பிப்ரவரி 14, 2020

சீனாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் இந்த வைரஸ் இப்போதுதான் உள் நுழைகிறது. வெகு வேகமாகப் பரவுகிறது. இதுவரை 25 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டவர்களைப் பாதித்திருக்கிறது. இதில் 99% பேர் சீனர்கள்தான். நோயின் கொடுங்கரங்களுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இந்த வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாடுபடுகிறது சீனா. இந்த வைரஸைக் காட்டிலும் வேகமாகப் பரவும் விஷயங்கள் இரண்டு: வதந்தியும் சீனாவின் மீதான வன்மமும்.
ஜனவரி தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட பதிவு இது: ‘இந்த கரோனா வைரஸின் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும். ஏனெனில், இது சீனாவில் தயாரிக்கப்பட்டது.’ கூடவே, பொங்கிச் சிரிக்கிற மஞ்சள்நிற வட்ட முகச் சித்திரங்கள் இரண்டு. அதாவது, இது நகைச்சுவை என்றறிக என்கிறார்கள் இதை எழுதியவர்களும் அனுப்பியவர்களும். இதேரீதியிலான இன்னொரு பதிவு: ‘சீனர்கள் கண்டதையும் தின்றதால்தான் அங்கே கரோனா வைரஸ் பரவியது என்கிறார்கள். சீனர்கள் கண்டதையும் தின்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் நான்கு கால்கள் உள்ளவற்றில் ஒன்றையும் பறப்பனவற்றில் ஒன்றையும் தின்பதில்லை. அவை முறையே நாற்காலி, விமானம்.’ இதற்குக் கீழேயும் நகைக்கும் சித்திரங்கள்.