
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தை முத்தையா முரளிதரன் அளித்துள்ளார்.
இது தொடர்பாக துபையில் இருந்து மூன்று பக்க அறிக்கை, முத்தையா முரளிதன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
“என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதனாக நான் படைத்த சாதனைகள், என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.”
இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக, எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது, இந்திய வம்சாவளியான மலையக தமிழர்கள்தான்.
இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.