“மறப்போம்! மன்னிப்போம்!! “
எஸ்.எம்.எம்.பஷீர்

எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு, அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை   ( ஒஸ்கார் வைல்ட் )
“Always forgive your enemies; nothing annoys them so much.” (  Oscar Wilde)


"மறப்போம் மன்னிப்போம்", எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை விடவும் , அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும் செயலே  வரலாறாகி நிற்கிறது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு உஹத் எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது  சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழுது அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக் கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக் கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்).
உலகின் மிகப் பெரும் பழமை வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென்  ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "மன்னிப்போம் மறப்போம்"  நிகழ்வுகள் மனதை நெருடச்செய்வன.   
                                                              
ஆங்கில மொழியில்  "மறப்போம் மன்னிப்போம்" என்பது மிகப் பழமையான ஒரு முதுமொழி என சொல்லப்படுகிறது. ஆனால் தமிழில் இந்த சொற்றொடரை மிகவும் பயன்படுத்தியவர் முன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த சீ என் அண்ணாத்துரை என்பதே உண்மை.  ஏனெனில் திராவிட முன்னேற்றக் கழக  அரசியல் பாரம்பரியத்தில் அண்ணாவின் அரசியல் மொழியும் பண்பியல்புகளும் சிலாகித்துப் பேசப்படுபவை. என்னதான் அந்த சொற்றொடர் இன்று மிகவும் சாதாரணமாக எல்லோரினதும் வாய்மொழியாகப் போனாலும் , அந்த சொற்றொடரை தமிழுக்கு அரசியலில் அறிமுகப் படுத்தியவர் அண்ணாதான் எனப்படுகிறது, அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் தம்மைத் தூற்றிய , அவமதித்த பலரை அவரால் மன்னிக்க முடிந்தது, ஒரு ஜனநாயக அரசியலில் ஏற்படுகின்ற அவமதிப்புக்களை ,ஆத்திரங்களை  கூட இலகுவில் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது என தனது நண்பர்களும் தொண்டர்களும் கூறியதை உதறி எறிந்து விட்டு  தமது அரசியல் எதிரிகளை மன்னிக்கவும் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று ஆரத் தழுவவும் அண்ணாவிற்கு முடிந்தது. ஆனால் வன்முறைகளும் அடக்கு முறைகளும் அநியாயங்களும் இன்றைய உலகில் மன்னிப்பதும் மறப்பதும் என்பது சொல்வதுபோல் அவ்வளவு இலகுவானதல்ல.


இப்பொழுது மறப்போம் மன்னிப்போம் என்பதற்கான குரல்கள் தான் மீளினக்கத்தின் ஜீவநாடியாக ஆங்காங்கே ஒலிக்கின்றன. பல மனவடுக்களை காலம் சொஸ்தப்படுத்தி விடலாம் என்று சொல்லப்படுகிறது. அதனை உலகின் இனப் படுகொலைகள் இடம் பெற்ற பொஸ்னியாவிலும்  ருவாண்டாவிலும் இப்பொழுது ஓரளவு யதார்த்தத்தில் உணரப்படுகிறது. ஆனால் மன்னிக்க முடிந்தாலும் பாதிக்கப்பட்டவர்களை மறந்துவிடச் சொல்வதுதான் கடினமானது. ஆகவேதான் காலம் மறக்கடிக்கும் பணியை மெதுவாகச் செய்கிறது , அதன் விளைவாய் மன்னிப்பு என்பது சொல்லப்படாமல் மறந்து போகும் நினைவுகளுடன் மறைந்தே போகிறது, உபரியானதாக தேவையற்றுப் போய் விடுகிறது. இதற்கான காலங்களும் இதற்கான நகர்வுகளை யார் பாதிப்பினை ஏற்படுத்தினார்களோ  அல்லது அதற்கு ஆதரவளித்தர்களோ அவர்களே செய்ய வேண்டும் , அதுவே நியாயமானதும் கூட.


அன்மையில் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்கு வருவதானால் தாங்களும் கூடவே வரவேண்டுமென்று  பிரித்தானியப் பிரதமர் கமேரூன் நிபந்தனை விதித்தே இலங்கைக்கு வந்தார்.  அதிலும் அவர் சனல் நான்கு Channel Four) எனப்படும் பிரித்தானிய தொலைக்காட்சி சேவையின் பிரதான செய்தி வழங்குனர் ஜான் ஸ்நொவ் (Jon Snow) உடன் யாழ் சென்று தங்களை அணுகிய தமிழ் மக்களின்  ஆபத் பாந்தவர்களாக,  "தெய்வங்களாக"  காட்சியளித்த பின்னர் ( கமேரூன் கடவுளாகவே வந்துள்ளார் என்று சிலர் யாழ்ப்பணத்தில் குறிப்பிட்டனர்) . உலகில் புகழ் பெற்ற கிரிக்கட் விளையாட்டுக் காரரரும் சுருள் பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் எனும் தமிழரைச் சந்தித்தார் , அவருக்கு கேமரூன் பந்து வீசினார் என்பதற்கெல்லாம் அப்பால் , அவர் சனல் நான்கு ஜான் ஸ்நொவ்விற்கு அளித்த நேர்காணலில்  தமிழர்கள் என்ற வகையில் இலங்கையில் தங்களுக்கு ஏற்பட்ட அவலங்களை கூறி  மறப்போம் மன்னிப்போம் என்பதே தனது கொள்கை என்று  கூறினார். 1977 ல் சிங்கள வன்முறையாளர்களினால் தமது வீடு எரிக்கப்பட்ட நிலையை சொல்லி , அது (“மறப்போம் மன்னிப்போம் ) தங்களால் முடிந்தது என்பதை அவரின் சொந்த வாழ்க்கை சான்றாக திகழ்வதாக அவர் சொல்லாமல் சொல்லி வைத்தார். பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் பாதிப்புக்குள்ளாக்கிய சமூகத்தை மறந்து மன்னிக்கலாம் , அதனால் முன்னோக்கி நகரலாம் என்பதே அவரின் கருத்தாக இருந்தது.


இனக் கலவரத்தில் முரளியின் வீடு எரிக்கப்பட்டதும் , துயரம் தோய்ந்த இளமைப் பயங்களுடன் வாழ்ந்த பொழுதுகளும் கொண்ட முரளிக்கு ஏற்பட்ட அனுபவங்கள் போல் 1983 தமிழர்கள் மீதான சிங்கள அழிவு சக்திகளின் வன்முறையின் போது மலைநாடொன்றில் தாய் தந்தையுடன் சிறுவனாக வாழ்ந்த பொழுது பாதிக்கப்பட்டவர்தான் சுரேன் சுரேந்திரன் எனப்படும் உலகத் தமிழர் பேரவை அமைப்பைபின் பேச்சாளர். அவர் தனது வாழ்வில் தனக்கு கிடைத்த அந்த 1983 கலவர அனுபவத்தை மறக்க முடியாது , சிங்களவர்களுடன் சேர்ந்து வாழவே முடியாது , அவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதியை மறக்கமும் முடியாது மன்னிக்கவும் முடியாது என்று செயற்படுபவர்.  அவருடன் தமிழ்ப் பேரவையின் தலைவர் பதவியிலுள்ள பாதிரியார் இம்மானுவேல் சிங்களவர்களை தனது பரமவைரிகளாக கருதி செயற்படுபவர். மனித பாவங்களை மன்னிக்கப் பிறந்தவர் இயேசு என்று வேதாகமப் பிரச்சாரம் பண்ணிக் கொண்டு , தன்னிடம் வரும் தமிழ்ப் பாவிகளை மட்டும் மன்னித்துக் கொண்டு , சிங்களவர்களை மன்னிக்க முடியாத பாதிரியார் இம்மானுவேல்; முதல் விவிலிய நூலானா மத்தியூ எழுதிய மன்னிப்பு வாசகங்களை மட்டும் மறந்து விட்டவர் போல் செயற்படுகிறார்.  எது எப்படியோ , அவருடன் கூட்டுச் சேர்ந்த சுரன் சுரேந்திரன் எப்படி இருப்பார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இவர்கள் இருவருமே புலிகளின் மாறாத வக்கிரத்துடன் புலிகளின் வழி சென்று பலி வாங்கத் துடிப்பவர்கள். பழிவாங்கத் துடித்த புலிகள் தான் பலியாகிப் போனார்கள் . புலிக்குப் பிறகும் பலி வாங்க இன்னுமொரு வடிவத்தில் புலம் பெயர் புலிகள் புறப்பட்டிருக்கும் விளைவாகவே ஜான் ஸ்நொவ் கூட்டமும் கமரூன் பின்னால் இலங்கை வந்தார்கள். அதேவேளை ஒரு இந்துவான முரளிதரன் மன்னிக்க மறக்க இயேசு போதித்துள்ளார் என்றும் அருட் தந்தைகளான  பாதிரியார் இம்மானுவேலுக்கும் , மன்னார் ஆயர்  ராயப்பு ஜோசெப்புக்கும் ஞாபகமூட்டி உள்ளார்.

இலங்கையில் சிங்களவர்கள் இரண்டு தமிழர்களை அவர்களின் தேசப் பற்றிற்காக , தேசியப் பெருமைக்காக தோளில் தூக்கி சுமந்துள்ளார்கள். ஒன்று, சார் பொன்னம்பலம் ராமநாதன். 1915 ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றில் முதல் இனக் கலவரத்தை ஏற்படுத்தி கொலைகளை சொத்தழிப்புக்களை இலங்கையில் கரையோரச் சோனகர் மீது சிங்கள தீவிரவாத தனிமங்கள் கட்டவிழ்த்து விட்ட பொழுது ,  அன்றைய பிரித்தானிய இலங்கைக்கான ஆளுநர் கலவரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மார்ஷல் சட்டத்தை (Marshal Law) அமுல்படுத்தி சிங்களத் தலைவர்களை (டி எஸ். சேனநாயக உட்பட ) கைது  செய்தனர். அந்த கலவரத்தை அடக்கும் முயற்சியில் சில சிங்களத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்திற்கு  முதன் முதலில் வித்திட்ட அநகாரிக தர்மபாலாவின் வேண்டுகோளில் இங்கிலாந்து சென்று மார்ஷல் சட்டத்தை நீக்கி சிங்கள தலைவர்களை விடுதலை செய்வித்த தமிழர் சார் பொன்னம்பலம் ராமநாதன் , இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் அவரை சிங்களத் தலைவர்கள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து தோளில்  சுமந்தனர்.  முஸ்லிம்களுக்கு எதிராக ராமநாதன் சிங்களவர்களுடன் சேர்ந்து  ,  சக மொழி பேசும் சிறுபான்மை  முஸ்லிம்களின் நலன்களை ஒடுக்க செயற்பட்டாலும் , அன்று ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு தேசிய எழுச்சியின் பொறியும் அந்த இனக் கலவரத்துள் நீறு பூத்த நெருப்பாய் மறைந்திருந்ததை பிரித்தானிய ஆட்சியாளர்கள் அடையாளம் கண்டு கொண்டதனால்தான் சிங்களத் தலைவர்களுக்கு எதிராக (இனவாதத் தலைவர்கள் உட்பட) கைதுகளையும் கொலைகளையும் பிரித்தானிய ஆட்சிப் பிரதிநிகள் கலவரத்தையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு  செய்தனர். ஆனால் சிங்கள தலைவர்கள் தமது தேசிய வீரனாக , பெருமைக்குரியவனாக ராமநாதனைக் கண்டு , அவரை இலங்கையின் மாபெரும் மனிதர் என்று வரலாற்றில் பதிவு செய்தனர். அந்த வரலாற்றுக் கறைபடிந்த பக்கங்களையும் முஸ்லிம்கள் மறந்திருக்கவும் மன்னித்திருக்கவும் வேண்டும் , அதனால்தான் சிங்கள முஸ்லிம் உறவு அண்மைக்காலம் வரை சிறு சிறு சலசலப்புக்கள் அசம்பாவிதங்கள் தவிர பேணப்பட்டு வந்திருக்கிறது.

அடுத்தவர், முத்தையா முரளிதரன் , கிரிக்கட்டில் அதிக விக்கட்டுக்களை பெற்ற உலக சாதனையாளராக 2009ம் ஆண்டில் நாடு திரும்பிய போது அவரை சிங்களவர்கள் கொழும்பு விமான நிலையத்திலிருந்து தோளில் தூக்கிச் சென்றனர் . முரளி என்பவர் இலங்கையன் என்ற வகையில் இலங்கை தேசத்துக்கு பெருமை சேர்த்த பொழுது சிங்களவர்கள் அவரை தோளில் சுமந்தனர்.

பிரிவினைவாத புலிகளை தனித்து எதிர்த்தே தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர் , தமிழர் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி.  அவர் புலிகளை தீவிரமாக எதிர்த்த நாட்களில் , கொழும்பில் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கள சிப்பாய்கள்  பாதுகாப்பு வழங்கி  , தேநீரும் உணவும் வழங்கி   , தங்களின் உயிரையும் பணயம் வைத்து செயற்பட்டனர். ஆனந்த சங்கரி தேசிய நலன்களுக்கு குரல் கொடுத்த பொழுது அவரை தங்களின் நாடாளுமன்றப் பதவியை வழங்க சிஹல உறுமைய   கட்சி முன் வந்தது.

மீளிணக்கம் என்பது "மறப்போம் மன்னிப்போம்" என்ற இலக்கை நோக்கிய ஒரு செயற்பாட்டு முறை , இதனை நடைமுறைப்படுத்த பல உலக அனுபவங்களும் அணுகு முறைகளும் கையாளப்படல் வேண்டும், வெறுமனே தென்னாபிரிக்காவின் உண்மைக்கும்  மீளினக்கத்துக்குமான குழுவமைத்தல் என்பது , அல்லது யுத்தக் குற்ற விசாரணை என்பது மட்டும் மீளினக்கத்தை ஏற்படுத்தாது.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களுக்குள்  இடம்பெற்ற பல இயக்க பாரிய அளவிலான படு  கொலைகள் யாவும் வெறும் இன உணர்வில் இலகுவில் பாதிக்கப்பட்டவர்களால் மறக்கப்பட்டு , அல்லது மறக்கப்படாவிட்டாலும்   மன்னிக்கப்பட்டு , சிங்கள விரோத உணர்வு மட்டும் மேலோங்கி இருப்பதை காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக நூற்றுக்கனக்கான டெலோ இயக்கத்தினரை , ஈ.பீ.ஆர் எல்.எப் (E.P.R.L.F) இயக்கத்தினரை  கொன்ற புலிகள் , புலிகளைக் கொன்ற  ஈ.பீ.ஆர் எல்.எப், மற்றும் புளட்  (PLOTE)இயக்கத்தினர் , வெருகலாற்றில்  கிழக்கு புலிகளைக் கொன்ற வன்னிப் புலிகள்  , மேலும் வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களைக் கொன்ற அவர்களின் இருத்தலை இல்லாமல் செய்ய வன்முறைப் பிரயோகம் செய்த புலிகள் உட்பட்ட சகல இயக்கத்தினரும் இந்த மறத்தல் மன்னித்தல் என்ற விடயத்தினை எவ்வாறு கையாள்வது. 

முரண் நகையாக புளட் தலைவர் சித்தார்த்தன் , தனது தந்தையைக்  (தர்மலிங்கம் எம்.பீ யை ) கொன்ற  டெலோ இயக்கத்துடன் கூட்டமைத்துள்ளார். ராபர்ட்டையும். பத்மனாபாபையும் கொன்ற  புலிகளின் இயக்க தலைவர் எழிலனின் மனைவியுடன் (ஆனந்தி சசிதரன்)  வட மாகான சபைத் தேர்தலில் ஒற்றுமை பாராட்டும்  பிரேமச்சந்திரன் கூட்டம் என்று பலர் , தங்களுக்குள் மறந்தும் மன்னித்தும் செயற்படுகிறார்கள்.  அமிர்தலிங்கத்தினை, யோகேஸ்வரனை அவரின் மனைவி திருமதி யோகேஸ்வரனை கொன்ற பின்னரும் கூட புலிகளுடன் சம்பந்தன்  சேனாதிராஜா கூட்டமைத்திருந்தார்கள். முஸ்லிம்களை வகைதொகையின்றிக்  கொன்றும் ஊரை விட்டும் விரட்டிய , அஸ்ரபைக் கொன்ற புலிகளுடன் ரவூப் ஹக்கீம் ஒப்பந்தம் பண்ணினார். முஸ்லிம் ஊர்காவல் படையிலிருந்த இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தியவர்கள் இப்பொழுது சமூகத்துள் சாமான்ய மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இவற்றுக்கும் மேலாக கருணாவும் , டக்ளசும் கூட அரசுக் கெதிராக ஆயுதம் தூக்கியவர்கள் , இப்பொழுது அரசில் அங்கத்துவம் வகிக்கிறார்கள்.   ஆயிரக்கணக்கில் கைதான புலிகளுக்கு அரசு புனர் ஜென்மம் அளித்திருக்கிறது.

ஒருபுறத்தில் " மறப்போம் மன்னிப்போம் " என்ற சொற்றொடர் யாரும்  கண்டும் காணமல் இருந்தாலும் அது நடைமுறையில் செயற்பாட்டில் (process) தன்விளக்கமாக இருக்கிறது, மறுபுறத்தில்   " மறப்போம் மன்னிப்போம் "  என்ற சொற்றொடர் மறக்கப்பட்டுப் போய்விட்டது. மன்னித்தால் மறந்து விட வேண்டும் என்பதல்ல, ஏனெனில் மனித இயங்கியல் போக்கு சம்பவங்களின் பாதிப்புக்களின் கனதியை இழக்கச் செய்யும் , அதனால் தங்களைப் பாதித்த நிகழ்வுகள் காலகதியில் நினைவுகளில் இருந்து மெதுவாக மறக்கவே செய்யும். ஆனால் மறக்கத்தான் முடியவில்லை என்றால் மன்னிக்கவும் முடியாதா என்று பாதித்தவன் கூட பாதிக்கப்பட்டவனைப் பார்த்து கேள்வி கேட்க முடியாதா என்ன?1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...