எஸ்.எம்.எம்.பஷீர்
“சுட்டதென்னவோ அவர்களைத்தான்
விழுந்ததென்னவோ நாங்கள்தான்”
ஏ. கந்தசாமி
அண்மையில் பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் யாழ்ப்பான மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று பாராளுமன்றம் செல்லும் முதல் தமிழ் பெண்மணி விஜயகலா மகேஸ்வரன் தனது கொல்லப்பட்ட கணவனின் அரசியல் வழியில் கட்சியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அதேபோல் கம்பஹா மாவட்டத்தில் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளை தனது கணவனின் வழியில் போட்டியிட்டு வெற்றி ஈட்டியுள்ளார். ஆனால் இலங்கை வரலாற்றில் வேறு சில தமிழ் பெண்மணிகளும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்கள். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த தங்கேஸ்வரி , பத்திமினி சிதம்பரநாதன் தவிர தனது வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் எம். பீ ஆகவிருந்த கே .டி புலேந்திரன் புலிகளால் கொல்லப்பட்டபின் (19.10.1983)அவரது மனைவி திருமதி புலேந்திரன் தனது கணவனது இடத்துக்கு அன்றைய ஐக்கிய தேசிய கட்சியில் அரசில் எம் .பீ யாக நியமிக்கப்பட்டார். அவர் துணை கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார். குலேந்திரன் வீட்டில் குடும்பத்தாருடன் தொலைக்கட்சி பார்த்துக்கொண்டிருந்த போது புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் . இவரது மனைவியின் சகோதரர் (மைத்துனர்) புலிகளை அதிகம் கண்டிப்பதை தவிர்த்துக்கொண்டார் (ஒருவேளை பயமாகவிருக்கலாம்) ஆனால் பின்னர் அவர் தீவிர சிங்கள எதிர்ப்புக் கருத்துக்களை கொண்டவராகவே எனக்கு அறிமுகமானார்.
கிழக்கிலே யாழ்ப்பான பூர்வீகத்தை கொண்டிருந்தாலும் பொத்துவில் தொகுதியில் தமிழர் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அன்றைய ஆட்சியிலிருந்த ஜே ஆரின் ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவிருந்த மயில்வாகனம் கனகரத்தினம் சுடப்பட்டு உயிர் தப்பி ஆனால் அதன் விளைவாய் பல மாதங்களின் பின்னர் மரணித்தபோது அவரது இடத்துக்கு அவரின் சகோதரி ரங்கநாயகி பத்மநாதன் தெரிவு செய்யப்பட்டார். அது மாத்திரமல்ல இவர் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
இக்கட்டுரையாக்கத்தின் இன்னுமொரு நோக்கம் என்னவென்றால். கனகரத்தினம் எம் பீ கட்சி மாறியதும் அதனால் தமிழர் விடுதலைக் கூட்டணி கொதிப்படைந்ததும் கனகரத்தினத்தின் குடும்பத்தில் சிலர் அதனை தீவிரமாக அன்றிருந்த அரசியல் சூழலில் எதிர்த்தனர் என்ற செய்திகளுக்கு அப்பால் தான் சுடப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேளையில் போலிசுக்கு வழங்கிய தகவலில் அவரை சுட்டவர்கள் இருவர் என்றும் அதில் ஒருவர் மெலிந்த நீண்டவர் மற்றையவர் கட்டையான தடித்தவர் என்றும் கூறியதாகவும் அவர்கள் உமாமகேஸ்வரன் பிரபாகரன் என்றும் ஒரு பிரபல இலங்கை தமிழ் பத்திரிக்கையாளர் ஆவணமிட்டுள்ளார் .
ஆனால் கனகரத்தினத்தை கொள்ளுப்பிட்டியில் சுட்டபின்னர் அப்பகுதிலிருந்த தேநீர் கடையொன்றில் அவரை சுட்டவர்கள் வெகு நிதானமாக கடைக்குள் வந்தனர் என்று அன்றைய காலகட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் அலுவலகத்தில் பணியாற்றி பின்னர் சட்டத்தரணியாக தகுதிபெற்ற எனது மறைந்த தமிழ் நண்பர் ஒருவர் மிகவும் இரகசியமாக என்னிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த கொலையாளிகள் உமா என்றோ அல்லது பிரபா என்றோ அவர் கூறவில்லை ( அவர் அதனை வெளிப்படையாக என்னிடம் கூறாமல் விட்டிருக்கலாம் ) மாறாக கனகரத்தினத்தை சுட்டவர்கள் அன்று அந்த சிற்றுண்டிசாலையில் சந்தித்ததை பற்றி மட்டும் கூறினார். அவருக்கு அச்சம்பவம் பற்றி முன்னரே தெரிந்திருந்தது என்பது சொல்லாமல் சொல்லியதாக எனக்கு தெளிவானது ஆனால் என்மீதுள்ள நம்பிக்கையின் பால் சொல்லப்பட்டதால் அவரிடம் அன்று கேள்வி ஏதும் கேட்காமல் அவரின் வாக்குறுதியின் பேரில் பாதுகாக்கவேண்டி நேரிட்டது, ஆனால் இன்று இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லை (கூறியவர் உட்பட ) எனபது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய கேள்வி அன்றைய நாடாளுமன்ற எதிர்க்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு உத்தியோகத்தர் இயக்க ஈடுபாடு கொண்ட காரணத்தினால் கனகரத்தினத்தின் கொலையாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தாரா அல்லது இந்தக்கொலை பற்றி அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அறிந்திருந்தாரா. அவ்வாறு அறிந்திருந்தால் ! வரலாறுகள் எதிர்கால நலன் சரியான பதிவு கருதி மீள் பரிசோதனைக்கும் ஆய்வுக்கும் உடபடுத்தவேண்டும் அதன் மூலம் இன்னுமொரு கொலைக்கலாச்சாரத்துக்கு முடிவுகட்டமுடியும்.
