இலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு:

எஸ்.எம்.எம்.பஷீர்

“ஒயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்” – சுப்ரமணிய பாரதி

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களாக காலி இலக்கிய விழா (Galle Literary festival) எனும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இம்முறையும் இவ்விழா ஐந்தாவது வருடமாக எதிர்வரும் ஜனவரி 26 ம திகதி தொடக்கம் 30 ம திகதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் வழக்கம்போல் பல சர்வதேச புகழ் பெற்ற இலக்கியவாதிகள் பலர் கலந்து கொள்கின்றனர், அவர்களில் குறிப்பாக இலக்கியத்திற்காக 2006ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஒர்ஹான் பாமுக்கும் (Orhan Pamuk) கலந்து கொள்கிறார். இவர் துருக்கியை சேர்ந்தவர் என்பதுடன் இவரின் நோபல் பரிசுபெற்ற நாவலான புதிய வாழ்வு (நியூ லைப்-New Life ) ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு எழுபது இலட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. இவரின் எனது பெயர் சிவப்பு (My name is Red) என்ற புத்தகம் 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இதற்காக இவருக்கு இம்பாக் டப்ளின் விருதும (IMPAC DUBLIN AWARD) வழங்கப்பட்டது முதல் இவர் சர்வதேச நாவல் இலக்கிய படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்தவர். மேலும் இவர் பனி , (Snow) இஸ்தான்புல்- ஞாபகங்களும் நகரமும், (Istanbul-Memories and the city) மாற்று வர்ணங்கள் (Other colours) என்ற நாவல்களையும் எழுதியுள்ளார். இவரின் புதிய நாவல் அப்பாவி அருங் காட்சியகம். (The Museum of Innocence).


இவ் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளும் இன்னுமொருவர் புக்கர் பிரைஸ் (Booker Prize) பெற்ற கிரான் தேசாய். (Kiran Desai) இவர் கொய்யாத் தோட்டத்தில் அமளி துமளி ( Hullabaloo in the Guava Orchard) என்ற நாவலுக்காக பெட்டி றாச்க் (Betty Trask Award) விருது பெற்றவர் , இந்தியரான இவர் பல புகழ் பெற்ற நாவல்களை எழுதியுள்ளார். சர்வதேச ரீதியில் நன்கு அறியப்பாட்ட ஒரு நாவலாசிரியர். பொதுநலவாய நாடுகளின் சிறந்த எழுத்தாளருக்கான விருது உட்பட பல சர்வதேச எழுத்துக்கான விருதுகளை பெற்ற இன்னுமொரு நாவலாரிசியையான சிமமண்டா கோசி அடிச்சியும் ( Chimamanda Ngozi Adichie )இந்நிகழ்வில் கலந்து கொள்வதுடன் ஆபிரிக்கா பிரதேசத்துக்கான தென்னாபிரிக்க நிறவெறி கால சூழ் நிலையை பகைப் புலனாக கொண்டு ” நல்ல வைத்தியன்”(The Good Doctor) உட்பட பல நல்ல நாவல்களை படைத்த தமன் கல்குட் ( Damon Galgut) உட்பட ஐம்பதுக்கு மேற்பட்ட கவிதை புத்தகங்களையும் பல நாடக உரையாடல்களையும் எழுதிய கவிஞரும் வசன கர்த்தாவுமான இங்கிலாந்தை சேர்ந்த ரோஜெர் மக்காவ் (Roger McGough) . இவர் தற்போது பீ.பீ.சீ ரேடியோ நான்கு நிகழ்சியில் “தயை கூர்ந்து கவிதை” (Poetry Please) என்ற நிகழ்சியை தொடர்ச்சியாக நடத்தி வருபவர்.இவரின் அண்மைய கவிதை தொகுப்பான ” அந்த விகாரமான காலம்” (That Awkward Age) பிறப்புக்கும் மரணத்துக்குமிடையிலான மனித வாழ்வை தனது அனுபவத்தினூடாக ஆராயும் கவிதை அனுபவ நூலாகும்.மேலும் 2009ம் ஆண்டுக்கான பீ.பீ.சீ சாமுவல் ஜோன்சன் (Samuel Johnson) பரிசினை பெற்ற பீ.பீ,சீ யில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கிய நிகழ்சி தயாரிப்பாளர் பிரபல எழுத்தாளர் பிலிப் ஹோரே (Philip Hoare) போன்ற இலக்கிய பிரபலங்களும் ஜாம்பவான்களும் கலந்து கொள்கின்றனர்.

சரவதேச தமிழ் இலக்கிய விழாபற்றி தலைப்பிட்டு இது என்ன ஆங்கில இலங்கையில் நடைபெறவுள்ள ஆங்கில இலக்கிய விழா பற்றி அதுவும் கடந்த நான்காண்டு களாக நடைபெற்று இப்போதும் ஐந்தாவது வருடமாக நடைபெறும் இலக்கிய விழா பற்றி எழுதுவதற்கு என்ன தேவை அல்லது சம்பந்தமிருக்கிறது என்று வாசகர்கள் மண்டையை பிய்த்துக்கொள்ள, நான் இம்மாத முதல் பகுதியில் நடந்து முடிந்த நமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா பற்றி பின்னோக்கி பார்ப்போம்.

இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இம்மாதம் 6ம் திகதி தொடக்கம் 9 ம் திகதி வரை கொழும்பு தமிழ் சங்கத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது ஆனால் அதன் நிகழ்வுகள் வரலாற்று பதிவாகி விட்டது அந்நிகழ்வில் கலந்துகொண்ட எழுத்தாளர்களும் அதில் கலந்துகொள்ளவிடினும் அம்மாநாடு வெற்றிகரமாக நடைபெறவேண்டுமென விரும்பியிருந்த புலம்பெயர்ந்து வாழும் மக்கள் நல விரும்பிகளும் இலக்கிய அபிமானிகளும் மகிழ்சியுடன் அப்பாடா என்று திருப்தியுறும்படி புலம் பெயர் நாடுகளில் புலிகளும் தமிழ் தேசிய வாதிகளும் எழுப்பிய பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் எழுத்தாளர் மாநாடு நடந்து முடிந்துவிட்டது. இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் , தென் இந்திய தமிழ் எழுத்தாளர்கள் , புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்கள் என தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் பலர் போருக்கு பின்னரான மனித எழுச்சிக்கு இலக்கியம் மூலம் வடிகாலிட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சர்வதேச தமிழ் இலக்கிய மாநாடு புலிகள் வன்னியிலே கோலோச்சியிருந்த காலத்தில் (யுத்த நிறுத்த காலம் உட்பட ) நடைபெற்றிருந்தால் குண்டு வெடிப்பும் கொலைகளும் கொழும்பில் கூட நடந்திருக்கும் . தமிழ் கலாச்சரதுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய ஆயுத கலாச்சாரத்தின் அதிக பட்ச அட்டூழியத்தின் அதர்மத்தின் சின்னமாக திகழ்ந்த புலிகளின் முடிவினை தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் கூட அனுபவித்திருக்கிறார்கள். அந் நிகழ்வுகளுக்காக உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். புலம் பெயர் தரப்பில் புலிகளின் மற்றும் தீவிர தமிழ் தேசியவாத இலக்கிய ஜாம்பவான்கள் ஊடகவியலாளர்கள் என பலரின் எதிர்ப்புகளுக்கும் , எதிர்வினை பிரச்சாரங்களுக்கும் மத்தியில் கலந்து கொண்டோர் எண்ணிக்கையில் சிறிய பங்கினராயினும் அவர்களின் துணிச்சல் புலம் பெயர் ஏற்பாட்டளர்களான முருகபூபதி உட்பட தமிழ் இலக்கிய வரலாற்று பதிவாகி விட்டது. அதேவேளை உள்நாட்டில் (இலங்கையில்) குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் சகல பிரதேசங்களிலிருந்தும் கலந்து கொண்டோரில் முக்கியமாக கணிசமான முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இலக்கிய படைப்பாளிகள் ஆர்வலர்கள் ஊடகவியலார்கள் என பலரின் பங்களிப்பும் மலையகத்து தென் இந்திய இலக்கியவாதிகள் , ஆய்வாளர்கள் ஆகியோரின் பங்களிப்பும் இன் நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் காத்திரமான பங்கை வகித்திருக்கிறது. இந்த நிகழ்வு போருக்கு பின்னரான தமிழ் இலக்கியத்தை ஒருங்கிணைத்து, வழிநடத்தும் தேவையினை உணர்த்தி அவ்வுனர்விக்கு செயலூக்கமளிக்கும் ஒரு வலைப்பின்னலை உருவாக்க சூழலை உருவாக்கி தந்திருக்கிறது. மெல்ல தமிழ் இனிச்சாகும் என்று பாரதியின் துர்க்கனவு இலங்கையில் நடக்காது , தமிழ் வழக்கழிந்து தடமழிந்து போகும் மொழியல்ல என்பதை இந்த எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். (புலம் பெயர் நாடுகளில் இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள் தமிழ் மொழி அழிக்கப்படுகிறது என்று புளித்துப்போன தமிழ் மொழி இன வெறியர்களின் பிரச்சாரமும் பொய்யாகிப் போயிருக்கிறது, இதைதான் ஒருவேளை சங்க காலத்திலிருந்தே தமிழ் மொழி இன வெறியர்கள் சொல்லி வந்திருப்பார்கள் போலும் என்று நான் நினைக்கிறேன் )

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் இந் நிகழ்வில் தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் பெரியார்களின் பெயரில் நாமகரணமிடப்பட்ட அரங்குகளில் பல்வேறு தமிழ் இலக்கிய பரப்புக்களில் படைப்பாளிகள் , தமிழ் ஆய்வாளர்கள் அறிஞர்கள், கவிஞர்கள் , எழுத்தாளர்கள் தலைமையில் பல ஆய்வரங்குகள் நடத்தப்பட்டன . சுமார் 71 கட்டுரைகள் அங்கு வாசிக்கப்பட்டன. வெறுமனே இலக்கிய விழாவாக மட்டுமல்லாமல் இயல், இசை நாடகம் என முத்தமிழும் ஒருங்குசேர ஒரு களமமைத்த விழாவாக இச் சர்வதேச எழுத்தாளர் மாநாடு திகழ்ந்தது ஏற்பாட்டலர்களின் திறனுக்கு சான்றாக அமைந்தது. திப்பு சுல்தான் கவிதை நாடகம் , இசை நடனம், பாரத நாட்டியம் , இசைக் கச்சேரி, குறும் படங்கள் என பல் திறத்து கலை இலக்கிய படைப்பாளிகளையும் இரசிகர்களையும் கட்டி வைக்கும் விதத்தில் இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது என்ற அபிப்பிராயம் அங்கு கலந்து கொண்டோரிடம் நிலவியது. அரசியல்வாதிகள் என்று ஆரம்ப நாட்களில் ஜே.வீ.பீ . நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் , சித்தார்த்தன் ஆகியோர் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். இறுதி நாள் நிகழ்சியில் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டதையும் காணக்கூடியதாவிருந்தது,

சரவதேச புகழ் பெற்ற இலக்கிய ஜாம்பவான்களின் விழா எவ்வித முன்னர் கடந்த நான்கு வருடங்களாக எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நடைபெற்றதுடன் இம்முறையும் ஐந்தாவது வருடமாக இலங்கையில் நடைபெற போகும் சூழலில் தமிழ் மக்கள் அழிவுக்குபட்ட பின்னர் தமிழ் எழுத்தாளர்கள் தமிழுக்கு விழா நடத்தி இலங்கை அரசுக்கு காவடி எடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை புறக்கணித்துவிட்டு துணிந்து நின்று இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் “நாங்கள் வாழத்தான் பிறந்தோம் கைகளையும் கால்களையும் உதைத்துக்கொண்டு” என்று வாழ்வின் அசைவியலை நகர்த்தி இருக்கிறார்கள். இன்னொமொரு விழாவுக்கு இப்போதே அங்கு மக்கள் புதிய வாழ்வை எதிர்கொள்ள இலக்கியம் படைக்க தயாராக வேண்டும் என்ற பிரதிக்கினையையும் எடுத்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

எனினும் இவ்விழாவுக்கு “கண்திருஷ்டி” போல் சில தவறுகள் காணப்பட்டன அவற்றில் ஒன்றிரெண்டை கூறுவதாயின் இவ்விழா இந்தளவு வெற்றியாக அமையுமா என்ற சந்தேகம் ஏற்பாட்டாளர்களிடம் காணப்பாட்டதோ என்னவோ சில அரங்குகளில் போதிய இட வசதி காணப்படவில்லை. மற்றுமொன்று இன்னமும் பலர் படைப்பாளிகளின் ஜனநாயகத்துக்கெதிராக செயற்படுவது. ஏனெனில் எனது ” இலங்கையின் தமிழ் இலக்கிய பரப்பில் … ” என்று தொடங்கும் ஒரு நீண்ட கட்டுரையின் தலைப்பு ” ஈழத்து இலக்கிய பரப்பில் ….” என்று நிகழ்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் நேரடியாக மின்னஞ்சலிலும் தொலைபேசியில் ஏற்பாட்டளர்களில் ஒருவரான டாக்டர் .தி. ஞானசேகரனுடன் எனது தலைப்பினை தெளிவாகவும் திருத்தமாகவும் கூறிய பின்னரும் விழாவில் எனது தலைப்பு மாற்றப்பட்டிருந்ததும அதனை நான் எனது ஆய்விரையினை நிகழ்த்த முன்பு சுட்டிக்காட்டியபோது, அந்நிகழ்வின் இணைப்பாளர் ஜி. இராஜகுலேந்திரா எனும் சட்டத்தரணி எனக்கு விளக்க மளிக்க முற்பட்டதுடன் அந்நிகழ்வின் முடிவில் நாங்களெல்லாம் சட்டத்தரணிகள் வாத்தைகளை கொண்டு விளையாடுபவர்கள் ( அவர் குறுக்கெழுத்து அல்லது அனக்ராம் விளையாடும் சட்டத்தரணியாக இருப்பார் போலும்). அவரது சட்டத்தரணி விளையாட்டை அவருடனே வைத்துக்கொள்வது நல்லது எனபது எனது ஆலோசனை ஏனெனில் நான் அவரிடம் சட்ட ஆலோசனை கேட்டு போகவேண்டிய தேவை இல்லை ) அதனைத்தான் நான் செய்திருப்பதாக கூறி வேறு தமாஸ் விட்டார். எனது ஆய்வின் ஆழத்தை அகலத்தை வழக்கமான தமிழ் தேசியவாதிகளின் அமுக்குதல் விளையாட்டை பயன்படுத்தி அலட்சியப்படுத்திவிட்டார். ஆனால் அவ்வாய்வரங்கில் கலந்து கொண்டோரில் பலர், அந் நிகழ்வு பற்றி கேள்வியுற்றோர் பலர் எனக்கு பலத்த ஆதரவு தெரிவித்தனர். அந்நிலையில் இராஜ குலேந்திரனுக்கு இணைப்பாளர் என்ற வகையில் அல்ப சந்தோசம் கிடைப்பதை சபை மரபும் நாகரீகமும் கருதி நான் வாளா விருந்துவிடேன்.

எது எப்படி இருப்பினும் “நாம் இலங்கையர்” என்ற அமைப்பினை யாழிலே நிறுவி நாமெல்லாம் இலங்கையர் என்று தேசிய அரசியலிலும் பங்கேற்ற; புலிகளின் அச்சுறுத்தலால் அஞ்சாதவாசம் புரிந்து நாடு திரும்பி கொழும்பில் வாழத்தொடங்கிய சில வாரங்களுக்குள் புலிகளால் கொல்லப்பட்ட சட்டத்தரணி குமாரசாமி விநோதனின் ஞாபகார்த்தமாக கொழும்பு தமிழ் சங்க வளாகத்துக்குள் கட்டப்பட்ட ; குமாரசாமி விநோதனின் அரங்கில் நான் கலந்து கொண்ட நிகழ்வு நடந்தது என்பது எனது ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க பொருத்தமான இடமாகவே எனக்கு தோன்றியது. அதேவேளை விநோதனுக்காக அவரது மனைவியால் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டு பல வருடங்களுக்கு முன்பு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் திறந்து வைத்த இம்மண்டப நிகழ்வுகளில் அல்லது இந்த எழுத்தாளர் விழாவில் நீதியரசர் திரு. விக்னேஸ்வரன் காணாமல் போய்விட்டதற்கான காரணம் நிச்சயமாக இலக்கியமாக இருக்காது என்பதும் தேசிய இலக்கணமாக இருக்குமோ என்பதுதான் எனது அங்கலாய்ப்புமாகவிருந்தது.

இந்த கட்டுரையை எழுதிவிட்டு காலையில் விழித்தெழுந்த போது இணையத்தளத்தில் காலியில் நடைபெறவுள்ள இலக்கிய கொண்டாட்டாட்டத்தில் கலந்து கொள்ளச்செல்லும் எழுத்தாளர்கள் பத்திரிக்கையாளர்கள் , கேலிசித்திரக்காரர்கள் அனைவரையும் அந்நிகழ்வில் கலந்து கொள்வதைத் மறுபரிசீலனை செய்ய கோரி ஒரு கையெழுத்து வேட்டையினை எல்லைகளற்ற பத்திரிக்கையாளர்களுக்கான அமைப்பும் இலங்கையில் ஜனாநாயகம் என்ற அமைப்பும் ஒன்றிணைந்து இதுவரை உலகின் பிரபல ஜனநாயக குரலாக அறியப்பட்ட பேராசிரியர் நோம் சொம்ஸ்கி மற்றும் அருந்ததி ராய் உள்ளிடிட்ட சிலர் கையொப்பமிட்ட இணைய மனுவொன்றை மிதக்க விட்டுள்ளனர். இம்மனு உண்மையில் சில காணாமல் போன அல்லது கொல்லப்பட்ட சம்பவங்களை கோடிட்டு காட்டயுள்ளதுடன் வழக்கமான ஆதரமற்ற எழுந்தமானமான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து அங்கு செல்வதன் மூலம் அவ்வாறான நாட்டின் ஜனநாயக மீறலுக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமைந்துவிடும் என்று கூறி அங்கு செல்பவர்களை தடுக்க முற்பட்டுள்ளது.

இதன் பின்னணியை சொல்லாமல் புரிந்து கொள்ள இம்மனுவில் ருத்திர மூர்த்தி சேரன் அந்த சர்வதேச பிரபலங்களுடன் கையொப்பமிட்டுள்ளார். இந்த எல்லைகளற்ற பதிரிக்கையார்கள் கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது பற்றி பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. என்னை கூட புலிகளின் இணையத்தளங்கள் பயங்கரவாதியாக சித்தரித்தும் அப்போது என்னோடு செயற்பட்ட ஓரிரு புலி எதிர்ப்பாளர்கள் மீதி புலி ஊடகங்களில் சேறு வீசும் நடவடிக்கையை மேற்கொண்டபோதும் எமக்கான பாதுகாப்பு அச்சுறுத்தளுக்குள்ளான போது நாங்கள் அது குறித்து எல்லைகளற்ற ஊடக ஜனநாயகவாதிகளுக்கு அனுப்பிய புகார்கள் ஒரு நாகரீகம் கருதியாயினும் பதில் தரப்படாமல் இனைய குப்பை அழிப்பு பெட்டிக்குள் சென்றன. சரி போகட்டும் இந்த விழா கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்ற போது

சரி போகட்டும் இந்த விழா கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்ற போது அதுவும் சென்ற வருடம் லசந்த கொல்லப்பட்டதை(08//01/2009) காரணம் சொல்லும் இந்த அமைப்புக்கள் நான்காவது காலி இலக்கிய கொண்டாட்டம் 28 ஜனவரி தொடக்கம் நடந்த போது ஏன் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை , அதற்கு முன்னரும் எதிர்ப்பு தெரிவிக்கும் சமபவங்கள் பலவற்றை புலிகளை காப்பாற்றி சர்வதேச அரங்குகளில் ஊடக ஜனநாயகம் பேசிய சுனந்த தேசப்பிரிய தொகுத்ததை கொண்டு எதிர்ப்புக்களை இந்த புலம் பெயர் பின்னணி சக்திகள் முன்னெடுத்திருக்கலாம். இப்போது இதன் பின்னணி என்ன சர்வதேச தமிழ் எழுத்தார்கள் விழா நடைபெற கூடாது என்று கூக்குரலிட்ட புலிகளின் பின்னணிக்கும் சேரனின் இந்த மனுவில் இட்ட கையெழுத்துக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா. தமிழ் இலக்கிய விழா பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் துன்பங்களின் பின்னரான நிகழ்வு , அதுவே வெற்றிகரமாக தமிழர்களால் முஸ்லிம்களால் நடத்தப்பட்டிருக்கிறது. அதயும் விட இவ்விழாவை நடத்துவதில் தங்களின் கைவரிசை காட்ட சர்வதேச பிரபலங்களின் தயவை இவர்கள் நாடியிருக்கிறார்கள். இலங்கை கடவுச்சீட்டுடன் பல வருடங்களுக்கு முன்னர் பயணித்த சேரன் இப்போது கனடிய பிரஜையாகிவிட்டார் போலும் மேலும் இலங்கைக்கு செல்வதில் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை முன்னர் கூறியவர். இனிமேல் போகத் தேவையில்லை தனி நாடு பெற்றதும போகலாம் என்று தீர்மானித்திருப்பார் போலும்.

எதுவாயினும் மனித உரிமை மறுப்பை நான் நியாயப்படுத்தவில்லை ஆனால் இதன் உள்நோக்கம் இலங்கை அரசை விட மாட்டோம் என்ற பின்னணியில் இயங்கும் பல வெறும் வாய்களுக்கு கிடைத்த அவல். இந்த நிகழ்வினை நடத்த உதவுபவர்கள் வரிசையில் ஐக்கிய நாடுகளின் கல்வி கலாச்சார நிறுவனம் அமெரிக்க மையம் ,பிரிட்டிஷ் கவுன்சில் ,நெதர்லான்ட் தூதராலயம் , என்று வரித்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள் என்பதுடன் அங்கில பிரபல இலக்கிய படைப்பாளியான செல்லத்துரையும் இதில் கலந்து கொள்கிறார். எங்களின் வாழ்த்துக்களோ ஆதரவோ இல்லாமல் இந்த விழா வழக்கம்போல் நடக்கும் , இவ்வெதிர்ப்பினை தமது சுய லாபங்களுக்காக முன்னெடுக்கும் பலருக்கு மேலும் ஒரு நேர விரயமாக அமையும்.
(20/01/2010)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...