சாணக்கியனின் அசாணக்கிய அரசியல்- — எழுவான் வேலன் —

சாணக்கியனின் அசாணக்கிய அரசியல்

 

   

இரா.சாணக்கியன் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்பதை அடிக்கடி அவருடைய உரைகளும் நடவடிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. அவர் தனது அரசியல் லாபத்துக்காக வெளிப்படுத்தும் தன் முதிர்ச்சியற்ற தன்மைஇன நல்லுறவுக்குப் பதிலாக இனப் பகைமை அரசியலைத்தான் வளர்த்து, சாதாரண மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கப் போகின்றது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். 

இனப் பகைமை அரசியலால் எல்லா இனங்களிலுமுள்ள சாதாரண மக்கள் ஈடு இணையில்லா விலையினைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த மக்களுக்குத் தேவை இனப் பகைமை அரசியல் அல்ல, இன நல்லிணக்க அரசியலேயாகும். இந்த இன நல்லிணக்க அரசியல் பாதையை புதிய தலைமுறையினர் முன்கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடம் உண்டு. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர மற்ற எல்லோருமே தங்களுக்கான இருப்பு இனப்பகைமை அரசியல்தான் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்கள். இதற்கு சாணக்கியன் கூட விதிவிலக்கல்ல.  

சாணக்கியன் முன்பொருதடைவை சுற்றுலாத்துறை தொடர்பான ஒரு விவாதத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கு கிழக்கு ஆற்றக்கூடிய வகிபங்கு தொடர்பாக நல்லதொரு உரையை ஆற்றியிருந்தார். இவ்வுரை தொடர்பாக அரங்கம் பத்திரிகை கூட அவரைப் பாராட்டியிருந்தது. 

ஜனாசா எரிப்புத் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒரு உரையை ஆற்றியிருந்தார். அதற்கு முஸ்லிம் மக்களிடம் இருந்து அமோக ஆதரவினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து “பொத்துவில் தொடக்கம் கொலிகண்டிவரை” எனும் நடைப் பயணத்தை ஆரம்பித்து அதில் ஒரு கோரிக்கையாக ஜனாசா எரிப்பு விவகாரத்தைச் சேர்த்துக் கொண்டதன் மூலம் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களின் தலைவருக்கு ஈடான வரவேற்பினைப் பெற்றுக்கொண்டார்.  

தற்போதுகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக பாராளுமன்றத்தில் இரா.சாணக்கியன் உரையாற்றும் போது முஸ்லிம்கள் நிலத் தொடர்பற்ற கல்வி வலயங்களைப் பெற்ற போது நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் இலங்கையில் மாவட்டத்துக்கு ஒரு சுகாதாரப் பணிமனைகள் இருக்கின்ற போது அம்பாறை மாவட்டத்தில் மட்டும் இரு பணிமனைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டதோடு முஸ்லிம்கள் கிழக்கு மாகாண சபைக்கு ஒரு சிங்கள முதலமைச்சரைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள் என்ற இரு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். இதனால் தற்போது சாணக்கியன் முஸ்லிம்களுக்கு எதிரானவராக ஆகியிருக்கிறார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஷீர் அவர்கள் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை”ப் போராட்டத்தில் கலந்து கொண்டமையையிட்டு வெட்கப்படுகின்றேன் எனக் கூறியிருக்கின்றார். மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் சாணக்கியன் ஒரு கைக்கூலி எனச் சாடியிருந்தார். சாணக்கியனை தங்களது கதாநாயகனாக காட்டி எழுதிய முஸ்லிம் முகநூல் போராளிகளிடமிருந்து எவ்வித எதிர்வினைகளையும் காணவில்லை.  

ஆற்றைக் கடக்கும் வரைக்கும்தான் அண்ணன் தம்பி ஆற்றைக் கடந்து விட்டால் நீ யாரோநான் யாரோ?’ என்ற நிலைதான் இன்று சாணக்கியனுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் நடக்கிறது.  

உண்மையில் இங்கு இரு சாராருமே சுத்தமானவர்கள் அல்ல. இரு சாராருமே தங்கள் இருப்புக்காக தங்கள் இனத்தை அந்த இனத்தினுடைய அடிப்படைத் தேவைகளை அரசியலாக்குகின்ற அரசியல் வியாபாரிகளேயாகும். இந்த வியாபாரத்தை இரு சாராரும் நன்றாகவே செய்கின்றனர். முஸ்லிம் வியாபாரிகள் தங்கள் இலாபத்தில் ஒரு பங்கை அந்தச் சமூகத்துக்குக் கொடுக்கிறார்கள். தமிழ் வியாபாரிகள் இலாபம் முழுவதையும் தாங்களே சுருட்டிக்கொள்கிறார்கள். இதுவே இவ்விரு வியாபாரிகளுக்குமான வித்தியாசமாகும்.  

ஜனாசா எரிப்பை தனக்கான அரசிலாக சாணக்கியனும் கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான சாணக்கியனின் உரையை தனக்கான அரசியலாக ஹரிஸ்சும் எடுத்திருக்கிறார்கள். இவ்விருவருக்குமே சாதாரண தமிழ், முஸ்லிம்சிங்கள மக்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் இல்லை. 

சாணக்கியனிடம் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எவ்விதமான கொள்கைத் தெளிவோ அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அரசியல் தொடர்பான அனுபவ அறிவோ இல்லை. அவர் அடிப்படைவாத குறுந் தமிழ் தேசிய வாதத்தின் நிழலில் வாழ்பவர்தான். அந்த நிழலில் நின்று கொண்டு சாதாரண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையோ அல்லது சாதாரண சிங்கள மக்களின் பிரச்சினைகளையோ அவரால் அணுகமுடியாது. இதன் காரணத்தினால் அவர் முன்வைக்கின்ற நியாயமான காரணங்கள் கூட மற்ற இனத்தவர்களால் இனவாதத் தன்மை கொண்டதாக பார்க்கப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. 

நிலத்தொடர்பற்ற கல்வி வலயங்கள், கல்முனை சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனைஅஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை எனும் அந்த நியாயங்களைச் சரி என்று வாதிடுவதற்கு அவரை முன்பு புகழ்ந்து தள்ளிய எந்த ஒரு முஸ்லிம் சமூக ஊடகப் போராளியும் முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது மற்றொரு விடயத்தையும் புலப்படுத்துகின்றது. அதாவது முஸ்லிம் சமூகம் இன்னும் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கு தயாரில்லை என்பதையும் காட்டுகின்றது. இந்தக் கள்ள மௌனம் முஸ்லிம் கலைஞர்களிடத்திலும் புத்திஜீவிகள் இடத்திலும் மதத்தலைவர்களிடத்திலும் நம்பிக்கையான முஸ்லீம் அரசியல் தலைவர்களிடத்திலும் பொதுவாகவே காணப்படுகின்றது. இந்தப் போக்கு எதிர்கால முஸ்லிம் சமூகத்துக்கு நல்லதல்ல என்பதை மேற்குறிப்பிட்ட முஸ்லிம் சமூகத் தலைமைகள் உணரவேண்டும்.  

தங்களுடைய சரிபிழைகளை பொது வெளியில் பேசமுடியாதவர்கள் தங்களை புனித இஸ்லாமியர்களாகக் கூறிக்கொள்வதில் எவ்வித நியாயங்களும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.  

அடுத்துகிழக்கிற்கு ஒரு சிங்கள இனத்தவரை முதலமைச்சராக கொண்டு வருவதற்கு முஸ்லிம் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று கூறியதன் ஊடாக சாணக்கியன், தான் அடிப்படைவாத குறுந் தமிழ்த் தேசியவாதத்தில் குளிர்காய்கின்றவர் என்பதை நிரூபித்திருக்கின்றார்.  

மட்டக்களப்பு மக்களில் பலர் சாணக்கியன் நல்லிணக்க அரசியலை மேற்கொள்வார் என்றே எதிர்பார்த்தனர். ஏனெனில் அவருடைய வரலாற்றுப் பின்னணி இராசமணிக்கத்தின் பேரன் என்பதை விட தாய் ஒரு சிங்களப் பெண்ணாக இருந்ததோடு எந்வித இன வன்செயல்களாலும் அல்லது யுத்தங்களாலும் பாதிப்பு அடையாத ஓர் இளைஞராகவும் மகிந்த அணியுடன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவராகவும் இருந்ததன் காரணத்தினால் நல்லிணக்க அரசியலை செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்று தனது அரசியல் இருப்புக்காக மற்றவர்கள் எல்லாரையும் விட தான் மிகச்சுத்தமான போலித் தமிழ்த் தேசியவாதி என்பதைக் காட்ட முனைகிறார். புதிதாக மதம் மாறியவர்களது ஒத்த மனநிலை இதுவாகும். அதாவது புதிதாக மதம் மாறியவர்கள்அவர்கள்தான் அந்த மதத்தின் மிக உச்சபட்ச விசுவாசிகள் போல தம்மைக் காட்டிக் கொண்டு திரிவது போலதான் இதுவும் ஆகும்.  

ஜனநாயகம் என்று சொல்லப்படுகின்ற ஆட்சியில் எவர் வேண்டுமென்றாலும் முதலமைச்சராக வரமுடியும். அதனைத் தீர்மானிப்பது அந்தந்த காலகட்டத்து அரசியல் சூழ்நிலைகளேயாகும். இந்தச் சூழ்நிலைகளைத் தக்கவாறு கையாழ்வது அந்தந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கைகளில் தங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இந்தச் சூழமைவுகளைத் தக்கபடி கையாளும் அரசியல் தந்திரோபாயம் அற்றவர்கள் என்பதை கிழக்கு மாகாணசபை ஆரம்பித்த காலத்திலிருந்து நிரூபித்து வந்திருக்கிறார்கள்.  

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடம் பிச்சைவாங்கிய இரு அமைச்சர் பதவிகளையே சரியாகப் பயன்படுத்த முடியாதவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டியதால் பாராளுமன்றத் தேர்தலில் பாடமும் கற்றுக் கொண்டவர்கள். அப்படியிருந்தும் இப்போது தமிழ் முதலமைச்சர் பற்றிப் பேசுகிறார்கள். சாணக்கியனுடைய வாதத்தில் கிழக்கில் தமிழர்முஸ்லிம் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள்அடுத்ததாக ஒரு சிங்களவரை முதலமைச்சராக கொண்டு வருவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள் என்றால் மாகாண சபை ஆட்சி முறையில் முதலமைச்சரை விட ஆளுநர் அதிகாரம் மிக்கவராக இருக்கிறார் கிழக்கிற்கு சிங்களவர்கள், முஸ்லிம் ஆளுநர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே தமிழர் ஒருவரை ஆளுநனராகக் கொண்டு வருவதற்கு ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனையக் கூடாது. என்ற கேள்வி எழுகிறது. அப்படி தமிழர் ஒருவரை ஆளுநனராகக் கொண்டு வருவதற்குரிய அரசியல் வல்லமை சாணக்கியன் சார்ந்த அரசியல் கட்சியில் இல்லை என்பதே உண்மையாகும். நல்லாட்சிக் காலத்தில் முஸ்லிம் முதலமைச்சராக இருந்த போதுதான் கிழக்கிற்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டார். தமிழ் மக்கள் ஹிஸ்புல்லாவின் இனவாதச் செயற்பாடுகளை உதாரணம் காட்டி கிழக்கிற்கு அவர் பொருத்தமற்றவர் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் உள்ளபோது ஆளுநராக ஒரு தமிழரை நியமியுங்கள் எனக் கோரிக்கைகளை முன்வைத்த போதும்அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எதுவுமே செய்ய முடியவில்லை.  

தமிழ்முஸ்லிம்சிங்களம் என்பதற்கு அப்பால் ஏன் ஒரு நல்ல நேர்மையான மனிதனை முதலமைச்சராக கொண்டு வரமுடியாது என்று எவருமே சிந்திப்பது கிடையாது. அவ்வாறு சிந்திப்பதற்கான அரசியல் நேர்மை எந்தவொரு கட்சியிடமும் இல்லை என்பதுதான் எமது துர்ப்பாக்கியமும் ஆகும்.   

இனவாதக் கட்சிகள் நிலை கொள்ளும் முன்பு மட்டக்களப்பின் அரசாங்க அதிபராக சிங்களவர்களும் இருந்தார்கள் என்பதையும் அவர்களுடைய சேவைகளையும் நாம் மறந்து விடலாகாது. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று தமிழர்முஸ்லிம்சிங்களவர் என்கின்ற தனிமனித நிலைக்கப்பால் அந்தத் தனிமனித நிலையின் வர்க்க குணாம்சம் முக்கியமானதாகும். எவராக இருந்தாலும் உழைக்கும் மக்களுக்கான நிர்வாகத்தை பாராபட்சமின்றி வழங்கக் கூடிய செயல்திறன் மிக்க ஒரு முதலமைச்சரே கிழக்கின் தேவையாகும். தங்களுடைய கஜானாக்களை நிரப்பும் முதலமைச்சர் எவராக இருந்தாலும் அவரால் மக்களுக்கு ஆகப் போவது எதுவுமில்லை.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மிக நம்பிக்கையுடன் வடக்கு மாகாணசபைக்கு கொண்டு வரப்பட்ட முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியின் நிர்வாகத் திறமையினை வடக்கு மாகாணசபை அனுபவித்த ஒன்று என்பதை நாம் மறக்கவும் இல்லை. இவ்வாறு கூறுவதின் ஊடாக இப்பத்தி முழுக்க முழுக்க சிங்கள முதலமைச்சரைத்தான் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கம் கொண்டதும் அல்ல என்பதையும் வலியுறுத்துகின்றேன்.  

கிழக்கின் பல்லினப் பண்பாட்டுச் சூழலைப் புறந்தள்ளிவிட்டு பாராளுமன்றத்தில் நின்று தமிழ் வீரம் பேசுவதால் மேலும் மேலும் இனப் பகைமை வளர்வதோடு சாணக்கியனே சிங்கள முதலமைச்சரைக் கொண்டு வருவதற்கான ஏதுவை ஏற்படுத்தியவராகவும் இருப்பார். தமிழரசுக் கட்சியின் சிங்கள எதிர்ப்புப் போராட்டம் இதனை எமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இந்தப் போராட்ட அனுபவம் எதுவுமற்ற சாணக்கியன் மீண்டும் தமிழர்களை படுகுழியில் தள்ளுவதற்கான குழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறார். அவருக்குக் குளுக்கோஸ் கொட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது. இந்த இருசாராரும் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் கிழக்கின் பல்லினப் பண்பாட்டுச் சூழலை மூவின அரசியல் தலைவர்களும் விளங்கிக் கொள்ளுங்கள். அதுவே கிழக்கிற்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.  

 Courtesy: arankamnews.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...