பொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் !

எஸ்.எம்.எம். பஷீர்


“உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.
                                               
                                        அமர்நீதி நாயனார் புராணம்


“சிறுபான்மையினர் எல்லோரும் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் எங்களுக்குப் புடவைத்துண்டு போல் சரத்பொன்சேகா கிடைத்துள்ளார் " என்று ரவூப் ஹக்கீம் அண்மையில் சகல் சிறுபான்மை இனங்களும் இலங்கையில் மானமிழந்த சமூகமாக மிகவும் கேவலமாக வாழ்வது போலவும் அவர்கள் தமது மானத்தை பாதுகாக்க சரத் பொன்சேகா அவதாரம் எடுத்திருப்பதுபோலவும், தமது  மர்மஸ்தானங்களை மறைக்க உதவும் புடவைத்துண்டுதான்  சரத் பொன்சேக்கா என்ற கருத்தை ஜனாதிபதித் தேர்தல் கூட்டமொன்றில் அண்மையில் ஓட்டமாவடியில்    ரவூப் ஹக்கீம் உவமான உவமேயங்களுடன் குறிப்பிட்டு தமது "மொழியாற்றலை" அரசியல் "அனுமானத்தை" ஒரு புதிய பாணியில் வெளிப்படுத்தியிருந்தார்.
 “நிர்வாணமாக நின்ற மனிதனுக்குக் கோவணம் கட்டத் தந்த புடவையைத் தலைப்பாகை கட்டக்கூடாது. எனவே இந்த விடயத்தில் தெளிவாக முடிவெடுக்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசியத் தலைமைகளிடம் கூறினேன். இந்த நிலையில் தமிழ்த் தேசிய தலைமைகள் மிகத் தெளிவாக எடுத்திருக்கின்ற முடிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் உடன்பாடானதாகக் காணப்படுகிறது.”
அது மட்டுமல்ல  தான் தமிழ் தலைமத்துவங்களுக்கு புடவையை தலைப்பாகையாக பாவிக்காமல் கோவணமாக ( உங்கள்  மர்மஸ்தானங்களை மறைப்பதற்கு ) பயன்படுத்துமாறும் , ஒருவேளை அவர்கள் தமது மர்மஸ்தானங்களை மறைக்காமல் அதனை தலைப்பாகையாக பாவித்துவிட்டால் தாங்கள் (முஸ்லிம் காங்கிரஸ் ) கோவணம் கட்டிருக்க தமிழ் தேசிய தலைமைகள் நிர்வானமாகவிருந்தால் அங்கு தங்களுக்கு உடன்பாடு இருக்காது. எனவேதான் அவர் தமிழ் தேசியத் தலைமைகள் அவரின் வேண்டுகோளின்படி அதனை- அவரை-  கோவணமாக ( பொன்சேகாவை ) அணிந்து இப்போது மானத்தை பாதுகாத்து தங்களுடன் உடன்பட்டிருப்பதாக பெருமிதம் கொண்டுள்ளார். நல்லவேளை சரத் பொன்சேகாவை அதுவும் பிரபாகரனின் கோவணத்தை அவிழ்த்த இரானுவத் தளபதியை ஹக்கீம் ஒரு சிறுபான்மை அணியும் கோவணமாக மாற்றி விட்டார் என்பதை  பொன்சேக்கா அறிந்திருக்கமாட்டார். ஒருவேளை மகிந்த பற்றி குறிப்பிட்டிருந்தால் பிரச்சினைதான் . ஏனென்றால் போதாதகாலம் மகிந்தவுக்கு தமிழ் வேறு தெரியுமே.! . தமது தலைவனின் கோவணத்தை கழட்டியவர் என்று புலிகளுக்கு எதிரான தமிழர் தரப்பினர் ஆர்ப்பரித்த ஒருவரை கோவணமாக பயன்படுத்தி "தமிழ் தேசிய தலைமைகள்" என  "முஸ்லிம் தேசியத்தலைமை" விதந்துரைத்த கூட்டமைப்பினர் பொன்சேகாவை கோவணமாக பலிவாங்கிவிட்டனரோ!! யானறியேன் பராபரனே!

இதில் முஸ்லிம்களுக்கு (ஆண்களுக்கு ) கோவனம் என்பதை விட மிகவும் பழக்கமான மானம் (மர்மஸ்தானங்களை ) மறைக்கும் ஆடை "சிறுவால்" எனப்படும் சிறிய தொளுதொளுப்பான முழங்கால் வரையான காற்ச்சட்டை,
( முழங்கால்வரை நீளமான காற்சட்டையின் அரபு சொல்லே  சிறுவால் எனப்படும் ) இது பெருமளவில் கிழக்கு மாகாணத்தில் விவசாயிகள் அணிந்ததுண்டு. ஒருவேளை ஹக்கீமுக்கு அவர் கிழக்கு மாகாணத்தை சேராதவர் என்பதால் அவ்வாடை பற்றி தெரியாமலிருக்கலாம்.  சரி இந்த கோவணம் என்றால் என்ன என்பதை தமிழ் விக்கபீடியாவில் தேடினால் , அது பின்வருமாறு குறிப்பிடுகிறது.
 " “கோவணம் என்பது இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடையாகும். பொதுவாக, ஆண்கள் மட்டுமே இதை உள்ளாடையாக அணிகிறார்கள். கோவணத் துணி என்று தனியாக கடைகளில் விற்கப்படுவதில்லை. துண்டுகளோ பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணிகளோ கோவணங்களாகப் பயன்படுகின்றன. கோவணத்தை இடையில் இறுக்கிக் கட்ட அரைஞாண் கயிறு உதவுகிறது.”

ஹக்கீம் “நிர்வாணமாக நின்ற மனிதனுக்குக் கோவணம் கட்டத் தந்த புடவையைத் தலைப்பாகை கட்டக்கூடாது. எனவே இந்த விடயத்தில் தெளிவாக முடிவெடுக்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசியத் தலைமைகளிடம் கூறினேன். இந்த நிலையில் தமிழ்த் தேசிய தலைமைகள் மிகத் தெளிவாக எடுத்திருக்கின்ற முடிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் உடன்பாடானதாகக் காணப்படுகிறது.”
என்று கூறியுள்ளார். சரி சும்மா தனக்கே தெளிவில்லாமல் ஹக்கீம் உதாரணம் கதைக்கப்போய் நாம் வேறு ஒரு குட்டி கோவண ஆய்வு செய்யவேண்டி வந்துவிட்டது.

அரை நிர்வாண பக்கீர் என்று பிரித்தானிய அதிகாரத்தால் பரிகசிக்கப்பட்ட மகாத்மா காந்தி கோவணத்தை விட கூடிய ஆடையை அணிந்திருந்தார். ஆனால் ஹக்கீமின் இலங்கை சிறுபான்மை மக்கள் நிர்வாணிகள். தயவுசெய்து புத்தரையும் பரி நிர்வாணத்தையும் ஹக்கீம் விட்டு விட்டார். 27 ம் திகதி சிறுபான்மை மக்கள் தங்களின் நிர்வாணங்களை பொன்சேகாவை உடுத்தி மறைப்பார்களா அல்லது "முஸ்லிம் தமிழ் தேசியத் தலைவர்கள்" தங்களின் நிர்வாணத்தை மறைக்க  " புடவை " துண்டு தேடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

( இக்கட்டுரை எந்த சமூகத்தினதும் உடையை , கலாச்சாரத்தை மதத்தை புண்படுத்த எழுதப்படவில்லை

Thenee, Mahavali, January 2010

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...