Tuesday, 15 March 2011

நாடு கடந்த தமிழீழமும் நாக்கு நுனிக்கண் நறுந்தேன் நயவஞ்சகர்களும்

Apr 19, 2010
“நாக்கு நுனிக்கண் நறுந்தேனும் நெஞ்சகத்தில்

நீக்கரிய நஞ்சும் நிலைபெற்ற – தீக்குணத்தோன்

இன்சொல் உரைக்கின்றான் என்றவனை நம்பாதே

என்சொலினும் செய்வான் இடர்”நாடு கடந்த தமிழீழம் எனும் வெற்றுத் தீர்மானம் பற்றி நமக்கென்ன கவலை என்று வாளாவிருந்தால் இந்த தமிழ் அறிவு சீவிகள் எம்மை சும்மாவிடமாட்டார்கள் போல் தெரிகிறது அதனால்தான் அது குறித்து நாமும் எழுதாமலிருக்க முடியவில்லை.

நாடு கடந்த தமிழ் ஈழ கருத்தியலாளர்கள் (கே பீ உட்பட) முதன்முதலில் தற்காலிக தமிழ் ஈழ எண்ணக்கருவை பிரபாகரன் வைகாசியில் வைகுண்டம் ஏகி சுமார் இரு மாதத்தின் பின்னர் வெளியிட்டனர். பிரபல சர்வதேச இன்டர்போல் தேடும் கேடியான கே பியின் பின்பலத்துடன் புலம் பெயர் தமிழ் பேராசிரியர் கூட்டமும் ஓரிரு வெளிநாட்டு புலிசார்பு கல்விமான்களும் சேர்ந்து சுடச்சுட விட்ட அறிக்கையில் தமது எதிர்கால தமிழ் ஈழத்திற்கான நியாயங்கள் முன்வைக்கப்பட்டன. ஹக்கீமின் மொழியில் சொல்வதானால் புலிகள் தோற்கலாம் அவர்களது போராட்ட நியாயங்கள் தோற்கமுடியாது என்பதை இந்த புலன் பெயர் புத்திசீவிகளும் தாங்கள் சீவிக்கும் காலம் வரையாவது பிரபாகரனை கட்டியழ கட்டியம் கூறியதாகவே இந்த அறிக்கை தோன்றியது வழக்கம்போல் தனது மாவீரர் உரைகளில் பிரபாகரன் தவறாது குறிப்பிடும் திம்பு வட்டுக்கோட்டை வரலாறும் கோடிட்டு காட்டப்பட்டிருந்தது இந்த அறிக்கையில் குறிப்பிடும் வரலாறுகளில் நாங்கள் தலையிடவில்லை ஆனால் இந்த அறிக்கை குறிப்பிடும் எந்த விடயமும் எங்களை (முஸ்லிம்களை) உள்ளடக்கவில்லை என்பதுடன் எங்களை ஒரு இனமாக கருதாவிட்டாலும் பரவாயில்லை (அன்றைய காலகாட்டங்களில்) ஒரு தனித்துவ சமூகமாகத்தானும் கண்டு கொள்ளவில்லை. அந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது

“1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய தமிழர் ஓர் தேசிய இனம் வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம் ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது”

திம்பு பேச்சுவார்த்தையில் முஸ்லிம் ஒருவர் தமது சமூகத்தின் சார்பில் செல்லமுடியவில்லை அத்தகைய பிரதிநித்திதுவம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை நான் பல தமிழர் சபைகளில் முன்வைத்தபோது ஒரு தடவை முன்னாள் புளட் உறுப்பினர் ஒருவர் எனது கருத்ததை மறுதலித்து தங்களது இயக்கத்தை சேர்ந்த்த ஒரு முஸ்லிம் திம்பு பேர்ச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார் என்றும் அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜான் மாஸ்டர் (திருகோணமலையை சேர்ந்தவர்) எனும் பேர்வழியை சுட்டிக்காட்டி கூறினார்.

முஸ்லிம் என்ற சமூகத்தின் பெயரால் அவர் கலந்துகொள்ளவில்லை மாறாக புளட் இயக்க உறுப்பினராக அவர் இருந்தார் அதன் பிரதிநிகளில் ஒருவராக கலந்து கொண்டார். இன்று அவர் தீவிர சிங்கள எதிர்ப்புவாதியாகவும் தனிநாட்டு தீர்வு தேடி ஆதரவுதிரட்டும் பணியில் தனது வாழிடம் கனடாவிலிருந்து உலகெங்கும் சென்று பிரச்சாரப்பணியில் கலந்து கொண்டு வருகிறார் இவரது கருத்துக்கள் முஸ்லிம்கள் தொடர்பில் ஆபத்தானவை

முன்னாள் புலிகளின் சட்ட வல்லுனராக அறியப்பட்ட விஸ்வநாதன் உருத்திரமூர்த்தி முள்ளிவாய்க்காளுடன் முடிந்து விட்ட நாடு கடந்த தமிழீழ கனவுகளுக்கு திடீர் உந்துதல்களை வழங்கி இப்போது ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களுக்கும் ஒரு தாயகம் உண்டு பிரிந்து செல்லும் உரிமையுண்டு என்று கதை விட தமிழ் தேசிய புலிப்பயங்கரவாதத் பிரபாகர பக்த கோடிகளில் ஒரு சிலர் யாரடா நீ எம்தலைவன் கொண்ட பயங்கரவாத முஸ்லிம் விரோத தமிழ் தேசிய கொள்கைக்கெதிராக அறிக்கையிட என்று வினாவெழுப்பி கண்டனம் வெளியிட்டிருக்கிறார்கள் . மொத்தத்தில் யாழ் மையவாத கண்டனமும் சரி அனுதாபமும் சரி முஸ்லிம்களை பொறுத்தவரை ஒன்றுதான் ஆடு நனையுதென்று இந்த தமிழ் புத்தி சீவிகளின் புலம்பல் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இனிமேலும் இந்த நயவஞ்சகர்களின் முஸ்லிம்களுக்கான உரிமைப்பிரகடனம் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுவது முஸ்லிம்களுக்குள்ள மிக முக்கிய கடமையாகும் முதலில் நாடுகடந்த தமிழீழம் என்ற எண்ணக்கருவை மிதக்கவிட்டபோது மீகாமன் இல்லாது தத்தளித்த புலம் பெயர் புலி சார்பு தமிழர்கள் ஆறுதலடைய ஆகாய தேசம் கட்டப்புறப்பட்ட புலிப் புத்திசீவிகள் இப்போது மீண்டும் முஸ்லிகளுக்கு வலைவிரிக்க முயற்சிக்கிறார்கள்

இந்த

"ஒன்றிணைப்பு" செயற்பாடு குறித்து மேலும் அந்த அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது. "தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கெதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லீம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்"புலிகளின் பேச்சாளர்களாக பயங்கரவாத அமைப்பின் ஆலோசகர்களாக செயற்பட்ட இந்த ருத்திரகுமாரன் இப்போது முள்ளிவாக்கால் முருங்கை மரத்தின் கீழ் ஞானம் பெற்ற புத்தனாக பேசத்தொடங்கியிருக்கிறார். சரி அதுபோகட்டும் என்று விட்டு விடுவோம். ஆனால் இதில் எமக்கு மிகுந்த கவலை அளித்த விடயம் என்னவென்றால் இலங்கையைச்சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் இலங்கை முஸ்லிகளின் பிரதிநிதியாக தம்மை வெளிப்படுத்துவதுபோல் தானும் அக்கோட்பாட்டாலர்களுடன் சேர்ந்து இயங்க தயாராகவிருப்பதாக “நாடு கடந்த தமிழ் ஈழ திட்டத்தினை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த” முடிவாக குறிப்பிட்டு உருத்திரகுமாரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் இவர் பின்னர் இலண்டனில் பூகோளத்தமிழர் (Global Tamils) எனும் ஒரு அமைப்பினை புலிகளின் அருட்தந்தை இம்மானுவேல் அவர்கள் அங்குராப்பணம் செய்ததது தொடர்பில் தமக்கு இலங்கையை சேர்ந்த அமரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் பேராசிரியர் அது தொடர்பில் ஆதரவுக்கடிதம் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார் இந்த பேராசிரியர் ஐரோப்பாவிலிருந்து ஒளிபரப்பாகும் வானொலியொன்றில் முஸ்லிம்கள் பற்றி குறிப்பிடும் போது தனது வாதத்தை பின்வருமாறு கூறியவர்.

“இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் தங்களது அடையாளத்தை மதம் மூலமாகவே பார்க்கின்றார்கள் மதத்தை அடிப்படையாகக்கொண்டு ஒரு இன உருவாக்கம் உருவாகுமென்று நான் நம்பவில்லை இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள்தான் உண்டு. இலங்கை முஸ்லிம்கள் மொழியற்ற அரசியல் அனாதைகள்”

கூறி தமிழ் தேசியவாதிகளின் காதுகளை குளிரப்பன்னியவர் இந்த முஸ்லிம் “அரசியல் விஞ்ஞானி “ (Political Scientist)

இந்த முஸ்லிம் பேராசிரியர் கொழும்பை சேர்ந்தவர் முன்னாள் வட -கிழக்கு மாகாணசபையில் ஈ பீ ஆர் .எல் எப் ஆட்சி செலுத்தியபோது அக்கட்சியின் சார்வில் ஒரு அமைச்சராகவிருந்த அபூ யூசூப் இவரது சிறிய தந்தை இருவருமே மாக்ஸ்சிட்டுகள் அபூ யூசூப் இன்றுவரை முஸ்லிகள் தமிழர்கள் என்று கூறும் சார் .பொன்னம்பலம் ராமனாதனின் பேரர். இந்த பேராசிரியர் முள்ளிவாய்க்காளில் யுத்தம் உக்கிரமடைய அங்கு நடைபெற்ற செய்திகள் உலகின் பல செய்தி ஊடகங்களில் தினசரி செய்தியானபோது இலங்கை அரசுக்கெதிராக சாரமாரியாக கண்டனங்கள் பொழிந்தபோது அவற்றினை தொடர்ச்சியாக இலங்கை முஸ்லிம் இனைய குழுவினருக்கு மின்னஞ்சல் மூலம் பகிரும் பணியை தீவிரமாக செய்ததவர். ஆனால் இவரை மூதூரில் முஸ்லிகளை புலிகள் வெளியேற்றி வேட்டையாடியபோதும், சமாதன காலத்தில் மூதூரிலும் வாழைச்சேனையிலும் குதறி எறிந்தபோதும் இவர் ஒப்பீட்டளவில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாடுகடந்த தமிழீழ முஸ்லிம் ஆலோசகராக இவர்தான் செயற்படுகிறார் என்பது இப்போது புலனாகிறது ஆனால் புலித் தமிழ் அறிவுசீவிகளுக்கு முஸ்லிம் (தமிழர்) அறிவுசீவி ஒருவர் சர்வதேச விளம்பரத்துக்கு கிடைத்திருக்கிறார் .

அருட் தந்தை இம்மானுவேல் அவர்களை நான் ஜெர்மனியில் சந்தித்தபோது அவருடன் தனிப்பட்ட வகையில் நெருக்கமாக கலந்தாலோசினை செய்த அக்கூட்ட பிரதிநிகளில் புலிகளின் தமிழர் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர் ரெஜி , புலிகளின் பொருளியல் நிபுணர் கலாநிதி பரமேஸ்வரன் மற்றும் வின்ஸ்டன் பேராசிரியர் சேரன் என்போர் இருந்தனர் என்பதை நான் கண்டுகொண்டேன் ஆனால் எனது காட்டமான கருத்துக்களின் பின்னர் எனது கருத்துக்களை தாம் நம்பும் புலிகளுக்கு எதிரானதாகவிருந்தும் அவர் என்னுடன் நாசூக்காக ஏனய புலிப்பிரமுகர்கள் போலல்லாது ஒரு பாதிரியாகவே நடந்துகொண்டார்.

No comments:

Post a Comment

New book tells untold story of Sri Lanka’s 2009 victory at UN Human Rights Council- By P.K.Balachandran

Colombo, September 12: For the first time since Eelam War IV ended nearly eight years ago, a book entitled “Mission Impossible: Gen...