான் பெரியளவிளான 1983 ஜூலை கலவரங்களை தொடங்கி இருக்க வேண்டும் ( பிள்ளையாரை பவுத்தர்களும் வழி படுவார்கள்! ) ஆனால் ஜே . ஆர் . விரிவாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்று தனது வாக்குறுதியில் வெற்றி பெறவில்லை, நாட்டை ஏதோ ஒரு விதத்தில் இரன்டு படுத்தும் ஒரு ஒப்பந்தத்தில் தன்னை நாலு வருடத்துள் முடக்க வேன்டி ஏற்பட்டது. (இறுதியில் இந்தியப்படைகள் வெளியேறிய போது வரதராஜ பெருமாள் தனினாடு பிரகடணம் செய்ய முயன்ற நிகழ்வுடன் பார்க்கும்போது) அதேவேளை பிரபாகரன் ஆயிரக்கனக்கான சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களை கொன்றழித்து முரண் நகையாக நாடு துண்டாடப்படுவதை 25 வருடங்களுக்கு “போரடி” தடுத்து முள்ளிவாய்க்காளில் முடங்கி தானுமழிந்து போனார்

ஜே ஆர் 1977ல் அதிகாரத்திற்கு வரும் முன்னரே தமிழர் எதிர்ப்பிற்கு பேர் போனவர் ஆயினும் தான் முப்படைத் தளபதியாக இருந்த பொழுதே; தனது ஆட்சித் தொடக்க காலத்திலேயே தமிழர் மீதான நாடளாவிய சிறு சிறு தாக்குதல்களை நடத்தப்பட்டதை அனுமதித்தவர்.

அவ்வறான சூழல் எத்தகையது என்பதனை 1977ல் நடந்த எனது தனிப்பட்ட அனுபவத்துடனான சம்பவமொன்றுடன் நினைவு கூறுவது அவசியம் என்று கருதுகிறேன். நான்  பிரயாணித்த , மட்டக்களப்பு நோக்கிச்சென்ற புகையிரதம் ஹிங்கூராகொடையில் தரித்தபோது கையில் தடிகளுடன் ஆவேஷமாக புகையிரத பெட்டிகளுக்குள் உட்புகுந்த சிங்கள காடையர்கள் பல தமிழ் பிரயாணிகளை தாக்கியதையும் எமது பெட்டிக்குள் நுழைய முன்னரே குடும்பத்துடன் பிரயாணம் செய்த முஸ்லிம் பெண்மனி ஒருவர் தனது தாவணியை   ( Shawl) எடுத்து அப்பெட்டியில் பிரயாணம் செய்த தமிழ் இளம் பெண்ணிற்கு முக்காடிட்டு அவரது பொட்டையும் அழித்து அவருடன் கூடவந்த குடும்பத்தினரையும் தம்முடன் வைத்து ஒரு குடும்பமாக காட்டினின்று பாதுகாத்த அந்த சம்பவம் பின் வந்த தமிழ் முஸ்லிம் உறவு விரிசலுக்கு காரணகருத்தாக்களை இலுகுவாக அடயாளம் காட்ட உதவுகிறது.

தென்னிலங்கையில் 1983 ஜூலை 23ம் திகதி தொடங்கி சில நாட்கள் நீடித்த தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான வன்முறை தாக்குதல்கள் திட்டமிட்டு அன்றைய ஜே ஆர் அரசின் அணுசரனையுடன் நடத்தப்பட்டது என்ற பரவலான குற்றச்சாட்டு இன்றுவரை உண்டு.ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஜூலை கலவரம் தொடர்பில் தான் முப்படைகளின் தலைவர் என்ற வகையில் ஏன் உடனடியாக கலவரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொன்டு வரவில்லை. என்ற கேள்வி ஒருபுறமிருக்க இன்னுமொரு மிக முக்கியமான நிகழ்வு இங்கு விசாரனைக்கு உட்படுத்தப்பட வேன்டும்.

ஜூலை 24 கலவரம் தொடங்கிய தினத்தன்று கலவரம் காலையில் தொடங்க முன்னரே அன்று பிரதமராகவிருந்த ஆர். பிரேமதாசாவின் செயலாளர்களில்  ஒருவரான பாஸ்கரலிங்கத்தையும் அவரது குடும்பத்தினரையும் அதிகாலையில் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு கொன்டு சென்று பாதுகாப்பு வழங்கியதும் தனது அலுவலகத்தில் ஒரு தமிழ் பொலிஸ் அத்தியட்சகரை பாதுகாத்து வைத்ததும் குறித்து இப்பொது இலன்டனிலிருந்து இலங்கை சென்று வரும் பாஸ்கரலிங்கம், பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர்தான் இச்சம்பவங்கள் பற்றி இப்போதாயினும் விளக்கமளிக்க வேண்டும். இக்கலவரம் நடக்க முதல் இது பற்றி அறிந்து தமக்கு வேண்டியோரை பிரேமதாசா காப்பற்றியது ஒருபுறம் இருக்க; அவ்வாறு காப்பாற்றப்பட்ட அந்த இரு பிரபல தமிழர்கள் ஏன் சந்திரிகா அமைத்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருக்கக் கூடாது; அதன் மூலம் சில உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கலாம். தமிழர்களின் செல்லப்பிள்ளயான ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் மக்கள் மீதூ பரிவு காட்டும் முக மூடியை ஆதார பூர்வமாக கிழித்திருக்கலாம்.!

பாஸ்கரலிங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமத்துவத்திற்கும் அன்று தேவைப்பட்டவராக விருந்தார் என்பது இன்னுமொரு செய்தி. அன்று முஸ்லிம் காங்கிரஸ் முதன் முதலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிகமாக்க நிதியுதவி செய்தவர் புஹாரிதீன் காஜியார் , எனவேதான் அவருக்கு எம்.பீ பதவி முஸ்லிம் காங்கிரசால் வழங்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த சில மாதங்களுள் அவருக்கு பணமுடை ஏற்பட்டதுடன் அவரது இலங்கையின் தேசிய வங்கிகளில் உள்ள சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படும் நிலை ஏற்பட்டு பிரேமதாசாவை அணுகியபோது பாஸ்கரலிங்கமே ஜனாதிபதி சார்பில் செயற்பட்டார். பல சந்திப்புக்களை அன்றைய தலைவரும் இன்றைய தலைவரும் தீவிரமாக அவருடனே மேற்கொள்ள வேண்டி  ஏற்பட்டது. பிரேமதாசாவின் மறைவை அடுத்து இலண்டனுக்கு வந்து குடியேறிய பாஸ்கரலிங்கம் மீது பல நிதி மோசடி குற்றசாட்டுக்களும் தனிப்பட்ட வகையில் சுமத்தப்பட்டன.

கறுப்பு ஆகஸ்து 90-

கறுப்பு ஜூலையின் 7வது ஆண்டு முடிந்த கையோடு புலிகள் கிழக்கில் முஸ்லிம்கள் மீது இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை உக்கிரப்படுத்தி தோற்றுவித்த கறுப்பு ஆகஸ்து எனும் கறைபடிந்த மாதத்தையும் இங்கு மீட்டுப்பார்க்க வேண்டியுள்ளது.

மீன்டும் மீன்டும் சில கசப்பான, துயரமான சம்பவங்களை நினைவு கூருவது ஒருபுறம் பழைய ஞாபகத்தை கிளரி பகைமையை வளர்க்கும் என்று குறை கூறப்படலாம். ஆனால் மறுபுறத்தில் அவ்வாறான நினைவு கூறல்கள், அதிலும் குறிப்பாக சமூகம் சார்ந்த வண்முறைகள் இழப்புக்கள் என்பன பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புக்கு உட்படுத்தியவர்கள் என சம்பந்தப்பட்ட தரப்பினர்களை அவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்க வழி வகைகளை காண்பதற்கும் மீள் இணக்கத்துக்கான (Reconciliation) சமூக பெறுமதிகளையும் (Social values) சமூக கட்டுமானங்களையும் ( Social Structures) பலப்படுத்துவதற்கு அவசியமான ஒரு சந்தர்ப்பமாக இந் நினைவு கூறல்கள் அமைய வேண்டும்.

1990ம் ஆன்டு முஸ்லிம்களின் மீதான திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கும் வகையில் புலிகள் கிழக்கின் சகல பிரதேசங்களிலும் தமது மனித விரோத மிலேசத்தனமான வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட்ட ஆண்டாக அமைந்தாலும் 1990ம் ஆண்டு ஆகஸ்து மாதம் அவ்வாறான முஸ்லிம் இன அழிப்பு நடவடிக்கைகளின் கொடூரமான படுகொலைகளான காத்தான்குடி மீரானியா, ஹுசைனியா பள்ளிவாசல் படுகொலைகள் (03 .08.1990) மேலும் எறாவூர் மிச் நகர் , சதாம் ஹுஸைன் கிராமம் , மீரா கேணீ , ஐயங்கேணீ தழுவிய எல்லைப்புற படுகொலைகள் (11.08 1990) என்று நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஆண்கள் பெண்கள் குழந்தைகளின் படுகொலைகளில்; காத்தான்குடியில் பள்ளிவாசல்களில் பெற்றோர்களுடனும் சகோதரர்களுடனும் இரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஆறு வயதுக் குழந்தை ஒன்று உட்பட 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12 பேரும் 13 தொடக்கம் 16 வயதிகுற்பட்ட சிறார்கள் 10 பேரும் அடங்குவர், அவ்வாறே எறாவூர் படு கொலைகளில் தூக்கத்திலிருந்த குழந்தைகள் மட்டுமல்ல வயிற்றிலிருந்த சிசுவும் சிதைக்கப்பட்டது. ஏறாவூரில் கொல்லப்பட்ட குழந்தைகள் /சிறுவர்கள் தொகை சுமார் 31 ஆகும். இக்குழந்தை கொலைகள் புலிகளுக்கு வாடிக்கையானவையாகும் .

தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமை குறித்து புதிய அக்கறையுடன் பரவலாக பேசும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அன்று எவ்வாறு ” நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமின்றி” செயற்பட்டார்கள் என்பதையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஸ்ரப் அன்று எவ்வாறு செயற்பட நேரிட்டது என்பதும் இப்போதைக்கு நினைவு கூரத்தான் வேண்டும். அற்புதன் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் பற்றி எழுதிய கட்டுரைக் குறிப்பு
 அன்று அஸ்ரபின் வீட்டில் நடைபெற்ற சம்பவம் பற்றி பின்வருமாறு கூறுகிறது.

” காத்தான்குடி படுகொலையை அடுத்து கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.


கொழும்பில் உள்ள அஷ்ரபின் இல்லத்தில் முஸ்லிம் காங்கிரஸ்; தமிழ் காங்கிரஸ்; ஈ.பீ ஆர்.எல்.எப் ; கூட்டணி; புளொட்; ஈ. பீ. டீ. பீ; ரெலோ; ஈ. என். டீ. எல் எப் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் கூடினார்கள்.


அக்கூட்டத்தில் அஷ்ரப் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். விடுதலை புலிகள் தான் காத்தான்குடி படுகொலைக்கு காரணம் என்பதை சுட்டிக்காட்டிய அந்த அறிக்கையில் புலிகள் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இக் கூட்டத்தில் குமார் பொன்னம்பலம் . மேதிலால் நேரு ஆகியோர் குறிப்பிட்ட அறிக்கையுடன் தாம் முரண்படுவதாக கூறினார்.


வடக்கு-கிழக்கில் இடம்பெறும் தமிழர் படுகொலைகள் தொடர்பாக அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை அதனை குறிப்பிடாமல் இருப்பது சரியல்ல என்று மோதிலால் நேரு குறிப்பிட்டார்.


குமார் பொன்னம்பலம் ஒரு கேள்வியை எழுப்பினார்.” மேற்படி கொலைகள் நடைபெற்ற பகுதி அரச படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். அப்படியிருக்கும்போது விடுதலைப்புலிகள்தான் இதனைச் செய்தனர் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள் ” என்று கேட்டார்.


கரிகாலன் நியூட்டன் ஆகிய புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் தாக்குதலின் போது காணப்பட்டுள்ளனர். மக்கள் கண்டுள்ளனர் என்று அஸ்ரப் கூறினார்.


“இருட்டான நேரத்தில் அத்தனை தெளிவாக இணம் கண்டது எப்படி? என்று குறுக்காக கேள்வி தொடுத்தார். குமார் பொன்னம்பலம்.


இக்கட்டத்தில் விவாதம் சூடு பிடித்தது. அந்த சூட்டைத் தனிக்க சிற்றுண்டி வகைகளும் , குளிர்பானம் , தேனீர் ஆகியன பறிமாறப்பட்டன.


காத்தான்குடி படுகொலையை சுவையான சிற்றுண்டிகளை ஒரு கை பார்த்தபடி கட்சிகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து விவாதித்தனர். காத்தன்குடி படுகொலையை யார் செய்தார்கள் என்று குறிப்பிடாமல் பொதுவான கண்டனமாக தெரிவித்தால் அதில் கையொப்பமிடலாம் என்று கூறினர் தமிழ் காங்கிரஸ் பிரதிநிகள் .


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரபுக்கும் குமார் பொன்னம்பலம், மோதிலால் நேரு ஆகியோருக்கும் நல்லுறவு நிலவிய நேரம் அது.


அதனால் அவர்களையும் அனுசரித்துக்கொன்டு செல்லவே அஸ்ரப் விரும்பினார். புலிகளையும் குறிப்பிடாமல் கன்டிக்க உடன்பட்டார்.ஏனைய கட்சிகளும் ஒரு விதமாக சம்மதித்தன. ஈ பீ டீ.பீ மட்டும் உறுதியாக மறுத்துவிட்டது. யார் காரனம் என்பதை கூறாமல் கண்டிப்பதைவிட கண்டிக்காமல் இருக்கலாம் என்று கூறியது ஈ.பீ.டீ.பீ .


இக் கூட்டத்தில் கூட்டணிப் பிரதிநிதிகள் நைசாக நழுவினர்.


புலிகளை நேரடியாகக் குற்றம் சாட்டினால் கையொப்பம் போட அவர்களும் தயாராக இருக்கவில்லை.விவாதம் சூடாக நடந்த சமயத்தில் “அறிக்கையை அனுப்புங்கள் ஏற்புடையதாக இருந்தால் கையொப்பம் போடுகிறோம்” என்று கூறிவிட்டு நழுவிவிட்டனர்.


இந்நிலையில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையிலேயே கூட்டம் கலைந்தது.


அரசும் , அதன் ஆதரவுடன் இயங்கும் தமிழ் குழுக்களும் காத்தான்குடி படுகொலையில் புலிகள் சந்தேகம் தெரிவித்தனர்.


இலண்டன் பீ.பீ.சீ வானொலி காத்தான்குடி படுகொலைகளை மறைமுகமாக நியாயப்படுத்தியது. ஸ்ரீ லங்கா தகவல் தொடர்பு சாதனங்கள் தமிழ் மக்களின் படு கொலைகளை மூடி மறைத்தும் முஸ்லிம் மக்களின் படுகொலைகளை பகிரங்கப்படுத்தி வருவதாக பீ.பீ.சீ கூறியது. “


புலியின் தனிப்பட் ட கொலைக் குற்ற ஒப்புதல்

சமாதான காலத்தில் புலிகளை சந்தித்து பேசும் தேவை சில முஸ்லிம் அரச சிரேஷ்ட முஸ்லிம் உத்தியோகத்தர்கள் மற்றும் பேச்சு வார்த்தையில் அரச தரப்பு சார்பாக கலந்து கொன்ட ஆலோசகர்கள் ( அன்றைய அரசில் அங்கத்துவம் வகித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கலந்து கொன்டவர்கள் ) ஆகியோருக்கு ஏற்பட்டது.

உடனடி புனருத்தாரன மனிதாபிமான தேவைகளுக்கான துனைக்குழு ( Sub Committee On Immediate Humanitarian and Rehabilitation ) சார்பில் வன்னி சென்று இவர்கள் தமிழ் செல்வனுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். அப்போது தமிழ் செல்வன் தன்னை சந்திதத அந்த முஸ்லிம் பிரதிநிதிகளிடம் , அப்பிரதிநிதிகளில் ஒருவர் காத்தான்குடியை சேர்ந்தவ்ர் என்பது தெரியவந்ததும், 1990 ஆகஸ்டில் நடைபெற்ற , குறிப்பாக காத்தான்குடி படுகொலைகள் தங்களுக்கும் கிழக்கு மாகாணத்து உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலயில் இடம்பெற்றதாகவும் அதனால் அச்சம்பவங்கள் துரதிஷ்டவசமாக நடைபெற்றுவிட்டதாகவும் அதற்காக , வருத்தப்படுவதாகவும் அப்பிரத்தியோக சந்திப்பில் குறிப்பிட்டார். அக்குழுவினர் அதனை-அக்குற்ற ஒப்புதலை – பகிரங்கபப்படுதுவது தமது பணிக்கு தடையாக அமையும் எனபதாலும் சமாதான சூழல் தகுந்த முறையில் கையாளப்பட வேன்டும் என்பதாலும் அவர்கள் தமிழ் செல்வனின் அக்குற்ற ஒப்புதலை வெளியிடுவதில்லை என முடிவெடுத்தனர். அன்றைய சூழலில் அம்முடிவு “சரியாயத்தோன்றினாலூம்” இப்போது அது குறித்த எழுதுவது அவசியம் என நினைக்கிறேன்.

சிறுவர் மனத் துஷ்பிரயோகம்

யாழ்ப்பான வைத்தியசாலையில் பனியாற்றிய மன நல வைத்தியரான கலாநிதி.தயா சோமசுந்தரம் புலிகள் அதிகமாக விடலைப் பருவத்தினரை தமது இயக்கத்தில் சேர்த்ததைய்க் குறிப்பிட்டு ; 11 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து 15 வயதில் நான்கு வருடங்களாக புலிகளிலிருந்து “போராடிய” ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் பற்றி ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையாளருக்கு (The Independent) குறிப்பிட்டதை சாதாரனமான உதாரன சம்பவமாக கொள்ளமுடியாது.

“தனது நண்பர்கள் பலரை இழந்த ஒரு தாக்குதலின் பின்பு அவனுக்கு பெண்களும் குழந்தைகளும் கொலை செய்யப்பட்ட வீடியோ ஒன்றினை காண்பிக்கப்பட்டு அக்கொலைகளை அவனது எதிரிகள் செய்ததாக சொல்லப்பட்டது” அவ் விடலைப் பருவத்தினன் ஒரு சிங்கள கிராமத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டான்.

அவன் எவ்வாறு மக்களை கொன்றான் , எவ்வாறு ஒரு சிறு குழந்தையை அதன் கால்களை பிடித்து அக்குழந்தையின் தலையை சுவரின் மீது வீசி அடித்துக் கொன்றான், அப்போது அந்தக் குழந்தையின் தாய் கதறி அழுததை பார்த்து எவ்வாறு சந்தோசப்பட்டான். அதன் பின்னர் அவனது தோழர்கள் அவனை கட்டுப்படுத்துவதை கடினமாக கண்டார்கள். அவன் திருமண விழாக்களில் கோவில் உற்சவங்களில் மக்கள் சந்தோஷமாக இருப்பதை காணும்போது அவன் ஆத்திரமும் அவமதிப்பும் கொண்டான்.” என்றும் தனது வைத்திய அனுபவத்தை குறிபிட்டிருந்தார்.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் களங்கமற்ற தமது மனங்களில் இணக் குரோதத்தையும் இரத்த வெறியையும் கொண்டவர்களாக புலிகளால் அவர்களின் புத்திசீவி சமூகத்தின் ஆதரவுடன் மாற்றப்பட்டார்கள், அநியாயமாக அழிக்கப்பட்டு போனார்கள் என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்களில் சிலவற்றை மட்டும் உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். அந்தக் குழந்தைகள் எனதும் உங்களதும் குழந்தைகள் போல் அசப்பில் தெரியலாம். கோழைத்தமான ஒரு குரூரமான வழிகாட்டலில் கொலையுன்டு போன சிறார்களும் அவர்களின் பெற்றோர்களும் அக்குழந்தைகள் ஜணித்தபோது எத்தனை எத்தனை கணவுகளை சுமந்திருப்பார்கள்.
(படம்: குழந்தைப் பருவத்தை புலிக்காக இழந்து மரித்தவர்கள் சிலர் )

இலண்டனில் நீன்ட கால தமிழர் ” மனித உரிமை” அமைப்பாக செயற்பட்டு பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடன் இறுக்கமான தொடர்புகளை வைத்திருக்கும், ஒரு தமிழர் ஸ்தாபனம் 2005ல் யாழ் நூலக பொறுப்பாளரான இளம் பெண்மனியை “மனித உரிமை” பயிற்சி பெற இலண்டனுக்கு அழைத்து பல்வேறு மனித உரிமை நிறுவனங்களில் பயிற்சியும் வழங்க செய்வித்து; தாங்கள் தனிபட்ட முறையில் ஆராய்ந்த விடயம் என்னவென்றால் புலிக்கு அதிகம் சிறுவர்கள் போருக்கு தேவைப்படுகிறர்கள்; ஆனால் அது கடினமாக இருக்கிறது ஆனால் சிறுவர் ஆட்சேர்ப்புக்கு சர்வதேச எதிராக கண்டனங்கள் எழுந்தாலும் சிறுவர்களை சேர்த்தே ஆகவேண்டும் என்று அந்த பொது நூலக பொறுப்பாளாரான தாய்மையை அனுபவித்திராத கன்னிப்பெண் கள நிலவரம் குறித்து கருத்துரைத்தார். இவர்களை போன்றோரின் தனி நாட்டுக் கனவில் பலியாகிப்போன ஆயிரக்கனக்கான இளம் சிறார்களின் கொலைக்கும் அச்சிறார்களால் செய்விக்கப்பட்ட கொலைக்கும் பகரப் பொறுப்பு (Vicarious liability) தண்டனைக்கு இவர்கள் உரியவர்கள். மனிதப்பிறவியின் அற்புதமான அழகான சந்தோஷகரமான பிராயமான குழந்தை பருவத்தை துஷ்டத்தனமாக பறித்து குழந்தைகளுக் கெதிரான பாரிய துஷ்பிரயோகம் செய்த புலிகள் அதற்கு ஒத்தாசை புரிந்த புலி ஆதரவாளர்கள் அனைவரும் இக்குழந்தைக் கொடுமைக்கு பகரப் பொறுப்பு உடையவர்கள்.

Thenee, lanka muslims, Mahawali (8 August 2010)

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...