.

எப்போதும் நம்மிடம் கேட்கப்படும் கேள்வி, நீங்கள் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரா அல்லது எதிரானவரா என்பதாகும். உள்ளடக்கம் இல்லாமல் எந்த சீர்திருத்தமும் இருந்திட முடியாது. ஒவ்வொரு சீர்திருத்தமும் உள்ளடக்கத்தை, ஒரு நோக்கத்தைப் பெற்றிருக்கும். இடதுசாரிகள் ஒரு சீர்திருத்தத்தை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை இவைதான் தீர்மானிக்கின்றன. இங்கே மையமான பிரச்சனை என்ன வென்றால், மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நம் மக்களின் நலன்களுக்கானவையாக இருக்கின்றனவா, அவர்களின் வாழ்வாதாரங்களை அதிகப்படுத்து வதற்கானவையாக இருக்கின்றனவா மற்றும் நம் நாட்டின் பொருளாதார இறையாண்மையை வலுப்படுத்துவதற்கானவையாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். இவற்றின் அடிப்படையில்தான் நாட்டில், கடந்த பல பத்தாண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம், அவை குறித்த நம் அணுகுமுறையும் இருந்திருக்கிறது. இது நம் அணுகுமுறையாக இருப்பது தொடரும்.
ஒன்றிய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், வேளாண் உற்பத்திப் பொருள்களுக்குக்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் பின்னணியில்தான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் முப்பதாண்டுகள் வந்திருக்கின்றன. இவை, ஒரு நூற்றாண்டுக்கு முன், பீகார் மாநிலத்தில் சம்பரான் என்னுமிடத்தில் வலுக்கட்டாயமாக அவுரிச்செடி (இண்டிகோ) வளர்க்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற சத்தியாக்கிரகம், கார்ப்பரேட் விவசாயம், சிறு அளவிலான விவசாய உள்பத்தியை அழித்தொழித்தமை (மோடியின் பணமதிப்பிழப்பு) மற்றும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.