ஒரிரண்டு வாரங்களுக்கு முடக்குவதால் எதிர்பார்த்த பலன்கள் கிட்டாது


Dr. Sudath Samaraweera

மிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் நாட்டின் கொவிட் 19 தொற்று பரவுதலில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு, அதனைக் கட்டுப்பாடுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் முன்பாக உள்ள பொறுப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த விசேட நேர்காணல்…

கே: தற்போது நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை இத்தொற்றின் மூன்றாவது அலையெனச் சிலர் கூறுகின்றனர். அதனால் இவ்விடயத்திற்கு பொறுப்பானவரும் இது தொடர்பில் விசாலமான அனுபவத்தை பெற்றுள்ளவர் என்ற அடிப்படையிலும் இது தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: – ஆம். தற்போது இந்நாட்டின் கொவிட் 19 தொற்றில் ஏற்பட்டுள்ள நிலைமையை வைத்து இது மூன்றாவது அலையென எடுத்த எடுப்பில் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் இத்தொற்றுக்கு உள்ளான நோய் அறிகுறிகளைக் கொண்டவர்கள் அதிகளவில் பதிவாகின்றனர். குறிப்பாக தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளுக்கு சிகிச்சை பெற வருகை தருபவர்களிலும் இவ்வாறானவர்களை அதிகளவில் காண முடிகின்றது.

ஆனால் முதலிரு அலைகளின் போதும் இத்தொற்றுக்குள்ளாகியும் நோய் அறிகுறிகள் வெளிப்படாமல் நிறையப் பேர் அடையாளம் காணப்பட்டனர். அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோனைகள் மூலம் தான் இத்தொற்றுக்குள்ளாகி இருந்தவர்களை அப்போது அடையாளம் காண முடிந்தது. அவ்வாறான நிலைமை தற்போதில்லை.

நோய் அறிகுறிகளுடன் தான் நிறையப் பேர் இத்தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். இது ஏற்கனவே  பரவிய கொவிட் 19 தொற்றுக்கும் தற்போது பரவும் தொற்றுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் தற்போது இத்தொற்றுக்கு உள்ளாகின்றவர்களிடம் காய்ச்சல், தொண்டை வலி, நெஞ்சுவலி, மூச்செடுப்பதில் சிரமம், இருமல், தடிமல் போன்றவாறான அறிகுறிகளை பரவலாகக் காண முடிகின்றது. இதுவும் தற்போது பரவுவது ஏற்கனவே பரவிய கொவிட் 19 தொற்று அல்ல என்பதற்கு நல்ல உதாரணம்.  அத்தோடு இத்தொற்றின் முதலிரு அலைகளின் போதும் தினமும் ஆயிரத்துக்கும் குறைவானவர்களே தொற்றாளர்களாகப் பதிவாகினர். ஆனால் கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினமும் தொற்றாளர்களாகப் பதிவாகின்றனர். இந்த அவதானிப்புக்களின் படி தற்போது நாட்டில்  கொவிட் 19 தொற்றின் திரிபடைந்த வைரஸ் பரவுவது உறுதியாகியுள்ளது.

கே: அவ்வாறெனில் அவ்வைரஸ் தொடர்பில் குறிப்பிட முடியுமா?

பதில் – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்கள் மற்றும் மூலக்கூற்று அறிவியல் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் அடிப்படையில் தற்போது நாட்டில் பரவுவது பிரித்தானியாவில் திரிபடைந்த கொவிட் 19 தொற்றின் பி 117 என்ற வைரஸ் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பரவிய வைரஸை விடவும் வேகமாகப் பரவக்கூடியதாகும். அதாவது ஏற்கனவே பரவிய வைரஸை விடவும் 50 வீதம் வேகமாகப் பரவக்கூடியதாகவும் 55 வீதம் உயிராபத்து அச்சுறுத்தல் மிக்கதாகவும் விளங்குகின்றது தற்போதைய வைரஸ்.

கே: இது காற்றின் மூலம் பரவக்கூடிய வைரஸ் எனக்கூறப்படுகிறதே?

பதில் – இவ்வைரஸ் தொடர்பில் வெவ்வேறு விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இது தொடர்பில் இன்னும் உறுதியான அபிப்பிராயம் கிடையாது. ஆனால் எந்தவொரு வைரஸும் 100 வீதம் காற்றில் பரவுவதுமில்லை. 100 வீதம் எச்சில் மென் துளிகள் (Dropless) மூலம் பரவுவதுமில்லை. ஆனால் எமது அனுபவங்களின் படி இவ்வைரஸ் இன்னும் எச்சில் மென்துளிகள் மூலம் பரவுவதாகவே நம்புகின்றோம். இத்தொற்று திரிபடைந்துள்ள ஒன்றான போதிலும் அது காற்றின் ஊடாகப் பரவும் நிலையை அடைந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

கே: இத் திரிபடைந்த தொற்று நாட்டுக்குள் எவ்வாறு வந்து சேர்ந்திருக்கலாமெனக் கருதுகிறீர்கள்?  இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை இங்கும் தாக்கம் செலுத்தி இருக்குமெனக் கருதுகிறீர்களா?

பதில் – அப்படியில்லை. தற்போது இங்கு பரவுவது பிரித்தானியாவில் திரிபடைந்த வைரஸாகும். அது இந்தியாவின் ஊடாக இங்கு வந்ததா அல்லது  பிரித்தானியாவிலிருந்து நேரடியாக வந்ததா அல்லது வேறொரு நாடொன்றின் ஊடாக வந்ததா என்பதை எம்மால் உறுதியாகக்கூற முடியாதுள்ளது. இந்தியாவில் பிரித்தானியாவில் திரிபடைந்த கொவிட் 19 தொற்று மாத்திரமல்லாமல் அந்நாட்டில் திரிபடைந்த வைரஸும் பரவியுள்ளது.

ஆனாலும் கடந்த  தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் எமது மக்கள் கவனயீனமாக நடந்து கொண்டதன் வெளிப்பாடாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இத்தொற்றுக்கு உள்ளானவர்கள் பதிவாகும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. புத்தாண்டுக்கு முன்னர் நாம் வழங்கி வந்த வழிகாட்டல்களை மக்கள் உரிய முறையில் கடைபிடித்திருந்தால் இவ்வாறான நிலைமை நாட்டில் ஏற்பட்டிருக்காது.

கே: இத்தொற்றுக்குள்ளாகி வைத்தியாசலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நோயாளர்கள் வீடுகளில் வைத்தும் பராமரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறதே?

பதில் – தினமும் இத்தொற்றுக்கு  உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதால் அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் வைத்தியசாலைகளில் உள்வாங்க முடியாது. அதற்கு ஒரிரு நாட்கள் செல்லலாம்.  அக்காலப்பகுதியில் அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுகின்றனர். என்றாலும் அவர்கள் விரைவாக வைத்தியசாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவர்.

தற்போது எமது வைத்தியசாலைகளில் இடவசதிகள் உள்ளன. அவற்றில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் வசதிகளை விஸ்தரிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் எல்லா மாகாண சுகாதார தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு விரைவாக சேவை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கொத்தலால பாதுகாப்பு வைத்தியசாலையில் விஷேட தீவிர சிகிச்சை பிரிவு வசதியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை வைத்தியசாலையிலும் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு ஏனைய பிராந்திய வைத்தியசாலைகளின் வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இத்தொற்றுக்கான அறிகுறிகள் வெளிப்படாத தொற்றாளர்களைப் பராமரிக்கவும் தனியான வைத்தியசாலை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

கே: இத்தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் முழு நாட்டையும் முடக்கினால் தான் இதனை விரைவாகக் கட்டுப்படுத்தலாமென சிலர் கூறுகின்றனரே?

பதில – தற்போதைய சூழலில் இத்தொற்றுக்காக முழு நாட்டையும் முடக்க வேண்டிய தேவை இல்லை. தொற்றுக்கு உள்ளாவோர் அதிகளவில் பதிவாகும் பிரதேசங்களையும் கிராமங்களையும் மாத்திரம் தனிமைப்படுத்தவும் முடக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் செயற்பாட்டு நிலையில் இருக்க வேண்டும். மக்களின் அன்றாட தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் பாதிக்கப்பட இடமளிக்க முடியாது. அதனால் பிரதேச மட்டத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் முடக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இதனை வெற்றிகரமாக மேற்கொள்ளலாம். 

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிடுவது போன்று ஒரிரு வாரங்களுக்கு முழு நாட்டையும் முடக்கினாலும் கூட எதிர்பார்க்கும் பலன்களை அடைய முடியாது. அவ்வாறு முடக்கத்தான் வேண்டும் என்றால் சுமார் இரண்டு மாதங்களாவது முடக்க வேண்டும். அப்போது உரிய பிரதிபலன் கிடைக்கப்பெறும்.

கே: கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கான அஸ்ட்ரா செனகா (கொவிஷீல்ட்) தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளன. அது தொடர்பில் கூறுங்கள்?

பதில் – நாட்டில் 09 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இத்தடுப்பூசியின் முதல் சொட்டு வழங்கப்பட்டிருக்கின்றது. தற்போது  கையிருப்பிலுள்ள இத்தடுப்பு மருந்தைக் கொண்டு இரண்டாவது சொட்டு வழங்கப்படுகின்றது. இரண்டாம் சொட்டு வழங்க இன்னும் ஐந்து இலட்சம் சொட்டுகளுக்கு அவசியமுள்ளது. அவை கிடைக்கப்பெறுமென நம்புகின்றோம்.

இதேவேளை கொவிட் 19 தடுப்பு மருந்தில் ஒரு நிறுவனத்துடைய உற்பத்தியை முதல் சொட்டாக  வழங்கிய பின்னர் இரண்டாவது சொட்டாக  வேறொரு தடுப்பூசியை   வழங்க முடியுமா என்பது தொடர்பில் உலகலாவிய ரீதியில் தற்போது ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றின் முடிவு வெளியாகும் பட்சத்தில் அதனை அடிப்படையாகக் கொண்டு எம்மாலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இல்லாவிடில் இங்கு அஸ்ட்ரா செனகாவின் முதல் சொட்டைப் பெற்றுள்ளவர்களுககு சுமார் ஆறு மாதங்கள் கடந்த பின்னர் வேறொரு  தடுப்பூசியை  இரண்டு சொட்டுக்கள் வீதம் புதிதாக தடுப்பூசி வழங்குவது போன்று பெற்றுக்கொடுக்க வேண்டும். இரண்டு சொட்டுகளையும் குறிக்கப்பட்ட கால இடைவெளியில் பெற்றுக்கொடுப்பது அவசியம்.  அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது சொட்டை உரிய காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு ஆறு மாதங்களின் பின்னர் வேறு  தடுப்பூசியைப் புதிதாக வழங்குவது போன்று  பெற்றுக்கொடுப்பதால் பிரச்சினைகள் ஏற்படாது.

மேலும் ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் முதல் தொகுதி இவ்வாரம் எமக்குக் கிடைக்கப்பெறவிருந்தது. ஆனாலும் அந்நாட்டில் விஷேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரு வார காலத் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த வாரம் இத்தடுப்பூசி கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கின்றோம்.  அத்தோடு சினோபாம் தடுப்பூசி குறித்து உலக சுகாதார ஸ்தாபன கூட்டத்தில் கடந்த வாரம் சாதகமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதனால் இத்தடுப்பூசி தொடர்பில் அடுத்த வாரம் அங்கீகாரம் கிடைக்குமென  எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு அங்கீகாரம் கிடைக்கப்பெறுமாயின் அத்தடுப்பூசியை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிப்போம். ஆனால் இந்நாட்டிலுள்ள சீனப் பிரஜைகளுக்கு இத்தடுப்பூசியின் முதல் சொட்டு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு  தற்போது இரண்டாம் சொட்டும் வழங்கப்படுகின்றது.

கே: நிறைவாக நாட்டு மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவதென்ன?

பதில் – தற்போது பரவும் வைரஸ் முன்பு பரவியதைப் போன்றதல்ல.  அதனால் தற்போதைய சூழலில் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும். ஏனையவர்களை சந்திப்பதை முடிந்தளவு குறைத்துக்கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் பொருட்களைக் கொள்வனவு செய்யவோ, அலுவலகங்களுக்கோ செல்லும் போது சமூக இடைவௌியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல், கைகளை நன்கு கழுவிக் கொள்ளுதல் என்பவற்றில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

இக்காலப்பகுதியில்  எவருக்காவது இத்தொற்றுக்கான அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி, மூச்செடுப்பதில் சிரமம், நெஞ்சு வலி போன்றவாறானவை காணப்பட்டால் அவர்கள் வெளியில் செல்லாது உடனடியாக மருத்துவ ஆலோசனையுடன் பரிசோதனை செய்து கொள்ள  வேண்டும். அத்தோடு குளிரூட்டப்பட்ட அறைகளிலும் மூடிய இடங்களிலும் பணியாற்றுபவர்களும் இருப்பவர்களும்  முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் அவ்வாறான இடங்களில் சீரான காற்றோட்டம் இராது. அதனால் எவருக்காவது இத்தொற்று காணப்படுமாயின் அவ்வைரஸ் உள்ளே சுற்றியபடி ஏனையவர்களுக்கும் இலகுவாகப் பரவும்.  தற்போதைய சூழலில் அவ்வாறான இடங்களில் இருப்பதும் பணியாற்றுவதும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும்.  அதனால் அவ்வாறான மூடிய இடங்களிலும் அறைகளிலும் நன்கு காற்றோட்ட வசதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஜன்னல்களை திறந்து வைத்து அதற்கு ஏற்பாடு  செய்து கொள்ளத் தவறக்கூடாது. அத்தோடு  கூட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றவாறானவற்றை  மூடிய அறை மற்றும் இடங்களிலின்றி காற்றோட்டம் மிக்க திறந்த வௌிகளில் நடாத்துவது நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்.

ஆகவே கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான பிரதான சுகாதார வழிகாட்டல்களாக விளங்கும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களை உச்சளவில் பேணிக்கொள்வதில் ஒவ்வொருவரும் விஷேட கவனம் செலுத்த வேண்டும். அது தமக்கும் தம் குடும்பத்துக்கும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஆற்றும் பாரிய சேவையாக அமையும்.

பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்
தினகரன், 2021.05.02

Source: chakkram.com

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...