பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல் (2)



எஸ்.எம்.எம்.பஷீர்
"இலங்கையின் வரலாற்றையும் அரசியல் தீர்க்கமற்ற மரபினையும் கவனத்தில் கொள்ளும் போது ஜே ஆரை போன்ற உறுதியான மனிதர் ஜே வீ பியினதும் அதன் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அந்தவிதமான ஒப்பந்தத்தை (இந்திய இலங்கை ஒப்பந்தத்தை)   கைச்சாத்திடவும் அதனை ஆதரித்து நிற்கவும் தேவையாகவிருந்தது."
                                              வீ. ஜெயந்த் ( தி ஹிந்து -1995)  


பாக்கு நீரிணையில் படகில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பதினேழு புலிகளில் சிலரை தங்களிடம் கையளிக்க வேண்டும் என லலித் அதுலத் முதலி இந்திய அரசிடம் அதிகம் வற்புறுத்தினார். அவ்வாறு கையளிக்கப்பட்ட  முக்கிய புலிகள் உறுப்பினர்கள் பத்து பேர் மேற்சொன்ன இருவர் உட்பட தற்கொலை செய்து கொண்டதும் புலிகளின் இந்திய படைகள் மீதான தாக்குதல்களும் வடக்கில் ஆரம்பித்தன. இது பற்றி அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியின் ஆங்கில நண்பர் புரூஸ் , லலித் அதுலத் முதளியிடம் "இவ்வாறு நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா" என்று கேட்டதற்கு அவர் தாமதிக்காமல் ஆம், இந்திய அரசினை எமது பக்கம் கொண்டுவர இவ்வாறே நடக்கும் என்று அவர் எதிர்பார்த்ததாக தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   

இந்திய லோக சபாபில் நடைபெற்ற விவாதத்தில் அன்று லோக் சபாபில் எம் .பீ யாகவிருந்த வை. கோபலசுவாமி தனது உரையில் வடக்கு கிழக்கு ஒரு அலகு என ஒப்பந்தம் உறுதி செயவில்லை என்பதையம் கூறி இந்த பதினேழு பேரின் கைது குறித்தும் பல கேள்விகளை  எழுப்பினார். ஆனால் இங்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்த சம்பவத்தினை அடுத்தே பாரிய சவால்களுடனும் இடர்களுடனும் பயணிக்க  ஆரம்பித்தது. (1988)  


இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது ஒரு இறைமையுள்ள நாட்டின் மீது இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு வரலாற்று புள்ளியை இட்ட ஒரு அம்சமாக பார்க்கப்பட வேண்டும்.  ஏனெனில் இந்திரா காந்தி இறப்பதற்கு (சதிக்கொலை செய்யப்படுவதற்கு) முன்பாக , இந்தியப் படையை  இலங்கை ஆக்கிரமிக்க கட்டளை இட்டிருந்ததாக பிரபல பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழ் தி கார்டியன் (The Guardian) பத்தி எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுருந்தார். ஆயினும்  அவ்வாறான ஆக்கிரமிப்பு சீக்கியர்களின் (காலிஸ்தான் தனிநாடு கோரிய சீக்கிய "தீவிரவாதிகள் ") ஆயுத எழுச்சி தேசிய அச்சுறுத்தலை அக்காலகட்டத்தில் ஏற்படுத்தியதனால் இறுதி நேரத்தில் இந்திரா காந்தியினால் கைவிடப்பட்டது என்பதும் அதனை அடக்க அவர் எடுத்த சீக்கிய மக்கள் மீதான அடக்கு முறைகளினாலே தானும் பலியாக நேரிட்டது. 

நிகரகுவாவில் கான்ட்ராஸ் எனும் அரச எதிர்ப்பு பிரிவினருக்கு ஆயுதம் வழங்கி ஆயுதப்பயிற்சி வழங்கி நிகரகுவா அரசுக் கெதிராக எவ்வாறு அமெரிக்காவின் சி ஐ ஏ (மத்திய புலானாய்வு முகவராண்மை-Central Intelligence Agency  )  செயற்பட்டதோ அதேவிதமான ஆர்வத்தை இந்திய உளவு இஸ்தாபனமான ரோ (RAW) கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார். 

தமிழ் மக்கள் மீதான படுகொலை (Genocide) என்ற பதப்பிரோயகத்தினை அழுத்தமாக பிரயோகித்து இந்திய ஊடகங்கள் செய்த பிரச்சாரம் ஹிட்லரின் பிரச்சார பொறுப்பாளரான கோயபல்சின் பிரச்சாரத்தை ஒத்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். 
மேலும் அதற்கு ஐரோப்பிய வரலாற்று  உதாரணத்தையும் அவர் தனது பத்தியாக்கத்தில் சுட்டுக் காட்டியிருந்தார். "உண்மையில் சிறுபான்மை துயரங்கள் -செக்கொச்லோவாக்கியாவில் இருந்ததுபோல் - ஸ்ரீ லங்காவில் உள்ளன ஆனால் செக்கொச்லோவாக்கியாவில் அன்று காணப்பட்ட  ஜேர்மனிய மேலாதிக்க பிரச்சினை குறித்து   சேர்ச்சில் (Churchill ) அவ்வாறான பிரச்சினைகள் பூதாகரமாக்கப்பட்டு தங்களின் நலன்களுக்காக பெரும் சக்திகளால் பயன்படுத்தப்படுகின்றன"  என்று குறிப்பிட்டிருந்ததையும்   இந்தியாவின் இலங்கை தமிழர்கள் மீதான அக்கறையையும் அவ்வாறே பார்க்கப்பட வேண்டும் என்ற பொருளில் அவர் மேலும் கருத்து வெளியிட்டிருந்தார்.



இந்த ஒப்பந்தம் கிழக்கில் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் உட்பட்ட சகல மக்களையும் பாதுகாப்பதாகவும் அவர்களின் உயிர் உடைமைகளுக்கு உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி செய்யும் சரத்துக்களை கொண்டிருந்ததுடன் அதற்கெதிரான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டன. அந்த வகையில் முஸ்லிம் மக்கள்  இந்திய இராணுவத்தின் அடக்கு முறைக்கும் அவர்களுடன் கூட்டாக சேர்ந்து செயற்பட்ட சகல தமிழ் ஆயுத இயக்கங்களின் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிய போது  ,அப்போது எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் வகித்த ஹலீம் இஷாக் முஸ்லிம்கள் மீது  இந்திய அமைதிக்காக்கும் படையினரின் கிழக்கில் நடத்திய   அடாவடித்தனங்களை பகிரங்கமாக சாடியதுடன் அவர்களுடன் சேர்ந்தியங்கி தமிழ் இயக்கங்களையும் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதும் எங்கு குறிப்பிடத்தக்கது.  
இந்த இணைப்பு (வட -கிழக்கு) குறித்து  முன்னாள் கல்வியமைச்சரும் அரசியலிலிருந்து அப்போது  ஒதுங்கி இருந்தவருமான   கலாநிதி பதியுதீன் மஹ்மூத் முஸ்லிம்களின் அச்சம் குறித்தும் பின்வருமாறு குறிப்பிட்டதும் இங்கு நோக்கற்பாலது.   
    
"உடன்படிக்கை மூலம் (இந்திய இலங்கை ஒப்பந்தம் ) இணைப்பு என்பது ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருப்பினும்  அவ்விணைப்பு தொடர்ந்து இருக்கப் போகின்றதா என்பதுதான் இங்கு பார்க்கப்பட வேண்டும். . இது போன்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம் மக்களின் மனநிலை என்னவென்றால் இணைப்பினை அமுலாக்குவதனை இயற்கையாகவே ( இயல்பாகவே ) மறுப்பார்கள்." 

இணைந்த வடக்கு கிழக்கு தாயக கோட்பாட்டினால் , அதனை ஏதோ ஒருவிதத்தில் சட்டபூர்வமாக தற்காலிகமாகவேனும் உறுதி செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் முதலில் பலியிடப்பட்டவர்கள் முஸ்லிம்ககளே ,பின்னர் சிங்களவர்கள் , ஆக இறுதியில் கிழக்கு தனித்துவமாக கருதப்படவேண்டும் என்ற புலிகளுக்கிடையிலான முரண்பாடுகளுடன் பலியிடப்பட்டவர்கள் கிழக்கு தமிழ் இளைஞர்கள். ஆக பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றிய ஒரு புதிய அணுகுமுறை அவசியமா என்பது குறித்த விவாதங்கள் இன்று மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில் மீண்டும் தமிழ் தேசிய வாத அரசியல் (ஜனநாயக!) தீவிரவாதிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. 



No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...