பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது?-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ


இஸ்‌ரேலின் அடாவடியால் பலஸ்தீனம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நிச்சயமின்மையே நிச்சயமாகிப்போன ஒரு சமூகத்தின், சொல்லொனாத் துயர்களின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது.   

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, காஸாவில் இஸ்‌ரேலிய விமானங்கள் குண்டுமழை பொழிந்து கொண்டிருப்பதாக, பதுங்கு குழிகளில் இருந்து பலஸ்தீனிய நண்பர்கள், மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.   

ஒரு தசாப்தகாலமாக நீடித்த அமைதி, முடிவுக்கு வந்துவிடுமோ என்று அரசியல் அவதானிகள் அஞ்சுகிறார்கள். சர்வதேச தலைவர்கள், இஸ்‌ரேலைத் தடவிக் கொடுத்தபடி கவலை வெளியிடுகிறார்கள்.   

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் உள்ளூர் அரசியல்வாதிகள், நடப்பதற்கும் தமக்கும் எதுவிதத் தொடர்புமில்லை எனும் தொனியில் அமைதி காக்கிறார்கள்.   

ஜெரூசலத்தில் இப்போது காணப்படும் பதற்றம் புதிதல்ல. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மிகவும் அமைதியாக இருந்த நிலத்தில், அண்மைய நிகழ்வுகள் உருவாக்கியிருக்கும் பதற்றம் பெரிது; கவலையளிக்கக் கூடியது. இரண்டு முக்கிய நிகழ்வுகள், இப்பதற்றத்துக்கு வழி கோலியுள்ளன.   

முதலாவது, பலஸ்தீனர்கள் வசிக்கும் மேற்குக்கரையில், அதிகளவான சட்டவிரோதமான இஸ்‌ரேலியக் குடியிருப்புகள் உருவாக்கப்படுவது தூண்டப்படுகிறது. தங்களது நிலங்களில், இஸ்‌ரேலியர்கள் அடாவடியாகக் குடியேறுவது, பலஸ்தீனியர்களின் பெரும் பிரச்சினையாக உள்ளது.   

இரண்டாவது, ரமழான் தொடங்கியது முதல், பலஸ்தீனியர்கள் வழிபடுவதற்கும் ஒன்றுகூடுவதற்கும் தொடர்ச்சியான தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வந்துள்ளன. இது பலஸ்தீனியர்களை வேண்டுமென்று ஆத்திரமூட்டும் செயல்.   
இவை இரண்டுக்கும் மட்டுமன்றி, இன்று பலஸ்தீனம் பற்றி எரிவதற்குக் காரணம், இஸ்‌ரேலின் அரசியல் எதிர்நோக்கும் நெருக்கடியுமாகும்.  

கிழக்கு ஜெரூசலத்தின் ஷேக் ஜராப் பகுதியில், பலஸ்தீனியக் குடியிருப்பாளர்கள் இஸ்‌ரேலிய சட்டவிரோத குடியேற்றவாசிகளோடு ஒரு நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இஸ்‌ரேலிய குடியேற்றவாசிகள், அந்த நிலம் வரலாற்று ரீதியாகத் தங்களுடையது என்றும், எனவே அங்கு குடியிருக்கும் பலஸ்தீனியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோருகிறார்கள். இந்தப் பிரச்சினை, பலஸ்தீனியர்களின் நிலம் தொடர்பான, முக்கியமான சிக்கலாகும்.   

 

அதிதீவிரத் தேசியவாத சியோனிச அமைப்புகளினதும் இஸ்‌ரேலிய நீதிமன்றின் ஆதரவுடனும் இஸ்‌ரேலிய குடியேற்றவாசிகள் அந்நிலத்துக்கு உரிமை கோருகிறார்கள். அவர்கள் 1948ஆம் ஆண்டுக்கு முன், இந்த நிலமானது யூத சமய அமைப்புக்குச் சொந்தமாக இருந்தது என்று வாதிடுகிறார்கள். 1970ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்‌ரேலியச் சட்டமானது, கிழக்கு ஜெரூசலமில் தங்கள் காணிகளை மீட்டுக்கொள்ளும் உரிமையை, இஸ்‌ரேலியர்களுக்கு வழங்குகிறது.   

ஆனால், அந்த உரிமை அங்கு வசிக்கும் பலஸ்தீனர்களுக்குக் கிடையாது. இதனால், 1948ஆம் ஆண்டு, இஸ்‌ரேலின் உருவாக்கத்தின் பின்னர் பலஸ்தீனியர்கள், இஸ்‌ரேலிடம் இழந்த நிலங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இஸ்‌ரேலியச் சட்டம் அதற்கு அனுமதிக்கவில்லை.  

1967ஆம் ஆண்டு ஜோர்டானிடம் இருந்து கைப்பற்றிய கிழக்கு ஜெரூசலமை, இஸ்‌ரேல் தனது பகுதியாக்கியதோடு, பலஸ்தீனியர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியது. அதன் தொடர்ச்சியே, இப்போது நடக்கின்றது. கிழக்கு ஜெரூசலமில், இஸ்‌ரேலியக் குடியேற்றங்களை அமைத்து, பலஸ்தீனியர்களை அங்கிருந்து அகற்றி, குடிசனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த இஸ்‌ரேல் முனைகிறது.   

இஸ்‌ரேலியர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ‘ஜெருசலேம் தினம்’, கடந்த 10ஆம் திகதி நினைவுகூரப்பட்டது. இது 1967ஆம் ஆண்டு, போரில் ஜோர்டானில் இருந்து கிழக்கு ஜெருசலேம் கைப்பற்றப்பட்டு, இஸ்‌ரேலுடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டதை இந்த நாள் குறிக்கிறது.   

இந்நாளில், சியோனிஸ்டுகள் பலஸ்தீனியர்களை இழிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். இம்முறையும் அதன் வழித்தடத்தில், வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம், ஜெரூசலேம் நகரின் அரபுக் குடியிருப்புப் பகுதிகளின் ஊடாகத் திட்டமிடப்பட்டது.   

திட்டமிட்ட இந்த ஊர்வலமானது, வன்முறையைத் தூண்டக்கூடும் என்றும் இதன் தாக்கம் மேற்குக் கரையிலும் காசாவிலும் பரவக்கூடும் என்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்திருந்தார்கள். 

இது இஸ்‌ரேலின் அரசியல் உயரடுக்குகளில் விவாதப்பொருளாகியது. இருந்தபோதும், திட்டமிட்டபடி ஊர்வலம் நடக்கும் என பொலிஸ் செய்தித்தொடர்பாளர் அறிவித்தார். ஊர்வலத்தில் ‘அராபியர்களுக்கு மரணம்’ என்ற கோசங்களோடு சியோனிஸ்டுகள், அராபியர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளினூடாக வலம் வந்தார்கள்.   

இதேவேளை, வெள்ளிக்கிழமை (07) முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமாகக் கொள்ளப்படும் அல்-அஸ்கா மசூதிக்குள், சப்பாத்துகளுடன் நுழைந்த இஸ்‌ரேலிய இராணுவத்தினர் அங்கிருந்தோரைத் தாக்கினார்கள். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை (09) இரவு தொழுகைகளுக்குப் பிறகு, பலஸ்தீனியர்கள் கூடுகின்ற டமாஸ்கஸ் வாசலின் அருகே, அங்கு கூடியிருந்த பலஸ்தீனியர்களுக்கு எதிராக, இராணுவத்தினர் வன்முறையில் இறங்கினார்கள். 

பலஸ்தீனர்கள் தினந்தினம் வன்முறைகளுக்கு ஆளாகிவரும் நிலையில், மேற்குலக நாடுகள், தங்கள் மறைமுக ஆதரவை இஸ்‌ரேலுக்கு வழங்குகிறார்கள். அமெரிக்கா, “வன்முறையைத் தணிக்க, இரு தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்” என்று கோருகிறது. ஏனைய மேற்குலக நாடுகளும், இதே தொனியிலேயே பேசுகின்றன. வன்முறையை மேற்கொள்வோரையும் ஆளாகுவோரையும் சமப்படுத்தும் செயலிலேயே, இந்நாடுகளின் அறிக்கைகள் அமைந்திருக்கின்றன.   

இஸ்‌ரேலின் செயல்கள், வேண்டுமென்றே திட்டமிட்டுப் பலஸ்தீனியர்களைக் கோபமூட்டி, வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளாகவே காணப்படுகின்றன. இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைப்பதற்காக, இச்செயல்களைச் செய்கிறார் என, இஸ்‌ரேக்குள் இருக்கும் முற்போக்குச் சக்திகள் குற்றம் சாட்டுகின்றன.   

கடந்த இரண்டாண்டுகளில், இஸ்‌ரேலியப் பாராளுமன்றமான கினசட்டிற்கான தேர்தல், நான்கு முறை நடைபெற்றுள்ளது. நான்கு தடவையும் எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.   

இறுதியாகத் தேர்தல், 2021 மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது. எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில், ஜனாதிபதி ஆட்சியமைக்கும் முதல் வாய்ப்பை, அதிகளவான ஆசனங்களைப் பெற்ற பிரதமர் நெத்தன்யாகுவுக்கு வழங்கினார். மே மாதம் நான்காம் திகதிக்குள் அவர் பாராளுமன்றப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆனால், இறுதித் திகதிக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.   

இந்நிலையில், ஆட்சியமைக்கும் வாய்ப்பை ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் யயிர் லப்பிட்டுக்கு வழங்கியுள்ளார். அவர், அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜூன் இரண்டாம் திகதி வரை, கால அவகாசம் உண்டு.   

லப்பிட்டு ஆட்சி அமைப்பதற்கு, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள பலஸ்தீனியப் பிரதிநிதிகளின் ஆதரவு வேண்டும். லப்பிட்டுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை, ஜனாதிபதி வழங்கியது முதலே, பலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.   

திங்கட்கிழமை (10) பாராளுமன்றில் உள்ள பலஸ்தீன உறுப்பினர்களுக்கும் லப்பிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்ற செய்திகள் வரத் தொடங்கிய பின்னணயிலேயே, பலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறைகள் புதிய கட்டத்தை எட்டின. எதிர்வரும் ஜூன் இரண்டாம் திகதிக்குள், லப்பிட் ஆட்சியமைக்காத பட்சத்தில், இன்னொரு தேர்தல் வருவது தவிர்க்க இயலாதது. இன்னொருவர் பிரதமராகுவதை, நெத்தன்யாகு விரும்பவில்லை. எனவே, அதற்கு முட்டுக்கட்டை போட்டு, இன்னொரு தேர்தலுக்கு வழிகோல அவர் விரும்புகிறார்.   

இதற்கிடையில், பலஸ்தீனர்களைத் தூண்டி, அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, அதன் மூலம் கிடைக்கின்ற பெயரைப் பயன்படுத்தி, அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று நெத்தன்யாகு நினைக்கிறார். அவருக்குச் சாதகமான திசையிலேயே நிகழ்வுகள் நடக்கின்றன.   

இதேவேளை, பலஸ்தீன அதிகார சபையின் தலைவராக இருக்கின்ற முஹமட் அப்பாஸ், எதிர்வரும் 22ஆம் திகதிக்குத் திட்டமிடப்பட்டிருந்த தேர்தலை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.   

2006​ஆம் ஆண்டுக்குப் பிறகு, பலஸ்தீனத்தில் தேர்தல்கள் நடைபெற இருந்தன. இம்முறை தேர்தலில் அப்பாஸின் பத்தா கட்சி, தோல்வியடைவது உறுதி என்ற நிலையில் இம்முடிவு எட்டப்பட்டது. இத்தேர்தலில், எதிர்க்கட்சியும் காசா பகுதியை ஆட்சிசெய்வதுமான ஹமாஸ் வெற்றிபெறுவது உறுதியாகவுள்ள நிலையில், இம்முடிவு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

பலஸ்தீனர்கள் உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவையும் தார்மிக ஒருமைப்பாட்டையும் வேண்டி நிற்கிறார்கள்.   

ஈழத்தமிழரை இஸ்‌ரேலியர்களுடன் அபத்தமாக ஒப்பிடுபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். நமது ஒற்றுமைகள், இஸ்‌ரேலியர்களுடனா அல்லது பலஸ்தீனர்களுடனா என்பதை முதலில் முடிவு செய்வோம்.

 Courtesy: tamilmirror.lk

No comments:

Post a Comment

US military basing to expand in Australia, directed against China -by Mike Head

  This week’s announcement of a new Australia-UK-US (AUKUS) military alliance, with the US and UK to supply Australia with nuclear-powered s...