பிரேமதாஸா எப்படி படுகொலை செய்யப்பட்டார்?


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக்கூடாத கதைகள் பல உள்ளன. அதுதொடர்பில், சுதத் சில்வா, சகோதர பத்திரிகையான ‘லங்காதீப’விடம் பேசியுள்ளார்.  

சுதத் சில்வா, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் கடமையாற்றிய உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். அரச தலைவர்களுக்கு மிகநெருக்கமாக இருந்த அவர், ‘தகவல் களஞ்சியம்’ போன்றவர். அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இக்கட்டுரை எழுதப்பட்டது.

ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் கடைசி தருணம் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றையதினம், ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணி, இரண்டு வழிகளில் வந்துகொண்டிருந்தது. மெசஞ்சர் வீதி பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பகல் 12.15யை அண்மித்திருந்தது.

“சுதத், மைத்தானத்தில் மக்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்”?  

ஜனாதிபதி பிரேமதாஸ சுதத் சில்வாவிடம் கேட்டார். அப்போது, பிரேமதாஸ, சுகததாஸ உள்ளரங்கத்துக்கு அண்மையிலுள்ள வீதியொன்றில் இருந்தார்.

 “சேர், மைதானம் நிரம்பி வழிகிறது” என ஜனாதிபதியிடம் சுதத் தெரிவித்தார். 

அந்த வசனத்தை கேட்டவுடன், பிரேமதாஸவின் முகத்தில் ஒருவிதமான புத்துணர்ச்சி தென்பட்டது. பெரும் சந்தோஷம் சூழ்கொண்டிருந்தது. அதற்கான காரணங்களும் இருந்தன. ஐ.தே.கவின் பிரபலங்களான லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க ஆகிய இருவரும், கட்சியில் இருக்கவில்லை. ஜனாதிபதி பிரேமதாஸ, தனியாகவே மே தினப் பேரணியை நடத்தினார். அதில், பெருந்திரளான மக்கள் கூட்டத்தை கூட்ட முடியாமல் போய்விடுமோ, என்ற பயம் அவருக்கு இல்லாமலும் இல்லை.  

சுகததாஸ, விளையாட்டரங்குக்கு அருகில் வாகனத்திலிருந்து இறங்கிய ஜனாதிபதி பிரேமதாஸ, ஆமர்வீதிவரை நடந்தே வந்​தார்.  

நேரம் 12.30 மணியிருக்கும், கைக்கடிகாரத்தை பார்த்த ஜனாதிபதி, அருகிலிருந்த ஜனாதிபதியின் செய்திச் செயலாளரான எவன்ஸ்ட் குரே என்பவரை அழைத்தார். “வானொலியில் 12.45க்கு செய்தி இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணியில், இலட்சத்தை விடவும் அதிகமான சனத்திரள்” என, செய்தியை ஒலிபரப்புமாறு கேட்டுக்கொண்டார்.  

அச்செய்தியை ​வழங்குவதற்கான தொலைபேசியை எடுத்துகொண்டு, ‘சுலைமான்’ வைத்தியசாலையின் பக்கமாக, எவன்ஸ்ட் குரே சென்றுவிட்டார். நானும் வாகனத்தில் ஏறிக்கொண்டு, குரேக்கு பின்னாலே சென்றுவிட்டேன்.  

அப்போது, ஜீப்பில் ஏறுவதற்கு ஜனாதிபதி தயாராகிக்கொண்டிருந்தார். மெசஞ்சர் வீதியிலிருந்து வந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் பிரபல ஆதரவாளர்களுக்கு சமிக்ஞையை காட்டுவதற்கே, அச்சந்தியில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காகவே, ஜனாதிபதியும் காத்திருந்தார்.  

மெசஞ்சர் வீதியின் ஊடாக வந்துகொண்டிருந்த பேரணி, முன்னோக்கி நகர்கையிலேயே குண்டு வெடித்தது. சுமார் 15 மீற்றர் கூட, நாங்கள் இருவரும் சென்றிருக்கமாட்டோம். குண்டு வெடித்துவிட்டது. 

“அதற்குப் பின்னர் நடந்ததை நினைத்துகூடப் பார்க்கமுடியவில்லை” எனத் தனது ஞாபகங்களை பகிர்ந்துகொண்ட சுதத் சில்வா, ஜனாதிபதி பிரேமதாஸவின் அருகிலிருந்தவர்களை நினைவுபடுத்தினார். “உண்மையில், இறுதி சில நிமிடங்கள் கடுமையாக பாதுகாப்பு வலயத்துக்குள்ளே, ஜனாதிபதி பிரேமதாஸ இருந்தார். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் இருந்தனர். அந்த வலயத்துக்குள் இருந்த எவருமே மிஞ்சவில்லை”  

“எனது முதுகின் இடதுபக்கத்தில் ஏதோவொன்று விழுந்ததைப் போல உணர்ந்தேன், அந்த அதிர்ச்சியில் கையை வைத்துப்பார்த்தேன், சதையொன்று தொங்கிக்கொண்டிருந்தது. ஜனாதிபதி பிரேமதாஸ ரணசிங்க நின்றிருந்த திசையைப் பார்த்தேன், மனிதர்களின் அங்கங்கள் மட்டுமே சிதறி கிடந்தன. அவ்விடத்திலிருந்த பிரதிப் பொலிஸ் அதிகாரியின் பணிப்பில், புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துகொண்டேன்.  

அத்தனை புகைப்படங்களும் என்னிடம் இருக்கின்றன. சிலவற்றை ஊடகங்களில் பயன்படுத்த முடியாது. அந்த உயரதிகாரியிடம், ஜனாதிபதி எங்கே? எனக்கேட்டேன், வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார் என்றார். அதன்பின்னர், ​ஆமர் வீதி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, என்னுடைய வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தேன். அப்போது, நானும் இறந்துவிட்டதாகவே என்னுடைய தந்தைக்கு யாரோ தகவல் கொடுத்திருந்தனர்.  

அதன்பின்னர், நான், காரியாலயத்துக்குச் சென்றுவிட்டேன், அப்போது தொலைபேசியொன்று அலறிகொண்டிருந்தது; எடுத்தேன். 

“சுதத், இப்போதா வந்தீர்கள்” என, பிரேமதாஸவின் மனைவி கேட்டார். “ஒவ் மெடம்” என்றேன். “சேர் எங்கே?… சேர்க்கு என்ன நடந்தது”? எனக் கேட்டார். “தெரியாது மேடம், அவரை பார்க்கத்தான், காரியாலயத்துக்கு நான் வந்தேன்” எனப் பதிலளித்தேன்.  

அந்த இரண்டொரு நிமிடங்களில்தான், ஜனாதிபதி பிரேமதாஸ, குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்துகொண்டேன்.  

“ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவர், ‘பாபு’ என்பவர்தான் என்பதைப் பலரும் கேள்விபட்டிருப்பீர்கள். அது நீண்டதொரு கதையாகும்” எனக் கதையைத் தொடர்ந்தார்.  

டயஸ் ப்ளேஸின் மாடிவீடுகளின் கீழ், சிங்களவருக்குச் சொந்தமான பால் கடையொன்று இருந்தது. அதில் உதவியாளராகவே ‘பாபு’ வந்திருந்துள்ளார். அந்த கடையிலிருந்து கொஞ்சம் தூரத்திலிருக்கும் வீட்டில், பாபுவின் நண்பர் இருந்துள்ளார். அவரும் சிங்களவர், மதுபானம் அருந்துதல், புகைத்தல் உள்ளிட்ட எந்தவிதமான கெட்டபழக்கங்களும் இன்றி, நல்லொழுக்கமுள்ள நபராக பாபு இருந்துள்ளார்.  

அந்த மாடிவீட்டுத் திட்டம் பிரேமதாஸவால் உருவாக்கப்பட்டது. பாற்கடையின் உரிமையாளருக்கும், மேல்மாடியில் இருக்கும் பாபுவின் நண்பரின் தங்கைக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. காதலுக்கு உதவி செய்த பாபு, மேல்மாடிக்கு ஒருநாள் சென்றுள்ளார். அவ்வீட்டில் பிரேமதாஸவின் புகைப்படங்கள் சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்துள்ளன.  

இதுதொடர்பில், பால் முதலாளியிடம் பாபு கேட்டுள்ளார். அப்போது, மாடிவிட்டு நண்பருக்கும், ஜனாதிபதி பிரேமதாஸவுக்கும் இடையிலிருக்கும் நெருக்கத்தை பாபு புரிந்துகொண்டார்.  

“ஜனாதிபதி வெளியிடங்களுக்குச் செல்லும் போது, சமைப்பதற்கான உதவியாளர், தேவையான பொருள்கள், உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவை, முதல்நாளன்றே வாகனத்தில் அனுப்பிவைக்கப்படும். அதில், முதலாளியின் நண்பரும் செல்வார். சில நாள்களில் முதலாளியும் செல்வர். பாபுவும் அவர்களுடன் செல்வார். இது சாதாரணமாகவே நடந்தது. என்றாலும், ஒருநாளேனும், ஜனாதிபதி பிரேமதாஸவை பார்ப்பதற்கு, முகத்தைக் காட்டுவதற்கு பாபு வரவில்லை; நானும் காணவே இல்லை” என்றார் சுதத் சில்வா, 

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, சென்றிருந்த தூரப்பயணங்கள் பலவற்றுக்கு, பாபுவும் முதல் நாளன்றே சென்றிருக்கின்றார். முதலாளியின் நண்பர்தான், பிரேமதாஸவின் கண்ணாடி முதல் சகலவற்றையும் ஏற்பாடு செய்து முகாமைத்துவம் செய்பவர். ஜனாதிபதிக்குத் தூக்கம் வரும் வரையிலும் தலையை ‘மசாஜ்’ செய்துவிடுவார். அவருடன் பாபுவும், காரியாலயத்துக்கு பலமுறை சென்றிருக்கின்றார்.  

அங்கெல்லாம், பாதுகாப்பு கடமைகளில் இருப்போருக்கும் பாபு ஒரு விருந்தாளி அல்ல. பாதுகாப்பு பிரிவினருக்கு பாபு, நெருக்கமானவர். கோவிலுக்குச் செல்வதை பாபு பழக்கமாக ​கொண்டிருந்தார். எந்தநாளும் கோவிலுக்கு சென்றிருக்கின்றார்.   

இவ்வாறு சென்றுகொண்டிருந்த போது, பாற்கடை​ நட்டமடைந்தது. எனினும், அக்கடை​யை மீள கட்டியெழுப்புவதற்கு பாபு பணம் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல, பி​ரேமதாஸ தூரப்பயணம் செல்லும் போது, முதல்நாளன்று செல்வோருக்கு கையை விரித்து பாபு செலவழித்துள்ளார். அப்பணம் ​எங்கிருந்து வந்தது என்பதை யாராவது கேட்டார்களா என்பது பிரச்சினையாகும்.  

பிரேமதாஸ, படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், இறுதியாக தூரப்பயணமாக, கதிர்காமத்துக்கு பயணித்திருந்தார். அங்கும் பாபு இருந்துள்ளார். ஜனாதிபதி இரவை கழித்த பங்களாவின் ஒருபகுதியில், பாபும் அவருடைய நண்பர்களும் இருந்துள்ளனர். அன்றிரவு, அவர்கள் மதுவிருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர்.  

தன்னுடைய இலக்கை எட்டும் வரையிலும் பாபு, பொறுமையாகக் காத்திருந்துள்ளார். இலக்கை விரைவில் அடைவதற்கு பாபு அவசரப்படவில்லை. பங்களாவில் ஜனாதிபதி இருந்தபோது, அச்சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்தவில்லை, எந்தநேரமும் தான் ஒரு நம்பிக்கையானவர் என்பதைப் பாதுகாத்தார். சந்தேகமில்லாத இலக்குக்காக, மே 1ஆம் திகதி வரையிலும் காத்திருந்தார்.  

மே1 பகல் 11 மணிளவில் வாழைத்தோட்ட கூட்டம் நிறைவடைந்து விட்டது என்பதை குணசிங்புர ஏற்பாட்டாளரிடமிருந்து பாபு அறிந்துகொண்டுள்ளார். ஆமர்வீதி சந்தியில், எந்தப்பக்க பேரணியுடன் ஜனாதிபதி பிரேமதாஸ, இணைந்துகொள்வர் என்பதையும் ஐ.தே.கவின் பிரபல ஆதரவாளர்களின் ஊடாக, பாபு தெரிந்துவைத்துள்ளார்.  

இந்தப் பேரணியை, முன்னோக்கி நகர்த்துவதற்கான சமிக்ஞையைக் கொடுப்பதற்கு சில விநாடிகள் இருக்கும்போது, மனிதக் குண்டு வெடித்துச் சிதறியுள்ளது. அப்போது, பாபு நடந்தே வந்துள்ளார். அவர், சைக்கிளில் வந்தார் என்ற கதை தவறானது. ஏனைய நபர்களின் மீதான தாக்குதல்களின் பின்னர், பாபுவின் தலை, 3 அல்லது 4 மீற்றர் தூரத்தில் கிடந்தது.  

ஜனாதிபதி பிரேமதாஸவின் உடலில் பெரும்பகுதி எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தது. என்றாலும் இனங்கண்டுகொள்ளும் வகையில் இருந்தது. கை உடைந்திருந்தது. அண்மையில் கிடந்த சடலங்களுக்கு இடையே, ஆகக் கூடுதலான பாதிப்புகள், ஜனாதிபதிக்கு அருகிலிருந்த மொஹீதினின் உடலுக்கே ஏற்பட்டிருந்தது, குண்டு வெடிக்கும் போது, ஜனாதிபதிக்கு அருகில், மொஹீதீனே இருந்திருக்கலாமெனத் தன்னுடைய ஞாபகங்களை சுதத் சில்வா பகிர்ந்துகொண்டார். 

தமிழ்மிரர்

Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...