Tuesday, 15 March 2011

வந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும் !

-எஸ்.எம்.எம்.பஷீர் -

“உலகத்தில் நாட்டில் சமூகத்தில் மனிதர்கள் படும் துயரை நினைத்து இரங்கி ஒரு துளி கண்ணீர் உன்னிடம் வராவிடின்;; எதற்காக நான் பாடிகொண்டிருக்கிறேன்.

என் பாடல் உன்துயரை துடைக்காது மேலும் மூட்டி விடுமாயின் நான் பாடாமல் ஊமையாக இருந்து விடுகிறேன்” குணதாச கபுகே (மறைந்த பிரபல சிங்கள பாடகர்)

1990 ஆம் ஆண்டு போர்ச் சூழலின் காரணமாக பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் குடும்பங்களின் 174 இளைஞர்கள் அவ்வாண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதியும் 23ம் திகதியும் சீருடை அணிந்தவர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. இச்சம்பவங்களின் நினைவாக சென்ற ஐந்தாம் திகதி இருபது ஆண்டு நிறைவு நிகழ்வு மத வழிபாடுகளுடன் இடம்பெற்றன என்ற செய்தி பல ஊடகங்களில் வெளிவந்தது. அவ்வாறு கடத்தி செல்லப்பட்ட குடும்பத்தினரில் சிலர் இன்றும் தமது குடும்பத்தில் கடத்தி செல்லப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதாக நம்புவதாகவும் வேறு சிலர் அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பும் காலம் கடந்துவிட்டதாகவும் துயரத்துடன் சொன்ன வார்த்தைகள் இரு தசாப்தங்கள் கடந்துவிட்டபோதும் குடும்ப உறவுகளின் அசம்பாவித இழப்புக்கள் ஆறாத துயராக அக்குடும்பத்தினரை வாட்டிவருவதை கோடிட்டு காட்டுகிறது.

புலிகளுக்கு முன்பே கிழக்கில் ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கினர் அதனால் முஸ்லிம்கள் தமிழ் ஆயத இயக்கங்கள் மீது வெறுப்பு கொண்டனர் அந்நிலையிலே 1985 ஏப்ரல் இன வன்முறைகள் இரண்டு இனங்களுக்குமிடையிலான உறவில் ஏற்பட்ட விரிசலின் வெளிப்பாடாக வெடித்தது. ஆனால் புலிகளின் பரந்துபட்ட முஸ்லிம் மக்களை கிழக்கிலிருந்து இனசுத்திகரிப்பு செய்யும் முயற்சிகளை முடுக்கிவிட்டாலும் கிழக்கின் திகாமடுல்லை மாவட்டம் புலிகளுக்கு சவாலாக அமைந்ததால் மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கில் இலகுவாக முஸ்லிம்களை வெளியேற்றும் தங்களின் முதல் மூலோபாய புள்ளியாக புலிகளால் திட்டமிடப்பட்டது அதற்கிணங்க 1990 ம் ஆண்டு முஸ்லிம் இனப்படுகொலைகளை திட்டமிட்டு கிழக்கு மாகாணமெங்கும் மட்டுமல்ல அதன் வட எல்லைப்புறத்தில் அமைந்த வட மத்திய மாகாணத்திலுள்ள முஸ்லிம் கிராமமான அளிஞ்சிப்போத்தானையிலும் புலிகள் மேற்கொண்டனர். ஆயினும் இதனால் பரஸ்பரம் தமிழ் முஸ்லிம் உறவு விரிசல் கண்டாலும்.

அதன் வெளிப்பாடாக பல தொடர்ச்சியான படுகொலைகள் அச்சறுத்தல்கள் ஆக்கிரமிப்புகள் என பலவகையான அழுத்தங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களை கிராமம் கிராமமாக வெளியேற்றும் தங்களின் திட்டத்தில் வெற்றிபெறுவதையும் அவர்கள் கண்டுகொண்டனர். அதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் முஸ்லிம் பகைமை தூண்டப்பட வேண்டிய தேவையும் அவர்களுக்கு ஏற்பட்டது. கிழக்கில் தீராத தமிழ் முஸ்லிம் பகைமை ஏற்படுத்துவதனால் தமது தமிழீழ இலக்கை அடைவதற்கான முக்கிய தடைகளில் ஒன்றை நீக்கலாம் என்ற அடிப்படையில் செயற்படுவதற்கு முஸ்லிம் ஊர்காவல் படை இலங்கை இராணுவம் என்பற்றின் தமிழர் மீதான எதிர்வினைச் செயற்பாடு மூலமாக தங்களின் “பங்களிப்பை” செய்வார்கள் என்பதை புலிகள் உணர்ந்து திட்டமிட்டே இதனை செய்தார்கள். அதிலும் இவாறான தமிழ் முஸ்லிம் பகை முரண்பாடு வட மாகாணம் போல் அல்லாது தமிழ் முஸ்லிம் சமூகங்களுகிடையிலே உருவாக்கப்படுவது புலிகளுக்கு மூலோபாய தேவையாகவிருந்தது.

ஆயினும் 1990 ஏறாவூர் படுகொலைகளை செய்ய முன்னர் ஏறாவூர் பிரதேச சபைக்குட்பட்ட தமிழ் பகுதிகளான ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சிகளில் மற்றும் குடியிருப்பு எல்லைப்புற தமிழ் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அங்கிருந்து சென்றுவிடுமாறு வேண்டுகோள் விடுத்த பின்னரே புலிகள் தமது தாக்குதல்களையும் செய்தனர் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்தப்படுகொலைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் ஆத்திர உணர்வு இலங்கை இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது அதனால் ஏறாவூர் தமிழ் பிரதேசத்தில் தமிழ் மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டன இக்கால கட்டங்களில் இரு பிரதேசங்களுக்குள்ளும் இடையில் பிரயாணம் செய்ய நேரிட்ட மக்கள் பரஸ்பரம் புலிகளின் மிலேச்சத்தனமான படுகொலையால் உருவாக்கப்பட்ட இன வெறிக்கும் குரோதத்துக்கும் பாரிய விலையை வழங்க வேண்டி நேரிட்டதுடன் ஒரு நீண்டகாலத்துக்கு பகைமையும் திரட்சி கொண்டது. ஒரு புறம் புலிகள் மிருகத்தனமாக முஸ்லிம் மக்களை படுகொலை செய்தபோதும் அவர்களின் சமூகப் பிரமுகர்களை கடத்தியபோதும் இரரணுவம் கொண்ட “அனுதாபம்” புலிகளால் நசுக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்குள் ஒரு சிறு குழுவினரின் தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வழிகோலிற்று.

அதுபோலவே தமிழ் மக்களுக்குள்ளும் தமது குடும்பத்தினரை தமிழ் முஸ்லிம் வன்முறைகளால் மற்றும் கடத்தல்களால் இழந்தவர்கள் புலிகளின் அனுசரணையுடன் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முன்னின்றனர். இதனால் புலிகள் இருக்கும் வரை பதிலுக்கு பதில் நடவடிக்கையாக பல அசம்பாவித சம்பவங்கள் இரண்டு இனத்தவரிடையேயும் நடைபெற்றுள்ளன என மனித உரிமை அமைப்புக்களின் சில பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன 1990 அழிஞ்சிப்பொத்தானை முஸ்லிம் படுகொலைகளுக்கு எதிர் விளைவாக முத்துக்கல தமிழ் கிராமம் தாக்கப்பட்டது. புலிகள் தமது தேவைகேற்ப முஸ்லிம் உறவை ஒருபுறம் மேல்மட்டத்திலும் கீழ் நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினருடன் வெவ்வேறு காலகட்டங்களில் வைத்துக் கொண்டதுடன் சாதாரண தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான சமூக பொருளாதார நடவடிக்கை காரனமான நல்லுறவு நிகழ்வதையும் தந்திரோபாயமாக தடுத்து வந்தனர். இதற்கான பிரச்சாரங்களை தமிழ் மத்திய தர உத்தியோகத்தர்கள் பலரின் அனுசரணையுடனும் தமது கட்டுப்பாடு பிரதேச கண்காணிப்பு நடவடிக்கை மூலமாகவும் செய்து வந்தனர். இதன் தொடர்ச்சியாகவே பின்னர் கூட்டமைப்பு அரசியல் ரீதியாகவும் புலிகளின் இனவாத தமிழ் வகுப்புவாத கருத்தியல்களை முன்கொண்டு செல்ல உதவினர்.

1990 ஆகஸ்து இன வன்முறைகள் ஏற்பட்டு பல அனர்த்தங்கள் நடந்த பின்னர் அவ்வாண்டு இறுதிப்  பகுதியில் கொழும்பிலிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் மற்றும் அப்பிரதேச சமூக பிரதிநிதிகள் சிலரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகதிகளாக உள்ள தமிழ் முஸ்லிம் அகதிகளையும் மற்றும் வன்முறைகளால் மட்டக்களப்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெறும்  தமிழ் மக்கள் சிலரையும் பார்வையிடுவதற்காக ஒரு விடயம் அறியும் குழு ஒன்று ( Fact Finding Group) விஷேட இராணுவ விமானத்தில் சென்றது. அதில் நானும் பிரயாணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது அக்குழுவில் அரசியல் கட்சி பிரமுகர்களில் அணில் முனசிங்க புளொட் சித்தார்த்தன் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர். ஏறாவூர் பிரதேச தமிழ் மக்கள் அகதிகளாகவிருந்த வந்தாறுமூலை பல்கலைக்கழக அகதி முகாமுக்கு சென்ற போது என்னைக்கண்டு எனக்கு மிகவும் தெரிந்த நெருக்கமான குடும்பத்தினர் சிலர் என்னிடம் தங்களின் பிள்ளைகளை குடுபத்தினரை இராணுவத்தினர் விசாரணைக்கு கொண்டு சென்றதையும் அவர்களை கண்டுபிடித்து தர உதவுமாறும் என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அதிலும் உருக்கமான ஒரு சம்பவம் அங்கிருந்து இராணுவத்தால் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட பலரின் பெற்றோர்கள் உறவினர்களின் மனக் கிலேசங்களை புட்டுக்காட்ட போதுமானது. நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்களில் எனது நெருங்கிய நண்பரின் சின்னம்மாவின் ஒரே ஒரு மகனும் அவ்வாறு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர்களுள் ஒருவர். இவரின் தாயும் தந்தையும் என்னை நெருங்கி குழந்தை போல் அழுதது இன்றுவரை எனது நெஞ்சில் ஆழமாக பதிந்திருக்கிறது. அவர்களுக்கு குழந்தை கிடைக்காமல் பலவருடங்களின் பின்னரே அவர்கள் வழிபடும் கதிர்காம கந்தனை வேண்டி வழிபட்டு (தவமிருந்து என்று சொல்வதுபோல்) பெற்ற குழந்தை தான் அப்பையன் என்று அவ்விடலைப் பருவத்து சிறுவன் சிறு பிள்ளையாக இருந்தபோது எனது நண்பர் சொல்லுவார். இவரதும்  மற்றும் என்னிடம் கேட்டுக்கொண்ட சிலரதும் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டவர்கள் குறித்து அப்போது இராணுவ குடிமக்கள் ஒன்றிணைப்பு (Co-ordinating Officer) உத்தியோகத்தராகவிருந்த அங்கு பிரன்சனமாகவிருந்த முன்னாள் எஸ்.பி (போலீஸ் அத்தியட்சகர்) அப்துல் மஜீதிடம் நான் வேண்டுகோள் விடுத்தபோது அவர் அதுபற்றி மேலிடத்துக்கு அறிவிப்பதாகவும் விசாரிக்க உதவுவதாகவும் கூறினார்.

ஆனால் அந்த வேண்டுதல்களை அவர் விடுத்தாரா அல்லது அவர் அன்றைய  ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் என்ற வகையில் ஏதேனும் விசாரணைகளை தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் மீதோ அல்லது தனக்கிருந்த உத்தியோக அதிகாரத்தை கொண்டோ மேற்கொண்டாரா அல்லது அவ்வாறு கடத்தப்பட்ட சிலரின் குடும்பத்தினர் நம்புவதுபோல் அவர்களில் யாரேனும் இன்றுவரை உயிருடன் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் இப்போது மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியாகவிருக்கும் அப்துல் மஜீத் (பொத்துவில்) ஏஎதாவது புகாரை மேலிடத்துக்காயினும் அப்போது செய்திருந்தால் அது பற்றி ஏதேனும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அவர் தானாக முன்வந்தேனும் தான் அறிந்த செய்திகளை சொல்வதற்கு இனிமேலும் தாமதிக்கமுடியாது அந்த சிறுவனின் தாய் பின்னர் நான் அவரை இராண்டாயிரத்தி இரண்டில் சந்த்திக்கும்வரை அவர் மனம் பேதலித்த நிலையிலே காணப்பட்டார், அதே மனநிலையுடன் விரக்தியுடன் என்னிடம் பேசினார். சில வருடங்களுக்கு முன்னர் அவரை சந்திக்க விரும்பி , அவரை பற்றி விசாரித்தபோது அவர் இறந்துவிட்டார் என்று கேள்வியற்று வருத்தமுற்றேன்

மேலும் அதே தினத்தில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொக்கட்டிசோலை போன்ற இடங்களில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையும் பார்வையிட்டபோது ஜோசெப் பரராஜசிங்கம் அங்கு காயமுற்றோரின் உறவினர்கள் முறைப்பாடுகளை தமிழ் முஸ்லிம் விரோத உணர்வுகளை ஒரு பிரச்சாரமாகவும் அதனை மேலும் எதிர்கால சமூக மீளிணக்கம் கருதி அறிவுபூர்வமாக அணுகாமல் எதிரிடையான அணுகுமுறையுடன் அங்கு அவர் விளக்கமும் வியாக்கியானமும் அளித்தார். மிக தீவிர முஸ்லிம் எதிர்ப்புணர்வு அங்கு காணப்பட்டது. மேலும் ஏறாவூர் முஸ்லிம் அகதி முகாமுக்கு சென்றபோதும் அவர்கள் புலிகளின் படுகொலைகளால் தாம் இழந்த குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சோக உணர்வுகளை தாம் எல்லைப்புரங்களிலிருந்து புலிகளின் பயத்தால் அகதியாக வாழும் துன்பங்களையும் இக்குழுவினருடன் பகிர்ந்து கொண்டனர். மொத்தத்தில் புலிகளின் அட்டூழியங்களின் அவலங்களை இன விரோத விளைவாக இருபுறமும் காணக்கூடியதாகவிருந்தது இந்த நிலையில் இலங்கை இராணுவ பிரிவின் ஒரு பகுதியினரும் இந்த சூழ்நிலையை தமக்கு ஏதுவாகவும் பயன்படுத்திக்கொண்டனர்.

புலிகள் இயக்கம் கிழக்கில் சிதைவுறும் வரை புலிகள் அவ்வப்போது இராணுவ பிரசன்னத்தின் காரணமாக முஸ்லிம்களுடன் உறவை பேணுவதுடன் அவர்களை தமது ஆயுத பலத்தால் தமது பிரதேச கட்டுப்பாடுகளால் முஸ்லிம் சமூக அரசியல் சமூகக் குரல்களாக செயற்பட்டோரை இனம் கண்டு கடத்தியது படுகொலை செய்ததன் மூலமாக முஸ்லிம்களை எப்போதும் ஒரு அச்ச நிலையில் வைத்துமிருந்தனர். புலிகள் கிழக்கு புலிகளாக பிளவுபட்டதும் ஒரு சுவாச இடைவழி ஏற்பட்டதுடன் முஸ்லிம் தமிழ் உறவு ஆமை கதியிலே நகரத்தொடங்கியது பின்னர் இராணுவ வெற்றிமூலம் புலிகள் கிழக்கில் முழுமையாக  தோ தொல்வியுறம் வரை அத்துடன் கிழக்கிலே தமிழ் முஸ்லிம் உறவுக்கு கிழக்கு மாகாண சபை ஊடாக அதன் முதலமைச்சர் போன்றோர் தமது நேர்மையான பங்களிப்பை செய்ததன் ஊடாக இன்று அங்கு மீண்டும் சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இனவாத அரசியல் சக்தியாக தமிழ் அரசுக்கட்சி இன்றுவரை தமிழர் தாயகம் வட கிழக்கு இணைப்பு என்ற தமிழ் தேசிய கட்டுமானங்களை கைவிடாததால் தனித்து எழும் கிழக்கு தமிழ் முஸ்லிம் அரசியலுக்கு பெருத்த சவால்கள் இருக்கின்றன என்பதால் முஸ்லிம் மக்களை தேவைகேற்ப பயன்படுத்தும் தமது அரசியல் தந்திரோபாயங்களில் ஒன்றாகவே பிரதான முஸ்லிம் அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடனான உறவை பலப்படுத்தும் தேவை அதற்கு கிழக்கிலே உள்ளது அதற்காக கிழக்கின் முஸ்லிம் அரசியல் அபிலாஷைகளில் சவாரிவிடும் இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தின் சற்று தினங்களுக்கு முன்னர் வரையான அரச எதிர்ப்பும் கிழக்கின் தனித் தமிழ் அரசியல் தலைமத்துவத்திற்கெதிராக முஸ்லிம்களை உருவேற்றும் செயற்பாடுகளும் தமிழ் தேசிய தலைமைகளுக்கு மிகுந்த தேவையாக இருக்கிறது. அதனால் தான் தற்போது அரசு சார்பாக 18 வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக மாறியும் சம்பந்தன் தனித்து ஜனாதிபதியை சந்தித்தது , இந்தியா சென்றது வட கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சேபனை இல்லை என்று பிரச்சாரம் பண்ணிய சூழலிலும் மீண்டும் தாங்கள் சந்தித்து பேசப்போவதாக கூறுவது தமது பரஸ்பர அரசியல் நிகழ்சி நிரல்களில் காணப்படும் ஒற்றுமையை கோடிட்டு காட்டுகிறது. ஆனால் கூட்டணியின் தமிழ் தேசிய அரசில் கிழக்கு முஸ்லிம்களின் தேசிய அரசியலுக்கு என்றுமே ஆபத்தானது. எனவே இன்று மீண்டும் துளிர்த்துவரும் தமிழ் முஸ்லிம் உறவு பொறுப்பற்ற தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளால் மீண்டும் எதிர் நிலைக்கு இட்டுச் செல்வதனை மக்களே மாற்றியமைக்க வேண்டும்.

1990 ஆகஸ்து மாதம் புலிகளின் முஸ்லிம் மக்கள் மீதான குறிப்பாக காத்தான்குடி ஏறாவூர் படுகொலைகள் எழுப்பிய அதிர்வலைகள் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இருத்தலை கேள்விக்குற்படுத்தியது. அதனால் அதுவரையும் ஏதோ பாதுகாப்பாக வாழலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த கிழக்கின் சகல சிறு கிராமங்களிலிருந்தும் முஸ்லிம்கள் வெளியேறினர். அவ்வாறான கிராமங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்த மிகப்பெரிய முஸ்லிம் கிராமமான உறுகாமம் என்ற கிராமத்திலிருந்து அக்கிராம மக்கள் தங்களால் முடிந்ததை கையிலெடுத்துக்கொண்டு ஏ5 பாதையூடாக தென்மேற்காக பதுளை மாவட்டத்திலுள்ள மஹா ஓயா எனும் சிங்கள கிராமத்திற்கு மாட்டு வண்டிகளிலும் கால் நடையாகவும் பயணித்தனர். கோப்பாவளி பெரியபுல்லுமலை போன்ற இடங்களிலிருந்தும் முஸ்லிம்கள் தங்களது குடியிருப்புக்களை விட்டு மகா ஓயா நோக்கி சென்று அங்கு அகதிகளாகினர், பின்னரே மெதுமெதுவாக அவர்களில் பலர் பொலன்னறுவைவைக்கும் அக்கரைப்பற்று ஏறாவூர் போன்ற இடங்களுக்கும் சென்று குடியேறினர்.

இவர்களில் பலர் இப்போதுதான் கிழக்கில் புலிகளின் அழிவுக்கு பின்னர் தங்கள் கிராமங்களுக்கு மீள்குடியேறி வருகின்றனர். அவ்வாறு உறுகாமம் கோப்பாவளி பெரியபுல்லுமலை போன்ற இடங்களிலிருந்து வெளியேறி மகா ஓயா அரச நிர்வாக கட்டிடத்தில் முகாமிட்டிருந்த பலரை நானும் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் (எம்.எச்.எம்.அஸ்ரப்) சிலரும் சென்று பார்வையிட்டோம் அவ்வாறு நாங்கள் மகா ஓயா நோக்கி பயணித்த வழியில் கண்டி ரந்தெனிகல (விக்டோரியா ) பகுதிகளை தாண்டி வாகனங்கள் அதிகம் சென்றிராத மனித நடமாட்டமற்ற வீதிகளினூடாக சென்றபோது ரந்தெனிகல வீதியோரமாக ஜே. வீ. பி இளைஞர்களின் டயரில் எரிக்கப்பட்ட எரிந்தும் எரியாத சடலங்களை பார்த்து மனக்கிலேச முற்றோம். சிங்கள இளைஞர்களின் உடல்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டு வீதியோரமெங்கும் வீசி எறியப்பட்டிருந்தன. ஜே வீ பியினரை (மக்கள் விடுதலை முன்னணி) பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தி அவர்களுடன் தொடர்புள்ளவர்கள் அவர்களின் குடும்பத்தினர் என்று ஆயிரக்கணக்கான சிங்கள அப்பாவி ஆண் பெண்களை கொன்று குவித்தது பிரேமதாசா அரசாங்கம்.

இருபதாண்டு கடந்துவிட்டபோதும் வந்தாறுமூலை அகதிமுகாமில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சில நடுத்தரவயதினர் உட்பட பலரின் குடும்பத்தினர் அண்மையில் நடத்திய நினைவு கூறல் நிகழ்சிகள் இராணுவம் பற்றிய மனித உரிமை மீறல் பற்றியது மறுபுறம் இன வன்முறைகளால் கொல்லப்பட்ட கடத்தி காணாமல் போன தமிழர் முஸ்லிம்கள் பலர் குறித்து இந்த இருபதாண்டு மனித நடவடிக்கை இயல்போட்டத்துடன் மனித சுபாவமும் சேர்ந்து பலவற்றை மறக்கச்செய்து விட்டது யதார்த்தமே. இன நல்லுறவுக்கும் மீளினக்கத்துக்குமாக ஆணைக்குழுவினை முதலில் சந்திரிக்கா 1983 வன்முறையோடும அதற்கு முதிய பிந்திய உடனடி காலகட்டத்துக்கு மட்டும் (1981-1984 )வரையறுத்து விசாரிப்பதற்காக அவ்வானைக்குழு நியமிக்கப்பட்டது இன்றுள்ள ஆணைக்குழுவும் 2002 தொடக்கம் 2009 வரையுமான கால வரையறைக்குள் செயற்படுகிறது. ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களுகிடயிலான சிறு சிறு வன்முறைகள் விசாரனைக்குற்படுத்துவது என்பது இப்போதைக்கு அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் குறிப்பாக இனங்களுக்கிடையே மீளிணக்கம் என்பது கட்டி எழுப்பப்படுவற்கு ஏதுவான சூழல்கள் புலிகளின் பேரழிவுடன் வட கிழக்கில் ஏற்பட்டுள்ளது.

நான் சில வருடங்களுக்கு முன்னர் சந்திரிகா அமைத்த உண்மைக்கும் மீளினக்கத்துக்குமான ஆணைக் குழு பற்றி வீரகேசரி பத்திரிகையில் (20.09.2001) எழுதும் போது தமிழ் முஸ்லிம் களுக்கிடையேயும் ஒரு உண்மைக்கும் மீளினத்துக்குமான (Truth and Reconciliation ) ஆணைக் குழுவொன்று அமையலாம் என்று கருத்துரைத்திருந்தேன். அக்கட்டுரையையும் இங்கு இணைத்துள்ளேன். இன்றுள்ள பயங்கரவாத அழிப்பின் பின்னரான கால நகர்வு பல சமுக ரணங்களை சொஸ்தப்படுத்தியிருக்கிறது கடந்த மாகாண சபை அமைப்பு அதில் ஏற்பட்ட முதல் அமைச்சர் பதவிப் போட்டி அவ்வப்போது ஏற்பட்ட இன முறுகல் சம்பவங்கள் ஓரிரு வன்முறைகள் என்பன இன போட்டபோட்டி முறுகல் நிலைப்பாடுகள் மெதுமெதுவாக குறைந்து செல்லும் தன்மையையும் அவ்வாறான சமூக பிரச்சனைகள் முரண்பாடுகள் பற்றிய அணுகுமுறைகள் சமூக உடன்பாடுகள் மாற்றமுற்று வருவதனையும் நோக்கும்போது பொருளாதார நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டு வாழ்க்கை தரம் உயர்வடைய சூழல் உருவாகும் போது மனித உறவுகளும் விழுமியங்களும் மேலோங்குகின்றன இதுவே இன முரண்பாட்டு சூழல் வன்முறைகள் நிலவிய நாடுகள் சிலவற்றில் அவதானிக்கப்படும் உண்மையுமாகும மீளினக்கத்துக்கான விசாரணைகள் இனங்களுகிடையில் மீண்டும் உண்மையை வெளிக்கொண்டு வரப்போவதில்லை அவ்வாறு உண்மைகள் வெளிக்கொண்டு வருகின்றதான சூழ்நிலை மீண்டும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துமா அல்லது விரிசலை ஏற்படுத்துமா என்ற கேள்விகளும் உண்டு. மேலும் சமுக முரண்பாடுகளை ஆட்கடத்தல் கொலை என்று கொண்டு முடித்தவர்கள் வன்முறைகளை தூண்டிவிட்டவர்கள் இழைத்த குற்றம் இனிமேலும் நடைபெறாமல் இருக்க இப்போதுள்ள சமூக நல்லுறவு சூழல் தக்க முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

-லங்காமுஸ்லிம்- SEPTEMBER 2010No comments:

Post a comment

Biden’s Drone Wars BY BRIAN TERRELL

  On Thursday, April 15, the   New York Times   posted an  article   headed, “How the U.S. Plans to Fight From Afar After Troops Exit Afghan...