
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக 2018 ஏப்ரல் 04ஆம் திகதி ஒன்றிணைந்த எதிரணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றுப்போனது. தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் கிடைத்ததால், 46 மேலதிக வாக்குகளால் தீர்மானம் தோற்றது.
தீர்மானம் தோற்றாலும், இன்னொரு வகையில் பார்த்தால் இந்தத் தீர்மானத்தின் மூலம் கூட்டு எதிரணி பலமடைந்துள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்தத் தீர்மானத்தால் ‘நல்லாட்சி’ என்ற கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் கூட்டு எதிரணியால் பிளவு ஏற்படுத்த முடிந்துள்ளது. ஏனெனில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முக்கியமான அமைச்சர்கள் உட்பட 16 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், அதன் பின்னர் அவர்கள் அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் தீர்மானித்துள்ளனர். இது கூட்டு எதிரணியைப் பொறுத்தவரையில் சந்தேகமின்றி வெற்றிதான்.