ஊழலின் மறுபெயர் மோடி அரசாங்கம்


கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள துயரம் என்பது பல முனைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இன்மையால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளில் போதிய அளவிற்குப் படுக்கைகளும், மருந்துகளும் இல்லை. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் சாவுகளையும் மூடிமறைத்திடும் சூழ்ச்சிகள். கொரோனா தடுப்பூசிகளில் பற்றாக்குறை ஏற்படுத்தி, அரசாங்கமே கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுத்துக்கொடுத்திருப்பது. இவை எல்லாவற்றையும்விட மொத்தமாக மாபெரும் ஊழல் சாம்ராஜ்யத்துடன் மோடி அரசாங்கமே திகழ்வதாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் இப்போது மிகப்பெரிய அளவில் அழிவினை சந்தித்துக்கொண்டிருக்கிறது. 1943இல் வங்கத்தின் வறட்சி நிலைமையில் மக்கள் உயிரிழந்ததற்குப் பின்னர் (அப்போது சுமார் 30 லட்சம் பேர் பசி-பட்டினி, ஊட்டச்சத்தின்மையால் இறந்தார்கள்) மிகப்பெரிய அளவில் மோசமான பேரழிவு இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.  அப்போது ஏற்பட்ட அழிவிற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் அது கடைப்பிடித்த காலனியாதிக்கக் கொள்கைகளும் காரணமாகும். நாடு ‘பிரிவினை’யுற்ற சமயத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான மரணங்கள், பரஸ்பரம் மதவெறிக் கொலைகள் என்பதால் இதுபோன்ற அழிவு நிகழ்வுகளுடன் ஒப்பிடக்கூடாது.

தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்றில், குறைந்தபட்சம் பத்து லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். இறப்போர் எண்ணிக்கை மலைபோல் தொடர்கிறது. இந்த விவரம் கூட மிகவும் குறைவான மதிப்பீடேயாகும். அதிகாரபூர்வமாகவே இரண்டு லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள்.

இத்தகைய பேரழிவுக்கு நரேந்திர மோடியும் அவருடைய அரசாங்கமும்தான் பொறுப்பு என்று கூறுவதற்கு பெரிய அளவில் வரலாற்றாராய்ச்சி எதுவும் தேவை இல்லை. மோடி அரசாங்கத்தின் குற்றப்பொறுப்பை எடுத்துக்காட்டுவதற்கு, இப்போது ஏப்ரல் 19 அன்று மோடி அரசாங்கம் பிறப்பித்துள்ள புதிய தடுப்பூசிக்கொள்கையைக் காட்டிலும் வேறெதையும் கூறவேண்டியதில்லை.

இப்போது மருத்துவமனைகளில் உள்ளேயும் வெளியேயும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நோயாளிகள் மூச்சுவிடுவதற்கு ஆக்சிஜன் இன்றி திண்டாடிக் கொண்டிருக்கும் பயங்கரமான காட்சிகள் இந்தியாவையும், உலகத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றன.  வரவிருக்கும் காலங்களில், திரவ ஆக்சிஜன் அனுப்பி வைப்பது, மருத்துவமனைகளில் அவற்றின் சப்ளைகளை உறுதிசெய்வது, ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவது ஆகியவற்றிற்குக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

எனினும், உடனடியாக, நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்த வேண்டியது அவசர அவசியமாகும். ஆனால் அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டமோ மிகவும் மோசமானதாகவும், பாகுபாட்டுடனும், அநீதியாகவும் வகுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு, இதுதொடர்பாக தன் பொறுப்பைக் கைவிட்டுவிட்டது. நாட்டின் குடிமக்களில் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடையேயுள்ளவர்களுக்கு, தடுப்பூசிகள் கொள்முதல் செய்யும் பொறுப்பை, மாநில அரசுகளின் பக்கம் தள்ளிவிட்டது. அனைத்து மாநில அரசுகளுக்கும் தடுப்பூசிகள் வாங்குவதற்கான வள ஆதாரங்கள் கிடையாது. மத்திய அரசானது, தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதத்தை மாநில அரசாங்கங்களும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவித்திருப்பதன் மூலம், மிகவும் குறைவான அளவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளைப் பெறுவதில், மாநில அரசுகள் வாங்குவதில் தேவையற்ற போட்டிக்கு வழிதிறந்து விட்டிருக்கிறது.

முதலாவதாக, பிரதமரின் நேரடி ஒப்புதலின்கீழ், மக்களைக் கசக்கிப்பிழிந்து கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு, இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும், பயோடெக் நிறுவனமும் உரிமங்கள் பெற்றிருக்கின்றன.

இரண்டாவதாக, மத்திய அரசாங்கம் நாட்டில் 18 வயதுக்கு மேம்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதும், அவர்கள் தடுப்பூசிகள் போடுவதற்குத் தேவையான தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதும், அல்லது, வெளிநாடுகளிலிருந்து போதுமான அளவிற்கு தடுப்பூசிகள் வாங்கி இருப்பு வைக்காததும் நன்கு தெரிந்தும், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று இழிவான முறையில் அறிவித்திருக்கிறது. இதற்காக மாநில அரசாங்கங்கள் அதிக விலை கொடுத்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மக்கள் போதுமான அளவிற்குத் தடுப்பூசிகள் போடாவிட்டால் அந்தப் பழியை மாநில அரசுகள் மீது சுமத்தும் விதத்தில் மடைமாற்றிவிட்டிருக்கிறது.

மூன்றாவதாக, தடுப்பூசி உற்பத்தி செய்திடும் தனியார் நிறுவனங்கள் இரண்டும்தான், எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு அனுப்பவேண்டும், எப்போது அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்திடும். மத்திய அரசின் ஒரே கட்டளையின்கீழ் மாநில அரசுகள் அனைத்தும் இவ்விரு கம்பெனிகளின் விண்ணப்பதாரர்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, மாநில அரசாங்கங்கள் தனியார் மருத்துவமனைகளுடனும், கார்ப்பரேட்டுகளுடனும் போட்டிபோட்டுக்கொண்டு தடுப்பூசிகளை வாங்கியாக வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதே எந்த அளவிற்குத் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பதை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏப்ரல் தொடக்கத்தில் தடுப்பூசிகளைப் பெற்ற அளவிற்கு பின்னர் மாநில அரசுகளால் தடுப்பூசிகளைப் பெற முடியவில்லை என்றும், பாதி அளவிற்குத்தான் வந்திருக்கிறது என்றும் செய்திகள் வந்துகொண்டிருக் கின்றன. இந்த எதார்த்த உண்மையை மத்திய அரசாங்கமும், சுகாதார அமைச்சகமும் மறுப்பது தொடர்கிறது. தடுப்பூசிப் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை வலுவானமுறையில் சமாளிப்பதில் படுதோல்வி அடைந்ததை மூடிமறைப்பதற்காக, மாநில அரசாங்கங்கள் மீது மத்திய சுகாதார அமைச்சர் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.

இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட், கோவிஷீல்டின் விலையை மாநில அரசாங்கங்களுக்கு ஒரு தடுப்பூசி ஒரு தடவை (dose)க்கு 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் அறிவித்திருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் மேலும் ஒருபடி சென்று மாநில அரசாங்கங்களுக்கு 600 ரூபாய் என்றும், தனியார்துறைக்கு 1200 ரூபாய் என்றும் நிர்ணயித்திருக்கிறது. இதனைப் பகல் கொள்ளை என்று கூறுவதைத்தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

மோடி அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கையும் ஊகிக்கக்கூடியதேயாகும். அது தடுப்பூசி உற்பத்தி செய்திடும் நிறுவனங்களிடம் விலையைக் குறைத்திடுமாறு கேட்டுக் கொள்ளும். இதனை செவிமடுத்து, அவையும் பெயரளவில் சற்றே விலைகளைக் குறைத்திடலாம். இதற்கு மத்திய அரசு உரிமை கொண்டாடிடும். ஆனாலும் தடுப்பூசிக் கொள்கையில் உள்ள சமத்துவமின்மையும், பேராசையும் தொடர்ந்து நீடித்திடும்.

எந்தவிதத்திலும் இதனை ஏற்க முடியாது. இந்தக் கொள்கையை அரசாங்கம் உடனடியாகக் கிழித்தெறிய வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை இலவசமாக்கும் விதத்தில் புதிய கொள்கையை அறிவித்திட வேண்டும்.

மத்திய அரசாங்கம் தடுப்பூசிகளுக்காக பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஏற்கனவே ஒதுக்கி இருக்கிறது. பட்ஜெட்டைத் தாக்கல் செய்திடும்போது நிதியமைச்சர், தேவைப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், இப்போது மத்திய அரசு 45 வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்பதற்காக, அந்தத் தொகையில் வெறும் 10 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே செலவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக மாநில அரசாங்கங்களுக்கு அளிக்க வேண்டிய பங்கினை அளிக்க மறுத்துக் கொண்டிருக்கிறது. மாநிலங்கள் மூலமாக இலவசத் தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு மீதமுள்ள 25 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினாலே போதுமானதாகும்.

இவ்வாறு சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருக்கக்கூடிய நிலையில் அதனை மோடி-அமித்ஷா இரட்டையர் கையாண்ட விதம் குறித்து மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் கோபம் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கோபம் நியாயமானதேயாகும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றும் விதத்தில் ஓர் ஒருங்கிணைந்த தடுப்பூசித் திட்டமே இப்போதைய பிரதான கடமையாகும்.

இதற்கு மத்திய அரசாங்கம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்: மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் மருந்து (விலைக் கட்டுப்பாடு) ஆணை ஆகியவற்றின்கீழ் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, மத்திய அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளின் விலைகளை நிர்ணயம் செய்திட வேண்டும். மத்திய அரசே, மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை ஒரு வெளிப்படையான சூத்திரத்தின் (formula) அடிப்படையில், அளித்திட வேண்டும். மாநில அரசாங்கங்கள் தடுப்பூசித் திட்டத்தை தங்கள் மாநிலங்களில் எவ்விதத்தில் அமல்படுத்திடலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னுரிமைகள் அளித்திட வேண்டும்.

தடுப்பூசி உற்பத்தியை முடுக்கிவிட, கட்டாய உரிமக் கொள்கை கொண்டுவரப்பட வேண்டும். பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்திடும் கோவாக்சின் (இதன் ஆராய்ச்சிக்காக அரசாங்கத்தின் பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது) பொதுத்துறையின் கீழ் உள்ள ஆறு மருந்துக் கம்பெனிகளுக்கும், மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அளித்திட வேண்டும். இவையன்றி இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 உற்பத்தி செய்ய முன்வந்துள்ள இந்தியக் கம்பெனிகள் அனைத்திற்கும் அனுமதி அளித்து அவை விரைவாக உற்பத்தியைச் செய்திடக் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும்.  இம்முயற்சிகள் அனைத்துடனும், எங்கெங்கே சாத்தியமோ அங்கிருந்தெல்லாம் இறக்குமதிகளையும் உடனடியாகச் செய்திட வேண்டும்.

இப்போதுள்ள அழிவுகரமான நிலைமைக்குத் தீர்வுகாண வேண்டுமானால் குறைந்தபட்சம் மோடி அரசாங்கம் இவற்றின் அடிப்படையில், அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் ஒரு சமமான மற்றும் ஒருங்கிணைந்த விரிவான கொள்கையை அறிவித்திட வேண்டும்.

மூலம்: The Scandal that is the Modi Government
தமிழில்: ச.வீரமணி

Secondary source: chakkram.com

 

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...