இடதுசாரிகளின் புதிய முகம் - பர்டன் க்ளிட்டஸ்

 

 

 new-face-of-leftists

 

கேரளத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது இடது முன்னணி. சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல் அது கைப்பற்றியிருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்த கேரளத்தில் இது ஆச்சரியமானதுதான். வழக்கத்துக்கு மாறான இந்த வெற்றிக்கு, கடந்த சில ஆண்டுகளில் கேரளத்தின் அரசியல் இயங்குமுறையில் ஏற்பட்டுள்ள அடிப்படையான மாற்றங்களே காரணம்.

 

நவீன அரசு எனும் கருத்தாக்கம்

 ஓர் அரசியல் அமைப்பாக, சிபிஐ(எம்) கட்சிக்கு அரசு மற்றும் நிர்வாகம் குறித்த மாறுபட்ட கருத்தாக்கம் உண்டு. லெனினிஸ்ட் மாதிரி என்று பொதுவாக அறியப்படும் இது நாட்டிலுள்ள பெரும்பாலான அரசியல் அமைப்புகளிலிருந்து அடிப்படையிலேயே மாறுபட்டது. கட்சி தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலும், 21-ம் நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைத்தபோதும் நவீன அரசு அமைப்பை பூர்ஷ்வாவயப்பட்டதாகவே இடதுசாரிகள் கருதினர். இந்த நவீன அரசு, தமக்குள்ளேயே மாறுதலை அடைய வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர். எனவே, அவர்களின் இறுதி இலக்கான புரட்சியை நடத்துவதற்காகக் கட்சியின் கொள்கைத் திட்டங்களை இடதுசாரி அரசுகள் நடைமுறைப்படுத்தின அல்லது நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரசை விடவும் கட்சியே எப்போதும் வலுவான அமைப்பாகக் கருதப்பட்டது. இந்த நிலையானது கேரளத்தில் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கத்தின் முடிவும் அதைத் தொடர்ந்து திரிபுராவில் இடதுசாரிகள் ஆட்சியை இழந்ததும் சிபிஐ(எம்) கட்சியின் கொள்கைகளை வகுக்கும் அதிகாரம் பெற்ற குழுவான பொலிட் பீரோவை வலுவற்றதாக்கியுள்ளது. எனவே, கேரளத்தில் அரசாங்கம் மீதான கட்சியின் கட்டுப்பாடு பலவீனமாகிவருகிறது. கடந்த காலத்தைப் போல அல்லாமல், பினராயி விஜயன் தலைமையிலான அரசு அகில இந்திய அளவிலான கட்சியமைப்பின் கட்டுப்பாடுகள், அதன் கருத்தியல் இலக்குகள் ஆகியவற்றிலிருந்து கணிசமாக விலகியே நிற்கிறது.

கருத்துகளின் மோதல்

பினராயி விஜயன் தலைமையிலான புதிய அரசு, கேரள அரசியலில் நீண்ட காலமாக நிலவிவந்த மோதல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நிலவுடைமையாளர்களுக்கும் உழவர்களுக்கும் இடையிலான மோதல்களும், தொழிலதிபர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதல்களும் முடிவுக்கு வந்தன. இடது முன்னணி அரசின் இயல்பில் ஏற்பட்ட இத்தகைய மாற்றமானது மாநிலத்தின் சமூக-பொருளாதாரச் சூழலையும் மாற்றியமைத்தது. மிகப் பெரும் எண்ணிக்கையிலான மத்திய தர வர்க்கத்தினர் மாநிலத்தில் தொடங்கிய புதிய பொருளாதார நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர் - விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்தது, வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் கேரளத்துக்கு வரத் தொடங்கினர். இவையனைத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் விடுதலை குறித்த இடதுசாரிகளின் அரசியல் முழக்கங்களை மாற்றிக்கொள்ள நிர்ப்பந்தித்து மத்திய தர வர்க்கத்தினரின் அபிலாஷைகளை எதிரொலிக்கச் செய்தன. மாற்றத்துக்கான இந்தச் செயல்முறையானது கிறிஸ்தவ தேவாலயங்களுடனும் மாநிலத்தின் மற்ற அதிகாரம் மிக்க சமூக, சமய, பொருளாதாரப் பிரிவுகளுடனும் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்பு, இந்த அமைப்புகளுடனான மோதல்கள் அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்துவந்தன.

நவீன அரசை பூர்ஷ்வா அமைப்பாகப் பார்க்கும் இடதுசாரிகளின் கருத்தாக்கம் மெல்ல மாறத் தொடங்கியது. மாறாக, அரசு மற்றும் அதன் இயங்குமுறையானது கேரளத்தில் புதிதாக உருவாகிவரும் மத்திய தர வர்க்கத்தினரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய சாதியினர், வகுப்பினர், சமூகத்தினர் மற்றும் குழுக்களை மட்டுமே ஆதரிப்பதிலிருந்து மெல்ல விலகி சாதி/ வகுப்பு/ சமூக வேறுபாடுகள் பெரிய அளவில் இல்லாத பரந்த அளவிலான பல்வேறுபட்ட வகுப்பினர்களைக் கொண்ட சமூகத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இடதுசாரிகள் நகர்ந்தனர். இடதுசாரி அரசாங்கத்தின் இந்தப் புதிய நகர்வை, ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கொண்டிருந்த கொள்கையை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கருதலாம்.

கேரளத்தில் பேரழிவை ஏற்படுத்திய இரண்டு மிகப் பெரும் வெள்ளங்களும் பெருந்தொற்றும் இடதுசாரி அரசாங்கத்துக்கு சவால் என்பதைக் காட்டிலும் ஒரு வாய்ப்பாகவே அமைந்தன. இலவச உணவு மையங்கள், அனைவருக்கும் உணவுப் பொருட்கள் வழங்கல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களின் வாயிலாக இடது முன்னணி அரசாங்கம் மாநிலத்தின் பாதுகாவலராகவும் எந்தவொரு வகுப்புக்கும் எதிரானதாக இல்லாததாகவும் உருமாறியது. குறிப்பாக, மத்திய தர வர்க்கத்தினர் இதனால் பயனடைந்தனர். கட்சியின் முந்தைய வீராவேசங்கள் குறைந்து இடதுசாரிகளின் புதிய முகம் இணக்கமானதாக மாறியது. பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் முக்கியமானதொரு ஆளுமையாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.சைலஜாவுக்குத் திடீரென்று எழுந்த பெரும் செல்வாக்கு, மத்திய தரக் குடும்பங்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கடமை என்ற புதிய கருத்துருவாக்கத்தை நோக்கி இட்டுச்சென்றது. இலவசமாக உணவுப் பொருட்களை விநியோகிக்கும் திட்டமானது உணவளித்துப் பாதுகாத்த அரசை ஒரு ‘பெரும் குடும்ப’மாக மக்களை எண்ண வைத்தது.

வலுவிழந்த காங்கிரஸ்

இடது முன்னணி அரசானது நவீன அரசமைப்பின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரிடம்கூடக் கருத்தொருமிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது, காங்கிரஸ் கட்சியோ தனது அரசியல் தளத்தை இழக்கத் தொடங்கியிருந்தது. பல்வேறு தரப்பட்ட மக்களையும் ஒன்றாகக் கருதி அவர்கள் அனைவருக்கும் உணவுப் பொருட்களை வழங்கியதன் வாயிலாக, கட்சியை மையமாகக் கொண்டு இயங்கும் தனது பழைய பாணியிலிருந்து விலகிய இடதுசாரிகள், நீண்ட காலமாக காங்கிரஸ் வசம் இருந்த எல்லைகளையும் புதிதாகக் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற குழப்பத்தை காங்கிரஸ் எதிர்கொண்டிருந்தது. காங்கிரஸ் கருத்தியல்ரீதியில் வலுவாக இல்லாததாலும், கட்சியின் பலவீனமான இயங்குமுறையாலும் இடதுசாரி அரசியலுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்ததானது அரசியல் மோதலாகவே பார்க்கப்பட்டது. மாநிலத்தின் பெருந்திரளான மக்களால் அது ஏற்றுக்கொள்ளப்படவுமில்லை.

எந்தவொரு தகுந்த அமைப்பு இயங்குமுறையோ கருத்தியலோ இல்லாமல், இடதுசாரி எதிர்ப்பையே மையமாகக் கொண்டுதான் காங்கிரஸ் தேர்தல்களில் வெற்றிபெற்றுவந்தது. அரசியல் கருத்தாடல்கள் மாறுவதையும் அது கண்டுகொள்ளத் தவறிவிட்டது. சிறுபான்மையினரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்துத்துவ அரசியலைக் குறித்து அச்சம்கொண்டதோடு, வலதுசாரிகளை எதிர்ப்பதற்கு இடதுசாரிகளே சரியான தேர்வு என்று முடிவெடுத்தனர். சபரிமலை குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பைச் சொன்னபோது, அந்தத் தீர்ப்பை எதிர்க்கவும் மரபான வழக்கங்கள் தொடர வேண்டும் என்று வாதிடவும் காங்கிரஸ் முடிவெடுத்தது. இடதுசாரி அரசியல் கருத்தாடல்கள் உள்ள ஒரு மாநிலத்தில் அந்தக் கட்சிக்கு இருக்கிற ஒரே தெரிவு இதுதான் என்றும் வாதிடலாம். ஆனால், உயர்சாதி பழைமைவாத இந்துக்களின் வாக்குகளைக் கவரலாம் என்ற நம்பிக்கையில் இந்தப் பிரச்சினையை இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கையிலெடுத்தது தவறாகிவிட்டது. சபரிமலைப் பிரச்சினையைப் பொறுத்தவரை அது ஒரு முடிந்துபோன பிரச்சினை. காங்கிரஸ் அந்தப் பிரச்சினையை மீண்டும் கிளப்பியதால் எந்தப் பயனுமில்லை. இடதுசாரிகளுக்கு எதிராக வலுவானதொரு அரசியல் கதையாடலை முன்வைக்க காங்கிரஸ் தவறிவிட்டது.

மரபான இடதுசாரிக் கருத்தியலிலிருந்து விலகி, காங்கிரஸின் அரசியல் தளத்தைக் கைப்பற்றியதன் மூலமாக, கேரளத்தில் இடதுசாரிகள் மீண்டும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். தங்களது கொள்கை மதிப்பீடுகளுக்கு மாறாக, இடதுசாரிகள் இந்தத் தளத்தை இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தக்கவைத்திருப்பார்கள் என்பதும், இழந்து போன தளத்தை காங்கிரஸ் எப்போது மீட்டெடுக்கப்போகிறது என்பதும் போகப் போகத்தான் தெரியும்.

- பர்டன் க்ளீட்டஸ், புது டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்று ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியர்.
© தி இந்து, தமிழில்: புவி

Courtesy: Hindutamil.in.news 17 May 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...