
சில குறிப்பிட்ட போராட்டங்களுக்கு, உடனடி முக்கியத்துவத்தைத் தாண்டியும், கூடுதலான முக்கியத்துவங்கள் உருவாகின்றன. அந்தப் போராட்டம் நடக்கும்போது களத்தில் இருந்தவர்களும் கூட அதன் முக்கியத்துவத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டிருப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு போர்க்களம்தான் பிளாசி. பிளாசியில் நடைபெற்றதனை யுத்தம் என்று கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு புறத்தில் படைக்கு தலைமையேற்ற தளபதி, கையூட்டு பெற்றுக்கொண்டு தனது படையை முன் நடத்தாமல் இருந்துகொண்டார்; இருந்தாலும் கூட, பிளாசியின் காடுகளுக்குள் போர் நடைபெற்ற அந்த நாள், உலக வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.
விவசாயிகள் இயக்கத்திற்கும், மோடி அரசாங்கத்திற்கும் இடையே நடந்த போராட்டமும் அந்த வகையிலான ஒன்றுதான். கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் வியப்புக்குரிய உறுதிப்பாட்டிற்கு முன்பாக மோடி அரசாங்கம் மண்டியிட நேர்ந்திருப்பது, வெளிப்படையாகத் தெரிகிறது. இன்னொரு மட்டத்தில், இது நவ தாராளமயத்தினை பின்னடையைச் செய்துள்ளது. வேளாண்மை துறையில் கார்ப்பரேட் நுழைவு அதிகரிக்கும் போது, விவசாயிகளின் வேளாண்மை கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணிந்ததாகிறது. நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலில் இது மிக முக்கியமான விளைவு ஆகும். அந்த விளைவினை உருவாக்குவதுதான் வேளாண் சட்டங்களுடைய நோக்கமும் ஆகும்.
ஏகாதிபத்தியத்தின் விருப்பம்:
மேலே குறிப்பிட்ட இரண்டு பார்வைகளும் தெள்ளத் தெளிவானவையே. ஆனால் அவைகளுக்கு அப்பாற்பட்ட மூன்றாவது ஒரு நிலையும் இருக்கிறது, அது விவசாயிகளின் வெற்றிக்கு கூடுதலான முக்கியத்துவம் தருகிறது. இதுவரை அது போதுமான அளவு கவனிக்கப்படவில்லை. மிகவும் அடிப்படையான பொருளில், ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான் விவசாயிகளின் இந்த வெற்றி என்ற உண்மையோடு அது தொடர்புடையது. எனவே, பின்னடைவைச் சந்தித்த மோடி அரசாங்கத்தின் மீது, மேற்கத்திய ஊடகங்கள் வைத்த விமர்சனங்கள் யாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்காது.