"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்"”

சென்ற 12 ம் திகதி கொழும்பில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சூழலில் நானும் அங்கு செல்ல வேண்டி நேரிட்டபோது இடம்பெற்ற நிகழ்வுகள் இலங்கையின் அரசியல் சதி பற்றிய சம்பவங்களில் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை மீண்டும் அரங்கேற்றும் - நினைவூட்டும்- நிலையை ஏற்படுத்தியது. சரத் பொன்சேகாவின் துணைவியார் தனது கணவனை கைது செய்தமை, தடுத்து வைத்தமை அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடாகும் என தனது மனுவில் முறையிட்டிருந்தார். அந்த வழக்கு விசாரனை அன்று உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் முன்பு எடுக்கப்பட்டபோது நீதிமன்ற  அவை பொன்செகாவினை ஆதரித்த முக்கிய கூட்டு கட்சிகளின் அரசியல்வாதிகள் உட்பட , சட்டத்தரணிகள், பத்திரிகையாளர்கள் என நிரம்பி வழிந்தது.


அனோமா பொன்சேகா சார்பில் முன்னால் சாட்டமா அதிபரும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிப்லி அசீஸ் ஆஜராக மறுபுறம் அரச சட்டத்தரணியாக எனது சமகால சட்டக்கல்லூரி நண்பர் சஞ்சே ராஜரத்தினம் ஆஜராகி , அநோமாவின் விண்ணப்பம் சட்ட தொழிநுட்ப பிழைபாடு கொண்டதென்றும் அதனை தாள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் வாதிட்டார் எனினும் வழக்கு மேல் விசாரனைக்காக அன்று ஒத்திவைக்கப்பட்டது.

அன்று தற்செயலாக மேல்மாகாண நீதிமன்றில் சிப்லி அசீஸின் வழக்கொன்று இடம் பெற்றபோது நான் அந்த நீதிமன்ற அறையில் எனது சட்டத்தரணி நண்பருடன் அமர்ந்திருந்தபோது சிப்லி அசீஸ் அந்த வழக்கில் ஆஜராக முடியாதென்றும் அவர் அன்றைய தினம் உச்சநீதிமன்றில் முக்கியமான விண்ணப்பம்  ஒன்றினை முன்னிறுத்தி நிற்பதாகவும் , அதனால் வழக்கினை ஒத்திவைக்குமாறு வின்னப்பமொன்றினை எனது நண்பரின் வேண்டுகோளில் நானே மேற்கொள்ளவேண்டி நேரிட்டது.

சுமார் 19 வருடங்களுக்கு பிறகு ஒரு கொலை வழக்கில் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியாக திரு. விக்னேஸ்வரன் இருந்தபோது ஆஜரானதன் பின்னர் மீண்டும் எதிர்பாராத விதமாக அனோமா போன்சேகாவுக்காக வாதாடும் சட்டத்தரணியின் இடத்தை இன்னுமொரு நீதிமன்றில் நிரப்பவேண்டி நேரிட்டது. இது வியப்பாக கூட எனக்குத்தோன்றியது. சிப்லி அசீசும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தலில் தலைமைமத்துவத்திற்கு போட்டியிடிருந்தார், அத்தேர்தலில் சென்ற மாத இறுதில் அவர் பொன்சேகா போலல்லாது வெற்றி பெற்றார். சிப்லி அசீஸ்  தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நடந்து முடிந்த யுத்தம் பற்றி குறிப்பிடுகையில்

"யுத்தத்திற்கு பிற்பாடான சட்ட ரீதியான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்ளும் போது சட்டத்தரணிகளை அப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க தயார்படுத்துவது." .என்று குறிப்பிட்டிருந்தார். யுத்தத்திற்கு பின்னரான மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கோடுக்கப் போவதுதான் இன்றைய ஜனாதிபதி தொடக்கும் இலங்கையை நேசிக்கும் சகலரின் அக்கறையாகவும் உள்ளது.

இப்போதைய பிரச்சினையே யுத்தத்தின் பின்னரான இலங்கையின் சவால்களை பல மட்டங்களிலும் எதிர்கொள்வதாகும். எது எப்படியோ இப்போது இராணுவச்சட்டத்தின் கீழ் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரிக்க ஏதுவான முகாந்திரங்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன, மிக விரைவில் அவருக்கு எதிரான இராணுவ நீதிபதிகள் நியமிக்கப்பட்டு விசாரனைகள் ஆரம்பிக்கப்படப் போகின்றன.

பொன்சேகாவின் கைது அவரது மனைவியின் வழக்கு குறித்து எழுந்த ஐயங்களை அரச ஊடகத் செய்திகள் இலங்கைக்கு இராணுவச் சதியும் , இராணுவ அதிகாரியின் கைதும் புதியதல்ல என்பதை நினைப்பூட்ட  வேண்டிய தேவையும் ஏற்பட்டது.

1966 ம் ஆண்டு  இராணுவச் சதி மூலம் ஆட்சி கவிழ்ப்பை நடத்த திட்டமிட்ட முன்னாள் மேஜர் ஜெனரல் உடுகொடவின் கைதும் அது பற்றிய நிகழ்வுகளும் பொன்சேகாவின் அலையினை அடக்குவதாக கருதப்பட்டது.

அன்றைய இராணுவச்சதி வழக்கில் பௌத்த குருவான ஞானசீஹா தேரோ முதலாவது குற்றவாளியாகவும் மேஜர் ஜெனரல் உடுகோடா நான்காவது குற்றவாளியாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இவர்கள் மீது மகாரானிக்கெதிராக முதலாம் திகதி டிசம்பர் மாதம் 1965 தொடக்கம் பதினெட்டாம் திகதி பெப்ரவரி மாதம் 1966 வரையான காலப்பகுதியில் யுத்தம் தொடுக்க சதி செய்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் அன்று ஆட்சியில் இருந்தவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமரான டட்லி சேனநாயகாவின் ஆட்சியினை கவிழ்க்கவே இவர்கள் சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மொத்தம் இருபத்தி மூன்று பேர் குற்றவாளியாக காணப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

மேஜர் ஜெனரல் உடுகோடா தனது ஐக்கிய இராச்சிய , சுவிசர்லாந்து விஜயங்களை முடித்துவிட்டு நாடு திரும்பியபோது இலங்கை விமான நிலையத்தில் வைத்தே (07.07.1966) கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்படார்.

மேலும் அன்று இவர்களது சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவர் பிரின்ஸ் குணசேகர, இவர் இங்கிலாந்துக்கு செல்லும்வரை ஜே வீ பீ என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்களின் விடுதலைக்காக மேன் முறையீட்டு, உச்ச நீதிமன்றங்களில் பல வழக்குகளை முன்னின்று நடத்தியவர்.

இவர் ஜே. வீ. பீ யின் ஆதரவாளராக இருந்தாரென்றும் ஜே வீ பீ ஆட்சியினை இலங்கையில் கைப்பற்றியிருந்தால் இவரே பிரதம மந்திரியாக ஆக்கப்பட்டிருப்பார் என்ற செய்தியும் இவர் இலங்கை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு வந்தபின்னர் ,ஜே வீ .பீ உடன் நெருக்கமான சில வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதியாக ஜே ஆர் ஜெயவர்த்தனா, பிரேமதாச ஆகியோர் இருந்த காலத்தில்தான் இலங்கையில் மனித உரிமை சட்டத்தரணிகளுக்கு மிக மோசமான உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டது.

இந்த பிரின்ஸ் குணசேகரா மீதான உயிர் அச்சுறுத்தலுக்காக சட்டத்தரணிகள் சங்கமும் பிரேமதாசாவிடம் ஒரு மகஜரினை செப்டம்பர் மாதம் 1989 ஆண்டு அனுப்பியிருந்தனர். ஆனால் பிரின்ஸ் குணசேகராவுக்கு " நாங்கள் காஞ்சனா அபேயவர்தனவை ( அக்காலகட்டத்தில் கொல்லப்பட்ட மனித உரிமை சட்டத்தரணி ) கொன்றுவிட்டோம் இன்னும் மூவர் இருக்கிறார்கள் , அதில் நீயும் ஒருவர், நீ இனி ஒரு மனித உரிமை மனுவில் ஆஜரானால் நீ கொல்லப்படுவாய். இது நாங்கள் உனக்குத்தரும் இறுதி எச்சரிக்கை " என்ற தொலைபேசி எச்சரிக்கையுடன் பிரின்ஸ் குணசேகரா இலகையில் வாழ முடியாத சூழலில் நாட்டை விட்டு வெளியேற வேண்டி நேரிட்டது.




இன்று சரத் பொன்சேகா அரசியல் கைதி தானே ஒழிய வேறில்லை என்று முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா அரசினை கண்டித்துள்ளதுடன், இன்றைய அரசு விசாரனையை நீடித்துக்கொண்டு செல்வதாகவும் சர்வதேச சமூகம் இலங்கையை ஒரு சட்ட திட்டம் அற்ற நாடாகப் பார்க்கவேண்டும் என்று தான் கருதுவதாகவும் குறிபிட்டுள்ளார்.

இது பற்றி பீ பீ. சியின் சிங்கள சேவையின் செய்திக்குறிப்பு கோடிட்டு காட்டுகையில் இவர் 2006ம் ஆண்டு ஒரு வழக்கின் போது ஸ்ரீ லங்கா சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அவை "நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும் " என்றும் தீர்ப்பளித்திருந்தார் என்று குறிப்பீட்டுள்ளது.

இவர்தான் சர்வதேச சமூகத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய சுமார் நான்கு வருடத்துக்குள் தான் சார்ந்திருக்கின்ற அரசியல் காரணமாக சர்வதேசத்தை துணைக்கழைப்பதையும் "அரசியல் கருத்து மாற்றம்" அவரது சட்ட கருத்து மாற்றத்தினை ஏற்படுத்தியிருப்பதையும் , மேலும் சட்டத்துறை குறித்து இன்று அவர் கூறும் விமர்சனங்களும் சரத் என் சில்வா குறித்து அவரது முன்னைய நீதி நிர்வகித்தல் குறித்து பல ஐயங்களை எழுப்பியிருக்கின்றன.

ஏனெனில் சரத் என் சில்வா அப்போது நீதிபதி , இப்போது சாதாரண மூன்றாந்தர அரசியல்வாதி. இவரை பற்றி எழுத நிறையவே உண்டு , அவை பற்றி சுமார் 536 பக்கங்களில் இந்த சரத் என் சில்வா வின் மீது பல ஊழல், தனி நபர் ஒழுங்கீன   குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை பதவி நீக்க வேண்டுமென்று பல வருடங்கள் போராடி தோல்வியுற்று தனது போராட்டத்தினை

‘தொகுத்து "முடியாத போராட்டம் ” (An Unfinished Struggle) என்று பெயரிட்டு புத்தகமாகியுள்ளார் பிரபல பத்திரிகையாளரான ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் . அன்றைய சந்திரிகாவின் ஆட்சியில் இவரை அசைக்க முடியவில்லை, இப்போது வெளியே நின்று இவர் அரசை அசைக்க முயல்கிறார் போல் தோன்றுகிறது.

நண்பர்கள் பகைவர்கள் என்பதெல்லாம் அரசியலில் இல்லை என்றாலும் திடுதிப்பென்று  யாருக்கு யார் நண்பன் யாருக்கு யார் பகைவன் என்பதை சென்ற ஜனதிபதித்தேர்தலும் எதிர்வரும் பொதுத் தேர்தலும் எல்லா கட்சிகளுக்குள்ளும் ஏற்படுத்தி உள்ளது.

பிரபாகரனுக்கு மட்டுமல்ல இப்போது சிதறுண்டு பகைவர்களாய் போயிருக்கும் அனைவருக்கும் இராவணன் சொன்ன " நாசம் வந்துற்ற போது நல்லதோர் பகையை பெற்றேன்". என்ற வரிகள் ஞாபகத்துக்கு வந்திருக்குமோ அல்லது வருமோ ?

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...