Sunday, 17 April 2011

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் – 13


                                                             எஸ்.எம்.எம்.பஷீர்

தமிழர் கட்சிகள் வளர்த்ததெல்லாம் இனவாதமே தவிர வேறில்லை.


“சுத்தி சுத்தி சுப்பருடைய கொல்லைக்குள்” என்று உங்களுக்குத் தோன்றினாலும் வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் வேறுபடாத தமிழ் தேசிய வாதத்தின் “ஜனநாயக” போராட்ட அரசியலில் முஸ்லிம்களை நசுக்கும்வதும் நாசூக்காக பாவிப்பதுமான விசச் சக்கரம்  மாறுபடவே இல்லை;  எனவேதான் சிலதை மீண்டும் மீண்டுன் நினைக்காமலோ, அதனை எழுதாமலோ இருக்க முடியவில்லை . மக்பூல் பற்றிய இச்ச்சம்பவமும் அத்தகையதே !

இலங்கையிலுள்ள  முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவங்களுக்கும்  மக்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான தொடர்பாடல் குறை கண்டு, அதனை  தனது வெளிப்படையான மதிப்பீடாக அவர் இவ்வாறு குறிப்பிட்டார்  “ "தன்னுடைய மதிப்பீடு என்னவென்றால் அதிகாரப்பகிர்வு செயற்பாடு தொடர்பாக நாங்கள் கலந்தாலோசிக்கும்போது முஸ்லிம்களின் அக்கறைகளை தாங்களே பிரதிநித்துவப்படுத்துவதாக  ஆகக்குறைந்தது ஐந்து குழுக்கள் உரிமை    கோருகிறார்கள்   என்னுடனும் ஜனாதிபதி ஜெயவர்தனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நான் உண்மையில் எந்த குழுவினர் குறிப்பிட்ட பிரச்சினையில் நிஜமான அக்கறையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதனை தீர்மானிப்பதில் குழப்பமடைந்திருக்கிறேன்.".

இந்த நிலைப்பாடு தோன்ற அன்று தெற்கு முஸ்லிம் தலைமைத்துவங்களின் வடக்கு -கிழக்கு தொடர்பான மாறுபட்ட அக்கறைகளும் மறுபுறம் கிழக்கிலேயும் வடக்கிலேயும் காணப்பட்ட வேறுபட்ட அரசியல் அபிலாசைகளுமாகும். இவ்வாறு மாறுப்பட்ட அரசியல் அக்கறைகளும் அபிலாசைகளும் டிக்ஸ்சிட்டை (Shri Dixit)  குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கவேண்டும்.

ஜனாப் பதியுதீன் மஹ்மூத் அவர்களிடம் கொழும்பை மையமாகக்கொண்ட அரசியல் சக்திகள் முன்வைத்த எதிர் காரணங்களில் ஒன்று கிழக்கிலிருந்து வந்து தெற்கிலே இனவாத அரசியலை அஷ்ரப் ஸதாபிக்க முனைகிறார் என்பதாகும் இன்னுமொரு புறம் மட்டக்களப்பானுக்கு இங்கு என்ன வேலை என்ற பிரதேச வாதக்  கருத்துமாகும். கொழும்பு மற்றும் தெற்கின் வேறு சில பிரதேசங்களை சேர்ந்த பிரபல முஸ்லிம்  சட்டத்தரணிகள் சமூகப் பிரமுகர்கள் என ஒரு குழு  ஹோட்டல் ரன்முத்துவில் ஒரு தடவை முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி  பதியுதீன் முஹம்மது  மறைந்த சேர் ஏ. டபிள்யூ எம் அமீர் -ரண்முத்து ஹோட்டல் உரிமையாளர்  – ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில் அஷ்ரப்பிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தபோது பதியுதீன் அவர்கள் மௌனமாக செவிசாய்த்ததுடன் அஷ்ரப் அவர்களின் தந்தைக்கும் தமக்குமுள்ள தொடர்புகள்பற்றி (?)  குறிப்பிட்டதைத் தவிர வேறொன்றும் பெரிதாகக்கூறவில்லை. எனினும் தீவிர கிழக்கு அரசியல் எதிர்ப்பு கிழக்கிலேருந்து தனி முஸ்லிம் கட்சியின் மூலம் தெற்கில் உருவாக்கப்படும் தேசம் தழுவிய முஸ்லிம் அரசியல்  பிரதிகூலங்கள் குறித்து கருத்தாடல்கள், விமர்சனங்கள் அங்கு காணப்பட்டது.

இந்த சூழலில் நான் ஒருதடவை 1980களின் இறுதிப்பகுதியில்  நான்  அஷ்ரப்பை தற்செயலாக சந்தித்தபோது குறிப்பாக கொழும்பில் ஹுல்ஸ்டொர்ப்  எனப்படும் நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதியில் தொழில் புரியும் சட்டத்தரணிகளிடம் பொதுவாக காணப்படும் கிழக்கு எதிர்ப்பு மனநிலையினை கூறியபோது; அவர்கள்  யார் என்று அறிய ஆவல் காட்டினார். நான் அவர்கள் யாரென்று கூறவில்லை, அவரது ஊகங்களுக்கும் நான் பதிலளிக்கவில்லை எனினும் அவர் மீதான அந்த விமர்சனங்கள் என்னையும் பாதித்தன என்பதை சுட்டிக்காட்டினேன்.   கிழக்கை பொறுத்தவரை அன்று காணப்பட்ட  தமிழ்  ஆயுதம் தாங்கிய போராட்ட குழுக்களின் ஆதிக்க சூழழில் முஸ்லிகளுக்கு மாற்று வழி  இல்லை என்பதில் அவருடன் நான் உடன்பட்டேன். எனினும் பல்வேறு விடயங்களில் அவருடன் எனக்கு சில சில முரண்பாடுகளும் இருந்தன; அவை இங்கு இப்போது எழுதப்பட அவசியமில்லை எனக் கருதுகிறேன்.

எனது வாசிப்புக்களில்,  அன்று காணப்பட்ட கிழக்கு அரசியல் எதிர்ப்பு என்பது அஷ்ரப  எதிர்ப்பு அரசியலாக வெளிப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணமாக அஸ்ரப் பின் நண்பரான  மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா எழுதிய “எனது நினைவுத்திரையில் அஷ்ரப்” எனும் நூலில் தான் அவரது நூல் வெளியீட்டு    விழாவுக்கு ஹோட்டல் ரன்முத்துவில் நடத்துவதற்காக அதன் தவிசாளர் A.W.M   அமீர்  அவர்களிடம் விழா பற்றி கதைத்ததாகவும் அப்போது  அவர்  “    யார் யார் அதிதியாக வருகிறார்கள் என்று கேட்டதாகவும் , அவர்  அஷ்ரபின் பெயரை சொன்னதுதான் தாமதம் அஷ்ரப வருவதேன்றால் நான் ஹோட்டலை தரமுடியாது…..” என்று குறிப்பிட்டதாக தனது நூலில் எழுதி உள்ளார். 
இந்நூலசிரியரின் அஷ்ரப் மீது கொண்டிருந்த தனிமனித விசுவாசக் கருத்துக்களில் எனக்கு  உடன்பாடில்லை. அவை இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளுக்கு ஒத்திசைவாகவும் இல்லை; இவை பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுத முனைகிறேன். “    இன்றைய தமிழ்  .தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற முஸ்லிம் யாழ் மாவட்ட உறுப்பினராக செயற்படும் சட்டத்தரணி இமாம் சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் அஷ்ரபுடன் தான் மருதானையில் ஒன்றாக தங்கி இருந்து படித்தார் என்றும் இவர்களுடன் அவ்வப்போது கொழும்பு வந்து தங்கும் இமாமின் யாழ்ப்பாண முஸ்லிம் நண்பர்களில் ஒருவர்தான் மறைந்த மன்னார் அரச அதிபர் மக்பூல். இதில் இருவர் புலிகளின் இரத்த வெறிக்கு பலியானபின்னர் இமாம் புலிகளின் “ஜனநாயக” பிரதிநிதிகளின் கட்சின் பிரதிநிதிக்கூட்டத்தில் ஒருவராக இணைந்ததுடன் பிரபாகரனை சந்தித்த யாழ்ப்பான முஸ்லிம் அரசியல் வாதியுமாகும்.

இந்த இமாம் குறித்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் (http://www.srilankaguardian.org/2008/03/will-imam-be-imamto-jaffna.html) குறிப்பிட்டவாறு இவர் நாடாளுமன்ற பதவிக்கு ஈழவேந்தனின் காலியான இடத்திற்கு நியமிக்கப்பட்டபின் விபத்தில் அகால மரணம் அடைந்த த. தே. கூ நாடளுமன்ற உறுப்பினரான சிவநேசனினின் மரணச்சடங்கில் கலந்துகொண்டபோது வன்னியில் பிரபாகரனை சந்தித்தார். அப்போது பிரபாகரன் அவரிடம் அவரின் நாடாளுமன்ற பிரவேசம் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே “உறவினை பலப்படுத்தும்” (“strengthen unity” ) என்று கூறியதாக இக்பால் அத்தாஸ் எனும் எழுத்தாளர் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இச்சம்பவத்தினை நினத்தபோது எனக்கு இந்து புராண கதை ஓன்று ஞாபகத்துக்கு வருகிறது. தனது இளம் பிராய தோழனான இந்து மத கடவுளர்களில் ஒருவரான கிருஷ்ணனிடம் வறிய குசேலர் தனது மனைவியின் வற்புறுத்தலின் பெயரில் உதவி கேட்பதற்காக கிருஷ்ணனின் அரண்மனைக்கு சென்றார். கிருஷ்ணனை சந்தித்தவுடன், அவரிடம் தனது மனைவி தயாரித்து தந்த அவல் பொதியை கொடுத்து,  அளவளாவிவிட்டு எவ்வித உதவியினையும் வெட்கப்பட்டு கேளாமல்  வீடு திரும்பிவிட்டார், ஆனால் கடவுளான கிருஷ்ணன் இவரின் வறுமை வாழ்வை இவரது விஜயத்தின் நோக்கத்தை தனது ஞானதிருஸ்டியினால் உணர்ந்து அவர் வீடு திரும்பமுன்னரே அவரது வாழ்விடத்தை வளம்படுத்தி வறுமையை ஒழித்ததாக கதை; ஆனால் எமது இமாம் புலிகள் கடத்திய முஸ்லிம்கள் பற்றி கேட்க மறந்து விட்டார் என்றும் அங்கததொனியில் நான் எழுதி இருந்தேன். பிரபாகரனையும் நான் அக்கதை மூலம்  கிருஷணின் இடத்திற்கு உயர்த்தியதாக கொள்ளவேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.

1989-1990   காலப்பகுதியில் வட மாகாணத்தில் புலிகளால் கடத்தப்பட்ட முஸ்லிம்கள் அனைவரையும் விடுதலை செய்யக்கோரி யாழ் மாவட்ட பிரமுகர்கள் ஐவர் பகிரங்க அறிக்கை ஒன்றினை “ஒட்டி வாழ்ந்தோம் வெட்டி வாழவில்லை”    என  ஜுன் 1996ல்  வெளியிட்டனர்.  பின்னர் கடத்தப்பட்டு தடுத்துவைத்திருப்பவர்கள்  தொடர்பாக ஒரு தீர்மானத்தையும் 1997  ஜூலையில் வெளியிட்டனர்

அவர்களது தீர்மானத்தில் சொல்லப்பட்ட முக்கியமான விடயம் என்னவென்றால்  புலிகளின் தலைவர்களை சந்தித்து புலிகள் கிழக்கு மாகாணத் தலைமைத்துவத்தை யாழ் முஸ்லிகளை ஏற்றுக்கொண்டதாக  பிழையாக நம்பி விட்டதை (அவ்வாறு அல்லவென்று) விளக்குவதற்காகவும் ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டு இருந்தனர். முஸ்லிகளின்  உறுதியற்ற நேர்மையற்ற அரசியலும் இங்கு நோக்கற்பாலது.

“சுத்தி சுத்தி சுப்பருடைய கொல்லைக்குள்” என்று உங்களுக்குத் தோன்றினாலும் வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் வேறுபடாத தமிழ் தேசிய வாதத்தின் “ஜனநாயக” போராட்ட அரசியலில் முஸ்லிம்களை நசுக்கும்வதும் நாசூக்காக பாவிப்பதுமான விசச் சக்கரம்  மாறுபடவே இல்லை;  எனவேதான் சிலதை மீண்டும் மீண்டுன் நினைக்காமலோ, அதனை எழுதாமலோ இருக்க முடியவில்லை . மக்பூல் பற்றிய இச்ச்சம்பவமும் அத்தகையதே !

ஜனாப். மறைந்த மக்பூல் அவர்கள் 1966/67 அளவில்தான் நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் யாழ்ப்பாணத்தில் நிர்வாக சேவைக்கு தெரிவான இரண்டாவது முஸ்லிம் நபராவார். இவருக்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் முதன்முதல் சிவில் சேவைக்கு தெரிவான முஸ்லிம்,  கலாநிதி ஏ. எம். ஏ அஸிஸ் அவர்களின் பின்னர் இவர் தெரிவாகி இருந்தார் . மக்பூல் நிர்வாக சேவைக்கு தெரிவாகி சம்மாந்துறையில்  பிராந்திய இறைவரி உத்தியோகத்தர் (DRO-–Divisional Revenue Officer) எனும் பதவிவகித்தபோது அரசியல் செல்வாக்குமிகு யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரமுகர்களின் முயற்சியால் யாழ்ப்பான நிர்வாகத்தின் கீழிருந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கு , மாவட்ட காணி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டார். அப்போது “தமிழ பேசும் மக்களின்” கட்சியாக தம்பட்டம் அடித்த தமிழ் அரசுக் கட்சியின்  கட்சி பத்திரிகையான “சுதந்திரன்” தனது முதற்பக்க தலைப்புச் செய்தியாக முழு முஸ்லிம் இனவாதத்தினை கக்கி ” தமிழரின் பதவி முஸ்லிமுக்கு பறிபோவதா”  என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த செய்தி சுதந்திரனில் வெளியானபின்னர் நடைபெற்ற தலித் சமூகத்தினரின்  பகிரங்க கூட்டமொன்றில் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட  போது, எனக்கு அறிமுகமான யாழ் முஸ்லிம் பிரமுகர் அக்கூட்டததில் கலந்துகொண்டு பதில் தர வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விட அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் யாழ் பல்கலைக்கழக விவுரையாளரும் பின்னாளில்  இலண்டனிலுள்ள “தீபம்” தொலைக்காட்சி நிறுவனத்தின் செயதி தயாரிப்பாளராகவும்  கடமையாற்றிய வித்தியானந்தன் “முஸ்லிம்களின் உள்ளக் குமுறலை கேட்டீர்கள்” என்றும் இதற்கான பதிலை  அன்றைய கூட்டணி நாயகன் “”தளபதி” அமிர்தலிங்கம் வழங்குவார்  என்று எதிர்பார்த்து கூற , அமிர்தலிங்கம் அலட்சியம் செய்து இது பற்றி மூச்சு விடாமல் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சென்று விட்டார் . இதுதான் யாழில் அன்று நிலவிய தமிழர் கூட்டணியின் முஸ்லிம்கள்  மீதான ” அன்பு”.  கம்யூனிஸ்ட் கார்த்திகேசு ஆசிரியர் தான் முஸ்லிம் ஒருவர் மேயராக  (சுல்தான்) 1955ல் வருவதற்கும் வழி வகுத்தவர், வரலாறு படைத்தவர். தமிழர் கட்சிகள் வளர்த்ததெல்லாம் இனவாதமே தவிர வேறில்லை. இவர்களது வெளிப்படையான சிங்கள இனவாதத்துள் முஸ்லிம் விரோதமும் கிழக்கு தமிழர் தலைமைகள் மீதான விரோதமும் மறைந்திருந்தது.

இவ்வாறுதான் தமிழரின் பிரதான அரசியல் கட்சியான ” ஈழத்து காந்தி” என அழைக்கப்பட்ட தந்தை செல்வா என்பவரின் பெயரால் வட்டுக்கோட்டையில்  அறிமுகப்படுத்தப்பட்ட தமிழீழக் கோரிக்கை இன்றைய அழிவுக்கு அன்றே வழிகோலியதுடன் தமிழர்களின் அரசியல் வரலாறும் முழுமையாக சிதைவுற வழிகோலியது.

ஆயுதப்போராட்டத்துக்கு  பிள்ளையார் சுழி போட்ட எஸ் ஜே வி. செல்வநாயகத்தின் சீடர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடுதான் இந்த சுதந்திரனின் தலையங்கம். மக்பூல் கிளிநொச்சியில் பணியாற்றிய போதுதான் அவரின் கீழ்     புலிகளின் “மறைந்த புலிகளின் ”தலைவரான பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் காணி உத்தியோகத்தராக பணியாற்றினார். பின்னர் புலிகள்  இவரை கொல்லுவதற்காக (மக்பூல்)  இவரின் இல்லத்திற்கு (மன்னாரில் இவர் அரச அதிபராக இருந்தபோது) வந்து இவரை இரண்டாவது தடவை விசாரணைக்காக  அழைத்துச்சென்றபோது தடுத்த தனது மனைவியிடம் “பொடியன்கள்” ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று அசாத்திய நம்பிகையுடன் சென்றவர் மீளவே இல்லை.  கொடிய பகைவர்களையும் நமது பொடியன்கள் என்று ” பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே” என்று செயற்பட்ட மக்பூல் யாழ் முஸ்லிம் கல்வி சமூகத்திற்கு மாபெரும் இழப்பு என்பதை வரலாறு பதிவுசெய்யாமல் விடாது.  . இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் மக்களின் ஆணையைப் பெறும் முயற்சியில் கிழக்கில் முதல் முஸ்லிம் கட்சியான முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடுத்து முஸ்லிம் மக்களை உள்வாங்கும் யாழ் மேலாதிக்க தமிழ் இனவாத கைங்கரியத்துள் சிக்கியோர்களில் குறிப்பாக மறைந்த  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும், தலைவருமான அஸ்ரப் அவர்களும்   ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தூதுவராக கடமையாற்றிய  மறைந்த  சட்டத்தரணி சம்சுதீன் ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகும்.

வடகிலே முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் தனித்து போட்டிட முயன்றபோது அதற்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய பிரமுகரான முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான யோகேஸ்வரன் எம்.பி.  போட்டியிட முற்பட்ட பொழுது  முஸ்லிம் பிரமுகரை இமாம் மற்றும் சில முஸ்லிம் பிரமுகர்கள் மூலம் அணுகி அவ்வெண்ணத்தினை கைவிடுமாறு கேட்டதும் அதில் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். பி யான இமாம் எவ்வாறு செயற்பட்டார் என்பதும் வெளிவராத செய்திகளாகும். யாழ்ப்பாணத்திலே ஒரு முஸ்லிம் வேட்பாளரை  தமது கட்சியில் போட்டியிட வாய்ப்பளிக்காதது  மட்டுமல்ல    மிகவும் முக்கியமாக வடமாகணத்தில் முஸ்லிம்களை  அரசியல் ரீதியாக எவ்வாறு  இரண்டாம் தரப் பிரஜைகளாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நடாத்தினர் என்பதற்கு இவை போன்ற பல சம்பவங்கள் உதாரணங்களாகும்
தொடரும்……(18/10/2009) .

No comments:

Post a comment

Gotabaya controversially appoints Ali Sabry as Minister of Justice BY ARJUNA RANAWANA

CONTROVERSIAL APPOINTMENT – President Gotabaya Rajapaksa hands over letter to Attorney Mohamed Ali Sabry appointing him Minister of Ju...