லங்கையில் தற்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளாலும், ‘பொதுமக்கள்’ என்ற பெயரிலும் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

ஆரம்பத்தில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் என ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் தற்பொழுது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகும்படியும் கோரி நிற்கிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வைக் காரணம் காட்டியே இந்தப் போராட்டம் ஆரம்பமானது. அதனுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான போராட்டமாகவும் அது சித்தரிக்கப்பட்டது. பின்னர் முழு அரசாங்கமும் ஊழல் மோசடியில் ஈடுபட்டதால் ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என உரு மாறியது.

ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் கருத்து இரண்டு விதமாக உள்ளது. ஒன்று, இலங்கையில் மட்டும்தான் இத்தகைய பொருளாதார நெருக்கடி தோன்றியுள்ளது என்றும், அதற்கு இன்றைய அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளே காரணம் என்பதும். இரண்டாவது, ராஜபக்ச குடும்பம் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதால்தான் நாட்டுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது.

உண்மையில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல என்பதை ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கவனிக்கிறார்கள் இல்லை அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். இன்றைய பொருளாதார நெருக்கடி என்பது இலங்கை போன்ற சகல வளர்முக நாடுகளையும் மட்டுமின்றி, வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

உலகளாவிய இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணம் வளர்ச்சி அடைந்த நாடுகளின் உலகமயக் கொள்கையாகும். வளர்ச்சி அடைந்த நாடுகள் உலகின் முன்னணி நிதி நிறுவனங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், வளர்முக நாடுகளை ஈவிரக்கம் இன்றிச் சுரண்டியும் வருகின்றன.