இஸ்ரேல்-பலஸ்தீனம் மோதல்: ‘1948 – 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! – என்ன பிரச்னை?--நா.வருண்

 கிழக்கு ஜெருசலேமின் அல் அக்‌ஷா மசூதிதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்’ என்ற ஒருபக்கச் சுவரான `டெம்பிள் மவுண்ட்’ யூதர்களின் புனிதத் தலம்!

1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்திற்காகப் போராடி வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்திற்காகப் போராடி வருவது பலஸ்தீனம்.

இஸ்ரேல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடு. இங்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 20 சதவிகித இஸ்லாமியர்களும், 10 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் வாழ்ந்து வருகின்றனர்.

மற்றொரு பிரதேசமான பலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டு வருகிறது. 2012-ம் ஆண்டுதான் பலஸ்தீனம் ஐ.நாவில் `ஒப்சர்வர் ஸ்டேட்’ என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்து வருகின்றனர். மேற்குக் கரை, காஸா எனப் பலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளன.

இஸ்ரேல் – இஸ்லாமிய நாடுகள் பிரச்னை!

இஸ்ரேலில், கணிசமான அளவில் வாழ்ந்து வரும் அரேபியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. அரேபியர்கள் வாழ்கின்ற பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறது. யூதர்களுக்கான தனி நாடாக இஸ்ரேலை மாற்றும் முயற்சியில் அங்குள்ள ஆட்சியாளர்கள் சில சட்டங்களையும் அமல்படுத்தி வந்தனர். பலஸ்தீன நில அபகரிப்பு, இஸ்லாமிய மக்களை ஒடுக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராகவே இருந்து வந்தன.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை போவதாகவும் இஸ்லாமிய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன. இதன் காரணமாக இஸ்லாமிய நாடுகள், போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார உறவுகள் என எந்த உறவும் இஸ்ரேலுடன் வைத்துக் கொள்ளாமல் இருந்தன. முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டால் சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டன.

ஜெருசலேம்

ஜெருசலேம் பிரச்னை!

1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் பலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

கிழக்கு ஜெருசலேமின் பழமையான பகுதியில் அமைந்திருக்கிறது அல் அக்‌ஷா மசூதி. இதுதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்’ என்ற ஒருபக்கச் சுவரை `டெம்பிள் மவுண்ட்’ என்று அழைக்கிறார்கள் யூதர்கள். இதனை தங்களது புனிதத் தலமாகக் கருதுகிறார்கள் அவர்கள். எனவே, இஸ்ரேலும், பலஸ்தீனமும் ஜெருசலேமை புனித நகராகக் கருதி வருகின்றன.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில், 2017-ம் ஆண்டு, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையே மோதல் மேலும் வலுப்பெறத் தொடங்கியது.

ஹமாஸ் அமைப்பு!

பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இயங்கி வருகிறது ஹமாஸ் போராளிகள் அமைப்பு. இஸ்ரேலை எதிர்த்துப் போராடி வருகிறது இந்த அமைப்பு. இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்துப் பல முறைப் போர் செய்திருக்கிறது ஹமாஸ் அமைப்பு. `ஹமாஸ் படை ஒரு தீவிரவாத அமைப்பு’ என நெடுங்காலமாகக் குற்றஞ்சாட்டி வருகிறது இஸ்ரேல்.

இப்போது என்ன பிரச்னை?

நெடும் காலமாகவே கிழக்கு ஜெருசலேமில், அதிக அளவில் வாழும் இஸ்லாமியர்களை வெளியேற்றும் முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி மதப் பிரச்னைகள் ஏற்பட்டு கலவரங்களாக மாறும். குறிப்பாக ரமலான் நெருங்கும் நேரத்தில் அங்கு வன்முறை வெடிப்பது வழக்கம்.

ஆண்டுதோறும் ரமலான் நெருங்கும் நேரத்தில் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் யூதர்கள் கொடியுடன் அணிவகுப்பு நடத்துவார்கள். இந்த அணிவகுப்பின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் உண்டாகும். இந்த ஆண்டு அணிவகுப்பு நடப்பதற்கு முன்பாகவே மோதல்கள் ஏறப்பட்டிருக்கின்றன.

பிரச்னை தொடங்கியது எப்போது?

ரமலான் மாதத்தில் கிழக்கு ஜெருசலேமிலுள்ள Damascus Gate Plaza எனும் இடத்தில் இஸ்லாமியர்கள் கூடுவது வழக்கம். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இஸ்லாமியர்கள் அங்கு கூடுவதைத் தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைத்தது இஸ்ரேல் காவல்துறை. இதையடுத்து ஏப்ரல் 16-ம் தேதியன்று அல் அக்‌ஷா மசூதியில் தொழுகை நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது இஸ்ரேல். இதையடுத்து கிழக்கு ஜெருசலேமில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து பலஸ்தீனியர்கள் சிலரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மே 7-ம் தேதியன்று இஸ்ரேல் காவல்துறையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் அல் அக்‌ஷா மசூதியில் மோதல் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து கடந்த திங்களன்று (மே 10) பலஸ்தீனர்கள் அல் அக்‌ஷா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது மசூதிக்குள் நுழைந்து சோதனை நடத்தியது இஸ்ரேல் ராணுவம். `யூதர்கள் நடத்தவிருக்கும் பேரணியில் கற்கள் வீசுவதற்கு இஸ்லாமியர்கள் திட்டமிட்டிருப்பதாக’ கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சோதனையின்போது இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்த பலஸ்தீனர்களை தாக்கியதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.

அல் அக்‌ஷாவில் (AL Asqua Mosque) இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 30-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசி தரைமட்டமாக்கியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். இந்தத் தாக்குதல்களில் பலஸ்தீனத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராக்கெட் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் ஜெருசலேமில் போர்ச்சூழல் நிலவி வருகிறது.

AL Asqua Mosque

மற்ற நாடுகள் என்ன சொல்கின்றன?

இந்தியாவுக்கான ஐ.நா சபையின் நிரந்தரத் தூதர் திருமூர்த்தி, “இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்னையில் இந்தியா ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறது. காஸாவிலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதற்கு கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். இரு தரப்புக்கும் இடையே நேரடிப் பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்காவும் இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்னையில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், “பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளும் இணைந்து ஓர் தீர்வை நிறுவ வேண்டும். பலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் சுதந்திரம், பாதுகாப்பு, செழிப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமமாகப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேலும், பலஸ்தீனமும் தாக்குதல்களை நிறுத்திக் கொண்டு, அமைதி காக்க வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகள் கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், “பலஸ்தீனிய குடிமக்களுக்கு இஸ்ரேல் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதோடு அவர்களுடைய மதத்தை கடைபிடிப்பதற்கான உரிமையையும் வழங்க வேண்டும். அல் அக்‌ஷா மசூதியின் புனிதத்துக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை, “உடனடியாக மோதலை நிறுத்திக் கொள்ளுங்கள். முழு போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா அனைத்து முயற்சிகளையும் செய்கிறது” என்று கூறியிருக்கிறது.

உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலரும், “ஜெருசலேமில் அமைதி திரும்ப வேண்டும்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். இந்த விவகாரத்தில் விரைவில் ஓர் தீர்வு ஏற்பட்டு, அங்கு அமைதி திரும்பும் என நம்புவோம்!

Source: chakkaram.com

No comments:

Post a Comment

Oxfam report “Inequality Kills”: Billionaires racked up wealth while millions died during the pandemic by Kevin Reed

  The global charity Oxfam released a briefing on Monday entitled “Inequality Kills” in advance of the World Economic Forum State of the Wor...