குறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்

எஸ். எம். எம். பசீர்


உலகளாவிய ரீதியில் முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக செயற்படும் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) தனது ஆசிய நாடு தொடர்பான ஆய்வறிக்கை இலக்கம் 134இல் இலங்கை இனப்பிரச்சினைக்காக நிகழும் இருபுறச் சமரில் இடையில் சிக்குண்ட முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதான ஒரு விரிவான அறிக்கையினை இவ்வருட மே மாதத்தில் வெளியிட்டுள்ளது. தனது அறிக்கையின் முடிவில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையில் சிக்குண்ட முஸ்லிம்களை மூன்றாவது தரப்பாகக் கண்டு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. சர்வதேச பிரதிநிதித்துவத்தினைக் கொண்ட இச்சிபாரிசுகள் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.ஏற்கெனவே முஸ்லிம்கள் தொடர்பான பல்வேறுபட்ட சமூக பொருளாதார அரசியல் சமய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கைகளும் நூல்களும் வெளியிடப்பட்டு இருப்பினும் அவை யாவும் ஒப்பீட்டளவில் விரிவானதாக முஸ்லிம் சமூகத்தின் சகல வாழ்வியல் அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவில்லை. அல்லது சர்வதேச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடத்தக்க அம்சமானது இவ்வறிக்கை வெளிவந்த காலகட்டமாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதில் முஸ்லிம்கள் மூன்றாம் தரப்பாக பேச்சுவார்த்தைகளில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற முஸ்லிம் தரப்பு கோரிக்கைக்கு வலுவூட்டுவதாகவும் சர்வதேச ஈடுபாட்டினை வலியுறுத்துவதாகவும் கருதப்படுகின்றது.

இலங்கை முஸ்லிம்களில் குறிப்பாக வட கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தொடர்பான ஆய்வுகளில் அண்மைக்கால முஸ்லிம்கள் தொடர்பான சர்வதேசமட்ட ஆய்வுகளில் சர்வதேச சிறுபான்மை உரிமைகள் குழு சார்பில் ஆய்வுசெய்த எலிசபெத் நிஷான் (Elizabeth Nissan) னின் இலங்கை ஒரு கசப்பான அறுவடை(Sri Lanka: a Bitter Harvest) என்ற நூலும் டெனிஸ் பீ.மக் கில்வரி (Denis B. Mc Gilvery) யின் இலங்கையின் இன முரண்பாட்டு வரலாறு: நினைவூட்டலும் மறுபொருளுரைத்தலும் மீள் இணக்கமும்A History of Ethnic conflict in Sri Lanka: Recollection, Reinterpretation and Reconciliation) யனெ ஜேர்மன் அரசியல் ஆய்வாளர் கலாநிதி கிரிஸ்டியன் வாக்னர் (Christian Wagner) இன் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகளும் முக்கியத்துவம் வாய்ந்தன.

சமாதானகால இடைவெளியினைப் பயன்படுத்தி 2004ம் ஆண்டு வெளியான ஆசியா பவுண்டேஷனின் சகவாழ்விற்கான அடிப்படைகள்: கிழக்கு இலங்கையில் இன உறவும் மனித பாதுகாப்பும்இ தனிப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் அறிக்கையும் ஒரு விதத்தில் கிழக்குவாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவின்பாற்பட்ட அம்சங்களை ஆராய்ந்து வெளியிடப்பட்ட அண்மைக்கால அறிக்கையாகும். (Foundation for coexistance: ethnic relations and human security in Eastern Sri Lanka: a report based on individual interview- January 2004) Asia Foundation.

வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக பல்வேறுபட்ட அறிக்கைகள் ஆய்வுகள் தாமதமாகவே மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம்களின் சமூக பொருளாதார மனித உரிமைகள் தொடர்பில் இனப்பிரச்சினை தீவிரமடையத் தொடங்கியபோது அவற்றினை முதன்முதலில் ஆவணப்படுத்திய பெருமை UTHR எனப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மனித உரிமை ஆசிரியர் குழுவினருக்கே உரியது. மேலும் முஸ்லிம்கள் தொடர்பாக சர்வதேசரீதியில் காணப்பட்ட நிலைப்பாடு பற்றி முதன்முதலில் தனது கருத்தினையும் அவர்களே முன்வைத்தனர். முஸ்லிம் சமூகமானது ஒப்பீட்டளவில் நவினமயப்படுத்தப்பட வில்லை. வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மேற்கத்தைய அரசுசார்பற்ற நிறுவனங்களுடன் மிகச்சிறிய அளவிலான தொடர்பினையே அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

ஐ நா வின் மனித உரிமை ஆணைக்குழு போன்ற சர்வதேச ஸ்தாபனங்களிடம் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பற்காக நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட முன் வைப்பாளர்களைக் கொண்டிருக்கவில்லை என்று தங்களது ஆகஸ்ட் 1992 அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டமை முஸ்லிம் குறித்த சர்வதேச வீச்சு ஒரு நீண்ட காலச் செயற்பாடாகவே இருந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகின்றது. அந்த வகையில் இந்த ICG யின் அறிக்கை தாமதமாக வந்திருப்பினும் முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்களது பிரச்சினைகளைச் சர்வதேசத்தின் கவனத்திற்கு இவ்வறிக்கை கொண்டுவந்துள்ளது.

முஸ்லிம்களின் இன அடையாளமும் ICGயின் ஆய்வும்.

ஏனைய இனக் குழுமங்களின் சமூகங்களினது மொழி இன அடிப்படையிலான அடையாளத்திற்கு மாறாக முஸ்லிம்கள் மத நம்பிக்கையினை முதன்மைப்படுத்தும் அடிப்படையிலேயே முஸ்லிம் அடையாளம் வரைவிலக்கணப்படுத்தப்படுவதுடன் வித்தியாசமான காலகட்டங்களில் எற்பட்ட அதிலும் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டுகளினூடாக வளர்ந்துவந்த சிங்கள - தமிழ் தேசியவாதத்தின் விளைவாகவும் ஏற்பட்ட சிக்கலான அடையாளத் தேடுதலுக்கு தூண்டுகோலாயிற்று.

இவ்வாறான அடையாளத்தினை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ள நிலைமைகள் மட்டுமல்ல முஸ்லிம்களிடையே இன்று மரபுவாத இஸ்லாமிய நம்பிக்கைகளிலிருந்து அக - புற சமூக மாற்றங்களால் ஏற்பட்ட புதிய மதப்பிரிவுகளின் மாறிவரும் நிலமைகளையும் குறிப்பாக சூபி, வஹ்ஹாபி, அஹமதி பிரிவுகள் மேலும் தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி சன்னத்தில் ஜமாஅத் போன்ற ஸ்தாபனப்படுத்தப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் என்பன பற்றியும் என ஆழமான ஆய்வினை ICG அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆயினும் இப்பிரிவுகள் அடிப்படை இஸ்லாமியக் கருத்துக்களின் சூபித்துவம், அஹமதி போன்ற அமைப்புகள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானவை என்பதையும் அவை முக்கியத்துவமற்ற எண்ணிக்கையினராலே பின்பற்றப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடிப்படை இஸ்லாமியக் கொள்கைகள் அடிப்படை வாதமாகவும், அண்மைக்கால சூபித்துவ காத்தான்குடி மதச்சண்டைகள் என்பன பெரிதளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதையும் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகள் அண்மையில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளுடாக இடம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ் - முஸ்லிம் சமூகத்தினரிடையே ஏற்பட்ட சிறு சிறு முரண்பாடுகள் தப்பபிப்பிராயங்கள் அதிகளவில் வெளிநாட்டு தமிழ் தேசியவாத புலிகளின் சார்பு ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டமையும் அதனையொத்ததாக ஏற்கெனவே இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான பாரிய வன்முறைகள் குறித்துக் காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் வடமாகாண வெளியேற்றம் குறித்து நடேசன் சத்தியேந்திராவினதும் புலிகளின் வெளியேற்றம் குறித்து நியாயப்படுத்தும் மற்றுமொரு புலிகளின் ஆதரவாளரான சச்சி சிறிகாந்தா (ஜப்பான்) என்பவரினால்; பிரபாகரனை காப்பாற்றும் கருணாவைக் குற்றஞ்சாட்டும் எண் விளையாட்டு என மலினப்படுத்தும் கருத்துகள் இவ்வாய்வுகளின் சமநிலை பேணுவதற்காக இடம்பெற்று இருக்கின்றமை உண்மையில் இவ்வறிக்கையின் மறை கருத்தினை உணர்த்திநிற்பதனையும் கண்டு கொல்லாமலிருக்க முடியவில்லை. இவரைப் போன்றோரின் கருத்துக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் மீதான புலிகளின் இனச்சுத்திகரிப்பு இனவழிப்பு குறித்த அவரின் கட்டுரையாக்கம் குறித்துக் காட்டப்பட்டிருக்கலாம்.

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படாத வரை ஒரு சாத்தியமான நீண்டகால சமாதானத் தீர்வினை அடைவது கடினமானதே என்று குறிப்பிடும் ICG முஸ்லிம்களின் வரலாற்றினை மட்டுமல்ல அரசியல் வளர்ச்சியினையும் ஒலுவில் பிரகடனம் வரையான எழுச்சியையும்கூட சட்டிக்காட்டத் தவறவில்லை. கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அபிலாஷைகளையும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் வரலாற்றினையும் அண்மைக்கால அரசியல் மாற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“கிழக்கு முஸ்லிம்களும் புதிய யுத்தமும்” என்ற தலைப்பில் கூறப்படுகின்ற விடயங்கள் அவ்வப்போது நிகழ்ந்த சிறுசிறு சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முடிவுகளாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தமிழ் முஸ்லிம் உறவுகள் தொப்பிக்கல கைப்பற்றப்பட்டமை மீள் குடியேற்றங்கள் புலிகளின் வரிவசூலிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை அரசியல் படுகொலைகள் கிழக்கில் குறைந்துள்ளமை தேர்தலுக்கான பிரகடனங்கள் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை என்பன இவ்வறிக்கையில் காணப்படாததும் இவ்வறிக்கை வெளியானதன் பின்னர் இடம்பெற்றதுமான நிகழ்வுகளாகும்.

பரிந்துரைகள்

இவ்வாய்வறிக்கையின் இறுதியில் இலங்கை அரசுக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் அவர்களின் அரசியற் கட்சிகளுக்கும் புலிகள் மற்றும் ஏனைய தமிழ் அரசியற் குழுக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்குமென சமாதான சகஜீவிதத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்காக சிபாரிசுகளையும் ICG முன்வைத்துள்ளது.

Muslim Community and Political Parties, முஸ்லிம் சமூகமும் அதன் அரசியற் கட்சிகளும் என்றும் எல்.ரீ.ரீ.ஈ. யும் ஏனைய தமிழ்க் குழுக்களும் என்றும் குறிப்பிடுவதினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியற் கட்சிகளையெல்லாம் அரசியற் குழுக்களாகக் குறிப்பிடுகின்றமை தமிழர் தரப்பு அரசியற் கட்சிகளை முக்கியமற்றதாகவும் புலிகள் தரப்பினரை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ICG கருதுவதாகவே புலப்படுகின்றது. இதன்மூலம் புலிகளுக்கு அதீத அங்கீகாரம் வழங்கும் சார்பு நிலையும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசுக்கான பரிந்துரைகளில் எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் சமூகத்தினர் மூன்றாம் தரப்பாகக் கலந்துகொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை ஆதரிப்பது வடபுல முஸ்லிம்களின் மீள்திரும்பும் உரிமை சொத்துக்களை மீளப்பெறுதல் என்பவற்றுடன் இடம்பெயர்ந்திருக்கும் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளும் இறுதிச் சமாதானத்தின் பின் பரிகாரம் காண்பதனை உறுதிசெய்வது 1990ல் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமித்து உறுதியான மீள்திரும்புகைக்குத் தடையாயிருக்கும் நீண்டகால சட்ட அரசியல் பௌதிக தடைகள் மற்றும் உடனடித் தேவைகள் குறித்து ஆராய்ந்து பரிகாரம் காணுதல் கிழக்கு மாகாணத்திற்கு ஏதேனும் ஒரு புதிய இடைக்கால ஆளுகைக்கான ஏற்பாடுகள் சம அதிகாரப் பகிர்வினை முஸ்லிம்கள் தமிழர்களை
(அ) பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தரமுயர்த்தப்பட்ட உள்ளுராட்சிக் கட்டமைப்புக்களை உள்ளடக்குவதனையும்
(ஆ) பிரச்சினைக்கான இறுதி அரசியல் தீர்வினை தடைசெய்யாமலிருப்பதனையும் உறுதிசெய்வது.

திருக்கோணமலை விஷேட பொருளாதார வலயம் போன்ற பாரிய அபிவிருத்திகளை அங்குள்ள மக்களின் மக்கள் பிரதிநிதிகளின் கலந்தாலோசனையைப் பெறும்வரையில் இடைநிறுத்தி வைப்பது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழ் உதவி இராணுவக் குழுக்களை குறிப்பாக அரசு சார்பான கருணா பிரிவினரை குடிசார் பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைக் கூடாக மட்டுப்படுத்தி அவர்கள் மீது செயற்றிறன்மிகு கட்டுப்பாட்டினை உறுதி செய்தல் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள த.ம.வி.பு உறுப்பினர்கள் மீது வழக்குத் தொடுத்தல்இ த.ம.வி.பு. உறுப்பினர்களின் செயற்பாட்டினை நிர்வாகம் நிவாரணம் மீள்குடியேற்றத் திட்டங்களில் கட்டுப்படுத்தல் பொத்துவிலில் டிசம்பர் 2006இல் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் உட்பட சகல மனித உரிமை துஷ்பிரயோகங்களையும் விசாரணை செய்து வழக்குத் தொடுத்தல் எனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமூகம் அரசியற் கட்சிகளுக்கான பரிந்துரைகள்
முஸ்லிம் சமூகம் அரசியற் கட்சிகளுக்காக பின்வரும் பரிந்துரைகளையும் செய்திருக்கின்றது.

பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக தமிழ் - முஸ்லிம் உறவினை சீர்செய்தல், ஒத்துழைப்பினை ஊக்குவித்தல், கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுவினரின் பாத்திரத்தினைக் கண்காணித்தல், அரசியலமைப்புரிமை மூலம் எல்லா சமயத்தவருக்கும் சமயப் பிரிவினர்களுக்கும் மதவுரிமையினை முஸ்லிம் சிறுபான்மைப் பிரிவினர் உட்பட உறுதிசெய்தல், முஸ்லிம்களிடையே உள்ளுர் மட்ட ஜனநாயகத்தினையும் சிறந்த பிரதிநிதித்துவத்தினையும் ஊக்குவித்து, சமபகிர்வினை உறுதி செய்யும் அரச சிர்திருத்தங்களை ஊக்குவித்தல் குடிசார் சமூகக் குழுவினரை (Civil Society) முஸ்லிம் கவுன்சிலை விஸ்தரிப்பதுட்பட பெண்களின் பாரிய பங்களிப்பினை உறுதிசெய்கின்றதான சமாதானச் செயலகத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தியும் சிவில் சமூக நடவடிக்கைகளை ஊக்குவித்தல்

புலிகள்- ஏனைய தமிழ்க் குழுக்களுக்கான பரிந்துரைகள்.

தொந்தரவு செய்தல் சட்டமுரணான வரி வசூலிப்பு முஸ்லிம்கள் மீதான மனித உரிமை துஷ்பிரயோகம் என்பவற்றினை முடிவுக்குக் கொண்டுவருதல் கடந்தகால மனித உரிமை துஷ்பிரயோகங்களை மறுபரிசீலனை செய்வதுடன் உறவினை சீர்செய்வதற்கு முன்னுரிமை வழங்குதல் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான பிரதிநிதித்துவக் கோரிக்கையினை எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஆதரித்தல் பகிரங்கமாகவே வடமாகாண முஸ்லிம்களைத் தங்களது பூர்வீக இடங்களுக்குத் திரும்புவதனையும் கிழக்கில் முஸ்லிம்கள் தங்களது பயிர்ச்செய்கை நிலங்களில் மீளப் பயிர் செய்வதனை வலியுறுத்தல் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்துகொள்கின்ற பல்லின அரசியல் எதிர்காலத்தினை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுதல்.

சர்வதேச சமூகத்திற்கான பரிந்துரைகள்

ஏதேனும் புதிய சமாதானச் செயற்பாடுகளில் முஸ்லிம்களின் அக்கறைகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அக்கறைகளை சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தனித்தரப்பு உட்பட உள்ளடக்க பாரிய அர்ப்பணிப்பினை மேற்கொள்ளல்

மேலும்

(அ) த.ம.வி.புலிகளின் செயற்பாட்டினைக் கடுமையாக கட்டுப்படுத்துவதுடன் குற்றச்செயல்களில் ஈடுபடும் த.ம.வி.பு உறுப்பினர்களுக்கெதிராக வழக்குத் தொடுத்தல்

(ஆ) பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டதாகவுள்ள கொடுமைகளை தீவிரமாக கவனத்திற்கொள்வதுடன் தண்டனைக்குட்படாது குற்றமிழைக்கும் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவருதல்

(இ) கிழக்கின் அபிவிருத்தியில் தமிழ் முஸ்லிம் சமூகங்களை உள்ளடக்கி ஏதேனும் இடைக்கால நிர்வாகத்தில் உண்மையான அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்துகின்ற தகுந்த அரசியற் செயன்முறையினை உருவாக்குதல்.

அபிவிருத்தி உதவித் திட்டமிடல்களில் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து அவர்களின் முன்னுரிமைகளை கவனத்தில் கொள்ளல்.

மேற்கூறப்பட்டது போன்ற சிபாரிசுகளை முஸ்லிம்கள் தொடர்பாக முன்வைத்துள்ளமையானது குறிப்பாக அரசு தமிழ்த் தரப்பினரின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படாதுவிடின் நிலையான நீதியான சமாதானம் என்பது சாத்தியப்படாது என்ற உண்மையை இவ்வாய்வறிக்கை மூலம் ICG நிரூபணம் செய்துள்ளது.
 


நன்றி:தேசம்நெற் (November 2007) from Thenee.com


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...