கற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்

                                                                      எஸ்.எம்.எம்.பஷீர்

“தேடி சோறு நிதம் தின்று,
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி 
மனம்வாடி துன்பம் மிக உழன்று, 
பிறர்வாட பல செயல்கள் செய்து 
நரைகூடி கிழப் பருவம் எய்தி 
கொடும்கூற்றுக்கு இரையென மாயும் 
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?” 
                                                                             -சுப்ரமணிய பாரதி-

சென்ற வாரம் நான் கற்றறிந்த பாடங்களும் மீளினக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியத்தின் ஒரு எடுபகுதி -லங்காமுஸ்லிம் உட்பட- சில இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டவுடன் ஐக்கிய ராச்சியத்தில் இயங்கும் டி.பீ.சீ எனும் வானொலியில் முழங்கும் பிரசங்கிகளான புளட் ஜெகநாதனும், ஈ.என்.தீ.எல்.எப் ராமராஜனும் கொதித்தெழுந்து வரிந்து கண்ட்டிக்கொண்டு தாங்கள் நீண்ட காலமாக என்மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியை கக்கினார்கள் அதன் விளைவாகவே இதனை எழுத வேண்டி நேரிட்டது.

 
பசுத்தோல் போர்த்திய புலிகள் எப்படி இருப்பார்கள் என்பதனை உணரும் விதத்தில் தான் புளட் , ஈ.என்.தீ எல்.எப் இயக்கத்தினர் இப்போது செயற்படுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. எனது நண்பர் என்னை 16ம திகதி ஞாயிறு மாலை தொடர்பு கொண்டு தாம் தூம் என்று “ஜனநாயகவாதிகள்” இருவர் வானொலியில் உங்கள் மீது வசை பாடி குதிக்கிறார்கள் என்று கூறினார். டி.பீ சீ வானொலியில் என்னப்பற்றி அரசியல் “ஆய்வாளர்” ஜேர்மனியில் வாழும் ஜெகநாதன் என்பவர் பேசுவதாக , மன்னிக்கவும் ஏசுவதாக கூறினார். ஆம் , அதனை கேட்டேன் அந்த ஏசுதலின் முடிவில் டி.பீ.சீ. வானொலி இயக்குனர் ராமராஜன் வேறு தனது பங்கிற்கு என்னைபற்றி தனது அறிவுத்திறன்மிகு அப்பிபிராயத்தையும் கூறி வைத்தார். இவர்களை பற்றி பெரிதாக எழுதுமளவுக்கு இவர்கள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அல்ல. ஆனால் இவர்கள் இருவரும் என்மீது சாட்டிய குற்றச்சாட்டுக்கள் பற்றி நான் மௌனித்திருக்கவும் முடியாது. யாழ் முஸ்லிம் வெளியேற்றம் பற்றி கூறி தாங்கள் -புளட் இயக்கத்தினர்- வட மாகான முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் போது குரல் கொடுத்ததாக அவர்களுக்கு வவுனியாவில் உதவிகள் புரிந்ததாக கூறி , அதுபற்றி அறியாத ஒருவர் (நான்) , அரச கூலிப்படைகளாக செயற்பட்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் பற்றியும் , அவர்களிடமிருந்து அண்மையில் கூட ஆயுதங்கள் பறிக்கப்பட்டன என்றும் கூறி அவை பற்றி எனது சாட்சியத்தில் கூறாது நான் வரலாற்றை திரிவு படுத்தி விட்டேன் என்றும் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்குள் உள்ள இனவாதிகளின் கருத்துக்களை வெளிப்படுத்துகிறவராக நான் செயற்படுகிறேன் என்று குற்றம் சாட்டினார்.


இவ்விரு ஜனநாயக பிரசங்கிகளுக்கு சொல்லவிரும்பும் செய்தி என்னவென்றால் நான் இலங்கையில் நடைபெற்று வரும் மீளிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க சென்றது இலண்டன் முஸ்லிம் தகவல் மையத்தின் சார்பாகவே ஒழிய டி.பீ.சீ யின் (T.B.C ) சார்பாகவோ, புளட் ஜனநாயக பிரசங்கி ஜெகநாதனின் சார்பாகவோ அல்லது ஈ.என்.தீ எல்.எப் ராமராஜனின் சார்பாகவோ அல்ல. எனக்கும் அவர்களுக்கும் நான் டி.பீ.சீ வானொலியில் சில காலம் அரசியல் ஆய்வு நிகழ்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்பது தவிர வேறு எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களின் இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது நடத்திய அடாவடித்தனங்களை தொட்டுக் காட்டியதற்காக தண்ணீரை விட ரத்தம் தடிப்பானது என்று சகோதர உறவை (Blood is thicker than water) வலியுறுத்துமாற்போல் இருவரும் ஒன்றாகி தங்களின் நெடு நாள் கோபத்தை படு காட்டமாகவே என்மீது காட்டியிருக்கிறார்கள். அவ்வாறே இருவரும தங்களின் சகோதர இயக்க வாஞ்சையுடன் என்னை தாக்கி இருக்கிறார்கள். இவர்கள் முடியுமானால் அதே ஆணைக்குழுவுக்கு சென்று பஷீர் இன்னின்ன விடயங்களை பிழையாக சொல்லிவிட்டார் , வரலாற்றை “திரிபு” படுத்திவிட்டார், இவர் ஒரு இனவாதி என்றெல்லாம் வானொலியில் சொல்வதைவிட்டு அல்லது அதற்கும் மேலாக நேரில் சென்று ஆணைக்குழுவில் போய் சாட்சி சொல்ல வேண்டியதுதானே. அல்லது அவர்களின் தலைவர்களான சித்தார்தனோ அல்லது பரந்தன் ராஜனோ சென்று தங்களின் மறுப்பு சாட்சியத்தை சொல்ல வேண்டியதுதானே. அதை விடுத்து ஏதோ என்மீதுள்ள காழ்புனர்ச்சியின் வெளிப்பாடாக அண்மைக்காலமாக நான் இனவாதமாக செயற்படுவதாக குற்றம் சாட்டி என்மீது சேறு பூச விளையும் இவர்களின் செயல் புலிகளின் சேறு பூசும் செயலுக்கு சற்றும் குறைந்ததல்ல. இதற்கான காரணம் இவர்கள் யாவரும் ஒரே குட்டையில் (ஆயுத இயக்கத்தில் ) ஊறிய மட்டைகளே. அதிலும் இவர்கள் சார்ந்திருக்கும் இவ்விரு இயக்கங்களும் தாய் சேய் உறவு நிலை இயக்கங்கள் தான் என்பதும் ஒரு காரணமாக விருக்கலாம். ஒரு வேளை ஒரு படி மேலே சென்று இவர்கள் பிரபாகரனோடு இயக்கம் தொடக்கிய மூல உறவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எது எப்படியிருப்பினும எனது சாட்சியம் எனது சமூகத்தின்பால் எனக்குள்ள அக்கறையுடன் நான் அவதானித்த விடயங்களை குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நான் வாழ்ந்த காலத்தில் மாட்டுமல்ல (1992 நடுப்பகுதிவரை ) பின்னர் புலம் பெயர்ந்தும் நான் அவதானித்த சேகரித்த தகவல்களை (ஜெகநாதன் அவதானித்த அல்லது கருதும் விடயங்களை அல்ல) கொண்டமைந்திருந்தது. அது தொடர்பில் இலங்கை முஸ்லிம் வாசகர்கள் உலகின் சகல பாகங்களிலிமிருந்தும் தங்களின் ஆதரவை நன்றியை மின்னஞ்சல் மூலம் எனக்கு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் நான் எனது அவதானத்தை எனது சமூகத்தின் பால் நான் சொல்ல வேண்டிய விடயங்களில் எனக்கு கிடைத்த நேரத்துள் சொல்லியுள்ளேன் என்ற திருப்தியும் எனக்குண்டு. சொல்லாமல் விட்டவை வரலாற்று திரிபாகாது என்பதுடன் சொல்ல வேண்டியவை எனது சொந்த நிலைப்பாடு என்பதுடன் அதில் தலையிட, கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை. பிழையாக சொல்லியது என்பது சொல்லிய விடயத்தில் தான் கூறமுடியுமே ஒழிய நான் கூறாதுவிட்ட விடயத்தில் பிழை செய்து விட்டதாக கூற முடியாது. ஜெகநாதன் விரும்பும் வரலாற்றை அல்லது ராமராஜன் விரும்புவதை சொல்ல அல்லது வேறு யாரும் விரும்புவதை சொல்ல நான் ஒன்றும் யாரினதும் பேச்சாளர் அல்ல . நான் தனித்துவமான சுயாதீனமான கருத்துக்களை கொண்ட ஒரு சுதந்திர மனிதன்; முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவன், யாரினதும் தயவிலோ அல்லது சர்வதேச அல்லது இலங்கை அரசின் அல்லது உள்நாட்டு நிதி மூலங்கள் பெற்று ” நக்குண்டு நாவிழந்து” வாழ்ந்த வாழும் மனிதனல்ல. கிழக்கை பூர்விகமாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் கிழக்கு மக்களின் அரசியலை அறிந்தவன் அவர்களோடு அரசியல் செய்தவன். அங்கு இயக்கங்களால் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கொடூரங்களை நேரில் கண்டவன் அவைகளை எங்கள் வரலாற்று பதிவுக்காக சேகரித்தவன். மனித உரிமை தொடர்பான சாவதேச மனித உரிமை நிறுவங்களுக்கு சுமார் இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் மீதான சகலரின் உரிமை மறுப்புக்களையும் கொண்டு சென்றவன்.

கொழும்பிலும் சர்வதேச உள்நாட்டு மனித உரிமை ஸ்தாபணங்களுடன் பணியாளர்களுடன் 1988 தொடக்கம் 1990 மத்திய பகுதி வரை அவ்வாறான தகவல்களை பரிமாறியவன். இன்றுவரை அதையே செய்தும் வருபவன். இவை யாவையும் எனது சொந்த செலவிலேய அன்றிலிருந்து இன்றுவரை செய்து வருபவன். காசு கிடைக்கும் பக்கம் ஜனநாயகம் கண்டு பேசுபவன் நானில்லை.எனது மனச்சான்றுக்கு எது சரி என்று படுகிறதோ அதையே திரிகரண சுத்தியுடன் செய்பவன். டி.பீ சீ யில் அவர்கள் என்மீது தவறுகளை கண்டு (அறிக்கையில் உள்ள) அதற்கு பதில் முன்வைக்க வரவேண்டும் என்று கூற இவர்களுக்கு யோக்கியதை இல்லை என்பது இன்னொருபுறமிருக்க என்ன இவர்களுக்கு  உரிமை உண்டு.

நான் சொல்லாதவை சொல்லப்படாத விபரங்களே ஒழியே (அதாவது புளட் யாழ் முஸ்லிம்களுக்கு உதவி செய்தது வவுனியாவில் உணவளித்து பராமரித்தது , முஸ்லிம் ஆயுதப்படையினர் தமிழர்களை கொன்றனர் என்று ஜெகநாதன் கூறும் கதையாடலை) கூறாது விட்டால் எவ்வாறு முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைத்ததாகும், எவ்வாறு வரலாற்று திரிபாகும். கிழக்கில் முதன் முதலில் முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்திய, புலிகளுக்கும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை நடத்தி முன்னுதாரணமாக திகழ்ந்த புளட் பற்றி நான் விலாவாரியாக கூறாமல் விட்டது இப்போது தப்பாக போய் விட்டது போல் தோன்றுகிறது . வரலாற்றை இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம் தமிழ் ஆயத காட்டுமிராண்டிகளின் அடக்குமுறைகளை ஆதாரத்துடன் கூறியிருக்கலாம். எது எவ்வாறிருப்பினும் சாட்சியம் சொன்னது நான் , நானேதான் . அது எனது சாட்சியம் தேவையென்றால் உங்களின் சாட்சியங்களை போய் பதிவு செயுங்கள் ஐயா!

ஜனநாயக காவலர் ஜெகநாதன் குறிப்பாக நான் ஸ்டுட் கார்ட் புலம் பெயர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று விடாப்பிடியாக அக்கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் அடம் பிடித்தவர். ஆனால் ஜனநாயகம் என்று மேடை போட்டு வானொலி ஏறி கத்தாத சிலர் தான் என்னை ஜனநாயக ஜெகநாதனின் அதிருப்தியை பொருட்படுத்தாது அங்கு என்னை வரப்பன்னினார்கள். எனக்கு கூலிக்கு மாரடித்து தெரியாது. மாரடிக்கவும் மாட்டேன். அதே மாநாட்டு முடிவில் டி பீ சீ ராமராஜன் எனக்கு தனிப்பட்ட நிகழ்சி ஒழுங்கு பண்ணித்தருகிறேன் என்று வேண்டுகோள் விடுத்த போது நான் மறுத்தது ஒரு புறமிருக்க ராமராஜனுக்கு நான் இனவாதி ஜெகநாதனின் தரப்பு புளொட் யாழ்ப்பான மக்கள் மீது காட்டிய “அன்பு” பற்றி அறிந்திராதவர் என்று தெரியவில்லையா. எனக்கு இன்னும் அவர்கள் பற்றி அதிகம் தெரிந்ததை அறிந்ததை எழுதி எனது பெறுமதியான நேரத்தினை   நான் வீணாக்க விரும்பவில்லை.

ஏற்கனவே நாங்கள் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று புலம் பெயர் சமூகப்பிரதிநிதிகளாக இலங்கை சென்றபோது எங்கள் மீது தாராளமாக சேறு பூசியவர்தான் ஜெகநாதன் ஆனால் அவர் பின்னர் அவ்வாறே அரச அழைப்பாளியாக சென்றார் என்பது மட்டுமல்ல அந்த குழுவில் முஸ்லிம்கள் யாரும் அழைத்து செல்லப்படவில்லை என்பதுடன் அரசு தமிழர்களுடன் மட்டும் தான் பேசப்போவதாக கூறி சென்றார்கள். இதில் உள்ள அரசியலை புரிந்து கொண்டாலும் உண்மை இன்னமும் தெரியவில்லை. இந்த வரலாற்று அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன் திம்பு பேச்சுவார்த்தையில் ஒரு முஸ்லிம் ஒருவர் கலந்து கொண்டார் என்று குறிப்பிட்டு தாங்கள் முஸ்லிம்களையும் அவர்களின் தனித்துவம் கருதி அவர்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து நடத்தியது மாதிரி கதைவிடுவது எங்களுக்கு புளித்துப்போன சொல்லாடல்.
ஒரு புளட் உறுப்பினர் என்னிடம் ரகுமான் ஜான் எனும் புளட் உறுப்பினர்தான் திம்புவுக்கு சென்றார் என்று கூறினார். சரி ஐயா ஜெகநாதனின் வரலாற்றறிவை மலினப்படுத்திவிட முடியாது. 1985 ஆம் திம்பு பேச்சுவார்த்தைக்கு சென்றவர் ஒரு முல்லைத்தீவு முஸ்லிம் அவரின் பெயரை ஜெகநாதன் என்ற புளட் வரலாற்றாளர் குறிப்பிடவில்லை அந்தளவு பெயர் சொல்லக்கூடிய முஸ்லிம் ஆக அவர் இருக்கவில்லை போலும் என்று விட்டுவிடுவோம். சரி அவர் முஸ்லிமாக போகவில்லை ஐயனே அவர் போனது புளட் உறுப்பினராகவே , ஆயுத இயக்கத்தில் நீங்கள் அப்போதெல்லாம் முஸ்லிம்கள் என்று தனித்துவமாக எப்போது குறிப்பிட்டீர்கள் அல்லது நடத்தினீர்கள் என்ற வரலாறும் உங்களுக்கு ” நன்றாக ” தெரியும் ஐயா ஜெகநாதன் அவர்களே.

அதே திம்பு பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களை ஏப்ரலில் கல்முனை சாய்ந்தமருதுவில் பத்தன் தனது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி முடித்த நாலு மாதங்களின் பின்னர் தான் திம்பு பேச்சுவார்த்தையில் ” முஸ்லிம்” ஒருவரை திம்புவில் கூ( கா )ட்டி இன நல்லுறவு செய்தவர்கள் தான் இந்த புளட் ஜனநாயகவாதிகள்
திம்பு பேச்சுவார்தையில் முகவரியற்ற அரசியல் ஆளுமையற்ற கறி வேப்பிலை போல் கண்துடைப்புக்காக ஒரு பெயர் தாங்கி முஸ்லிம் ஒருவரை முல்லைதீவிலிருந்து நீங்கள் கூட்டி சென்றீர்கள் என்பதும் அவர் காப்பு வாத்தியின் மாணவர் என்பதும் நீங்கள் நன்கு அறிந்திருக்காவிட்டால் நாங்கள் அறிவோம் ஐயா ! ( மன்னிக்கவும் யாழ் மேட்டுக்குடி எதிர்பார்க்கும் விளிப்பு சொல்தான் தான் உங்களுக்கும் பொருத்தம் ஐயா!)

புளட் இயக்க அடாவடித்தனம்தான் முதன் முதலில் முஸ்லிம் தமிழ் உறவை சீர்குலைத்தது என்பதை ஜனநாயக ஜெகநாதன் அறிவாரா. முஸ்லிம்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்று பிலாக்கணம் பாடும் புளொட் இயக்க முஸ்லிம் விரோத செயற்பாடு காரணமாகவே முதன் முதலில் சாய்ந்தமருது காரைதீவு கலவரங்கள் உன்னிச்சை வரை நீண்டு பல உயிர்களை காவு கொண்டது என்பதை ஜனநாயக ஜெகநாதன் அறிவாரா?. 1985 ஆம் ஆண்டு சித்தரை மாத முதல் வாரத்தில் சாய்ந்தமருது முஸ்லிம்கள் மீது ஆயுத அட்டகாசம் பண்ணிய புளட் இயக்க மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பொறுப்பாளர் காரைதீவை சேர்ந்த பத்தன் செய்த வன்செயல்கள் பற்றி ஜனநாயக புளட் ஜெகநாதன் அறிவாரா ? அதே வாரத்தில் ஓட்டமாவடி முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருக்கிறார்கள் என்று பொய்யாக பரப்புரை செய்து அவர்கள் எங்களை தாக்கப் போகிறார்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு கருவாக்கேணி தமிழ் மக்களை பொய்யாக பயமுறுத்தி புளட் இயக்க உறுப்பினர்கள் சந்திவெளியை சேர்ந்த பீ.எல் லோ (பாலஸ்தீன இராணுவ பயிற்சிபெற்ற ) மாமா தலைமையில் தக்க முஸ்தீபுகள் மேற்கொண்டு பின்னர் அதை அவ்வியக்க உறுப்பினர்கள் சிலரின் தகுந்த ஆலோசனையில் கைவிட நேர்ந்த சம்பவங்கள் எல்லாம் புளட் ஜனநாயக ஜெகநாதனுக்கு தெரியுமா. முஸ்லிம்களின் தனிப்பட்ட பல சில்லறை வியாபாரிகள் அங்காடிகள் பலரை கடத்தியது பற்றி முஸ்லிம்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டென அங்கீகரிக்கும் ஜனநாயக ஜெகநாதனுக்கு தெரியுமா. அல்லது இன்னமும் விரிவான திகதி மாதம் ஆண்டு சான்றுகளுடன் மேலதிக தகவல்கள் தேவையா. பாலஸ்தீனத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி பெற்று முஸ்லிம் பெயர்களை வேறு வைத்துக்கொண்டு இலகையில் முஸ்லிம்கள் மீது ஆயத பாணியாக அச்சுறுத்தி கலவரங்களுக்கு பிள்ளையார் சுழியை போட்டவர்கள் புளட் என்பது தெரியாவிட்டால் இனியாவது புளட் ஜனநாயக ஜெகநாதன் தெரிந்து கொள்ளட்டும்
சரி ஈ.ஏன்.தீ.எல்.எப் (E.N.D.LF )முஸ்லிம் போலீஸ் காரர்களை இந்திய படை வெளியேறிய போது அழித்ததும் வட கிழக்கு மாகான சபை உறுப்பினர் அலி உதுமானை கொன்றதும் அஸ்ரபின் உயிருக்கு உலைவைக்க துரத்தி கொல்ல முற்பட்டதும் சம்பவங்களாக மட்டுமல்ல சரித்திரங்களாக பதிவாகியிருக்கிறது. ஜனநாயகம் பற்றி நீங்கள் பேசுவது வேடிக்கை தவிர வேறில்லை. நுணலும் தன வாயால் கெடும்.

சரி அது போகட்டும் என்றால் யார் யாருக்கு போதிப்பது என்றில்லாமல் போய் விட்டது. டாக்டர் நரேந்திரன் எழுதிய ” புர்கா அணிந்த நடனக்காரியின் காபரே நடனம்” என்ற கட்டுரை தொடர்பில் நான் திரு நரேந்திரன் அவர்களின் கட்டுரையையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் மத ரீதியில் சிறு சிறு விஷயங்களில் எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்துகிறேன் , இனவாதமாக செயற்படுகிறேன் என்று மெத்த படித்த ராமராஜன் வேறு கருத்து கூறியுள்ளார்.
சென்ற 9 ம திகதி தை 2011 ஆண்டு கொழும்பு ராமகிருஷ்ண மண்டபத்தில் என்னை சந்திக்க விரும்பி சந்தித்த டாக்டர் ராஜசிங்கம் நரேந்திரன் என்னோடு நாட்டு நடப்புக்கள் உட்பட பல தனிப்பட்ட விடயங்களை கதைத்துவிட்டு என்னை அன்புடன் தனது வீட்டுக்கு இராப் போசனத்துக்கு அழைத்தார். ஆனால் அன்று எனக்கு வேறோரிடத்தில் இராப்போசனம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் அவரின் அழைப்பை அன்புடன் மறுக்க வேண்டி நேரிட்டது. அவாறான ஒரு புரிந்துணர்வு அவரிடம் நான் அவரது கட்டுரை பற்றி விமர்சனம் வைத்தபின்பும் அவர் மீது எனக்கும் என்மீது அவருக்கும் ஒரு அறிவு பூர்வமான புரிந்துணர்வும பரஸ்பர மதிப்பும் ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு முக்கிய நபரிடம் எனது தமிழ் இலக்கிய அறிவு பற்றி விதந்துரைத்தமையும் ” கற்றாரை கற்றாரே காமுறுவர்” என்பதை நிருபணம் செய்ததது. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி நான் எழுதியதை தவறென்று அவரும் சொல்ல முடியாது நானும் சொல்ல மாட்டேன் . ஆனால் அதனை புரிந்து கொள்ளாது அப்படியான ஒரு சிறிய சிறிய விடயத்தையும் கூட சரியாக கவனிக்க முடியாமல் நான் பிணங்கி கொண்டதாக எனக்கு விளக்கம் சொல்லும் அறிவும் தகுதியும் ராமராஜனுக்கு யார் கொடுத்ததது. உங்களின் அறிவுத்திறினை வேறு யாரிடமாவது பரீட்சித்துப்பாருங்கள்.
ஏதோ பெயர் முகவரி இல்லாமல் இருந்த ஒருவரை தாங்கள் டி.பீ.சீ மூலம் அறிமுகப்படுத்தி விட்டதாக ராமராஜன் கூறுகிறார். ராமராஜனின் டி.பீ.சீக்கு முன்னர் ஊடகம் என்ற வகையில் நான் பல்கலைக்கழக் காலத்தில் முஸ்லிம் மஜ்லிஸ் பத்திராதிபராக , சட்டக் கல்லூரியில் தமிழ் சங்க உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் , கட்சி பத்திரிகை ஆசிரியராக மேலும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் நிகழ்சியில் சில மாதங்கள் இலக்கிய மஞ்சரியில் கலந்து கொள்வோனாக என்று ஒருபுறமிருக்க இலப்டனில் சன் ரைஸ் ரேடியோ தீபம் டிவி என்று வேறு கலந்து கொண்டது போக எனது சட்ட நிறுவனத்தை கடந்த 19 வருடங்களாக இலண்டனிலே நடத்தி வருபவன். உலகின் பல புலம் பெயர் தமிழ் ஜனநாய அல்லது மாற்றுக் கருத்தாளர்கள் என்று சொல்லப்படும் சக்திகளுடன் சுமார் 15 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடர்புகளை கொண்டிருந்தவன் , பல சர்வதேச கருத்தரங்குகள் ஒன்று கூடல்கள் என்பவற்றில் டி.பீ,சீ அரசியல் கலந்துரையாடல்களுக்கு முன்பு கலந்து கொண்டவன் . எனவே டி. பீ.சீ என்னை மத்திய கிழக்கில் கேட்பதற்கு சந்தர்ப்பம் அளித்தது என்பதைவிட நான் வலிந்து எனது பெறுமதி மிக்க நேரத்தை அதற்காக ஒதுக்கி கொண்டேன் என்பதும் சுமார் ஒரு வருடம் ராமராஜ் கைதியாகி சுவிசில் இருந்த போது வானொலி மூடப்பட்டு விடக் கூடாது , அதில் நடைபெறும் அரசியல் கலந்துரையாடல் நின்றுவிடக்கூடாது என்பதற்காக நானும் ஜெயதேவனும் விவேகானந்தனும் (இப்போது நான் இவர்களுடன் தொடர்புகளை வைத்திருக்கவில்லை என்றாலும் ) பல சிரமங்களுக்கு மத்தியில் அரசியல் கலந்துரையாடல் நடத்தினோம். இதுவெல்லாம் சிறைக்கு சென்ற செம்மல் ராமராஜனுக்காக்கவல்ல மாறாக மாற்றுக் குரல்கள் ஓய்ந்துவிடக் கூடாது என்பதற்காக. நேரத்தை கணக்கிட்டுப் பணம் பண்ணும் தொழிலில் உள்ள ஒருவனான நான் பல மணி நேரத்தை செலவிட்டு பல மைல் தூரம் பிரயாணம் செய்து அந்த குறிப்பாக ஒரு வருடமும் ஒரு கிழமையும் தவறாது கலந்து கொண்டது கூண்டிலே இருந்த ராமராஜனை குஷிப்படுத்தவல்ல என்பதை நேயர்கள் அறிவார்கள். எனக்கு முஸ்லிம் பற்றிய விஷயத்தை டி.பீ சீ. வானொலியூடாக கொண்டு செல்ல முடிந்ததது. அதனால் புலிகள் என்னை தமிழ் முஸ்லிம் மக்களுக்குள் இனக் கலவரத்தை தூண்ட நான் டி.பீ.சீ யில் கதைக்கிறேன் என்றும் என்னை ஒரு அல் கைடா பயங்கரவாதி என்றும் சித்தரித்தனர். அப்போது இதனை டி.பீ.சீ யில் புலிகளுக்கெதிராக கதைத்ததற்காக செய்தவர்கள் புலி ஊடகங்கள் ஆனால் இப்போது அதே வேலையை செய்பவர்கள் -நான் அதே வானொலியில்- கதைக்காமைக்காக செய்பவர்கள் ஜனநாயக வானொலி என்று கூறிக்கொள்ளும் புலியை ஒத்த ஈழம் கனவினை புலிகளுக்கு அடுத்ததாக கானத்தொடங்கியிருக்கும் ஈ.ஏன்.தீ.எல்.எப். தீவிர தமிழ் தேசியவாத புளட்டினர்
 Thenee.com, lankamuslims.com and mahavali.com (18/01/2011 )

No comments:

Post a Comment

UK Health Secretary “wilfully negligent” for ignoring warnings that pandemic is overwhelming National Health Service- by Tony Robson

In his Downing Street press briefing Wednesday, Conservative Health Secretary Sajid Javid dismissed warnings made by health professionals th...