பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல் (3)                                                                                                               எஸ்.எம்.எம்.பஷீர்

" இந்திய அமைதிப்படையின் தொடர்சியான பிரசன்னம் இந்த நாட்டில் இரண்டு சமூகத்தினருக்குமிடையில் பாரிய அவநம்பிக்கை உருவாக்கத்திற்கு இட்டு செல்லும். ஆட்சியிலுள்ள குழுவினரே அவர்கள் எந்த கட்சியாகவிருந்தாலும் சரி இதன் (இந்திய அமைதி காக்கும் படையினரின் பிரசன்னத்தால்)  நன்மைகளை பெறும் நபர்களாக இருப்பார்கள், உழைக்கும் மக்கள் இழந்தவர்களாகவே இருப்பார்கள்"
                                                   மறைந்த புளட் தலைவர்  உமா மகேஸ்வரன் 
                    ( வாசுதேவ நாணயக்காரவுக்கு 1988 ல்      எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது)   .

 


லங்கையின் புவிசார் பொருளாதார நலன்களை தனது ஆதிக்க கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்திய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தவர் மறைந்த பாரத பிரதமரான இந்திரா காந்தி, ஒரு புறம் கூட்டு சேர அணியினை வலுப்படுத்திகொண்டு  மறுபுறம் கபடத்தனமாக தனிநாடு கேட்டு போராட புறப்பட்ட இளைஞர்களை ஆயுதம் வழங்கி பயிற்றுவிக்கும் பணியிலும் அவரது ஆட்சி செயற்பட்டது. உள்நாட்டு தனி நாட்டு சீக்கிய கிளர்ச்சி அவரின் ஆக்கிரமிப்பு அணுகுமுறையிலும் தமிழருக்கான தனி நாட்டு உருவாக்கத்துக்கான கொள்கையிலும்  அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் முன்னாள் இலங்கையின் ஜனாதிபதி ஜே ஆர் .ஜெயவர்த்தன தான் "மகாத்மா காந்தி தொடக்கம் ராஜீவ் காந்தி வரை இந்தியாவை அறிந்திருந்ததாகவும் அதனுடன் சேர்ந்து நின்றதாகவும் , ஆனால் தனது இந்தியாவுடனான பிரச்சினை .என்பது இந்திரா காந்தியுடனான பிரச்சினை தான்" என்று தன்னிடம் கூறியதாக பிரபல ஹிந்து பத்திரிக்கையாளர் வீ. ஜெயந்த் குறிப்பிட்டிருந்தார்.  .  

ஆனால் அன்னையின் அதேவிதமான ஆக்கிரமிப்பு கொள்கையின் அடிப்படியில்தான் ராஜீவும் செயற்பட்டார், ஆனால் ராஜீவை சமாளிக்கும் அரசியல் அனுவபவும் ஆற்றலும் ஜே ஆருக்க இருந்தது. பூமாலை நடவடிக்கை (Operation Poomalai) என ராஜீவின் உத்தரவின் பேரில்  உணவுப்பொதிகளை இந்திய விமானங்கள் இலங்கையின் ஆகாய பிரதேசத்துள் அத்து மீறி நுழைந்து வீசியெறிந்து விரட்டியதும் ஜே ஆரும் கலங்கியே போனார். அதன் விளைவாய் திம்புவில் தொடங்கிய இந்திய அனுசரணையுடனான பேச்சுவார்த்தைக்கு வேறு விதத்தில் தீர்வுகாணும் வகையில்  இலங்கையின் அரசியலமைப்பிற்குள் இந்தியா பதின்மூன்றாவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற பண்ணி நுழைந்து கொண்டது. வேறு விதமாக கூறுவதானால் இறைமையுள்ள இலங்கையின் ஆட்சி அதிகார சட்டவாக்கத்துள் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு இடமளிக்கப்பட்டது. 

இந்தியா காஸ்மீரிய மக்களின் சுய நிர்ணய உரிமை குறித்த தனது ஐக்கிய நாட்டுடனான கடப்பாட்டை (நேருஜி ) மீறிக்கொண்டு அந்நிய நாடான இலங்கை மீது தனது ஆதிக்கத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தீவிரமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபுறமும் ஜே வீ பி இன்னொருபுறமும் எதிர்க்க  ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் இவ் வொப்பந்தத்துக்கு எதிர்ப்பு  கிளம்பியது , அதிலும் குறிப்பாக இவ்வொப்பந்தம் தொடர்பில் தீவிர எதிர்ப்பினை காட்டிய அன்றைய ஐக்கிய தேசிய ஆட்சியில் விவசாய அமைச்சராகவிருந்த காமினி ஜெயசூரிய தனது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகி சிங்கள தேசிய வாத கட்சியாக சின்ஹல ஆரக்சய சந்விதாணய கட்சியினை ஆரம்பித்து செயற்பட்டார். ஆயினும் பிரேமதாசாவின் இந்திய எதிர்ப்பு வட கிழக்கில் மாகான சபை இயங்காமல் சென்ற நிகழ்வுகள் அவாரின் கட்சியை செயலிழக்க செய்தன. இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்த இன்னுமொரு முக்கியமான சிங்கள தேசியவாதி சட்டத்தரணி எஸ்.எல் குணசேகரா. இவர் தனது எதிப்பினை ஜே ஆருக்கு நேரடியாக காட்டி , இவ்வொப்பந்தம் கைச்சாத்திடுவற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜே ஆர் கூட்டிய அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியேறியவர். இவர் திம்பு பேச்சுவர்த்தைகளில் அரச சட்ட குழுவினர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தங்களின் பின்னரான துயரங்கள் பற்றி முந்திய எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன் . அனால் ஜே ஆரின் இறுக்கமான எடுத்தெறிந்த அரசியல் போக்கு எப்போதுமே முஸ்லிம்களை அனுசரிப்பதாக இருக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் நிலவிய சூழலில் ஜே ஆர் தன்னை சந்தித்து பேசிய முஸ்லிம் தூதுக் குழுவினருடன் இறுதி முடிவுக்கு முன்னர் முஸ்லிம் சமுதாயத்தை கலந்தாலோசிப்பதாக கூறியிருந்தார் ஆனால் அவ்வாறு செய்யவில்லை , முஸ்லிம்களின் அரசியல் இந்திய மேலாதிக்க சக்திகளுக்கு ஏனைய பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பலியிடப்பட்டது, எனவேதான் ஜனாதிபதியாகும் கனவுடன் பல்லாண்டுகள் காத்திருந்த பிரேமதாசா சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்பினை சாதகமாக்கி கொண்டு இந்திய படை வெளியேற்ற கோசத்தை முன்வைத்தார், அதற்கு மிக முக்கியமாக தேவைப்பட்டது தமிழரின் ஆதரவு  அந்த வகையில் முரண்பட்ட புலிகள் தேவைப்பட்டனர். புலிகளுக்கு இந்தியாவை வெளியேற்ற வேண்டும், வட கிழக்கில் அரசியல் ஆதிக்கம் கொண்ட (மாகாண  சபை நிர்வாகத்தின் மூலம்)  ஏனைய தமிழ் இயக்கங்களை இல்லாதொழிக்க வேண்டும், வட கிழக்கினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இந்திய சிதைத்த தமது ஏக போக தலைமையை உறுதி செய்ய வேண்டும்.  இறுதியில் வழக்கம் போல் இலங்கை ஆட்சிக் கெதிராக திரும்பவேண்டும்  தமது சர்வதேச ஆலோசகர்களின் தூண்டுதலில் இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவினை கெதிரான ஆறாவது திருத்த சட்டத்தினை இரத்து செய்ய பிரேமதாசாவை பயன்படுத்த வேண்டும். அதே வேளையில் சர்வதேச பிரச்சாரங்களை முடுக்கி தமிழர் தாயாக திம்பு கோட்பாட்டை முன்னெடுத்து தனி நாட்டை நோக்கி நகர வேண்டும். ஆனால் பிரேமதாசா ஆறாவது திருத்தத்தினை நீக்க மறுத்து விட்டார். சர்வதேச தமிழ் தேசிய  புலிசார்பு  புலி சக்திகளின் இதற்கான ஒரு நடவடிக்கையாகவே 1988  ஏப்ரல் இறுதி நாளிலும் மே முதலாம் நாளும் சர்வதேச தமிழ் மாநாட்டை ( International Tamil conference)  "தமிழ் தேசிய போராட்டமும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தமும்" ( Tamil National struggle and Indo-Lanka Peace Accord)  என்ற தலைப்பில்   உலகத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பினூடாக இலண்டனில் நடத்தினர். இந்த மாநாட்டில்தான்  பிரபாகரன் தமிழ் தேசத்தின் உண்மையான தலைவர் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது , அக்கூட்ட பிரேரணைகள் ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை நாடுகளுக்கும் அனுப்ப பட்டது. பாலஸ்தீனிய தலைவர் யாசீர் அரபாத்தை எவ்வாறு பாலஸ்தீனிய மக்களின் தலைவராக சர்வதேச அங்கீகாரம் பெற முடிந்ததோ அதன் மூலம் ஐக்கிய நாடுகள் அவையில் அமர முடிந்ததோ அதனை பிரபாகரனை கொண்டு  செய்ய முயன்றனர். ஆனால் பிறக்கும் பொது முடம் பேய்க்கு பார்த்து தீருமாஎனபது போல் பிரபாகரன் தனது கட்டுக்கடங்காத பயங்கரவாதத்தை தனது அறிவுசீவிகளின் ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றினார்.  


முஸ்லிம்களின் பாதுகாப்பும் இயல்பான சமாதான சகவாழ்வுக்கான அவர்களின் நடைமுறை வாழ்க்கை ஓட்டமும் தமிழ் ஆயத இயக்கங்களினதும் இந்திய படையினரினதும் நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. "இந்நூற்றாண்டின் மிகப்பெரிய ஒப்பந்தம்" என்று ராஜீவ் காந்தி பெருமிதமாக சிலாகித்த கூறிய இவ் வொப்பந்தம் சகல மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக இவ்வொப்பந்தத்தின் இரண்டாம் பிரிவின் பதினாறாம் உப பிரிவு (உ) பின்வருமாறு கூறியது. " வடக்கு கிழக்கு மாகாணங் களில் வாழும் அனைத்து இனங்களினதும் உடல் சொத்து , ஆகியவற்றின் பாதுகாப்பையும் காப்பையும் உறுதிப்படுத்துவதில் இந்திய இலங்கை அரசாங்கங்கள் ஒத்துழைக்கும் " . மேலும் அவ்வொப்பந்த அனுபந்தம் (II) பிரிவு  (7)  வடக்கிலும் கிழக்கிலும் உள்ள எல்லா சமூகத்தினர்களின் பவுதீக  பாதுகாப்புக்கும் தீங்கின்மைக்கும் இரு அரசாங்கங்களும் உறுதியளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் நடந்தது என்ன என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. வடகிழக்கு மாகான சபையின் ஸ்தாபிதத்துடன் முழு சமூகத்தினை சேர்ந்த மக்களுக்கும் இந்திய ஆக்கிரமிப்பு படைகளினதும் அதன் கூலிப்படைகளினதும்  அடாவடித்தனங்கள் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது அத்துமீறல்களை அவிழ்த்துவிட்ட புலிகளின் அடாவடித்தனங்கள் என இரு வேறுபட்ட அடக்குமுறைகளுக்கு பல சமூகங்களும் ஆளாகின என்பது வரலாறு. ( இக்கட்டுரையில்  நான் அன்றைய (1987/1988) கால கட்டத்தில் எழுதிய ஆனால் பிரசுரிக்கப்படாத குறிப்புக்கள் பல இப்போது தூசு தட்டி மீண்டும் எழுதவேண்டிய அல்லது பிரசுரிக்க வேண்டிய தேவையினை அல்லது வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளன ) . இந்திய ஒப்பந்தம் இந்திய அமைதி காக்கும் படையினரின் அடாவடித்தனங்கள் பற்றி முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடும் முஸ்லிம் மக்களின் துயர் களைவதற்கு பெரிதும் துணை புரியவில்லை . இது பற்றி நான் முன்னரே எழுதியுள்ளேன் என்பதால் விரிவாக எழுதவேண்டிய தேவை இல்லை. மொத்தத்தில்  ஜனநாயக அரசியலில் ஈடுபட்ட  கட்சிகள் யாவும் அந்த கால கட்டத்தில் வட கிழக்கில் பல உயிர் புலிகளை கொடுத்தனர். அப்பலிகளும் அக்கட்சிகளின் அரசியல் பிரச்சாரத்துக்கும் திரட்சிக்கும் துணை புரிந்தன. !! 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...