லங்கையில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினை இப்பொழுது அரசியல் பிரச்சினையாகவும் மாற்றமடைந்திருக்கிறது. இதில் பொருளாதாரப் பிரச்சினை என்பது நீண்டகாலமாக உருவாகி வந்த ஒன்று. ஆனால் அரசியல் பிரச்சினை என்பது திடீரென திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று.

 

 

பொருளாதாரப் பிரச்சினையால் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையே. உணவுப் பொருட்கள், எரிபொருள், சமையல் வாயு, மருந்துகள் என்பனவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், அவற்றின் விலைகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன.

இவற்றில் எரிபொருள், சமையல் வாயு, மருந்துகள் என்பனவற்றுக்கு இறக்குமதியில் தங்கியிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இவற்றை இறக்குமதி செய்வதானால் அமெரிக்க டொலர் வேண்டும். ஆனால் இலங்கைக்கு வழமையாக வந்த வெளிநாட்டு செலாவணியான டொலர் வருவது நின்று விட்டது. அதற்குப் பல காரணங்கள் இருப்பினும் டொலர் இல்லாமையால் பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. அதுவே இன்றைய மோசமான நெருக்கடி நிலைமைக்குக் காரணம்.

ஆனால் உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை இலங்கை திட்டமிட்டுச் செயற்பட்டிருந்தால், அவற்றுக்கு இறக்குமதியில் பெருமளவு தங்கியிருக்காமல் சுயசார்பாகவே ஓரளவு நிலைமையைச் சமாளித்திருக்க முடியும். ஆனால் அந்த வகையில் இதுவரை பதவியில் இருந்த அரசாங்கங்கள் (சிறீமாவோ பண்டாரநாயக்க அரசைத் தவிர) எதுவும் செயற்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு ராஜபக்சாக்கள் தான் முழுக்க முழுக்க காரணகர்த்தாக்கள் என்ற பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகளும் அவர்களுக்குச் சார்பான ஊடகங்களும் செய்து வருகின்றன. ஆனால் உண்மை என்ன?

இலங்கையின் பொருளாதார நெருக்கடி 1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி ஏற்பட்ட கையோடேயே ஆரம்பமாகிவிட்டது. 1970 – 77 காலகட்டத்தில் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சியில் இருந்த மக்கள் முன்னணி அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கையை ஜே.ஆர். அரசாங்கம் ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’ என்ற பெயரில் பதவிக்கு வந்ததும் உடனடியாக நீக்கிவிட்டது. அதன் காரணமாக கண்ட கண்ட பொருட்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றை இறக்குமதி செய்வதற்காக இலங்கை பெரும் தொகை பணத்தை (டொலர்களை) வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கியது. அந்தக் கடன் வாங்கும் கொள்கையை தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் மேற்கொண்டன.

சிறீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கை காரணமாக உள்ளுர் விவசாயம் செழிப்படைந்தது. அதனால் விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டினர். குறிப்பாக வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, கரட், பீட்ருட் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வந்த வட பகுதி விவசாயிகள் அதிக வருமானம் பெற்றனர்.

அதேபோல வெளிநாட்டுத் துணிகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதித்ததால், நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த (பெரும்பாலும் முஸ்லீம் மக்கள்) கிழக்கிலங்கை மற்றும் வட பகுதி மக்கள் அதிக நன்மை பெற்றனர். அந்தக் காலத்தில் பண்டத்தரிப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் உற்பத்தி செய்த தரம் வாய்ந்த காற்சட்டைத் துணியை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அதுமாத்திரமின்றி, சிறீமாவோ அரசு மேற்கொண்ட இறக்குமதிக் கட்டுப்பாட்டுக் கொள்கையால் கடல் உணவு உற்பத்தியும் அதிக அளவில் பெருகி மீனவ சமூக மக்களும் பல நன்மைகளைப் பெற்றனர்.

இன்னொரு புறத்தில் உள்நாட்டு சிறு தொழில் உற்பத்திகளும் பல்கிப் பெருகின.

இந்த நிலைமை உருவாவதிற்கு அன்றைய அரசின் முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகளே அடிப்படைக் காரணங்களாக இருந்தன. ஏனெனில் அந்த அரசின் பங்காளிகளாக ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வில் வளர்ந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், சோசலிசக் கொள்கைகளைக் கொண்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பனவும் இருந்தன.

ஆனால், 1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். தலைமை தாங்கிய ஐ.தே.க. அவ்வாறானதொரு கட்சி அல்ல. அது முழுக்கு முழுக்க அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவான, உள்நாட்டில் பெரும் முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு கட்சி. எனவே அக்கட்சி தேசிய மற்றும் மக்கள் நலன்களை விட, மக்களைச் சுரண்டுகின்ற உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகளின் நலன்களையே பாதுகாத்து நின்றது. அதன் காரணமாகவே 77 இல் ஜே.ஆர். அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் நவ தாராளவாதக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டின் அற்ப சொற்ப சுயசார்புப் பொருளாதாரத்தையும் இல்லாதொழித்தது. அதன் காரணமாக உள்ளுர் உற்பத்தி படுத்து, வெளிநாட்டுக் கடன்களும் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த நவ தாராளவாதக் கொள்கையைக் காட்டிக் காப்பதற்கே 1978 இல் ஜே.ஆர். அரசு நிறைவேற்று ஜனாதிபதி முறையுள்ள எதேச்சாதிகார அரசியல் சட்டத்தையும் நிறைவேற்றியது.

ஜே.ஆருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஆர்.பிரேமதாச, சந்திரிக குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச போன்றோர் உட்பட இன்றைய கோத்தபாய ராஜபக்ச வரை, ஜே.ஆர். கொண்டு வந்த நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையையோ, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கொண்ட அரசியல் அமைப்பையோ மாற்ற முயற்சிக்கவில்லை. அது மட்டுமின்றி, நாட்டின் இன்னொரு முக்கியமான தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாகவும் ஆட்சியில் இருந்த எல்லா அரசாங்கங்களும் ஒரே விதமான கொள்கையையே பின்பற்றி வந்துள்ளன. இந்த நிலைமைகளின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகும்.

எனவே, இன்றைய நெருக்கடிக்கு ராஜபக்சாக்கள்தான் காரணம் என்ற கருத்து மிகவும் தவறானதாகும். ஆனால் இந்த நெருக்கடி உருவானதில் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு. ஏனெனில் மகிந்த ராஜபக்ச 10 ஆண்டுகள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்துள்ளார். இப்பொழுது அவரது தம்பி கோத்தபாய ராஜபக்ச 3 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருக்கின்றார். ஆனால் இவர்கள் இருவருக்கும் மக்கள் செல்வாக்கும், பாராளுமன்றப் பெரும்பான்மையும் இருந்துள்ளது. இவர்கள் நினைத்திருந்தால், நாட்டில் இப்படியான நிலைமைகள் உருவாகலாம் என்பதை முன்கூட்டியே உய்த்துணர்ந்து பொருளாதாரத் துறையிலும் அரசியல் அமைப்புத் துறையிலும் அடிப்படையான மாற்றங்களைச் செய்திருக்கலாம்.