லகம் இரண்டு உலக மகாயுத்தங்களை கண்டுள்ளது.

முதலாவது உலக யுத்தம் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான நாடுகளைப் பங்குபோடும் ஆதிக்கப் போட்டியினால் எழுந்தது.

இரண்டாம் உலக யுத்தம் முதலாம் உலக யுத்தத்தைவிட சற்று வித்தியாசமானது. இரண்டாம் உலக யுத்தம் ஹிட்லரின் நாஜி ஜெர்மனி, முசோலினியின் பாசிஸ இத்தாலி, யப்பானிய ஏகாதிபத்தியம் என்பனவற்றின் நாடு பிடிக்கும் ஆசையை ஒருபுறம் கொண்டிருந்த அதேவேளையில், உலகின் முதல் சோசலிஸ நாடான சோவியத் யூனியனை அழிப்பதை இன்னொரு நோக்கமாகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால், இரண்டு உலக யுத்தங்களையும் ஏகாதிபத்திய – முதலாளித்துவ நாடுகள் என்ன நோக்கத்துக்காக ஆரம்பித்தனவோ அந்த நோக்கங்களை அவற்றால் அடைய முடியவில்லை.

இரண்டாம் உலக யுத்தம் உலகை ஆக்கிரமிக்க புறப்பட்ட ஹிட்லர் தலைமையிலான அணியை முற்றாக ஒழித்துக்கட்டியதுடன், கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் புதிய சோசலிஸ அரசுகள் அமையவும் வழிவகுத்தது. அதுமட்டுமின்றி, இரண்டாம் உலக யுத்தத்தைப் பயன்படுத்தி பல ஆசிய – ஆபிரிக்க – இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்று வந்த தேசிய விடுதலைப் போராட்டங்கள் தமது தேசிய விடுதலையை வென்றெடுத்தன. அதன் மூலம் ஏகாதிபத்திய – முதலாளித்துவ உலகம் பலவீனம் அடைந்தது.

இரண்டாம் உலக யுத்த முடிவில் நாடுகளுக்கிடையில் மோதல்கள் உருவாவதை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்காகவும், உலக சமாதானத்தைப் பேணுவதற்காகவும் உலக நாடுகளின் பொது அமைப்பான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டது.

ஆனாலும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்’ என்று சொல்லப்பட்ட பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அமெரிக்கா உலகின் முதல்நிலை ஏகாதிபத்தியமாக உலகில் எழுந்தது.

அமெரிக்கா ஐ.நாவின் தீர்மானங்களுக்கோ மற்றைய நாடுகளின் வேண்டுகோள்களுக்கோ எவ்வித மதிப்பும் அளிக்காமல் நாடுகளின் தேசிய சுதந்திரம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு என்பனவற்றை காலில் போட்டு மிதித்தவண்ணம் பல நாடுகளில் ஆக்கிரமிப்பு யுத்தங்களை அரங்கேற்றியதுடன், பல நாடுகளில் சதி சூழ்ச்சிகள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் நடத்தியது.

குறிப்பாக கொரியாவிலும், இந்தோ சீனத்திலும் (வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும்) அமெரிக்கா ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஈடுபட்டது. இந்த நாடுகளில் சோசலிஸ அரசுகள் தோன்றக்கூடாது என்ற ஒரேயொரு நோக்கத்தை மையமாக வைத்தே அமெரிக்கா இந்த நாடுகளில் ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஈடுபட்டது.

 அதுமட்டுமின்றி, உலகின் முதலாவது சோசலிஸ நாடான சோவியத் யூனியனுடன் அமெரிக்கா தொடர்ச்சியாக ‘பனிப்போரில்’ ஈடுபட்டதுடன், புதிதாகத் தோன்றிய இன்னொரு சோசலிஸ நாடான சீனாவுடனும் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

சோவியத் யூனியனில் ஸ்டாலின் மறைவிற்குப் பின்னர் குருசேவ் தலைமையிலான நவீன திரிபுவாதக் கும்பலால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முதலாளித்துவ மீட்சி அமெரிக்காவுக்கு வாய்ப்பாகிப் போனதால் அங்கு ஏகாதிபத்திய சக்திகள் விரும்பியவாறு முதலாளித்துவ சக்திகளின் அரசு தோன்றியது.

ஆனாலும் அந்த அரசு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அணியுடன் கூட்டுச் சேர்வதற்குப் பதிலாக தனது நாட்டின் தேசிய சுதந்திரம், இறைமை என்பனவற்றைப் பாதுகாக்கும் நோக்குடன் அமெரிக்கா தலைமையிலான அணிக்கு எதிராகவே செயற்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஏகாதிபத்திய சக்திகளால் பழைய சோவியத் யூனியனின் பல குடியரசுகள் தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டாலும் கூட, இன்றைய ரஸ்யா இன்னமும் பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பலமாகத் திகழ்வதுடன், அமெரிக்கா தலைமையிலான சக்திகளுக்கு ஒரு சவாலாகவும் இருக்கின்றது.

ரஸ்யாவின் இன்றைய பலத்துக்கு உதாரணமாக சிரியப் பிரச்சினையைப் பார்க்கலாம். ஈராக்கிலும், லிபியாவிலும் தமக்கு விரோதமான அரசுகளை இராணுவ நடவடிக்கைகள் மூலம் கவிழ்த்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சக்திகள், சிரியாவிலும் ஆஸாத் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் கூலிப்படையினர் மூலமாகவும், சில நேரடி நடவடிக்கைகள் மூலமாகவும் முயன்றனர். ஆனால் ஆஸாத்தின் அரசுக்கு ரஸ்யா வழங்கி வரும் உறுதியான ஆதரவு காரணமாக அமெரிக்காவின் திட்டம் தவிடுபொடியாகியுள்ளது.

இந்த நிலைமையில்தான், மேற்கு நாடுகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சீனாவில் மாஓவின் மறைவின் பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டெங் சியாவோபிங் தலைமையிலான அரசு பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளதுடன், எதிர்காலத்தில் அமெரிக்காவை முந்திச் செல்லும் பாதையிலும் முன்னேறி வருகிறது.

அதுமாத்திரமல்லாமல், உலகின் பலம் வாய்ந்த இரண்டு நாடுகளான ரஸ்யாவுக்கும் சீனாவுக்குமிடையிலான தந்திரோபாய ரீதியிலான நட்புறவுக் கூட்டு முழு ஏகாதிபத்திய சக்திகளுக்கும் பெரும் சவாலாகவும் எழுந்துள்ளது. அதன் காரணமாக முழு ஏகாதிபத்திய முகாமும் என்ன செய்வது என்று தெரியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றி மாஓ ஒருமுறை குறிப்பிட்டது போல, ‘ஏகாதிபத்தியவாதிகளும் சகல பிற்போக்காளர்களும் போரிடுவது தோல்வியடைவது, மீண்டும் போரிடுவது மீண்டும் தோல்வியடைவது, இதுவே அவர்களது தலைவிதி’ என்பதற்கிணங்க, தற்போதைய உலக நிலைமையிலும் அதையே ஏகாதிபத்தியவாதிகள் செய்து வருகின்றனர்.

 

அவர்கள் ஒரு பக்கத்தில் நேட்டோபடைகளையும் நவீன போர்க் கருவிகளையும் ரஸ்ய எல்லையில் வகைதொகையில்லாமல் குவித்து ரஸ்யாவைத் தாக்குவதற்குத் தயாராகி வருகின்றனர். மறுபக்கத்தில் ‘குவாட்’ போன்ற இராணுவ அமைப்புகளை உருவாக்கி சீனா மீது போர் தொடுக்கவும் தயாராகி வருகின்றனர். அத்துடன் சீனாவை உள்ளிருந்தே சிதைப்பதற்காக சிங்கியாங் பிரச்சினை, ஹொங்கொங் பிரச்சினை, திபெத் பிரச்சினை என்பனவற்றையும் உருவாக்கி வருகின்றனர்.

ஏகாதிபத்திய சக்திகளின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் அவர்கள் அழிவின் விளிம்பில் இருப்பதன் அறிகுறிகள். தமது அழிவை முன்னைய இரண்டு உலக யுத்தங்களைப் போல ஒரு மூன்றாம் உலக யுத்தத்தை நடத்தி தடுத்துவிடலாம் என அவர்கள் கனவு காணுகின்றனர். ஆனால் யதார்த்தம் அவ்வாறு இருக்கப்போவதில்லை.

ஏகாதிபத்தியவாதிகள் சீனாவுடனும், ரஸ்யாவுடனும் ஒரு போரை ஆரம்பித்தால் அது அந்த இரு நாடுகளுடனான போராக மட்டும் இருக்கப்போவதில்லை. அந்தப் போர் சீனா, ரஸ்யா, வட கொரியா, வியட்நாம், கியூபா, வெனிசூலா, பாலஸ்தீனம் போன்ற நாடுகள் உட்பட வேறு பல உலக நாடுகளுடனான, முழு உலக மக்களுடனான போராகவே இருக்கும்.

அதுமாத்திரமல்ல, அப்படியான ஒரு போரை ஏகாதிபத்தியவாதிகள் வலிந்து ஆரம்பித்தால், அந்தப் போர்தான் அவர்களுக்கு இறுதிச் சமாதி கட்டும் போராகவும் நிச்சயம் இருக்கும்.

Source: vanavil 125  may 2021