கிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமும்


எஸ்.எம்.எம். பஷீர்


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் என்கிற கல்வி நிர்வாக வலயம் உத்தியோக பூர்வமாக 27.08.07 அன்று ஏறாவூரில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது. இக்கல்வி வலயம் திறந்து வைக்கப்படுவதற்கெதிராக ஒரு மகஜர் ஒன்றினை த.ம.வி.புலிகள் சார்பில் அதன் அரசியற்துறை பொறுப்பாளர் திலீபன் கல்வியமைச்சருக்கு அனுப்பி வைத்திருந்தமையும் அதனை தேனீ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தமையும் குறித்து எனது பார்வையினை தங்களது பிரசுரத்திற்கு அனுப்பிவைக்கிறேன்.


ஆறியகஞ்சி பழங்கஞ்சி என இக்கல்வி வலயம் தொடர்பில் எழுந்த பிரச்சினைகளை இலகுவாக தட்டிக்கழித்து விடமுடியாது. ஏனெனில் இன்று கிழக்கில் ஏற்பட்டிருக்கும் யுத்தமற்ற சூழல் இன ஐக்கியத்திற்கு எவ்வாறு சாதகமாக அல்லது பாதகமாக அமையப்போகிறது என்ற கேள்வியும் அதற்கான பதிலைத்தேடுதலும் அவசியமாகிறது.

இக்கல்வி வலயமானது முழுமையாக 2008ம் ஆண்டில்தான் செயற்பட ஆரம்பிக்கும் என்று அறியப்படுகின்றது. இக்கல்வி வலயம் அமைவதற்கு எதிராக த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி தீவிரமாக தனது எதிர்ப்பினை பாராளுமன்றத்திலும் மறுபுறம் தமிழ்மக்கள் ஹர்த்தால் செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை தனது ஆதரவாளர்களிடமும் விடுத்திருந்தார். தீவிர முஸ்லீம் எதிர்ப்பும் கருணா எதிர்ப்பும் தனது பிரதான அரசியல் இலக்குகளாக கொண்டு செயற்படும் ஜெயானந்தமூர்த்தி மட்டுமல்லாது மறுபுறம் த.ம.வி.புலிகளும் தமது எதிர்ப்பினை காட்டுவதற்காக ஒரு மகஜரை கல்வியமைச்சருக்கு அனுப்பியும் கல்வியமைச்சருக்கு கறுப்புக்கொடி காட்டுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆயினும் இந்த கல்வி வலய உருவாக்கம் தொடர்பில் புலிகளின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் த.தே.கூட்டமைப்பும், த.ம.வி.புலிகளும் தங்களது பெயரில் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் புலிகளாக செயற்பட்டார்களா என்ற கேள்வியும் முஸ்லீம் மக்கள் மத்தியில் எழுந்தது. ஆயினும் முஸ்லீம் மக்களிடையே அவ்வாறான அபிப்ராயமும் ஏற்பட்டதற்கான காரணம் த.ம.வி.புலிகளின் மகஜர்தான் என்பதில் சந்தேகமில்லை. மறுபுறுத்தில் தமிழ்மக்களைப் பொறுத்தவரை இவ்வாறான எதிர்ப்புக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. தமிழர்களை பொறுத்தமட்டில் இன ஒற்றுமைக்கு இவ்வாறான இனரீதியான வலயம் குந்தகமாக அமையும் என்கிற பொதுவான அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர். இவ்வாறான நிலைக்கு முஸ்லீம்கள் தள்ளப்பட்டமைக்கு காரணம் கடந்தகாலங்களில் புலிகள் முஸ்லீம்கள் மீது அடக்குமுறை, அழிவுச்செயற்பாடுகளும். ஆதிக்க நிலைப்பாடும்தான் என்று எனது தமிழ்நண்பர் குறிப்பிட்டார். எனவே தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமைக்கான எதிர்கால நம்பிக்கை மறைந்திருப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.

த.தே.கூட்டமைப்பு அண்மைக்காலமாக கிழக்கில் ஏதாவது அரசியற் துரும்பு கிடைக்காதா என அங்கலாய்ந்து திரிகின்றபோது இக்கல்வி வலயப்பிரச்சினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத்தொடர்பற்ற பிரதேசங்களை தொடர்பற்ற பிரதேசங்களை உள்ளடக்கி இக்கல்வி வலயம் அமைவது முஸ்லீம்களுக்கான தனியலகுக்கோரிக்கைக்கு சுருதி சேர்ப்பதாக அமைந்துவிடும் என்கிற அச்சம் அவர்களைப்பீடித்துக்கொண்டுள்ளது. எனினும் இன்றுள்ள அரசியல்; சூழ்நிலைகள் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

முஸ்லீம் கல்விச்சமூகம் கடந்தகாலங்களில் நிர்வாக ரீதியாக பல பிரச்சினைகளை அனுபவித்தனர் எனவும் வளப்பங்கீடுகள், இடமாற்றம், கொடுப்பனவுகள் என பல்வேறுபட்ட நிர்வாகப்பாரபட்சங்கள் தாமதங்களை நிவிர்த்தி செய்ய தமக்கென ஒரு தனியான கல்வி வலயம் வேண்டும் என்பதற்கான காரணங்களை முன்வைத்து தமது கோரிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இத்தகைய சிந்தனையோட்டத்தினை சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு கிழக்கு முஸ்லீம் ஆசிரியர் சங்கம் விவாதப்பொருளாக முன்வைத்தனர். அதற்கான அரசியற் சூழ்நிலைகள் சுயநலப்பின்னணியில் இன்றுதான் அது சாத்தியமாயிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியற் குரோதங்களும் அடுத்த தேர்தல் வெற்றியினை உறுதி செய்ய வேண்டிய நிலையும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் விடுபட முடியாத நிலைப்பாடாகவிருக்கிறது. ஏனெனில் ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி என மூன்று முஸ்லீம் பெரும் ஊர்ப்பிரிவுகளுடனான அரசியலில் ஒரு ஊரைச் சேர்ந்த பிரதிநிதி மற்றவூர் மக்களை கவனிப்பதில் போட்டா போட்டியுடன் செயற்படவேண்டும். அப்போதுதான் மூன்று பிரதான ஊர்களில் வாக்குகளைப்பெற்று தனது பாராளுமன்ற பதவியை உறுதி செய்ய முடியும். அந்தவகையில் ஓட்டமாவடியைச் சேர்ந்த முன்னாள் சுங்க உத்தியோகத்தரான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட இன்றைய அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, ஏறாவூரினைச் சேர்ந்த முன்னாள் ஈரோஸ் போராளியும் இன்றைய உள்ளு}ராட்சிஅமைச்சருமான சேகுதாவூத் பஷீர் ஆகியோருக்கிடையிலான ஒரு போட்டியின் முடிவிலே இவ்வலயம் திறந்து வைக்கப்பட்டது. ஏறாவூரில் இவ்வலயம் திறக்கப்பட்டபோது இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் சேகுதாவூத் பஷீர் அழைக்கப்பட்டிருந்தும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்திருந்தார். ஏறாவூர் முஸ்லீம் மக்களின் வாக்கு வங்கிகளை குறிவைத்து அமிர் அலிக்கு சேகு தாவூத்தினை ஏறாவூர் மக்களின் கண்டனத்திற்குள்ளாக்கியதில் இரட்டிப்புச் சந்தோஷம். அமீர் அலியின் செல்வாக்கு ஏறாவூரில் கணிசமாக இவ்வலயம் உருவாக்கியதினால் அதிகரித்திருக்கின்றது என செய்திகள் கூறுகின்றன. முஸ்லீம் காங்கிரஸில் போட்டியிட்டு வெல்வது என்பது ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு வெல்வது என்பதை விட இலகுவானது. ஏனெனில் முஸ்லீம் காங்கிரஸை வேருடன் அழிப்பேன் என்று புறப்பட்டு முஸ்லீம் காங்கிரஸின் முதல் பாராளுமன்றத் தேர்தலில் வன்முறையை பிரயோகித்த சேகுதாவூத் பசீருக்கும் பின்பு முஸ்லிம் மக்கள் அதிகளவில் வாக்களிக்க காரணமாயிருந்தது அவர் முஸ்லீம் காங்கிரஸில் போட்டியிட்டதுதான்.

 இதுவரை பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெறாமல் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகியிருக்கின்ற தனியுடமையினை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சேகுதாவூதுக்கு வழங்கியுள்ளது. அமீர் அலியின் செல்வாக்கு அதிகரிப்பு என்பது பஷீருக்கு ஒரு பொருட்டல்ல என்றாலும் இக்கல்வி வலயத்தின் ஏறாவூரில் அமைப்பது என்பதில் காத்தான்குடி ஓட்டமாவடி முஸ்லீம்கள் தங்கள் அதிருப்தியினை வெளியிட்டிருந்தாலும் இம்மூன்று முஸ்லீம் பிரதேசங்களுக்கும் மத்தியாக பௌதீக ரீதியில் ஏறாவூர் காணப்பட்டமை நியாயமான காரணமாகக் கூறப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வலயத்துள் 13தமிழ்பாடசாலைகளும், 6சிங்களப்பாடசாலைகளும் உள்ளடங்குகின்றன. எனவே அடுத்த கேள்வி சிங்கள தமிழ்பாடசாலைகள் எதிர்காலத்தில் இந்த வலயத்துள் தங்களது தேவைகள் நிறைவேற்றப்பட வில்லையென்றோ பாராபட்சம் காட்டப்படுகின்றதென்றோ குறை கூற நேரிடாதா என்கிற கேள்வியினை இக்கட்டுரையாளர் (நான்) ஒரு முஸ்லீம் ஆசிரியிடம் எழுப்பிய போது, அவர் அந்தக் கேள்வி எழாதவாறு நியாயமாக நடக்கவேண்டிய தேவையும் பொறுப்பும் முஸ்லீம் கல்வி வலயத்திற்கு உண்டு என்பதை அவர்; ஒத்துக்கொண்டார். இவ்வாறே கல்முனையினை தளமாகக் கொண்டு தமிழ்பாடசாலைகளை உள்ளடக்கி ஒரு வலயம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் த.ம.வி.புலிகள் தங்களது மகஜரில் குறிப்பிட்ட சிங்கள தமிழ் பாடசாலைகளையும் ஆசிரிய மாணவர்களையும் இவ்வலயத்தினுள் இருந்து நீக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை நடை முறை சாத்தியமற்றது .என்பதுடன் இனமுரண்பாட்டுக்கு வழிசமைக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை. எனவே தமிழ் கல்வி வலயம் அமைக்கப்பட்டால் அதுவும் தமிழ்மக்களின் நியாயமான விடயமாக பார்க்கப்படுவதுடன் அப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம் சிங்கள பாடசாலைகள் உள்ளடக்கப்படவேண்டும் எனவே அவ்வாறான செயற்பாடும் வேறுபாட்டை தணித்து தனித்துவ நிர்வாகமாயினும் பரந்துபட்ட, மாகாண நிர்வாகத்துள் ஒன்றுபட்டு செயற்படவும் இடமுண்டாகும் என்கிற கருத்தும் நிலவுகிறது.

த.ம.வி.புலிகள் தமது மகஜரில் மட்டக்களப்பு மத்தி என்ற பதப்பிரயோகத்தினை நீக்கி முஸ்லிம் கல்வி வலயம் எனப் பெயரிடக்கூறியமையும் மட்டக்களப்பில் முஸ்லீம் மக்களின் வாழ்வு உரிமையினை மறுக்கின்ற செயலாகும.; மாறாக மட்டக்களப்பு மத்தி தமிழ்கல்வி வலயம் உருவாக்குதல் குறித்து செயற்படுவது பரிகாரமாக அமையும் என்ற கருத்து முன்வைக்கப் பட்டாலும் மட்டக்களப்பு மத்தி என்கிற பதத்தினை நீக்கிய ஒரு தமிழ்கல்வி வலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் சமூகத்திற்கு ஏற்படுத்துவதென்பது எப்படி என்கிற கேள்வியும் நியாயமானதே. எனவே மட்டக்களப்பு முஸ்லீம் கல்வி வலயம் என்று பெயரிட்டால் அது வெளிப்படையாக இனரீதியான கல்வி வலயமாக அமைந்துவிடும். யதார்த்தத்தில் இது முஸ்லீம் கல்வி வலயமாகவே அமைந்தாலும் தமிழ் சிங்கள பாடசாலைகளை உள்ளடக்குவதாலும் இனரீதியான நாமகரணத்தை கொண்டிருக்கலாமா என்கிற வினா எழுகின்றது.

மேலும் த.ம.வி.புலிகள் ஏறாவூரிலிருந்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலை காலக்கிரமத்தில் அலிகார் மகா வித்தியாலயமாக மாற்றப்பட்டது என்கிற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தனர். உண்மையில் கிராமியபாடசாலையாகவிருந்துதான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையாகி பின்னர் அலிகார் தேசியக்கல்லூரியாக இன்று அந்தப்பாடசாலை பெயர் பெற்றுள்ளது. இது அரசினர் தமிழ் கலவன் பாடசாலையாக இருந்தகாலத்தில் அதிக தமிழ்மாணவர்களையும் கொண்டிருந்ததுடன் தமிழ் ஆசிரியர்களையும்; அதிகளவிலும் அதிபராக தமிழரையும் கொண்டிருந்தது. அந்தவகையில் திரு. எஸ். தம்பிராசா அவர்கள் ஏறாவூர் கல்விச் சமூகத்தின் வளர்ச்சிக்கு அரும் தொண்டாற்றியவர். இவரே முஸ்லீம் மாணவர்களின் தொகையை அதிகரித்து முஸ்லீம்களின் கல்விக்கு ஊக்கமளித்தார். நாவற்குடாவில் இவர் 1909ம் ஆண்டில் பிறந்தார். தனது சொந்தப்பணத்தில் முஸ்லீம் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவினார். இவரது சேவையை நினைவு கூர்ந்து ஏறாவூர் வரலாறு எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.

எனவே வரலாற்றில் ஒருபக்கத்தினை இனவாத அரசியலுக்கு பயன்படுத்துவதை மக்கள் இயக்கங்கள் எதிர்க்க வேண்டும்.
Thenee.com (01.11/2007) 

E:\my articles\140907.mht

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...