கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் காலமானார்-வெ.நீலகண்டன் -அ.குரூஸ்தனம்


மிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர், தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் என அன்போடு அழைக்கப்படுபவரும், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan) இன்று (17.05.2021) உடல்நலக்குறைவால் தனது 98வது வயதில் காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில் வசதியான குடும்பத்தில் (1922) பிறந்தவர். ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் என்பது முழுப்பெயர். இதைச் சுருக்கி, கி.ராஜநாராயணன் என்று வைத்துக் கொண்டார். தந்தை விவசாயி.

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். பிறகு, விவசாயம் பார்த்து வந்தார். 40 வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினார். ‘மாயமான்’ என்ற முதல் சிறுகதை 1958-ல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. வாசகர்களிடம் அது பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார்.

கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார்.

வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டிருந்தார். வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கிக்கொண்டவர்.

பிரபல இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 2007-ல் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக வெளியானது. 2009-ல் மட்டும் இவரது 30 புத்தகங்கள் வெளி வந்தன. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

*சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல்கள், 6 கட்டுரைத் தொகுதிகள், 3 நாவல்கள் எழுதியுள்ளார். ‘கோமதி’, ‘கண்ணீர்’, ‘கரிசல் கதைகள்’, ‘கி.ரா.பக்கங்கள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘கொத்தைபருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘புதுமைப் பித்தன்’, ‘மாமலை ஜீவா’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

‘கிடை’ என்ற இவரது குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘‘ஒரே மூச்சில் ஒரு கதையை எழுதி முடிக்கும் வழக்கம் எனக்கு கிடையாது. எழுதியதைப் படித்து, மீண்டும் மீண்டும் அடித்துத் திருத்தி எழுதும் பழக்கம் உள்ளவன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார். நல்ல இசைஞானம் கொண்டவர். நண்பர்களுக்கு நீண்ட கடிதங்கள் எழுதுவார். அவர்கள் எழுதும் பதில் கடிதங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பார்.

கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக இவருக்கு 1991-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கியச் சாதனை-2016 சிறப்பு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

“அந்தக் கட்சிக்காகப் பாடுபட்டேன்… அவங்களால் வீழ்ந்தேன்!”- கலங்கும் கி.ராஜநாராயணன்

வெ.நீலகண்டன்
-அ.குரூஸ்தனம்

தொழில்நுட்பமெல்லாம் வருமய்யா… வந்துக்கிட்டேதான் இருக்கும். ரயில் வரும்போது அப்படித்தானே எல்லாரும் நினைச்சிருப்பாக. தொழில்நுட்பத்துல ஜனங்களுக்கு நல்லது வரும். கண்டுபிடிச்சவனுக்கு பேராசை வந்துட்டா தீங்கும் வரும்.”

கி.ராஜநாராயணனுக்கு உ.வே.சா விருது வழங்கியிருக்கிறது தமிழக அரசு. மூட்டை முடிச்சுகளிலும் பரண்களிலும் கிடந்து உழுத்துப்போன அபூர்வ ஓலைச்சுவடிகளை மீட்டு பாதுகாத்து ஆவணப்படுத்திய உ.வே.சாவின் பெயரில் கி.ராவுக்கு விருது வழங்கியது மிகவும் பொருத்தம். கரிசல் காட்டு மண்ணில் படிந்து கிடக்கும் வாழ்க்கையையும், பண்பாட்டையும் தேடியெடுத்து ஆவணப்படுத்தி இலக்கியமாக்கியவர் கி.ரா. எழுதியும் பேசியும் தீராக்கதைகளை சுமந்துகொண்டிருக்கும் இந்த 98 வயது தமிழ் தாத்தாவைச் சந்திப்பது இனிய அனுபவம். அந்த அபூர்வ தருணம் சமீபத்தில் வாய்த்தது.

பாண்டிச்சேரி அரசு அலுவலர் குடியிருப்பில், மெல்லிய குளிர் நிரம்பிய அறையில் தவிலில் தோய்ந்த நாகஸ்வர இசையைக் கேட்டு ரசித்தபடி படுத்திருந்தார் கி.ரா. எங்களைக் கண்டதும், லேசாக படுக்கையை மேலேற்றி வசதியாக சாய்ந்து அமர்ந்துகொண்டு, “அண்டரெண்டப் பட்சி படிச்சியளா?” என்றார்.

“ஏன் அண்டரெண்ட பட்சியை அச்சுக்குக் கொண்டுபோகவில்லை… கையெழுத்துப் பிரதியாக மட்டுமே பரவிக்கொண்டிருக்கிறதே?” என்றேன்.

“அதை எல்லார்கிட்டயும் கொண்டு போய் சேர்க்கனும்லா… அச்சுக்குப் போனா ஆகுமா? இப்போ கமலஹாசன்கூட படிச்சிருக்காரே… ஏதோவொரு நிகழ்ச்சியில அதைப் பத்தி பேசினதா சொன்னாங்க” என்கிற கி.ரா, எதைப்பற்றிப் பேசினாலும், ராமாயணமும் மகாபாரதமும் தளும்ப தளும்ப நிறைந்திருக்கிறது. பேசும் விஷயத்துக்குப் பொருத்தமாக அவற்றுக்குள் இருந்து ஓர் பாத்திரத்தை, சம்பவத்தை உதாரணமாக்குகிறார்.

“கொரோனாவால் உலகமே முடங்கிப்போச்சு. குறிப்பா முதியவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டியதாகிடுச்சு… நீங்க எப்படி தனிமையை எதிர்கொண்டீங்க?”

“இசை தெரிஞ்சவனுக்கு ஏதய்யா தனிமை… அது துணைக்கிருக்குமே… எழுதத் தெரிஞ்சவன், படிக்கத் தெரிஞ்சவனுக்கெல்லாம் தனிமையே தெரியாது. இதெல்லாம் வரும்… போவும்… நிறைய பாத்துருக்கேன். எவ்வளவோ விஷயங்கள் வந்து போயிருக்கே… ஒவ்வொரு அறுபது வருஷத்துக்கும் ஒரு தாது வருஷம் வரும். அதோட சேர்த்து பஞ்சமும் வரும். அய்யோ தாது வருஷம் வந்திருச்சேன்னு எல்லாரும் பயப்படுவாங்க. 98 வயசாயிருச்சுல்ல… ரெண்டு தாது வருஷப் பஞ்சத்தைப் பாத்திருக்கேன். அதோடவா இது பெரிசு…

மழை காலத்துலக்கூட வானம் இறங்காது. மக்களெல்லாம் தஞ்சாவூர் பக்கம் பஞ்சம் பிழைக்க நடப்பாங்க. போற வழியிலேயே செத்துப்போவாங்க. ரொம்பக் கொடுமை… வானம் இறங்காம கொன்னது ஒரு பக்கம், அடைப்பெடுத்தும் கொல்லும். 60 நாள், 90 நாளெல்லாம் விடாமப் பெய்யும். மழைக்காலம் வரப்போகுதுன்னா, பெரிய சம்சாரி வீட்டாளுக காட்டுல உள்ள கருவை, உடை மரங்களையெல்லாம் வெட்டிக் காயப்போட்டு அடுப்புக்கு மேல அடுக்கி தீதாங்கி போட்ருவாங்க. கொடியடுப்புல எப்பவும் ரசம் சூடா இருக்கும். அடுப்போட இன்னொரு வாயில பெரிய பானையில தண்ணி கொதிச்சுக்கிட்டே இருக்கும். வீட்டுல கங்கு அணையாது. வருமானம் இல்லாத எளியவுகதாம் தவிச்சுப்போவாக. அந்த துயரத்தோடல்லாம் ஒப்பிடும்போது இதெல்லாம் ஒண்ணுமில்லையா…” சிரிக்கிறார் கி.ரா.

“கிடை நாவல் சினிமாவானது. அதுக்குப்பிறகு உங்கள் நாவல்களோ, சிறுகதைகளோ திரைப்படமாகலேயே?”

“குழந்தைகளுக்காக பிஞ்சுன்னு ஒரு கதை எழுதினேன். ஆனா, அந்தக் கதையை குழந்தை எழுத்தாளர்களோ, விமர்சகர்களோ கண்டுக்கவேயில்லை. என்னோட பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த எடிட்டர் லெனின், என் பாக்கெட்டுல ஒரு பணக்கட்டை வச்சு ‘பிஞ்சு கதைக்காக என் அட்வான்ஸ்’ன்னு சொன்னார். சீக்கிரமே அது படமாகப்போகுதுன்னு சொல்றாங்க. நிறைய சினிமாக்காரங்க நான் எழுதின விஷயங்களை எடுத்துப் பயன்படுத்திக்குவாங்க. ‘ஏன் நீங்க இதையெல்லாம் கேட்க மாட்டேங்கிறீங்க’ன்னு சிலபேர் என்கிட்ட கேப்பாங்க. ‘அடப்போப்பா… இல்லேன்னு தான் என்கிட்ட இருந்து எடுக்குறாங்க. எடுத்துக்கட்டும் விடுங்க’ன்னு உதறிட்டுப் போயிருவேன்.

வெத்திலை மாத்துறதுன்னு ஒண்ணு உண்டு. அதுபத்தி முன்னால எழுதியிருக்கேன். அதை ஒரு படத்துல பாத்தேன்… அதுல ஹீரோ தான் மென்னுக்கிட்டிருக்கிற வெத்திலையை அந்த ஹீரோயினுக்கு நாக்கால ஊட்டுவாரு… அதுவாய்யா வெத்திலை மாத்துறது. நல்ல கொழுந்து வெத்திலை… சரி விகிதத்துல பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடணும். நல்லா செக்கச் சிவப்பா மாறும்போது ஒரு சுகந்தமான வாசனை வரும். அந்த நேரத்துல ஆணோ, பெண்ணோ தாய்ப்பறவை குஞ்சுக்கு ஊட்டுறமாதிரி மென்னுக்கிட்டிருக்கிற வெத்திலையை நுனி நாக்கால ஊட்டிக்குவாக.. அதெல்லாம் தனி சுகம்யா…”

கண்கள் சொருக சிலாகிக்கிறார் கி.ரா. “நீங்க எப்பவாவது வெத்திலை மாத்திருக்கியளா?” கேட்டு சிரிக்கிறார்.

“இந்த இடத்துல நின்னு பாக்கும்போது மனுஷ வாழ்க்கை பத்தின மதிப்பீடு என்னவா இருக்கு?” என்றேன்.

முகம் மாறுகிறது. சிறு யோசனைக்குப் பிறகு பேசுகிறார்.

“மனுஷனோட வாழ்க்கையை யார் மதிப்பீடு பண்ண முடியும். அப்படி மதிப்பீடு பண்ணிட்டா சொல்லவே விஷயமிருக்காதே… மனுஷ வாழ்க்கை மட்டுமில்ல… எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது. ஒரு விஷயத்தை மதிப்பீடு பண்ணி முடிச்சு வச்சிருப்போம். எவனாவது ஒருத்தன் வந்து அது தப்புன்னு சொல்லுவான். இன்னொருத்தன் வந்து அவன் சொன்னதையும் மறுப்பான். எது நிஜம் எது பொய்யுன்னு எளிதா கண்டுபிடிக்க முடியாது… வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதுதான்…”

கி.ராவுக்கு சூப் வருகிறது. ரசித்துப் பருகுகிறார்.

“கம்யூனிஸ்ட் கட்சியில தீவிரமா செயல்பட்டிருக்கீங்க… விவசாய சங்கப் போராட்டங்கள்ல கைதாகி சிறைக்கும் போயிருக்கீங்க… இப்போ அரசியலைக் கவனிக்கிறீங்களா?”

கி.ராவின் முகம் இறுக்கமாகிறது. “இன்னைக்கு நினைச்சுப் பாத்தா எல்லாம் பைத்தியக்காரத்தனமா இருக்கு. அரசியல்ல நல்லவங்க அருகிட்டாங்க. இடதுசாரிகளோட செயல்பாடும் திருப்தியா இல்லை. இடதுசாரிகள் நாட்டுக்குத் தேவை. ஆனா அவங்க ஆள ஆசைப்படக்கூடாது. ஆள்றவனுக்கு சுயநலம் வந்திடும். ரஷ்யாவுல 70 ஆண்டுகள்தான் இடதுசாரிகளால நிற்கமுடிந்தது. நாங்க வந்தா தேவலோகமா இருக்கும்னு சொன்னோம். நடக்கலேயே… ஏன்… தத்துவத்துல பிரச்னையில்லை… வழிநடத்துனவங்களோட பிரச்னை. இங்கே மனுஷங்களோட போக்கு சரியில்லை. வாழ்நாள் பூரா அந்தக் கட்சிக்குப் பாடுபட்டேன்… வீழ்ந்தேன்…”

அமைதியாகிறார்.

“கடிதங்களுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தது உங்களால்… தொழில்நுட்பம் கடிதங்களையே இல்லாமல் செஞ்சிருச்சே”

சிரிக்கிறார் கி.ரா.

“அந்தக் காலத்துல நிறைய கடிதங்கள் எழுதினேன். இப்போ அதுக்கான தேவைகளே இல்லாமப்போச்சே… யாருக்கு எழுதுவேன். வயசு ஆக ஆக நோய்கள் வந்து தாக்குது. திடீர்னு இடதுபக்கம் ஒன்னுமில்லாமப் போச்சு. ஸ்ட்ரோக் வந்து செயலிழந்து விழுந்துட்டேன். அதிர்ஷ்டவசமா மருந்து மாத்திரைகளால பிழைச்சிருக்கேன். சங்கீதம் கேட்டு ஆனந்தப்பட்டுக்கிட்டிருக்கேன். நினைச்சதை எழுதுறேன். முன்னாடி எழுதினதையெல்லாம் திரும்பவும் பரிசீலிக்கிறேன். இதை இப்பிடி எழுதியிருக்கலாமோன்னு நிறைய விஷயங்கள் தோணுது…”

கி.ரா எப்போதும் மனம் திறந்து பேசக்கூடியவர். எழுதும்போதும் அப்படித்தான்.

“தொழில்நுட்பமெல்லாம் வருமய்யா… வந்துக்கிட்டேதான் இருக்கும். ரயில் வரும்போது அப்படித்தானே எல்லாரும் நினைச்சிருப்பாக. தொழில்நுட்பத்துல ஜனங்களுக்கு நல்லது வரும். கண்டுபிடிச்சவனுக்கு பேராசை வந்துட்டா தீங்கும் வரும். எல்லாம் சேர்ந்ததுதான் மனுஷ வாழ்க்கை. அய்யோ இப்படி நடக்குதேன்னு எதுக்காகவும் பதறவேண்டிய அவசியமில்லை.” என்கிறார் கி.ரா.

“வயலின் வாசிப்பீங்கன்னு தெரியும்… இப்போவும் வாசிக்கிறதுண்டா?”

”சின்ன வயசுல வயலின் கத்துக்கிட்டேன். இப்போ எங்கே வாசிக்கிறது… நாகஸ்வரத்து மேல ஆர்வம் உண்டு. அது ராட்சச வாத்தியம். அதை எளிமைப்படுத்தனும்ன்னு ஒரு ஆசை உண்டு. கோயில்ல தேர் புறப்படுறதுக்கு முன்னால சீவாளியை சொருகி கச்சின்னு ஒரு வாத்தியம் வாசிப்பாங்க. கொஞ்சம் எளிமையா இருக்கும். அந்த வாத்தியத்தைக் கொஞ்சம் நீளமாக்கி வாசிக்கலாமேன்னு முயற்சி செஞ்சேன். நமக்கு ஒலிதானே முக்கியம். நாகஸ்வரத்துல இருந்து வந்தா என்ன, கச்சியில இருந்து வந்தா என்ன? இனிமே அதைத் தொடரமுடியுமா தெரியலே…”

இசை பற்றிப்பேசும்போது கி.ரா கண்களில் ஒளி மின்னுகிறது.

“ஏழாம் வகுப்பு மட்டுமே படிச்ச கி.ரா. புதுவை பல்கலைக்கழகத்தில பேராசிரியர்… அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்க.”

“ஏழாவது வரைக்கும் பள்ளிக்கூடம் போனேனே தவிர, படிக்கல. அட்டென்டண்ஸ் கொடுக்கிறதோட கி.ரா வகுப்பறையிலயே இருந்ததில்லை. துணைவேந்தரா இருந்த வெங்கடசுப்ரமணியம் ஒருநாள் வந்து, யுனிவர்சிடிக்கு சிறப்பு பேராசிரியரா வரணும்ன்னு கூப்பிட்டார். நான் முடியாதுன்னுட்டேன். ஏன்னா, ‘கல்லூரி வகுப்புகள்ல பிள்ளைகள் கூப்பாடு போட்டுக்கிட்டே இருப்பாக. எனக்கு அது ஒத்துவராது’ன்னேன். ‘இங்கே ஆராய்ச்சி பண்ற மாணவர்கள் மட்டும்தான் வருவாங்க. சாந்தமாத்தான் இருப்பாங்க, நீங்க வரலாம்’னார். அடுத்து ‘எனக்கு சுகர் இருக்கு, பிபி இருக்கு… சரியா வராது’ன்னு இன்னொரு கடிதம் போட்டேன். ‘இது எல்லாமே எனக்கும் இருக்கு… வாங்க சேந்து போராடுவோம்’னாரு. ‘நீங்க டைம் டேபிளுக்கெல்லாம் வேலை செய்ய வேண்டாம். உங்க வகுப்பு வரும்போது மாணவர்களோட உக்காந்து பேசுங்க. அதுதான் பசங்களுக்குக் கல்வி… உங்க அனுபவங்களைப் பகிர்ந்துகிட்டாப் போதும்’னாரு. அப்படித்தான் அந்தப் பயணம் தொடங்குச்சு. கதைகள், சினிமா, நாடகம்ன்னு பிள்ளைகள்கிட்ட நிறைய பேசினேன். பல்கலைக்கழகத்தைவிட்டு பிள்ளைகளை வெளியில அழைச்சுக்கிட்டுப் போனேன். மூணு வருஷம்தான்… இதுல புதுவையில இருந்த தமிழ் அறிஞர்களுக்குக் கொஞ்சம் வருத்தம். அவலட்சணமா, படிக்காத ஒருத்தனை பல்கலைக்கழகத்துல பேராசிரியரா போட்டுருக்காகளேன்னு எரிச்சல். அதெல்லாம் இருக்கத்தானே செய்யும்.”

முகத்தில் சோர்வு தெரிகிறது. கரம் பற்றி விடை கொடுக்கிறார் கி.ரா.

தன்னை சபையால் புறக்கணிக்கப்பட்டவன் என்று அடையாளப்படுத்துகிறார் கி.ரா. அதனால் அவருக்கு எந்த இழப்புமில்லை. பெருமிதம் கொள்ளக்கூடிய அளவுக்கு அடர்த்தியான படைப்புகளைத் தந்தவருக்கு இப்போதுதான் உ.வே.சா விருதை அளித்துக்கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம். ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய உலகின் எந்தப் படைப்பாளிக்கும் குறைந்தவரல்ல கி.ரா. விருதுகளுக்கு அப்பாற்பட்ட தமிழின் தனித்த அடையாளம் அவர்!

 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...