பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாடல் (4)

எஸ்.எம்.எம்.பஷீர்
"மே மாதம் 21ம் திகதி ஸ்ரீ பெரும்புத்தூரில் ராஜீவ்காந்திக்கு நினைவாலயம் கட்டியிருக்கிறார்கள் அதே ஸ்ரீ பெரும்புத்தூரில் எமது பத்தினி தெய்வம் தணுவுக்கு நினைவாலயம் கட்டுவோம்"
                                                                                                  தேனிசை செல்லப்பா


கனடாவில் ஆகஸ்ட் மாதம் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாட்டில் புலிகளின் பிரச்சார பாடகர் தேனிசை செல்லப்பா சூளுரைத்தது. (தமிழர் பண்பாட்டுக்கும் தற்கொலைதாரி தனுவுக்கும் என்ன சம்பந்தம் என்று தயவு செய்து என்னை கேட்டுவிடாதீர்கள் )

அமைதி குலைந்த அமைதிப்படை நாட்கள்

புலிகளுக் கெதிரான தாக்குதல்களை இந்திய அமைதிப்படை ஒருபுறம் தொடுக்க தெற்கில் மறுபுறம் ஜே வீ பீ இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற சதேகத்தின் பேரில் சிங்கள இளைஞர்களும், யுவதிகளும் அன்றைய ஐ.தே.கட்சி தலைமையிலான இலங்கை அரசின் பாதுகாப்பு படையினால் வகை தொகையின்றி கைது செய்யப்பட்டும் கொல்லப்பட்டும் போயினர். ஜே வீ பீ, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர்களாக கண்ட அரச உத்தியோகத்தர்களை பகிரங்கமாக ஆதரவானவர்களாக தெரிந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை கொல்வதில் ஒரு புறம் ஈடுபட, மறுபுறத்தில் புலிகள் அதே செயற்ப்பாட்டினை இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்த தமிழ் கட்சிகள் அக்கட்சிகளில் ஆயுதம் தாங்கி செயற்பட்டவர்கள் மீது வட கிழக்கில் செய்தனர்.

அன்று இந்திய படையினர் செய்த கொலைகள் கற்பழிப்புக்கள் அட்டூழியங்களை சர்வதேச மன்னிப்பு சபையின் 1988 ஆண்டின் மத்திய பகுதியில் வெளியான அறிக்கை பட்டியல் போட்டு காட்டியது. ஆக மொத்தத்தில் இலங்கை முழுவதும் இரண்டு தேச இராணுவங்களும் புலிகளும் ஏனைய இந்திய ஆதரவு தமிழ் ஆயுத இயக்கங்களும் என தங்கள் பங்குக்கு தமது எதிரிகளையும் சாமான்ய பொதுமக்களையும் வேட்டியாடினர். இக்காலகட்டம் இலங்கையின் வரலாற்றில் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களின் ஒரு உச்ச காலகட்டமாக இலங்கையின் சகல பாகங்களிலும் ஆயுதம் ஆட்சி செய்த காலம் என்றால் மிகையாகாது.

இந்திய அமைதி காக்கும் படையினரின் அவர்களின் உள்நாட்டு கூலி படைகளாக செயற்பட்ட தமிழ் ஆயுத இயக்கங்களின் அடாவடித்தனங்களை இலங்கை இராணுவத்திடமும் பொலிசாரிடமும் முறையிட்ட சம்பவங்கள் ஏராளம். அவ்வாறான சூழ்நிலைகளில் இலங்கை இராணுவமோ போலீசாரோ வட கிழக்கில் எதுவுமே செய்யமுடியாதவாறு கைகள் கட்டப்பட்டவர்களாக இருந்தார்கள். அதற்காகவே உதாரணத்துக்கு யாழ்ப்பாணம் சுன்னாகம் உடுவிலிலுள்ள ஒரு வீட்டில் உள்ளோரை வெளியே வருமாறு அழைத்து இந்திய அமைதிப்படையின் சிப்பாய் ஒருவர் அவ்வீட்டிலிருந்து வெளியில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயோதிக மாதையும் (வயது ) அவரின் மகளையும் பேரப்பிள்ளைகளான இரு ஆண் பிள்ளைகளையும், ஒரே ஒரு பெண் பிள்ளையையும் சுட்டுக் கொன்றார் ( சுரேஷ் வயது 20, மகேந்திரராஜா வயது 15, பிரியாந்தினி வயது, 16 ) அக்கொலை வெறியாட்டத்தில் அக் குழந்தைகளின் தாய் மாத்திரம் காயங்களுடன் உயிர் தப்பி கொழும்புக்கு சிகிச்சைக்கு வந்தபோது சிகிச்சை பெற்று சுகமானபின்னர் ராஜகிரியாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் தனது உறவினர்களுடன் சென்று இந்திய அமைதிப்படைக் கெதிராக முறையீடு செய்தார். தனது கண் முன்னாலே தனது தாயும் மூன்று பிள்ளைகளும் கொல்லப்பட்டதை கையறுநிலையில் அவர் முறையிட்டார். மொத்தத்தில் இலங்கையின் சிவில் நிவாக கட்டமைப்பு அரசியலமைப்பு ஆதிக்க பரப்பு எல்லாமே இந்திய ஆட்சி அதிகாரத்துக்குள் ஜே ஆர் அரசினால் தாரை வார்க்கப்பட்டது.
இது பற்றி தொடர்ச்சியாக எனது முந்திய கட்டுரையில் “மீசைக்கார சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம்” (7,8,9,10 ) என்பவற்றில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட நிலைமைகள் அவர்கள் அரசியல் ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதனை தமிழ் தேசிய வாதிகளும் புலிகளும் தமது தேர்ந்த அரசியல் சாணக்கியத்தால் ஆயுத ஆதிக்க பலத்தால் கையாண்ட முறைமைகள் பற்றியும் எழுதியுள்ளேன் என்பதால் சொல்லியது சொல்லாமல் விடுவது நன்று என்பதால் இங்கு அவற்றினை தவிர்த்துளேன். ஆயினும் அக்கட்டுரைகளை எனது வலைப்பதிவில் காணலாம்).
http://bazeer-lanka.blogspot.com/2011/04/9.html?utm_source=BP_recent
இந்திய அமைதிப்படை வெளியேற்றத்துடன் மீண்டும் வட கிழக்கில் புலிகளின் அட்டகாசங்கள் அரங்கேறத் தொடங்கின என்பதும் அதுபற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளன.

புலிகள் ஈ பீ ஆர் எல் எப் (E.P.R.L.F)இயக்கத்தினரின் மீதும் அவர்களின் உருவாக்கமான துணை பபடைகளான தமிழ் தேசிய இராணுவம் ((TNA) குடி தன்னார்வ படையினர்((CVF)மீதும் அவர்கள் படகுகளில் இந்தியாவுக்கு தப்பியோடிய போதும், மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 1.600 பேர்கள் வரை கொன்றதாகவும் மேலும் சுமார் 2.000 தமது கட்சி உறுப்பினர்களை உளவாளிகள் என்ற பேரில் வெட்டி சாய்த்ததாகவும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான சமாதான காலத்தில் புலிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்ட ராபர்ட் கூறியிருந்தார்.

ஈ பீ ஆர் எல்.எப் வரதராஜ பெருமாளின் மாகாண சபையில் வட கிழக்கினை பூர்வீகமாக கொள்ளாத ஒரு முஸ்லிம் ஒருவரும் ஒரு சிங்களவரும் (தயான் ஜெயதிலக (ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி பிரதிநிதியாக ஈ பீ ஆர் எல் எப் தோழமையுடன் -இவர் இப்போது பிரான்ஸ் நாட்டு இலங்கை தூதுவராக இருக்கிறார் ) அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் இவர்களில் அபூ யூசுப் எனும் கொழும்பை சேர்ந்த ஈ பீ ஆர் எல்.எப் மாகாண சபையின் கைத்தொழில் அமைச்சர் தனது விசுவாசத்தை காட்ட ஒப்பந்தத்தில் உள்ள சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது என்ற கருத்தை முன்வைத்தார். இவர் இன்றுவரை முஸ்லிம்களை தமிழர்களாக பார்ப்பவர் என்பதுடன் இவரின் சிறிய மகனான அப்துல் ரஜாக் இம்தியாஸ் எனும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள டெம்பில் பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளரும் தமிழர்களின் தனி ராஜ்ஜியத்துக்காக ருத்ர குமாரன், பாதர் இம்மானுவேல் எனும் பெரும் புலிகளின் பின்னால் ஆதரவுக் குரல் கொடுப்பவர்.முஸ்லிம் ஆரசியல் கட்சிகள் இலங்கை ஆட்சியாளர்களுடன் அணைந்து செல்வதை காட்டமாக கண்டிப்பவர் தமிழ் தேச நிர்மாணம் பற்றி கனவு காணும் ஒருவர்.
இலங்கையில் இன்னொமொரு யாழ்ப்பாண கோட்டை ராச்சியம் இருந்தது என்பதும் தமிழர்கள் ஆண்ட பரம்பரை, அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தினையும் சேர்த்துக்கொண்டு பாரம்பரிய தாயக கோட்பாட்டை தமிழர் ஆட்சி பிரதேசங்களை எல்லைப்படுத்தி அதற்கான அரசியல் வியூகங்களை வகுத்து செயற்பட்ட சகல தமிழ் தேசிய கோட்பாட்டாளர்களையும் இணைத்து கொண்டு; முஸ்லிம் மக்களை தமிழ் பேசும் “சகோதரர்களாக” தேவைக்கேற்றவாறு அணைத்துக்கொண்டு அரசியல் செய்த தமிழர் இயக்கங்கள் யாவும் “ஈழம்” என்ற பதத்தினை தனது கட்சியில் வைத்துக்கொண்டு அரசியல் செய்து இலங்கையை அதன் சமூக பொருளாதார இன சவஜன்ய கட்டுமானங்களை கடந்த ஆறு தசாப்தங்களாக சிதைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு அதன் விளைவாய் முகிழ்த்த உச்ச பயங்கரவாதத்தின் செயற்ப்பாடுகள் அழித்தொழிக்கபட்டதும் சற்றும் சளைக்காமல் மீண்டும் தொடங்கிய இடத்துக்கு தமிழ் தேசிய வாதிகள் புறப்பட தயாராகிறார்கள் என்பதும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பிளஸ், வட கிழக்கு இணைப்பு, பதின்மூன்றாவது திருத்த சட்ட எதிர்ப்பு என்றெல்லாம் குரல்கள் அதே சுருதியில் மீண்டும் ஒலிக்க தொடங்கியுள்ளன.
இந்த பின்னணியில் இலங்கை அரசு பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ் புத்திசீவிகள் இலங்கை அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடி பிடித்து பார்க்க 2008ஆம் என்று விரும்பியது. இதற்கான முயற்சிகளை இலங்கை அரசுடன் தமிழர் தரப்பு அரசியல் கட்சி என்றவகையில் இன்றைய அரசின் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அதற்கு முன்பாகவே மஹிந்த அரசுடன் தொடக்கி வைத்திருந்தார். குறிப்பாக புலம் பெயர் தமிழ் முஸ்லிம் அரசியல் சமாதான செயற்பாட்டாளர்களை அரசுடன் பேச வைக்கும் முயற்சியிலும் இறங்கியிருந்தார்.
Mahavali.com 12/04/2011

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...