மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

 

 

 

 

எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது என்பதற்கு இன்னும் தான் எனக்கு விடைதெரியவில்லை. இன்னும் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. 2006 மாவிலாறு மூடியதிலிருந்து 2009 ஜனவரிவரை இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் புலிகள் இராணுவம் பொதுமக்கள் என கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு ஆயிரமளவிலேயே இருந்தது. யுத்தத்தை அப்போதே நிறுத்துங்கள் மக்களைக் கொல்லக் கொடுத்து யுத்தத்தை வெல்ல முடியாது. கொல்லப்பட்டவர்களுக்கு மனிதவுரிமை கோஷம் எழுப்புவதில் பயனில்லை என பதிவுக்கு மேல் பதிவுகள் எழுதினேன். எழுதினோம். என்ன ஆச்சு. கொத்துக்கொத்தாக கொல்லக் கொடுத்தார்கள். எனக்கு இன்னமும் புரியாத விசயம் கொல்லப்படுவதை நிறுத்துவது நல்லதா? அல்லது கொல்லப்பட்ட பின் அதை வைத்து மனித உரிமைக்காகப் போராடுவது நல்லதா?

இக்கீழுள்ள பதிவை மணியம் சண்முகம் டிசம்பர் 26 அன்று தன் முகநூலில் பதிந்துள்ளார். என்னை ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பதிவு மிகவும் ஈர்த்தது. அதிஸ்ட் வசமாக சம்பந்தப்பட்டவர் ஒன்றரை வருடங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் விடுவிக்கப்படாமல் ‘அங்காலை அனுப்பப்பட்டவை எத்தனைபேர்? துரதிஷ்டவசமாக இங்கு மனித உரிமைகள் பேசுகின்ற பெரும்பாலானோர் அவர்கள் தனிமனிதர்களாக இருந்தாலென்ன அமைப்புகளாக இருந்தாலென்ன, நாடுகளாக இருந்தால் என்ன? சமாதானத்துக்காக நோபல் பரிசு வழங்கும் நாடாக இருந்தாலென்ன அவர்கள் ஒன்றும் மனித உயிர்கள் மீதும் மனித நேயத்தின் மீதும் அக்கறைகொண்டவர்கள் கிடையாது. அவர்கள் மனித உரிமையை ஒரு அரசயல் ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர். அதனால் தான் மனித உரிமைகள் மனிதம் அற்ற வெற்றுக் கோஷங்கள் ஆகிவிட்டது. மனித உரிமையைச் பேசுவோர் தான் எப்போதும் வன்முறையை உற்பத்தி செய்பவர்களாகவும் வன்முறையை ஏற்றுமதி செய்பவர்களாகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளனர். மனிதவுரிமை என்பது கேலிக் கூத்தாக்கப்பட்டு ஆண்டுகள் தசாப்தங்கள் கடந்துவிட்டது.

யுத்தங்கள் உற்பத்தி செய்யப்பட்டால் தான் வருமானம் பெருகும் லாபம் குவியும். அதற்காக மக்கள் கொல்லப்பட வேண்டும். காயப்பட வேண்டும். வரலாறு காணாத துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அதேசமயம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி மனித உரிமை நாடகம் போடவேண்டும்.

உங்களுக்கு ஏதாவது விளங்கிச்சு? எனக்கும் அப்படித்தான்.

இப்போது மணியம் சண்முகத்தின் கதையல்ல நிஜத்தைப் பார்க்கலாம்:

31 ஆவது ஆண்டு நினைவாக…..

1991 டிசம்பர் 26 ஆம் திகதி (இதே தினம்) முன்னிரவு நேரம் நல்லூர் பண்டாரிக்குளம் ஒழுங்கையிலுள்ள ஒரு இரண்டுமாடிக் கட்டிடத்தின் கீழ் அறையொன்றில் நான் அடைக்கப்படுகின்றேன். என்னை அங்கே அடைக்கும் போதே அந்த அறையில் ஏற்கெனவே ஏழெட்டுப் பேர் இருக்கின்றனர்.

அறைக்குள் நுழைந்ததும் மூத்திரவாடை குப்பென்று அடிக்கிறது. மங்கலான ஒளியுடன் அல்லாடிக் கொண்டிருந்த குப்பி விளக்கின் ஒளியில் அந்த அறையின் மூலையில் ஒரு உலோகச் சட்டி இருக்கிறது. அது மூத்திரத்தால் நிறைந்திருக்கிறது. அதன் மணம் வயிற்றைக் குமட்டுகிறது. சுவர்களில் மூட்டைப் பூச்சிகளையும், நுளம்புகளையும் நசுக்கிய இரத்தக்கறை.

அவர்கள் என்னைப் பிடிக்க வந்தபோது, நான் யாழ். நகரின் ஸ்ரான்லி வீதியில் இருந்த எமது புத்தகக் கடையில் இருக்கிறேன். கூட இன்னொரு வயோதிபத் தோழரும் என்னுடன் இருக்கிறார். வழமையாகத் தினமும் வருபவர்.

எனது பெயரைச் சொல்லி ‘நீங்கள் தானா அவர்?’ என வந்த மூன்று பேரில் ஒருவன் கேட்கிறான். எனக்கு அவர்களது தோற்றத்தையும் பாவனைகளையும் பார்த்தவுடன் விளங்கிவிட்டது. இருந்தாலும் கேட்கிறேன்:
‘என்ன விசயம் தம்பி?’

‘ஒரு சின்ன விசாரணை. எங்களுடன் வாருங்கள்’. அவன் எனது முகத்தைப் பார்க்காமல் எங்கோ பாரத்துக்கொண்டு பதில் சொல்கிறான். பின்னர் தான் புலனாய்வுப் பிரிவிலிருந்து வருவதாகக் கூறி தனது அடையாள அட்டையைக் காண்பிக்கிறான். வந்தவர்கள் மூவருக்கும் 20 வயதுக்குள்தான் இருக்கும்.
புத்தகக் கடையைப் பூட்டி திறப்பைத் தாங்களே எடுத்துக் கொள்கின்றனர் அங்கிருந்து நேரே தமது இருப்பிடத்துக்கு என்னை அழைத்துச் செல்ல முயல்கின்றனர். நான் ஒருவாறு அவர்களை வலியுறுத்தி சுமார் அரை மைல் தூரத்திலுள்ள எனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு எனது சைக்கிளை நிறுத்திவிட்டு, இரவு உணவுக்காக வாங்கிவந்த பாணை மனைவியிடம் கொடுத்து விடயத்தைக் கூறுகிறேன். மனைவி அழத் தொடங்குகிறார். ஒன்றரை வயது கைக்குழந்தையான எனது மகள் ஒன்றும் புரியாது மிரண்டுபோய் இருக்கிறாள்.

அவர்கள் புத்தகக் கடையைச் சோதனையிட்டது போல எமது வீட்டின் அறைகளுள்ளும் புகுந்து சோதனையிட்ட பின்னர் என்னைத் தமது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்படுகிறார்கள். புறப்படும் போது வாசல்வரை வந்த மனைவியின் முன்னால், ‘என்னை எப்ப விடுவியள் தம்பி?’ எனக் கேட்கிறேன்.
‘அது உங்கடை விசாரணையைப் பொறுத்தது’ எனப் பதிலளிக்கிறான். அவனது சுருதி மாறியிருந்ததை அவதானித்தேன்.

அறைக்குள் இருந்தவர்களில் பலர் தாடியுடன் காணப்படுகின்றனர். அவர்களது உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக முகச்சவரம் செய்யாதது மட்டுமின்றி, குளிக்கவும் இல்லை என்பது புரிந்தது, அவர்களில் ஒருவர் எழுந்து சென்று மூலையில் இருந்த சட்டிக்குள் சிறுநீர் கழித்தார். இனிமேல் நானும் இப்படித்தான் என்பது புரிந்தது.

‘என்ன விசயத்துக்காக உங்களைப் பிடிச்சவங்கள்’ என ஒருவர் என்னிடம் கேட்கிறார்.

‘காரணம் ஒண்டும் சொல்லேல்லை’ என நான் பதில் சொல்கிறேன்.

‘உங்களை என்ன காரணத்துக்காகப் பிடிச்சவை?’ என நான் அவரைத் திருப்பிக் கேட்கிறேன்.

‘உம்மைப் போலைதான் எனக்கும் காரணம் சொல்லேல்லை’ அவர் கூறுகிறார்.

‘எவ்வளவு காலமாக இஞ்சை இருக்கிறியள்?’ திரும்பவும் அவரிடம் கேட்டேன்.

‘ஆறு மாசம் வரும். ஆனா ஒரு வருசம் ஆன ஆக்களும் இருக்கினம்’.

இடையே மேல்மாடியிலிருந்து சிங்களத்தில் ஏதோ ஒலி வருகிறது. நான் ஒன்றும் விளங்காமல் அங்கிருந்தவர்களைப் பார்க்கிறேன். எனது நிலையைப் புரிந்து கெண்ட அவர்களில் ஒருவர்:
‘அது பிடிச்சு வைச்சிருக்கிற சிங்களப் பொலிஸ்காரர் பிரித் ஓதுறாங்கள். இது ஒவ்வாரு நாளும் நடக்கும். என்னத்தை ஓதினாலும் அவங்களை இவங்கள் விடப்போறதில்லை. அங்காலை அனுப்பிப் போடுவாங்கள்’ என்று கூறுகிறார். ‘அங்காலை’ என்பதை சற்று அழுத்திக் கூறுகிறார். நானும் ‘அங்காலை’தான் போகவேண்டி வருமோ என மனம் துணுக்கிறுகிறது.

கொஞ்ச நேரத்தில் ஒரு பையன் கதவைத் திறந்து ஒரு பிளாஸ்ரிக் சட்டியில் சிறிதளவு கொத்து ரொட்டியைக் கொண்டுவந்து அங்கிருந்த கோப்பைகள் ஒவ்வொன்றிலும் கொட்டிவிட்டுப் போகிறான். போகும்போது ‘புதுசா வந்தவருக்கும் குடுங்கோ’ என்று சொல்லிவிட்டுப் போகிறான்.

கோப்பைகள் பற்றாக்குறையால் ஒரு கோப்பையில் இருவர் சேர்ந்து சாப்பிடுகின்றனர். என்னையும் அழைக்கின்றனர். நான் ‘பசிக்கவில்லை’ என்று சொல்லிவிட்டு சுவருடன் சாய்ந்து எனது எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தொடங்குகிறேன்.

அறைக் கதவு மீண்டும் திறக்கப்படுகிறது. என்னை மாலையில் அங்கு கொண்டு வந்து விட்டவன் என்னைத் தன்னுடன் வருமாறு அழைக்கிறான். நான் எழுந்து அவனுடன் போகிறேன். அந்த வீட்டின் முன்னால் உள்ள காவல் குடிலில் எல்.எம்.ஜி. ரக துப்பாக்கியுடன் இருப்பவன் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு, வாசலைப் பார்த்து குறி வைத்தபடி இருக்கிறான்.

என்னை அழைத்துப்போக வந்தவன் ஒரு கறுப்புத் துணியால் எனது கண்களை மூடிக் கட்டிவிட்டு என்னைக் கைகளில் பிடித்து அழைத்துப் போய் தனது சைக்கிளில் ஏற்றுகிறான்.

‘எங்கை தம்பி கூட்டிக்கெண்டு போறியள்?’ எனக் கேட்கிறேன்.
‘எங்களிட்டை வந்திட்டால் கேள்வி ஒண்டும் கேட்கக் கூடாது’ என எச்சரிக்கிறான்.
எனது ஒன்றரை வருட நரக வாழ்வுக்கான பயணம் ஆரம்பமாகிறது என்பதை அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் 1994 யூன் 6 ஆம் திகதி வெளியே வருகிறேன். அந்த ஒன்றரை வருடங்களில் எனது கண்ணீர் எல்லாம் வற்றி கண் வரண்டுபோய் விட்டது. என்னைப் போன்ற பலரினதும் கண்ணீரும்தான்.

அந்தக் கண்ணீர் எல்லாம் திரண்டு 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கடல் அலைகளாக ஆர்ப்பரிக்கின்றன.

Source: Thesam DECEMBER 28, 2022

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...