
பௌத்தத்திற்கு முன்னுரிமை; எந்தவொரு பிரஜைக்கும் மத சுதந்திரம்

அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படும்

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படும்

ஒரு நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கும் புதிய அரசியலமைப்பு

அமைச்சுக்கள், நிறுவனங்களில் வீண்விரயம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி

மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மக்களிடம் செல்ல நடவடிக்கை
இன்று (20.08.2020) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய உரை வருமாறு,
கௌரவ சபாநாயகர் அவர்களே,
கௌரவ பிரதமர் அவர்களே,
கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே,
கௌரவ அமைச்சர்களே,
கௌரவ இராஜாங்க அமைச்சர்களே,
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே,
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து
சபாநாயகர் பதவிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோன்று இன்றைய தினம் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்களுக்கும் குழுக்களின் பிரதித் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
2/3 வழங்கிய மக்களுக்கு நன்றி
ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் புரட்சியொன்றை ஏற்படுத்திய ஒரு முக்கிய தேர்தலாகும். ஸ்திரமான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்காக 2/3 அதிகாரத்தை பெற்றுத் தருமாறு நாம் மக்களிடம் கேட்டிருந்தோம்.
வரலாற்றில் முதற் தடவையாக விகிதாசார முறைமையின் கீழ் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் 2/3 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் அதன் நட்பு அணிகளுக்கும் பெற்றுத் தந்த நாட்டுப் பற்றுடைய மக்களுக்கு நான் முதலில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
சர்வஜன வாக்குப் பலம் நாம் அனைவரும் மதித்துப் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக உரிமையாகும். எனவே இந்த தேர்தலில் தமது பெறுமதியான வாக்கினை பயன்படுத்திய அனைத்து இலங்கை வாக்காளர்களுக்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.