Tuesday, 15 March 2011

கடாபியின் உலக முஸ்லிம் தலைமைத்துவமும் உள்நாட்டு ஓரம் கட்டலும் !!

எஸ்.எம்.எம்.பஷீர்
“அதிகாரம் பின்னடையாது அதனிலும் அதிகூடிய அதிகாரம் அதனை எதிர்கொள்ளாதவரை ” – மல்கம் எக்ஸ் (எல்-ஷாபாஸ்) -


இலங்கையில் முஸ்லிம் அரசியலில் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் பாத்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது . குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி எழுபதுகளின் பிற்பகுதியில் ஆட்சி பீடம் ஏறும் வரை அன்றைய கூட்டுச்சேர அணிகளின் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை இலங்கையின் நலனுக்கு சாதகமாக பெறுவதில் அவரின் அரசியலுக்கப்பால் ஆன தனி மனித தொடர்பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தன.

1976 இல் நடைபெற்ற அணி சேரா நாடுகளின் மாநாடு இலங்கையில் முஸ்லிம் மக்களை மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இடது சாரிகளையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. அந்த வகையில் குறிப்பாக அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியில் நின்ற தமிழ் இடதுசாரிகள் லிபிய கடாபியின் வரவை ஒரு முக்கிய நிகழ்வாகவே கருதினர் . சிறுபான்மை தமிழர் சமூகம் ஒரு முற்போக்கான இன ஐக்கியத்துக்கான பல செயற்பாடுகளை உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் மேற்கொண்டவர்கள்.

கலாநிதி பதியுதீன் மஹ்மூத் தனது இந்திய பல்கலைக்கழக காலங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்புவாதியாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளருக் கெதிராக சிங்கப்பூர், ரங்கூன் (பர்மா-மியன்மார் ) மலேசிய தேசிய இயக்கங்களுக்காக அந் நாடுகளுக்கு சென்று ஆதரவு பிரசங்கம் செய்த பின்னணியுடன் அவ்வாறான  பிரச்சாரங்களுக்காக பர்மா மலேசியா நாடுகளிலிருந்து பிரித்தானிய ஆட்சியாளர்களால் வெளியேற்றப்பட்டவர். எனவே அவரின் அந்த அரசியல் பின்னணியும் அவரை அதிகளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களான உலக முஸ்லிம் தலைவர்களுடன் நெருங்க செய்தது. அது மாத்திரமல்ல இஸ்லாமிய சோஷலிஸ முன்னணியின் உருவாக்கமும் அவரின் அரசியல் சிந்தனைகளும், அப்போக்கினை கோடிட்டு காட்டியது . எச்.எம். பீ.முஹைதீன் , இளங்கீரன் சுபைர் , யாழ் ரவுப் காசீம், மூதூர் மஜீத் என்று ஒரு நீண்ட பட்டியலே நாடு பூராவும் அவரின் சோஷலிஸ ஆதரவாளர்களை அடையாளப்படுத்துகிறது. அதிலும் சிலர் அரசியல் கட்சிகளுக்கப்பால் தனிப்பட்ட வகையில் இடதுசாரி செயற் பாட்டாளர்களாக இலங்கையின் அரசியல் பரப்பில் நன்கு அறியப்பட்டவர்களாகும்.

யாழ் மைய வாதிகளின் தமிழ் இனவாதிகளின் -தமிழ் தேசிய வாதிகளின்- எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை இஸ்லாமிய சோசலிஸ முன்னணியின் யாழ் அங்குரார்ப்பன கூட்டத்தை நடத்த துணை புரிந்தவர்கள் சிறுபான்மை தமிழர்களும் இடதுசாரிகளுமாவார்கள். அவர்களில் பலர் கடாபியின் இலங்கை வருகையை மகிழ்ச்சியாக வரவேற்றனர். அன்று நிலவிய சிறுபாண்மை தமிழர்கள் குறுகிய தமிழ் இனவாதத்துக்கும தேசிய வாதத்துக்கும் அப்பால் மிக துணிகரமாக தேசிய சர்வதேச அரசியல் கருத்தாடல்களை ஊக்குவித்தவர்கள் அதன் மூலம் ஒரு முற்போக்கு அரசியல் களம் சமைத்தவர்கள். அவர்களில் எம்.சி சுப்பிரமணியம் பதியுதீனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவராவார். அது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.

கடாபி முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிகு தலைவராக விளங்க வேண்டுமென விரும்பினார், அதுவும் குறிப்பாக முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிக தலைவராக அறியப்பட்ட கமால் அப்துல் நாசரின் மறைவுக்கு பின்னர் அவரின் இலக்கு தனது அரசியல் குருவான நாசரின் இடத்தை பெறுவதிலே இருந்தது. ஆனாலும் அவரின் இஸ்லாம் தொடர்பான பச்சை புத்தக (Green Book) கருத்துக்கள் அவ்வாறான இலக்கை அடைவதில் முஸ்லிம் உலகுக்குள் பின்னடைவை ஏற்படுத்தின. எனினும் கடாபி சளைக்காது செல்வாக்கு மிகு முஸ்லிம் உலக தலைவர் எனும் தமது இலக்கை அடையும் முயற்சியில் எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் முஸ்லிம் நாடுகள் மட்டுமல்ல முஸ்லிம் முஸ்லிம்  அல்லாத நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் உள்ள சமூக சமய நிறுவனங்களுடன் தமது இஸ்லாமிய அழைப்பு சங்கத்தினூடாக தொடர்புகளை ஏற்படுத்தியதுடன் அவர்களுக்கு பொருளாதார உதவிகளையும் மேற்கொண்டார்.

அவரின் எண்ணெய் வள செல்வம் அவ்வாறான பொருளாதார உதவிகளை செய்வதற்கு உதவியாகவிருந்தது. மேலும் தனது இஸ்லாமிய அழைப்பு சங்கத்தின் கிளைகளையும் அவர் நிறுவி சர்வதேச முஸ்லிம்களுக்கு மத்தியில் சவூதி அரேபியா இரான் என அரசியல் ரீதியிலும் முஸ்லிம் தலைவர்கள் பக்க சார்புகொண்டவர்களாக அல்லது அந்நாடுகளிடமிருந்து சமூக உதவிகள் பெறுபவர்களாக இருந்தவிடத்து அவர்களில் சில தலைவர்களை கடாபியின் இஸ்லாமிய அழைப்பு சங்கத்தின் ஆதரவாளர்களாக அனுகூலம் பெற்றனர். உள்நாட்டு அரசியல் தலையீடு அற்றதாக மறுபுறம் சமய அழைப்பு  அடிப்படையில்  ஏனைய மதங்களுக் கிடையே , இனங்களுக் கிடையே நல்லுறவை -புரிந்துணர்வை -பேணுவதுமே ஒரு முக்கிய குறிக்கோளாக இருப்பினும் தனது மேற்குலகால் சிதைக்கப்பட்ட பிரதிமையை சீர் செய்து கட்ட வேண்டிய சவாலும் அதன் மூலம் செல்வாக்கு மிகு தலைவராக தன்னை நிமிர்த்தும் எண்ணமும் அவரிடம் மேலோங்கியிருந்தது.

இலங்கையில் முஸ்லிம் அரசியல் சக்தியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நாடாளுமன்ற அங்கத்துவம் பெற்ற நிலையில் லிபியாவுடன் இஸ்லாமிய அழைப்பு சங்கம் என்ற வகையில் தொடர்புகளை பேணிய பாமிஸ் எனப்படும் இலங்கை முஸ்லிம் சமூக ஸ்தாபனங்களின் ஒன்றியம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரபின் நண்பருமான சட்டத்தரணி சுஹைர் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை லிபியாவின் கடாபி அரசுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்று சொல்லலாம். உலகின் ஏகாதிபத்தியங்கள் கடாபியின் அரசை ஒரு பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவும் அரசாக இரு விமான குண்டு வெடிப்புக்களுக்கு காரணமான அரசாக, உலகின் கிளர்ச்சி, ஆயுத தேச விடுதலை அமைப்புக்களுக்கு யாசீர் அரபாத்தின் அல் பதா அமைப்பு உட்பட நிதி வழங்கும் அமைப்பாக குற்றம் சாட்டி வியாபார ஆயுத தடைகளை விதித்து லிபியாவை -கடாபியை -ஓரங்கட்டிய வேளையில் உலக செல்வாக்கு மிகு முஸ்லிம் தலைவராக தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் மிக தீவிரமாக கடாபி தனது இஸ்லாமிய அழைப்பு சங்கத்தின் மூலம் ஆசியாவிலும் தனது செயற்பாடுகளை விஸ்தரித்தார். அந்த பின்னணியில்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் அஸ்ரபும் கடாபியின் உலக இஸ்லாமிய தலைமைத்துவ கனவுகளுக்கு அவசியமானவர்களாக கடாபிக்கு தோன்றியது. ஏனெனில் சவூதி அரசின் தர்ம சமூக உதவி ஸ்தாபனமான ராபிதா அல்-அலம் அல்-இஸ்லாமி ( Rabita al-Alam al- Islami ) உலகின் மிக பெரும் பரந்த அளவில் முஸ்லிம் மக்களுக்கு உதவும் ஸ்தாபனமாக்விருந்த வேளையில் கொமேனியின் இரானின் பின்னரான சியா இஸ்லாமிய வேறுபாட்டுக்கப்பால் உலக இஸ்லாமிய ஏகாதிபத்திய எதிர்ப்பு செயற்பாட்டுக்கும் மனவோட்டத்துக்கும் ஆதரவான முஸ்லிம் உலக அபிப்பிராயங்களும் மேலோங்கி இருந்த  வேளையிலும் கடாபி இலங்கையின் முஸ்லிம் காங்கிரசினை பயன்படுத்த விரும்பினார்.


இஸ்லாமும் சோஷலிசமும் இரண்டு துருவம் போன்றது என்று இளமைக்காலத்தில் வாதிட்ட அஸ்ரப் , பின்னர் அதனை அரசியல் ரீதியிலும் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பு , மூதூர் மஜீத்துக்கு இஸ்லாமும் சோஷலிசமும் ஒன்றல்ல என்று சவால் விட்ட அஸ்ரப் லிபியா கடாபியின் சோசலிஷத்துடன் எவ்வாறு எதற்காக சமரசம் கண்டார்.  லிபிய அரசியல் யாப்பின் பிரிவு ஆறு சோசலிசத்தை ஒரு சரத்தாகவே உள்ளடக்கியிருந்தது. அதுவும் இஸ்லாமிய அடிப்படியிலான  சோஷலிசம் பற்றி அது விவரிக்கிறது என்பதுடன் சமூக நீதி, சோசலிஷ வர்க்க முரணற்ற சமூகம் பற்றியெல்லாம் விவரிக்கிறது.

தொண்ணூறுகளின் ஆரம்ப புகுதியில் லிபியாவில் நடைபெற்ற செல்வாக்குமிகு முஸ்லிம் உலகத்தலைவர் மாநாட்டில் கடாபி உலக செல்வாக்கு மிகு முஸ்லிம் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அதே மாநாட்டில் ஆசியாவின் செல்வாக்கு மிகு முஸ்லிம் தலைவர் என அஸ்ரபும் தெரிவு செய்யப்பட்டார். அதன் மூலம் அஸ்ரபின் லிபியாவுடனான நெருக்கம் அதிகரித்தது.

மேற்குலகு மீண்டும் லிபியாவில் தமது சட்டாம்பிள்ளை தனத்தை காட்ட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து உன்னிப்பாக காத்திருக்க ஐக்கிய நாடுகளின் அனுசரணை பெற்று உட்புகுவதா (சீனாவும் இரஷ்யாவும் அதற்கெதிராக நிற்க) அல்லது வழக்கம்போல் தான்தோன்றித்தனமான தலையீடா என்ற வாதப் பிரதிவாதங்கள் முன்னோங்க மறுபுறம் லிபியாவில் நடப்பது கிளர்ச்சியா புரட்சியா என்ற கேள்விகளும் விவாதப் பொருளாக முன்வைக்கப்பட; சாமாண்ய மக்களும் சடலங்களாக வீழ்த்தப்படுகிறார்கள் என்ற செய்திகள் புறப்பட; இடைக்கால எதிர்ப்பு அரசினை (Transitional Government) சென்ற மாதம் வரை நீதி அமைச்சராகவிருந்த முஸ்தபா அப்துல் ஜலீல் தலைமையில் உருவாக்கி செயற்பட தொடங்கிய போதுதான்
இப்போதுதான் மனித உரிமை மீறல்கள் லோகேர்பீ குண்டுவெடிப்பு பின்னணியில் கடாபி இருந்துள்ளார் – நேரடியாக கட்டளை வழங்கியுள்ளார்- என்று அவரே அமெரிக்க புலனாய்வு முகவருடன் சேர்ந்து குரல்கொடுக்க;, கிளர்ச்சியாளர்கள் பிற நாட்டு தலையீடு வேண்டாம் எனும் வைராக்கியத்துடன் செயற்பட ஆரம்பித்து இப்போது சற்று சற்று தளர்ந்து விட்டதுபோல் தோன்ற…..

மறுபுறம் கடாபி முஸ்லிம் காங்கிரசை எவ்வர்று பரீட்சித்து பார்த்தார் என்பதும் அதன் பின்னரான பல சம்பவங்களுடன் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை….

No comments:

Post a comment

Twitter and Facebook censor New York Post report on Hunter Biden- By Kevin Reed

  Kevin Reed 16 October 2020 Social media censorship prior to the 2020 US presidential elections reached new heights on Wednesday, when both...