
‘கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சீன மக்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளாக இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம். அதில் ஒன்று, சீனாவிலிருந்து வறுமையை ஒழித்துக்கட்டியது. இரண்டாவது விடயம் புதிய பட்டுப்பாதை பொருளாதாரத் திட்டம் (தடம் மற்றும் பாதை முன்னெடுப்பு – Belt and Road Initiative). சீனா 800 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது. நூற்றுக்கும் அதிக நாடுகள் தடம் மற்றும் பாதை முன்னெடுப்பில் இணைந்துள்ளன.’
இவ்வாறு கூறியிருக்கிறார் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டதின் 65 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவருமான டியு குணசேகர. இது சம்பந்தமான நிகழ்வு கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் (Nelum Pokuna Theatre) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீன, ரஸ்ய, வியட்நாம், கியூப தூதுவர்களும் கலந்து கொண்டதுடன், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகத்தின் பல்வேறு மட்டப் பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.