இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்கும் கொரோனா 2-வது அலை; காரணம் என்ன?


மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதன் உச்சத்தைத் தொட்ட நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தொற்றுப் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம், ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தேவை அதிகரிப்பு, கிராமப்புறங்களில் தொற்று அதிகரிப்பது ஏன் என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை ‘இந்து தமிழ்’ இணையதளம், சிவகங்கை பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவுடன் கலந்துரையாடினார்கள்.

அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா இரண்டாவது அலை இத்தனை தீவிரமாகப் பரவுவது ஏன்?

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாகப் பரவும் உருமாற்ற வைரஸ் முதல் காரணம். இதனாலேயே உள்ளே செல்லும் உருமாற்ற வைரஸ், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி தொற்றைத் தீவிரப்படுத்தி விடுகிறது.

இந்த முறை கொரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்ற அதீத அலட்சியம் இரண்டாவது காரணம். கூட்டம் கூட்டமாக மக்கள் கூடித் தொற்றைத் தீவிரமாக்கி விட்டனர்.

இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இதைத் தவிர்க்க முடியாது என்றாலும் இரண்டாவது அலை என்ற ஒன்று இருக்கவே இருக்காது என்ற எண்ணம்தான் பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை நம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் நாம் முதல் அலையை முடிக்கும்போது பெரும்பான்மையான நாடுகள் அனைத்தும் இரண்டாவது அலையின் உச்சத்தில் இருந்தன. எல்லா நாடுகளுக்கும் இரண்டாவது அலை என்று ஒன்று இருக்கும்போது அது நமக்கும் இருக்கும் என்ற எண்ணம் இருந்திருக்கவேண்டும்.

இவை அனைத்துமே சேர்ந்து இரண்டாவது அலையை உக்கிரம் ஆகிவிட்டன. 20 முதல் 40 வயது வரையிலான இளைஞர்களை அதிகமாக பாதித்து, மரணங்களை அதிகமாக்கிவிட்டன.

முதல் அலையில் நாம் அதிகம் கேள்விகூடப் பட்டிருக்காத ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர் சிகிச்சை, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவை இந்த முறை அதிகமாக என்ன காரணம்?

மருத்துவர்கள் முதல் அலையிலேயே இவ்வளவு தீவிரம் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அவ்வாறு இல்லாமல், நினைத்ததைவிடக் குறைவாகவே இருந்தது. வைரஸ் உருமாறியதாலும், அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்படுகிறது. சாதாரணக் காய்ச்சல் என்று நினைப்பது, அதனாலேயே தாமதமாக மருத்துவமனைக்கு வருவது, அறிகுறிகள் தோன்றிய உடனே செல்லாமல் ஒரு வாரம் கழித்துப் பரிசோதிப்பது, மிதமான நிலையிலேயே சிகிச்சையில் சேராமல்,

கொரோனா தீவிரமான நிலையில் மருத்துவமனைகளுக்கு வருவது ஆகிய காரணங்கள் தொற்றின் தீவிரத் தன்மையை அதிகரிக்கின்றன.

ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமாகாமல் ஆக்சிஜன் படுக்கைகளிலேயே இருப்பதாலும் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவைகள் அதிகரித்திருக்கின்றன. முதல் அலையில் தொற்றாளர்கள் மருத்துவமனையில் சேர்ந்தால் குணமடைந்து ஒரு வாரத்தில் வீடு திரும்புவார்கள். ஆனால் தற்போது இளைஞர்களே படுக்கைகளை நீண்ட காலம் ஆக்கிரமித்திருப்பதைக் காணமுடிகிறது. ஏனெனில் அவர்களுக்கு குணமாகத் தாமதமாகிறது. இதனாலும் அடுத்த நோயாளிக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இதில் இருந்து மீள என்னதான் வழி?

வழக்கமாகக் கடைப்பிடிக்கும் தடுப்பு வழிமுறைகளோடு, அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் ஆரம்பத்திலேயே பரிசோதித்து, சிகிச்சைக்கு வருவதுதான் இழப்பைத் தடுக்கும் முக்கிய வழி.

கொரோனா தொற்றாளர்களுக்கு உளவியல் சிகிச்சை எந்த அளவுக்கு முக்கியமானது?

கட்டாயம் அவர்களுக்கு உளவியல் சிகிச்சை தேவை. ஆனால் இது போர்க்காலச் சூழலாக உள்ளதால், உண்மையில் எப்படி உளவியல் சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் இருக்கிறோம். உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்களின் தேவை அதிகமாக உள்ளது.

ஆனால், மருத்துவர்களும் செவிலியர்களும் தொற்றாளர்களிடம் ஒன்றை உறுதியாகத் தெரிவிக்க வேண்டும். கொரோனாவால் 100 பேர் பாதிக்கப்பட்டால் ஒருவர் மட்டுமே மரணம் அடைவார். 99 பேரை முழுமையாக குணப்படுத்த முடியும். அவர்கள் அனைவரும் நல்லபடியாக வீடு திரும்புவர் என்று சொன்னாலே போதும். 

கொரோனா வந்துவிட்டாலே இறந்துவிடுவோம் என்ற அச்சத்தில் நிறையப் பேர் உள்ளனர். அந்த பயம் தேவையில்லை.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கு 80 பேருக்கு சிகிச்சையே தேவையில்லை. அடுத்த 17 பேருக்கு மிதமான சிகிச்சை கொடுத்தாலே குணமடைந்து விடுவர். மீதமுள்ள மூன்று பேருக்குத் தீவிர சிகிச்சை கொடுக்கும் சூழல் ஏற்படும். அதில் ஒருவர் மட்டுமே மரணமடைகிறார். இதைத் தொற்றாளர்களிடம் தெரிவிக்கலாம். முறையாக சிகிச்சைக்கு ஒத்துழைத்தால், முழுமையாக குணமடைந்து வீடு திரும்பலாம் என்ற நம்பிக்கையைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.

அதேபோல தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கும் (Post Covid) உளவியல் சிகிச்சை கட்டாயம் தேவை. முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய பிறகும் அவர்களை நோயாளி என்ற பயத்துடனேயே பிறர் அணுகுவதைக் காணமுடிகிறது. அவரிடமிருந்து நோய் பரவிவிடும் என்ற அச்சத்தையும் தெரிவிக்கிறார்கள். குணமடைந்து, தனிமைப்படுதலுக்குப் பிறகு வீடு திரும்பும் அவர்களிடம் இருந்து தொற்று பரவாது. இதுகுறித்த புரிதலைப் பொதுமக்களுக்கும் பிறரை எதிர்கொள்ளும் தைரியத்தை குணமடைந்தோருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

நான் சரியாக முகக்கவசம் அணிவேன். அடிக்கடி கை கழுவுவேன். முறையாக தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பேன். ஆனாலும் எனக்கு கரோனா வந்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு நீங்கள் தரும் பதில் என்ன?

நீங்கள் மட்டும் கரோனா வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் போதாது. உடனிருப்பவர்களும் உறவினர்களும் கடைப்பிடிப்பார்களா என்பது தெரியாதே. உதாரணத்துக்கு உங்கள் வீட்டுக்கு உறவினர் வந்தால், முகக்கவசம் அணிந்துகொண்டே இருக்கமாட்டார். நீங்கள் யாரும் முகக்கவசம் அணிந்துகொண்டே பேச மாட்டீர்கள். அதேபோலப் பக்கத்து வீடு, எதிர் வீட்டு ஆட்களிடமும் முகக்கவசம் இல்லாமல் போய்ப் பேசுவோம்.

நம் வீடு என்பது ஒரு பபுள். நம் வீட்டு உறுப்பினர்கள் எப்படி இருப்போம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பது நமக்குத் தெரியாதல்லவா? வெளியே சென்று வந்ததால் மட்டுமல்ல, அக்கம்பக்கத்தினரிடமும் உறவுகளிடமும் கொரோனா தடுப்பைப் பின்பற்றாததால் தொற்று ஏற்பட்டிருக்கலாம். அதிலும் அதிக கவனம் தேவை.

கொரோனா காலத்தில் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள் என்னென்ன?

பாரசிட்டமால் மாத்திரைகள், குழந்தைகள் இருந்தால் காய்ச்சல் டானிக், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், டிஜிட்டல் தெர்மாமீட்டர் ஆகியவை இருப்பது நல்லது. தேவைப்பட்டால் டிஜிட்டல் ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, சர்க்கரை நோயாளிகள் இருந்தால் குளுக்கோமீட்டர் ஆகியவற்றை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். முதியோர்கள் இருக்கும் வீட்டில் இவை உதவும். இவை இருந்தால் லேசான கரோனா தொற்றுடன் இருப்பவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தொடர்ந்து, ஆக்சிஜன், வெப்பநிலை, ரத்த அழுத்தத்தைக் கண்காணித்துக் கொள்ளலாம். தேவைப்படும் சூழலில் மருத்துவமனையை அணுகிக் கொள்ளலாம்.

கொரோனா மூன்றாவது அலை ஏற்படச் சாத்தியம் உண்டா?

கொரோனா தொற்று குறிப்பிட்ட வேகத்தில், குறிப்பிட்ட இடங்களில் வேகமாகப் பரவுகிறது. பரவி முடித்தவுடன் மேலும் பல ஆட்கள் இல்லாமல் அப்படியே அடங்கி விடுகிறது. ஆனால், அழிந்து விடுவதில்லை. எனினும் அப்போது அச்சுறுத்தலாக இருக்காது. உதாரணத்துக்கு எரிந்து முடித்த தீக்கங்கு கனன்று கொண்டிருப்பதைப் போல.

எனினும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குன்றும்போது மீண்டும் தொற்றுச் சங்கிலி தொடரலாம். இதுதான் அலை வடிவம். இரண்டாவது அலையில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மூலமாக மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த முடியும்.

3-வது அலையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற செய்தி உலவுகிறதே… இது எந்த அளவுக்கு உண்மை?

சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உறுதியான தகவல் அல்ல. அடுத்த முறை மீண்டும் இளைஞர்களே பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் முதல் அலையில்

இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை. 2-வது அலையில் அவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அடுத்த முறை குழந்தைகளுக்காகவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக நிபுணர்கள் முன்னெச்சரிக்கையாகத் தெரிவித்ததுதான் இதற்குக் காரணம்.

அதே வேளையில் குழந்தைகளைக் கட்டாயம் தாக்காது என்றும் சொல்லமுடியாது. தற்போது முதல் அலையைவிடச் சற்றே கூடுதலாகக் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்குப் பரிசோதனைகளை அதிகப்படுத்தியதே முக்கியக் காரணம். எனினும் குழந்தைகள், கரோனாவால் தீவிரத் தன்மையை அடைந்து மரணமடையும் நிகழ்வு அரிதினும் அரிதாகவே நடக்கிறது.

பொதுவாகக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இளைஞர்களுக்கு அதிகம் என்னும்போது தொற்று பாதிப்பு மட்டும் ஏன் எதிர்மாறாக உள்ளது?

தற்போதைய கொரோனா வைரஸின் தன்மை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு முறையோடு பொருந்தவில்லை என்பதால் அவர்களிடம் தொற்று, தீவிரத் தன்மையை எட்டுவதில்லை. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதே அவர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. ஏனெனில் குழந்தைகளின் உடல் அணுக்கள், கொரோனா வைரஸுடன் அதிகம் எதிர்த்துப் போரிடுவதில்லை. இதனால் கோவிட் வைரஸ், அவர்களின் உடலுக்குள் சாதாரணத் தொற்றாகவே நின்றுவிடுகிறது.

ஆனால், இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் அவர்களின் உடல், வைரஸை அதி தீவிரமாக எதிர்த்துப் போராடுகிறது. தீவிரமாகப் போர் புரிவதால் ஏற்படும் வீக்கம் (inflammation) அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனாலேயே நோய்த்தொற்று அடுத்த நிலைக்குச் செல்கிறது.

பொதுவாக ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருந்தால், அதுவே வைரஸ் தொற்றை அழித்துவிடும். அதனால்தான் 80 சதவீதப் பேருக்கு லேசான அறிகுறி, அறிகுறி இல்லாத நிலையில் தொற்று ஏற்படுகிறது. ஆனால் எதிர்ப்பு சக்தி, வைரஸ் என இருபுறமும் சமமாக சண்டை நடக்கும்போது நுரையீரல் பாதிப்பு, ரத்தக் கட்டிகள் ஆகியவை ஏற்படுகின்றன. அதனால்தான் தொற்றாளர்களுக்கு எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எனினும் வைரஸ், உடலின் எதிர்ப்பு சக்தியை வென்றுவிட்ட நிலையில் மரணங்கள் நிகழ்கின்றன.

கிராமப்புறங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்?

அலட்சியமாக இருப்பதுதான் முதல் காரணம். இன்று கூட மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வந்தார். தொற்றுக்கான அனைத்து அறிகுறிகளுடனும் இருந்தவரை கொரோனா பரிசோதனை செய்யச் சொன்னேன். அதற்கு, ’நானெல்லாம் கிராமத்தில் இருக்கிறேன்; எனக்கு எல்லாம் கரோனா வராது’ என்றார். இந்த எண்ணத்தை மாற்றி, போதிய முன்னெச்சரிக்கையுடன் கிராமவாசிகள் இருக்க வேண்டியது அவசியம்.

அதேபோல ஊரடங்கு காரணமாகச் சென்னையில் இருந்து நிறையப் பேர் கிளம்பி, கிராமங்களுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் எத்தனை பேர் தொற்றுடன் சென்றார்கள் என்பது தெரியாதே.

முதல் அலையிலும் இந்த இடம்பெயர்வு இருந்ததே.. அப்போது தொற்று இந்த அளவுக்கு ஏற்படவில்லையே?

அப்போதைய ஊரடங்கின்போது இந்தியாவில் மொத்தமாகவே 500 தொற்றாளர்கள்தான் இருந்தனர். தமிழ்நாட்டில் 50 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது தொற்றால் அன்றாடமும் 30,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் தினந்தோறும் 10,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த முறை தொற்று உச்சம் அடைவதற்கு 100 நாட்கள் முன்னதாகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை தொற்று உச்சத்துக்கு வர 10 நாட்கள் முன்னதாகத்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. முதல் இடம்பெயர்வில் நூற்றில் ஒருவர் வேண்டுமானால் தொற்றுடன் சென்றிருக்கலாம். ஆனால் இந்த முறை நூற்றில் 30, 40 பேருக்குத் தொற்று இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால் கிராமங்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

எந்தத் தடுப்பூசி போடுவது என்பது தொடர்பாகப் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறதே? கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசிக்கான கால இடைவெளி 12 வாரங்களாக அதிகரிக்கப்படத் தட்டுப்பாடுதான் காரணமா?

தடுப்பூசியைப் பொறுத்தவரை எந்த ஒரு குழப்பமும் இல்லை. கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற தடுப்பூசி கட்டாயம். அதைச் செலுத்திக் கொண்டால் தீவிர கரோனா ஏற்பட்டு, மரணமடையும் வாய்ப்பு குறைவு. அதேபோல இப்போது எந்தத் தடுப்பூசி நல்லது என்ற ஆராய்ந்து தேர்ந்தெடுக்க நமக்கு வாய்ப்புகள் இல்லை, நேரமுமில்லை.

போர்க் காலத்தில் உங்களிடம் என்ன கேடயம் இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு, குண்டடி படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் புத்திசாலித்தனம். இன்னும் சில நாட்கள் கழித்து நல்ல, தரமான கேடயம் வரும் என்று நினைத்துக்கொண்டு தற்போது குண்டுகளை உடலில் வாங்குவது அபத்தமானது. கோவாக்சினோ, கோவிஷீல்டோ, இனி வரப்போகும் ஸ்புட்னிக் தடுப்பூசியோ, எது கிடைக்கிறதோ அதைப் போட்டுக்கொண்டு போரைச் சந்திப்போம், மரணத்தைத் தவிர்ப்போம்.

கோவிஷீல்டு இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை அதிகரிப்பது தொடர்பாக ஏற்கெனவே அறிவியல் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்திலேயே ஆய்வு முடிவுகள் வந்தாலும் அப்போது கால இடைவெளி குறித்து அறிவிக்கப்படவில்லை. இப்போது அறிவிப்பதற்குத் தட்டுப்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 90 முதல் 112 நாட்கள் வரை கழித்து 2-வது தவணை தடுப்பூசி போட்டால் செயல்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் உள்ளதால் இந்த முடிவு வரவேற்கத்தக்கதுதான். அதேபோல நிறையப் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதைவிட, காத்திருக்கும் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போட்டு அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே சரியானதாக இருக்கும்.

பெருந்தொற்றுக் காலத்தில் பிரதான முன்களப் பணியாளர்களாக மருத்துவர்களும் செவிலியர்களும் எவ்வாறு உணர்கிறீர்கள்?

மிகுந்த மன அழுத்தத்துடனே இந்த காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு நெருக்கடியான சூழலை இதுவரை எதிர்கொண்டதில்லை. நிறைய இளம் மரணங்களைக் காண வேண்டியிருக்கிறது. மருத்துவர்களும் செவிலியர்களும் கூடுதலாக நியமிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனாலும் எவ்வளவு பேரை நியமித்தாலும் போதாத சூழல்தான் இந்தியாவில் நிலவுகிறது. இருப்பவர்களை வைத்துச் சமாளித்துக்கொண்டு இருக்கிறோம்.

மன அழுத்தங்களும், சிரமங்களும் சுகாதாரத் துறைக்குப் புதிதல்ல. பன்னெடுங்காலமாக இருந்து வருவதுதான். அது இப்போதுதான் பொதுமக்களுக்குத் தெரியவருகிறது. இனியாவது மக்கள் வீடடங்கி, தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதுதான் எங்களுக்குச் செய்யும் உதவி.

உரையாடியவர்: க.சே.ரமணி பிரபா தேவி

Source: chakkaram.com

 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...