கனடாவில் முன்னாள் சுதேசிகள் பாடசாலை வளவில் 215 குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!


னடாவின் உறைவிடப் பாடசாலைகள் (Residential School) 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பழங்குடி சிறுவர்கள் வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அரசாங்கமும் மத அதிகாரிகளும் நடாத்திய கட்டாய உறைவிடப் பாடசாலைகளாக இருந்தன.

கனடாவின் கம்லூப்ஸ் இந்தியன் உறைவிடப் பாடசாலை (Kamloops Indian Residential School) அமைப்பில் மிகப்பெரியது. 1890 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் திறக்கப்பட்ட இந்தப் பாடசாலையில் 1950 களில் 500 மாணவர்கள் இருந்தனர்.

1969 ஆம் ஆண்டில் மத்திய அரசு பாடசாலையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது, 1978 ஆம் ஆண்டு வரை – அது மூடப்படும் வரை – உள்ளூர் மாணவர்களுக்கான இல்லமாக செயல்பட்டது.

சுமார் 1863 முதல் 1998 வரை, 150,000 க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரித்து அழைத்துச் செல்லப்பட்டு, இந்த பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் சுதேசிய மொழியைப் பேசவோ அல்லது அவர்களின் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கவோ அனுமதிக்கப்படவில்லை, மேலும் பலர் தவறாக நடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்.

1978 ஆம் ஆண்டில் கனடாவில் உள்ள கம்லூப்ஸ் இந்தியன் உறைவிடப் பாடசாலை மூடப்பட்டது. மூடப்பட்ட இந்தப் பாடசாலையில் 215 மாணவர்களின் உடல்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டிருப்பது என்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் அனைவரும் பூர்வீகக் குடியின குழந்தைகள் என்பதும், பெரும்பாலானோர் 3 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் என்ற அமைப்பினர், இவ்வாறு காணாமல் போன மற்றும் உயிரிழந்த சுமார் 4100 குழந்தைகளின் உடல்களை தற்போதுவரை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் குழந்தைகள் எவ்வாறு உயிரிழந்தனர்? எதற்காக கொல்லப்பட்டனர் என்பது குறித்து சரியான தகவல் இல்லை.

கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் கனடாவின் உறைவிடப் பாடசாலைகளில் பழங்குடி குழந்தைகளை அவர்களது குடும்பங்களிலிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து கலாச்சார இனப்படுகொலை செய்வது தொடர்பாக 2015 ஆம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

1840 கள் முதல் 1990 கள் வரை ஒட்டாவா (Ottawa) சார்பாக கிறிஸ்தவ தேவாலயங்களால் நடத்தப்படும் பாடசாலைகளில் படித்த 150,000 குழந்தைகளில் பலர் அனுபவித்த கொடூரமான உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் வன்முறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற அட்டூழியங்களை அவர்கள் அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் தாக்கங்களை ஆவணப்படுத்த 2008 இல் தொடங்கப்பட்ட கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் ஏராளமான பழங்குடி குழந்தைகள் தங்கள் வீட்டு சமூகங்களுக்கு திரும்பவில்லை என்பதைக் கண்டறிந்தது.

இந்தப் பாடசாலையில் படிக்கும் போது 4,100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துவிட்டதாக அது கண்டறிந்தது. ஒரு காலத்தில் கனடாவின் மிகப் பெரிய தங்கி படிக்கும் பாடசாலையாக இருந்த அதன் மைதானத்தில் புதைக்கப்பட்டு, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட 215 குழந்தைகளின் இறப்புகள், இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதும், எங்கும் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக 2008 ஆம் ஆண்டில், கனடா அரசாங்கம் முறையாக மன்னிப்பு கோரியது.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வெளியிட்டுள்ள டுவிட்டரில் ‘இந்த செய்தி என் இதயத்தை உடைக்கிறது – இது நம் நாட்டின் வரலாற்றின் இருண்ட மற்றும் வெட்கக்கேடான அத்தியாயத்தின் வலிமிகுந்த நினைவூட்டலாகும்’ எனக் கூறியுள்ளார்.

 Courtesy: vaanavil.May 2021

No comments:

Post a Comment

Oxfam report “Inequality Kills”: Billionaires racked up wealth while millions died during the pandemic by Kevin Reed

  The global charity Oxfam released a briefing on Monday entitled “Inequality Kills” in advance of the World Economic Forum State of the Wor...