ரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Political assassination)


எஸ். எம். எம். பஷீர்

( 84 இதழ் 25 உயிர்நிழல்  ஒக்டோபர் - டிசம்பர் 2006)

அரசியற்படுகொலைகள் என்பது கீழைத்தேய வரலாற்றிலும் புதியதல்ல. சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் அரசாட்சியின் ஒரு தவிர்க்கவொண்ணா உபாயமாக அரசியற்படுகொலை -சதிக்கொலை - குறித்து நியாயம் கற்பிப்பதனைக் கடந்து ஈராயிரம் வருடங்களுக்கு மேல் சென்றுவிட்டபோதும் ஜனநாயக விழுமியங்கள் உலகின் சட்டவாட்சியின் (Rule of Law )
அம்சங்களாக இன்று உறுதிப்படுத்தப்பட்டும் அவற்றிற்கெதிரான மீறல்கள் தண்டிக்கப்பட வேண்டியதாக அடையாளப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் பல சதிக்கொலைகள் இன்னும் உலகின் ஏதோ ஒரு பாகத்தில் இடம்பெறுவது சர்வ சாதாரணமாகும். இலங்கையில் ரவிராஜின் படுகொலை இடம்பெற்ற கால கட்டத்தில் லெபனானிலும் ரஷ்யாவிலும் இடம்பெற்ற அரசியல் வாதியினதும் பத்திரிகையாளியினதும் கொலைகள் அவற்றின்மீதான தீர்க்கமற்ற விசாரங்கள் பின்னணி குறித்த ஊகங்களாக முடிவுற்றது. துரதிர்ஷ்டவசமானவையே. நீண்ட காலத்தில் குற்றவாளிகள்போல் இழப்புக்களும் மறைந்தும் மறந்தும் போய்விடுகின்றன.


ஆயினும் ரவிராஜின் மகளின் ஆதங்கம் எனது மனதை உலுக்கிற்று. உலகம் மறந்துவிடும். ஆனால், அந்தக்குழந்தைகள் தங்களது தந்தையை இழந்துவிட்டமை மறக்கப்படாது. இந்தக் குரலின் விளைவே எனது இந்த வெளிப்பாடு. மாற்றுக் கருத்து, பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை என சுதந்திர வெளிப்பாடுகள் அடிப்படை உரிமைகளாக அரசியற் செயற்பாடுகளின் மூலாதாரங்களாகவும் இருக்கின்றமையால் அரசியல் செயற்பாடு சார்ந்த தனிமனித சதிக்கொலை நேரெதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாகப் பார்க்கப்படுகின்றது.
எனினும் ரவிராஜின் சதிக்கொலை இலங்கையின் ஜனநாயக அரசியற் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவையை மீண்டும் ஏற்படுத்துகின்ற அண்மைக்கால சம்பவமாகும். இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான பவுத்த தீவிரவாத அரசியற் படுகொலையான சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபகர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் படுகொலையுடன் தொடக்கி வைக்கப்பட்ட அரசியற் படுகொலை இன்று சர்வசாதாரண நிகழ்வாக இலங்கையில் மாறிப் போய்விட்டது. குறிப்பாக, சமாதான காலத்திலும் யுத்தகாலத்திலும் எனத் தமிழர் தீவிரவாத போராட்ம் தொடங்கிய காலம் முதல் இன்றுவரைநூற்றுக் கணக்கான அரசியற்படுகொலைகள். பல்வேறு நாமகரணங்களுடன் நியாயங்களுடன் அரங்கேறுகின்றன. இந்தப் பின்னணியில், எனது நண்பர் ரவிராஜின் படுகொலை குறித்து நிலவி வரும் பல்வேறு ஊகங்களுக்கு அப்பால், எனது நட்புடன் நான் கண்ட ஒரு மனிதனை நினைவுகூர விரும்புகிறேன்.

நாங்கள் இருவரும் சமகாலத்தில் சட்டக் கல்லூரியில் பயின்றவர்கள். ஒன்றாகப் பலவேளைகளில் தொழில் புரிந்தவர்கள். மாறுபட்ட அரசியற் சிந்தனைகளை ஒருபுறம் வைத்துவிட்டு மனிதர்களாக, நண்பர்களாக பயில, பழக சட்டக் கல்லூரி போன்ற பல்லின சூழலில் பயிற்சி பெற்றவர்கள். பேராதனைப் பல்கலைக்கழகச் சூழலில்கூட தமிழ்த் தேசிய வேறுபாடுகள் தமிழ், சிங்கள மாணவர்களை பரஸ்பரம் சந்தேகிக்கக் காரணமானாலும் சட்டக் கல்லூரி மூவின மக்களை மிக நெருக்கமாக தர்மத்தின் சட்டத்தின் காலங்களாக செயற்படுகின்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும் ஒரு நல்ல அனுபவ கல்விக்கூடமாக திகழ்ந்தது. முதல் முதலில் நானும் ரவிராஜும் சட்டத்தரணிகளாக தொழிற்படத் தொடங்கியபோது பிரபல குற்றவியல் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. ஆர். ஈ. தம்பிரட்ணம் அவர்களுடன் கூடவே நாங்கள் இலங்கை ஏர்லங்கா விமானக் குண்டுவெடிப்பு ஸ்தலத்தில் 1988ம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான காலங்கள் மிகவும் பசுமையானது. பின்னர் கொழும்பிலே ரவிராஜ்அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்ற பின்பும் நானும்ரவியும் நட்பைப் பேணியதால் பல தடவைகளில் ரவிராஜ்கொழும்பில் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களின்விடுதலை தொடர்பாக என்னைப் பரிந்துரைத்ததுண்டு.

நான் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் எமது நட்பு கெட்டியாக இருந்தது. நான் இலண்டனுக்கு வந்த பின்னர் தொடர்பற்றுப் போய்விட்டோம். ரவிராஜ் இலங்
கையில் தனது ஆரம்பகால சட்டத்தரணி வாழ்க்கை யில் தமிழ் மனித உரிமை சம்பந்தமாக சேவியர் (சட்டத்தரணி) நிறுவிய மனித உரிமை நடவடிக்கை
களுடன் தொடர்புற்றிருந்தார். மறுபுறம் நான் LHRD (lawyers for Human Rigths and Development) எனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான சட்ட வாதிகளின் ஸ்தாபனத்துடன் செயற்பட்டு வந்தேன்.
பொதுவாக அரசியற் கருத்துரீதியாக எங்களுக்குள் வேறுபாடு இருந்தது. குறிப்பாக, வடமாகாண முஸ்லிம் களின் வெளியேற்றம் குறித்து புலிகளை நோகத் தயாராக ரவிராஜ் இருக்கவில்லை. மேலும் புலிகளின் ஜனநாயக மறுப்பினை ஆதரித்தார். ஆயினும் அவர் நாகரிகமான விவாதங்களை மேற்கொள்பவராகக் காணப்பட்டார். காட்டமாக எமக்குள் கருத்துப் பரிமாற்றல்கள் இடம்பெற்றாலும் நல்ல நட்பு எமக்குள் எப்போதும் நிலவியது. அதிகமதிகமாக ஆதாரங்களுடன் கதைத்தால் சிலவேளை மௌனமாகி வேறு தடத்திற்குத் திரும்பி நட்புடன் தனிப்பட்ட விடயங்கள் குறித்து கருத்துகள் பரிமாற முனைவார்.

1990களின் ஆரம்பத்தில் நான் இலண்டன் வந்து சில வருடங்களின் பின்னர் புலிகள் ரவிராஜினைத் தண்டிக்கவுள்ளார்கள்! என்று ஒரு முக்கியமான எனது
நண்பர் கூறியபோது நான் அதிர்ச்சியடைந்தேன் எனினும் துரதிர்ஷ்ட வசமாக என்னிடம் அவருடைய புதிய தொலைபேசி இலக்கங்கள் இருக்கவில்லை
என்பதுடன் ஏனைய நண்பர்களின் தொடர்புகளில் இருந்தும் நான் விடுவிக்கப்பட்டிருந்தேன். ஆனால் மனதில் ஒரு பயமும் துக்கமும் இருந்தது. பின்னர் ரவிராஜ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான பின் அவரது உத்வேகமான பேச்சு, செயற்பாடுகள் கவனத்தை ஈர்த்தன. ரவிராஜ் எப்படி இருக்கிறான் என ஒரு தடவை  ஹக்கீமைகூட (சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்) சில வருடங்களுக்கு முன் இலண்டனில் கேட்டேன்.

திடீரென்று இந்த வருடம் (2006) செப்டெம்பர் மாதத்தில் எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தபோது 'மச்சான்... ரவிராஜ் என்னடா? ' பழைய சிநேகிதத்துடன் உரையாடல்கள். பின்னர் அரசியல் குறித்த கருத்தாடல்கள். நான் கதைக்கவில்லை. அவர்(ன்)தான் கதைத்தான். ஒரு கம்பியினையும் இருபுறமும் திருக நடுவில் முறிந்து விடும். அதுபோல்தான் இன்று முறிந்து விட்டது. (பலப்பரீட்சை தோல்வி) சமாதானம்தான் ஒரேவழி என்பதை வலியுறுத்தினான். J,V.P யும் JHU ம்தான் இன்று பிரபாகரன் இருப்பதற்குக் காரணம் என்றுகூடச் சொல்லி வைத்தான். மறுபுறம், 'பார்த்தாயா இந்தியாவை? தமிழர் தேசியக் கூட்டமைப்பை இந்தியப்
பிரதமர் சந்திக்கப் போகிறார். இந்தியா இறங்கி வருகிறது' என்றெல்லாம் குறிப்பிட்டான். முழுமையாக அரசியல் தெளிவு ஏற்படும் நாள் தொலைவில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். மனம் திறந்து கதைத்தான். தனது எல்லாத் தொலைபேசி இலக்கங்களையும் தந்தான். கொழும்பு வந்தால் தவறாமல் சந்திக்கும்படி ஏசிக் கட்டளையிட்டான். தனது நீண்ட பரந்த விடுமுறை  குறித்தும் சிலாகித்தான். துரதிர்ஷ்டவசமாக இருவருக்கும் நேரம் போதாததால் நேரில் கதைக்க நாளில்லாது போய்விட்டது.
ஊருக்குப்போய் பிரபாகரனின் குழந்தைகளை தாயகக் குழந்தைகளுடன் ஒப்பிட்டுக் கதைக்கிறான்.

ஏன் அவனைச் சந்திக்காமல் விட்டேன்? யாரையேனும் பிறகு சந்திக்கலாம் என்று பிற்போட்டு விடாதே என்று எனக்கும் உங்களுக்கும் சொல்லிக் கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள்மறுக்கப்படுகின்ற சூழல் ஒருபுறம் ஜனநாயகத்தின் குரல்கள் நெரிக்கப்படுகின்ற சூழல் இன்னும் ஒரு புறம் எத்தனை பேரை பலிகொள்ளப் போகிறது? ரவிராஜ் குறுகிய கால அரசியல் வரலாற்றில் நீண்ட பதிவுகளை மாறுபட்ட அரசியல் முகாமிலிருந்தாயினும் விட்டுச் சென்றுள்ளார்.

http://www.uyirnizhal.com/uyir25-web/page84-85.pdf

No comments:

Post a Comment

UK Health Secretary “wilfully negligent” for ignoring warnings that pandemic is overwhelming National Health Service- by Tony Robson

In his Downing Street press briefing Wednesday, Conservative Health Secretary Sajid Javid dismissed warnings made by health professionals th...