இலக்கியத்திலும் ஜனநாயகம் வேண்டும்!தினகரன் வாரமஞ்சரி -கதம்பம் நேர்காணல் : விசு கருணாநிதி

மனம் விட்டுச் சொல்கிறேன்!

‘ஆவதறிவது’ எஸ். எம். எம். பசீர்

கவிதைக்குத் தலையிட்டால் உலகத்திற்குத் தலையிட்டதற்குச் சமம் என்பார்கள். அப்படி தாம் எழுதும் கவிதைக்கு ஏற்றமாதிரி வாழ்ந்து காட்டுபவர்களைக் கண்டிருக்கிaர்களா! பென்னம்பெரிய ஜாம்பவான்களை விட்டு விடுங்கள்! அநேகமாக எழுதும் கவிதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் தான் ‘நமது’ கவிஞர்கள் வலம் வருகிறார்கள். (விதிவிலக்கானவர்கள் மன்னிக்க)

காதலையும், பொதுவுடைமைக் கோட்பாடுகளையும் எழுதும் கவிஞர்களுக்கு மத்தியில் உவமைக் கவிஞர், புரட்சிக் கவிஞர்களும் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள். ஆனால் தன்னூக்க கவிதைகளை எழுதி அதுபோலவே வாழ்ந்துகொண்டிருக்கிறார் மட்டக்களப்பு மண் தந்த எஸ். எம். எம். பசீர்.

கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்த பசீர் அங்கு சொலிசிட்டராகப் பணியாற்றுகிறார். சொந்தமாக சட்ட ஆலோசனை நிறுவனத்தை நடத்திவரும் அவர் ஒரு படைப்பிலக்கியவாதியாகவும், அரசியல் விமர்சனங்களையும் இலக்கிய விமர்சனங்களையும் மேற்கொண்டு வருகிறார். பேராதனையில் படித்துப் பட்டம் பெற்று சட்டத்தரணியான பசீர் தமிழ் மொழியைத் தொடர்ந்து வளப்படுத்திக் கொண்டிருக்கிறார். இலண்டனுக்குப் புலம் பெயர்ந்திருந்தாலும் மட்டு. மண்ணையும் தமிழையும் மறக்காமல் கொழும்புக்கு வந்திருப்பவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது கவியரங்குகளில் பங்குபற்றினேன். அங்குள்ள அறிவிப்புப் பலகையில் கவிதைகளை எழுதிப்போடுவோம். எல்லோரும் பாராட்டுவார்கள். இலண்டனில் இணைய சஞ்சிகைகளில் நிறைய எழுதியுள்ளேன். நூல் விமர்சனங்களிலும் பங்குபற்றியுள் ளேன். தமிழை க. பொ. த. சாதாரணதரத்தில் மட்டுமே கற்றுள்ளேன். எனது தாயார் இலக்கிய அறிவு மிகுந்தவர். அதனால் எனக்கும் தமிழறிவை வளர்த்துக்கொள்ள முடிந்தது.”

“நீங்கள் எழுதியது கவிதைதான் என்று எப்போது, எவ்வாறு அங்கீகாரம் கிடைத்தது?”

“தினகரன் பத்திரிகையில்தான் முதலில் என் கவிதை பிரசுரமானது. அப்போது நிறையபேர் எனக்குத் தொலைபேசியில் பாராட்டினார்கள். அதன்பின்னர் எனக்கு ஊக்கமும் ஒரு தன்னம்பிக்கையும் பிறந்தது. அதிலிருந்து தொடர்ச்சியாக எழுதினேன்.”

“உங்கள் கவிதையின் கருப்பொருள் எதுவாக இருக்கிறது, எதனைப் பேசுகிறது, காதலையா அல்லது...?”

“தனிமனித ஊக்கத்தை (தன்னூக்கத்தை) மேம்படுத்தும் கவிதைகளையே அதிகம் எழுதியிருக் கிறேன். டொக்டர் எம். எஸ். உதயமூர்த்தியின் தத்துவங்கள் என்னைப் பாதித்துள்ளன. எனவே, எனது கவிதை தன்னூக்கத்தையே பேசுகின்றது. காதல் மனிதனின் இயலுமையைப் பாதிக்கிறது.

காதல் எதனையும் சாதிக்கவில்லை. காதலுக்குக் கட்டடம் அவசியம் இல்லை. அதனைவிட சமூகத்துக்குக் கண் திறந்துவிட்டிருக்கலாம்.” என்று கூறுபவர் தமது கவிதைகளில் வடித்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார்.

அவரது கவிதையின் வீச்சு சமூகத்தில் அரசியல் கருத்துகளாகப் பரிமாணம் பெற்று வருவதாகக் கூறும் பசீர், இந்தப் 19 வருடகாலமாக தனது பணிகளுக்கு மனைவி ஜெஸ்மி பசீர் மறுக்க முடியாத ஒத்துழைப்புகளை நல்கி வருவதாக நெகிழ்ந்துபோகிறார். திருமணமாகும்வரை நன்றாக எழுதிக்கொண்டிருப்பவர்கள், அது முடிந்ததும் எழுத்துக்கு முழுக்குப் போட்டுவிடுகிறார்கள். ஆனால், பசீரைப் பொறுத்தவரை, மனைவியை மறக்க முடியாது. அவரின் பக்கபலம்தான் எனக்குத் துணையாக இருக்கிறது என்கிறார்.

எழுபதுகளிலிருந்து தாம் எழுதிய கவிதைகளைக் கலாபூஷணம் பீ. எம். புன்னியாமீன் முயற்சியால் நூலுருவாக்க முடிந்துள்ளது என்று கூறும் பசீரின் சகோதர பாசம் ஓர் எடுத்துக்காட்டு என்றுதான் சொல்லவேண்டும். கவிதைத் துறையில் தன்னைப் போலவே எண்ணக்கருவைக் கொண்டுள்ள தனது உடன்பிறந்த சகோதரர் எஸ். எம். எம். நkர் எழுதிய கவிதைகளையும் தமது ‘ஆவதறிவது’ கவிதைத் தொகுதியில் சேர்த்தே வெளியிட்டுள்ளார்.

“கவிதைகளுக்கான வட்டம் மிகக் குறுகியதாகவே உள்ளது. புலம்பெயர் நாடுகளில் அரசியல் விமர்சனக் கட்டுரைகளுக்கான இணையத்தளங்கள் அதிகமாகவே உள்ளன. கவிதை இரண்டாம் பட்சமாகவே உள்ளது.”

“புலம்பெயர் இலங்கையர்கள் மத்தியில் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு உள்ளது?”

“புலம்பெயர்ந்து செல்பவர்கள், அகதி, கல்வி, வியாபாரம் என்ற ரீதியில் சென்றாலும் பிரதான நோக்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம்தான் மேலோங்கி காணப்படுகிறது. சிலர் உண்மையாகவே அகதியாக வருகிறார்கள். இப்போது பாருங்கள், நாட்டில் பிரச்சினை, அச்சுறுத்தல் இல்லாத சந்தர்ப்பத்திலும் உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்கிறார்கள். இதன் நோக்கம் பொருளாதாரம்தான். ஆகவே, புலம்பெயர்ந்தோரின் இலக்கியத்திலும் ஜனநாயகத்தைக் காண முடிவதில்லை” என்று ஆதங்கப்படும் பசீர் ‘ஆவதறிவது’ கவிதைத் தொகுப்பில் விபுலானந்தரைப் பற்றித் தாம் எழுதிய கவிதையை நினைவில் கொண்டு வருகிறார்.

விபுலானந்தர்
உன்பெயரில்கூட
மரியாதை
ஒட்டியிருக்கிறது!

தனி மனித
தமிழ்ச் சங்கம் நீ
மதுரைக்குப் பின்பு.

சஞ்சீவி மலையை
தூக்கிவரவில்லை நீ
உன் முதுகில்
சங்கப் பலகையே ஏறி
அமர்ந்துகொண்டது.

நீ துறவியோ!
நான் மறுப்பேன்
தமிழ்க் கன்னியை
காந்தர்வம் செய்தவன் நீ:
இல்லையென்றால்
முத்தமிழுக்கு உன்னையே
காணிக்கையாக்கியவன் நீ!

மட்டு வாவியில்
மகரயாழை
நீ இட்டு வைத்ததனால்
பூரணை நிலவில்
தேனிசை வந்து - காதில்
இன்றும் பாய்கிறது

மடம் கொடுத்தே
தமிழ் நாக்கில்
இடம் பிடுங்கியவன் நீ
கிழக்கில் கதிரவனுக்கு
வர்ணம் தீட்டியவன்
வயல்களையும்
வரப்புகளையும்
உடைத்துக்கொண்டே
கல்விமடை திறக்க
வைத்தவன் நீ!
உன் கல்லறை
மலர் வரிகள் - உன்
இதயக் கமலத்தின்
இறுதி மரண சாசனம்!

தாம் பாரதியின் அபிமானி என்று கூறும் பசீர் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பக்கச்சார்பான அரசியல் போக்கே காணப்படுவதாகக் கவலை தெரிவிக்கிறார். ‘வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தும் அவர், நாம் அளவுக்கதிகமாகத் தனிமைப்படுத்திக் கொள்வது இணக்கப்பாட்டுச் செயற்பாட்டுக்குப் பங்கமாகவே அமையும் என்கிறார்.

“தமிழர்களும் முஸ்லிம்களும் காலத்துக்கு ஏற்றமாதிரி தத்தம் தேவைகளை இனங்காணவேண்டும். தனி மனித அதிருப்தியை பொதுப் பிரச்சினையாக்கக் கூடாது. இனவாத அரசியலைக் கைவிடவேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கும் இவர் 1994 இல் ‘விடியல்’ என்ற பெயரில் ஆங்கில மொழியில் சஞ்சிகையொன்றை வெளியிட்டுள்ளதுடன், அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று அரசியல் இலக்கிய விமர்சன நிகழ்வுகளில் பங்கேற்று உள்ளார்.

2000 இல் இருந்து இலண்டனில் இலங்கை முஸ்லிம் தகவல் மையமொன்றை ஸ்தாபித்துச் செயற்படுத்தி வருகிறார். தனது தன்னூக்கக் கருத்துகளை இந்தத் தருணத் தில் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு களத்தை எதிர்பார்த்திருக்கிறார் பசீர்.

தினகரன் வாரமஞ்சரி -கதம்பம்
நேர்காணல் : விசு கருணாநிதி
28 சித்திரை 2010

http://www.thinakaran.lk/vaaramanjari/2010/04/11/?fn=f1004118&p=1

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...