மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் – 14




.                                                    எஸ்.எம்.எம்.பஷீர்



நான் முன்னர் குறிப்பிட்டதுபோல்  வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் மக்களின் ஆணையைப் பெறும் முயற்சியில் கிழக்கில் முதல் முஸ்லிம் கட்சியான முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை உள்வாங்கி அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்ட சம்சுதீன்- அஸ்ரபின் “முஸ்லிம் ஐக்கிய முன்னணி”யின் முக்கிய பிரச்சாரகரான அஸ்ரப் ஒருபுறம்; தமிழர் கூட்டணியின் மூதூர் சட்டத்தரணி மஹரூப் மறுபுறம் என தனிநாட்டுப் பிரச்சாரங்கள் அன்றைய அரசியலில் முன்னேடுக்கப்பட்டன. எல்லோராலும் அறியப்பட்ட அஸ்ரபின் ” அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் அடையாவிட்டால் தம்பி நான் தமிழ் ஈழம் அடைவேன்” என்ற முழக்கமும் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப்பெறவில்லை அதனால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மட்டுமல்ல அதற்கு ஒத்தூதிய முஸ்லிம் தலைமைகளையும் கிழக்கு முஸ்லிம்கள் நிர்த்தாட்சண்யமாக நிராகரித்தனர்.


இந்தக்கால கட்டத்தில்தான் முக்கியமாக முதன்முதலாக கிழக்கில் வேறு ஒரு அரசியலும் அரங்கேறியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1977 பொதுத் தேர்தலின் போது முன்னாள் கல்வி அமைச்சரான மறைந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூது அவர்களின் தேர்தல் மேடைகளை அலங்கரித்த அன்றய பிரபல அரசியல் பேச்சாளரான காத்தன்குடியை சேர்ந்த ரசூல் ஆசிரியர்
கிழக்கிலே ஒரு புதிய அரசியல் கோசத்தை காரணகாரியமின்றி எதுகை மோனையாய் முஸ்லிம்களை கவருவதற்காக முன்வைத்தார். அதுதான் ” அடைந்தால் கிழக்கிஸ்தான் அடையாவிட்டால் கபுரிஸ்தான்” அதாவது முஸ்லிம்களுக்கு என ஒரு தேசமாக “கிழக்கிஸ்தான்” அடையப்பட வேண்டும்; அவ்வாறு அடையாவிட்டால் அடக்கஸ்தலத்தை அடையவேண்டும். ( மரணம் அடையவேண்டும்). இதே காலகட்டத்தில் தான் அஸ்ரப் அவர்களின் தமிழ் ஈழ தனினாட்டுக் கோசமும் அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுள்ள மாவட்டத்தில்) எதிர் எதிராக ஒலித்தது.
மெதுவாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அஸ்ரப்பை ஓரங்கட்டும் தொடர் செயற்பாபாடுகள் காரணமாக அஸ்ரப் தமது கூட்டணியை முறித்துக்கொண்டதுடன் கிழக்கில் முஸ்லிம்களின் முதல் முஸ்லிம் அரசியல்  கட்சியாக பரிணமித்த முஸ்லிம் ஐக்கிய முன்னணி விலாசம் இழ்ந்து போனது. மெதுமெதுவாக கிழக்கின் தமிழ் தலைமைகளும் தமிழர் விடுதலை கூட்டனியிலேருந்து வெளியேறினர். கூட்டணியினரின் யாழ் மேலாதிக்க கெடுபிடிகள் தாங்காமல்தான் மட்டுநகரின் முடிசூடா மன்னன் என அழைக்கப்பட்ட சொல்லின் செல்வன் சி. ராஜதுரை அவர்களும் பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினரான கனகரெத்தினம் அவர்களும் (1977) தேர்தலின் பின்னர் ஐ.தே.கட்சியில் இணையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.
இக்கால கட்டத்தில் யாழ் மேலாதிக்க தமிழர் கூட்டணியின் தேசியவாத அரசியலை எதிர்த்து நின்ற இன்னுமொரு முக்கிய அரசியல்வாதிதான் ராஜன் செல்வநாயகம் இவரின் பூர்வீகம் ராஜதுரையை போலவே யாழ்ப்பாணம்தான். ராஜதுரையின் தந்தை சுருட்டுச் சுத்தும் தொழில் புரிபராக மட்டக்களப்புக்கு வந்தவர்;பின்னயவரின் தந்தை வியாபாரியாக வந்தவர்) எனினும் தங்களின் இளமைக்காலத்தை கிழக்கிலே கழித்ததால் தங்களை கிழக்கை சேர்ந்தவர்களாகவே நினைத்து செயற்பட்டவர்கள். கிழக்கு மக்களாலும் கிழக்கு  பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள்.
இளமையில் இராஜதுரை பகுத்தறிவு (திராவிட கழக) அமைப்பில் மட்டக்களப்பில் அங்கத்துவம் வகித்து தீவிரமாக செயற்பட்டவர்; பிற்காலத்தில் சாய் பாபாவின் பக்தனாகவும் இந்து கலாச்சார அமைச்சராகவும்  பதவி வகிக்த்தவர் . ராஜன் செல்வநாயகம் அன்று நிர்வாகத்தில் உயர் பதவி வகித்த யாழ் அரச அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து யாழ் எதிர்ப்புவாதிய அடையாளம் காணப்பட்டவர். விளிம்புநிலை மக்களின் விருப்பத்திற்குரியவ்ராக விளங்கியவர். மறுபுறத்தில் ராஜதுரையும் சாமான்ய மக்களின் மதிப்பை பெற்றவர்.
தனக்கு தெரிந்தவர்களை என்றுமே இலகுவாக அடையாளம் கண்டு பழகுபவர். இவர்கள் இருவரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் செயற்பாடு குறித்த விமர்சனங்களை இங்கு நான் வைக்கவில்லை; அது எனது கட்டுரையின் நோக்கமுமல்ல. அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எதிப்பினை மட்டக்களப்பில் ராஜன் செல்வநாயகமும்; கல்குடாவில் முன்னாள் அமைச்சர் தேவனாயகமும் மாறுபட்ட தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளாக முன்னெடுத்தவர்கள்.
குறிப்பு – 1976ம் ஆண்டு மே மாதம் 14 ந் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் அமைப்பு திரு அமிர்தலிங்கம் அவர்களின் பிறப்பிடமான பன்னாகத்தில் உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பின் உருவாக்கத்தின்போது அன்றைய கல்குடா பிரதிநிதியான ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு எஸ்.டபிள்யூ தேவநாயகம் அவர்களும் அக்கருத்தரங்கில் பங்குகொண்டிருந்தார். அன்று உருவாக்கப்பட்ட த.வி.கூட்டணி வடகிழக்கிலும் மலையகத்திலுமுள்ள தமிழ் அரசியல்வாதிகளை ஒன்றிணைக்கும் கருத்தரங்காகவே தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவ்வமைப்பு தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்தமையினால் எற்கனவே அவ்வமைப்பில் அங்கம்வகித்த திரு தேவநாயகம் மற்றும் எஸ் தொண்டமான் ஆகியோர் அமைப்பைவிட்டு வெளியேறினர். இந்நிலையில் தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து த.வி.கூட்டணியினரால் நடாத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் பினஇவருமாறு அமைந்தன.
வட மாகாணத்தில் ஆதரவாக  41% மானவர்களும்
கிழக்கு மாகாணத்தில் ஆதரவாக 26% மானவர்களும் வாக்களித்திருந்தனர்.
மேலதிக விபரங்கள் அறிவதற்கு (S.J Tambiah அவர்களால் எழுதிய Srilanka Ethinic Fratricide And The Dismantling of Democracy) என்னும் நூலினை வாசிக்கவும்.
(குறிப்பு: இக்கட்டுரைத தொடரினை தொடர்வதற்கு எனக்கு தொலைபேசி ஈ-மெயில் நேரடிச்சந்திப்பின் மூலமும் ஊக்கமளிக்கும் வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இக்கட்டுரையினை ஆங்கிலத்தில் எழுதுமாறும் முக்கியமான எனது பத்திரிகையாளரான நண்பரின் வேண்டுகோளும் என்னை இக்கட்டுரையினை தொடர தூண்டுதலாக அமைந்தது..இங்கு ஆங்கிலத்தில் நான் முன்னரே எழுதிய கட்டுரைகளிலுள்ள பல சம்பவங்களை -விடயங்கள்- தமிழில் மீண்டும் எழுதப்படவேண்டி நேரிட்டுள்ளது. ஆகவே சொன்னதை மீண்டும் சொல்லலாக அவை (தமிழில் மட்டுமே வாசிக்கும் அல்லது வாசிக்கக்கூடியவர்களுக்கு) அமையாது என்று நம்புகிறேன்.) ….தொடரும்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...