எம்மை விட்டுப் பிரிந்த மதிப்புக்குரிய பத்தேகம சமித தேரர்- எஸ்.எம்.எம்.பஷீர்

மதிப்புக்குரிய பத்தேகம சமித தேரர் கொரோனா  தொற்றின் காரணமாக தனது 69 வயதில் 30/05/2021 ஆம் திகதி அகால மரணமடைந்தார். அவருடன் கலந்துரையாடிய பல சந்தர்ப்பங்கள் நினைவு கூரத்தக்கவை. அவரது இடதுசாரி அரசியல் அடையாளம் மட்டுமல்ல அவரின் அரசியல்  அனுபவம் , ஆளுமை , மனித நேயம், நட்பினை பேணும் பண்பாடு, மக்கள் தொடர்பாடல்  என்பன மனதில் நினைவு கொள்ளத்தக்கவை . சில வருடங்களுக்கு முன்னர் கடைசியாக அவரை கொழும்பில் சந்தித்த பொழுது முஸ்லிம்கள் வழக்கமாக சொல்லும் "இன்ஷா  அல்லாஹ் " (இறைவன் நாடினால்) மீண்டும்  சந்திப்போம் என்று கூறியே விடை பெற்றார். அதன் பின்னர் அவரை நான் சந்திக்க கிடைக்கவில்லை .  பௌத்த பிக்கு என்பதைவிட ஒரு அற்புதமான மனிதர் அவர்.  பல்லின சமூகத்தில் பௌத்த தேரர்களின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தார். அவரின் வெற்றிடம் இலகுவில் நிரப்பப்படக் கூடியதல்ல.. 


 முஸ்லிம் வாட்ச் இணையத்தில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியான அவரின் நேர்காணல்  முஸ்லீம் சமூகம் தொடர்பான அவரின் கருத்துக்களை பிரதிபலிகின்றன.


Photo: with Baddegama Sobitha Thero

 

 

 

*உத்தமர்களாக வேண்டியது மனிதர்களே அன்றி இனமோ, மதமோ அல்ல” – சமித்த தேரர்

4478876972_74024812da-225x3001980 தொடக்கம் இனவாதத்திற்கு எதிராக தென்னிலங்கையில் இருந்து எழும் உறுதியான குரல். சமசமாஜக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர். இவரது கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், அரசாங்கத்திற்கு எதிராக துணிந்து பேசிவருபவர். “நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறோம், ஆகவே அரசாங்கத்திற்கு எதிராக எம்மால் வெளிப்படையாக பேசமுடியாது” என சொல்லிவருகின்ற துணிச்சலற்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளின் முகத்தை ஒருவகையில் அம்பலப்படுத்தும் நேர்காணல் இது.

(‘ஜனரல’ சிங்களச் செய்திப் பத்திரிகையில் (மே 2013) வெளியான தென்மாகாண சபை உறுப்பினர் சமித்த தேரரின் நேர்காணலில் ஒரு பகுதி. (சிங்களத்தில்: ஆஷிகா பிராமன))

தற்போது மேலெழுந்துள்ள இனவாத, மதவாத பிரச்சினைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது மிகவும் மோசமான நிலையாகும். இந்த நிலை அரசுக்கு உகந்ததல்ல. இலங்கையை எடுத்துநோக்கினால் இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. எனவே, ஒரு இனம் மற்றைய இனத்தை, மதத்தை இழிந்துரைப்பதற்கும், களங்கம் விளைவிப்பதற்கும் உரிமை கிடையாது. இங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது அறியாமையேயாகும்.

ஏதேனும் ஒரு சமூகத்தில் பிரதான இனம் எனக் கருதப்படும் இனத்திற்கு கூடுதலான சலுகைகள் வழங்கப்பட வேண்டுமா?

எந்தவொரு சமூகத்திற்கும் அவ்வாறு நடக்கக் கூடாது. மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள். அந்த சமஉரிமை எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும். பிரச்சினைகள், பிளவுகள் ஏற்பட்டால் அதுபற்றி தீர ஆலோசனை செய்து முடிவு காணலாம்.

நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள். என்றாலும் சந்திக்குச் சந்தி கூட்டங்களைக் கூட்டி இனத்தைப் பற்றி, மதத்தைப்பற்றி   பெரிதாகப் பேசுகிறார்களே?

நீங்கள் பொதுபல சேனாவைப் பற்றிக் கேட்பதாக நினைக்கிறேன்.

சரி, அதுபற்றியும் பேசுவோமே?

பொதுபல சேனா என்பது இந்தச் சமுதாயத்திற்கு வேண்டத்தகாததும், புதிய இணைப்புமாகும். அவர்கள் அல்கைதா இயக்கம் போல செயற்படுகிறார்கள். இது பௌத்த சம்பிரதாயம் அல்ல. அதனால் சம்பிரதாயத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்திச் செல்கின்ற இவர்களை விரட்டியடிக்க வேண்டும். அதுதான் பொதுபல சேனா பற்றிய எனது கருத்து.

என்றாலும் அவர்களை சமூகம் எதிர்க்கவில்லையே. அவர்களை ஏற்றுக்கொள்ளாத தன்மை இல்லையே?

எனக்குச் சொல்லமுடியுமானது என்னவென்றால், இந்நாட்டிலுள்ள சிந்தனையாளர்கள், புத்திசாதுரியமானவர்கள் இந்த இயக்கத்தை நிராகரித்துள்ளார்கள். மல்வத்த மகாநாயக்க தேரர்கள், களனி விகாரையின் விகாராதிபதி, இத்தபான விகாராதிபதி போலவே, நாட்டிலுள்ள பிரபல பௌத்த விகாராதிபதிகள் இதனை நிராகரித்துள்ளார்கள். பௌத்த சமயத்தைச் சேர்ந்த உண்மை பௌத்தர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து கொள்ள மாட்டார்கள். இனவாதிகள்தான் இதனைச் செய்கிறார்கள். அந்த இனவாத சக்தி நீடித்து நிற்காது. கொஞ்சம் நாட்களுடன் காணாமற் போய்விடும்.

அது எவ்வாறாயினும், பௌத்த சமயத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது, அடிப்படைவாதம் செயற்படுகிறது எனக் கூறுகிறார்கள். அவ்வாறு அச்சுறுத்தல் அல்லது அடிப்படைவாதம் இருக்கின்றதா?

வரலாற்றில் இவ்வாறான கதைகளைப் படித்திருக்கிறோம். முதலில் தமிழர்களின் அடிப்படைவாதம் பற்றிப்பேசினார்கள். அதற்குப்பிறகு ஹெல உறுமய போன்ற இயக்கங்கள் கிறிஸ்தவ சமயத்தவர்களை அடிப்படைவாதிகள் என்றது. சோம தேரரை கொலை செய்தார்கள் என்றுகூறினார்கள். கத்தோலிக்க தேவாலயங்கள் நாட்டை கைப்பற்றவுள்ளது, அதற்கெதிராக நாங்கள் எழுந்து நிற்க வேண்டும். பௌத்த சமயத்தை இல்லாதொழிக்கப்போகிறார்கள். அவ்வாறான கதைகளைச் சொல்லி வருகிறார்கள்.

இவ்வாறு சொல்லி சோம தேரரின் மரணத்தை கழுத்தில் ஏந்திச் சென்றவர்கள் குறைந்தளவு, சோம தேரர் இறந்தாரா இல்லையாரேனும் கொன்றார்களா? என்று கூட தேடவில்லை. பாராளுமன்றத்திற்குச் சென்ற பின்னர் எல்லாமே அவர்களுக்கு மறந்துவிட்டது. அண்மைக் காலமாக நாங்கள் காண்பது என்னவென்றால், மக்களை அச்சமூட்டி அவர்களது கருமங்களைச் செய்துகொள்ள முயற்சிசெய்கிறார்கள். தற்போதுள்ளது அவ்வாறு சோடிக்கப்பட்ட அரசியல் கலாசாரம்தான். எனது நம்பிக்கை என்னவென்றால், இவர்கள் மக்களை அச்சமூட்டி, குழப்பமடையச் செய்து ஏதோ சாதிக்க முயற்சிசெய்கிறார்கள்.

மதவாத, இனவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர்கள் அரசியல் கலாசாரத்தில் ஒரு பகுதியினர் என நீங்கள்  நினைக்கிறீர்களா? இவர்களது செயற்பாடு எவ்வாறு சக்தி மிக்கதாகின்றது?

அவ்வாறுதான் காட்சி கொடுக்கிறார்கள். இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று: மிகத் தெளிவாக பாதுகாப்புச் செயலாளர் இதற்கு பக்கபலமாக இருக்கின்றார் என்பது. அதனை நான் சாட்சிகளுடன் கண்டேன். இனி, இந்த இனவாதக் குழு அந்த நிழலுக்குள் அகப்பட்டுக்கொண்டு குற்றங்கள் இழைக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இரண்டு: இந்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவு போன்ற பிரச்சினைகளை மக்கள் விளங்கிக் கொள்ளாதிருக்க இவர்கள் இவ்வாறு ஆட்டி வைத்தால் காரியம் நடக்கும் என்பது அரசாங்கத்தின் எண்ணப்பாடு. பொதுவாக அரசொன்றின் இயல்பும் அதுதான். அது மிக மோசமான வழிகாட்டல். மிகத் தெளிவாக விளங்குவது என்னவென்றால் நாங்கள் இப்போது அராஜகத்துக்குள் அறியாமலேயே உள்நுழைந்துள்ளோம்.

மேலும் இஸ்லாமிய சமயத்திற்கு எதிரான, இஸ்லாமியருக்கு எதிரான விரோதம் தற்போது பௌத்த விகாரைகளையும் நோக்கிச் சென்றுள்ளதே?

இப்போதிருக்கின்ற அசிங்கமான சமுதாயத்துக்குள் இருக்கின்ற நோய்தான் இது. பயங்கர நோயின் அறிகுறி. இறுதியில் இது மிகப்பெரிய விளைவுகளுக்குக் சவாலாக அமையும். பௌத்த சமயம் சமாதானமான சமயமாகவே கொள்ளப்படுகிறது. தற்போது நிகழ்கின்ற விடயங்களால் பௌத்த சமயத்திற்கு குறை ஏற்படுகிறது. இந்தக் கொடூர களங்கத்தினை ஏற்படுத்தும் இயக்கத்திற்கு முழுமையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். அதேபோல மிகவும் கவனமாக இந்தப் பிரச்சினைகளை முகாமைத்து வப்படுத்தப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

மிகக் கவனமாக முகாமைத்துவப்படுத்த வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் இருபகுதியினரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அர்த்தத்திலா?

எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தாமல் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ள பொறுப்பாகும். அதற்கு அரசாங்கம் சட்டத்தை ஏற்படுத்த வேண்டும். பிரச்சினைகள் மூளாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது. அதனை அரசாங்கத்தால் செய்ய இயலும். அரசியல் யாப்புச் சட்டமும் இதனை உறுதிப்படுத்துகிறது. மறுபக்கம் எந்தவொரு மதமும் ஏனைய மதங்களை இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். பிரச்சினைகள் மூளும்போது பேச்சுவார்த்தை மூலம் அதனைத் தீர்த்துக் கொள்ளக்கூடியவாறு இருத்தல் வேண்டும்.

என்றாலும் நாளாந்தம் சந்திக்குச் சந்தி பேசப்படுகின்,ற நடாத்தப்படுகின்ற தீய செயல்களை கட்டுப்படுத்த யாரும் முன்வருவதில்லையே! நாளுக்கு நாள் இந்தப் பிரச்சினைகள் மேலெழுகின்றதே தவிர குறைந்தபாடில்லையே?

எப்படியாயினும் நான் ஒருபோதும் தற்போது நடக்கின்ற விடயங்களுக்கு ஆதரவாக இருக்கவே மாட்டேன். உண்மையில் இவற்றைப் பூரணமாக அழித்தொழிக்க வேண்டும். அவ்வாறின்றேல், ஒருபோதும் இதனைச் சரியான வழிக்குக் கொண்டுவர முடியாது.

இனவாதமாயினும் மதவாதமாயினும் அடிப்படைவாதமாயினும், அது அரசியலுடன் தொடர்புற்றது என்று கருத முடியாதா?

எப்படியும் இது அரசாங்கம் அறியாமல் நடக்கக் கூடியதல்ல. அது தெளிவு. அரசாங்கம் அறியாமல் இந்தளவு மாற்றங்கள் ஏற்பட முடியாது. எங்களுக்கு நன்றாகத் தெரியும். பாதுகாப்புச் செயலாளர் இதற்கு உடந்தையாக இருப்பது எங்களுக்குத் தெரியும். அது செய்யக் கூடாத வேலை. ஆயினும் அரசாங்கம் மௌனியாக இருக்கின்றது.

8588002543_da681edba0சுவாமி, அதேபோலத்தான் ஒரு பௌத்தன் கூட இல்லாத பகுதிகளில் பௌத்த சிலைகளை அமைக்கிறார்கள். வீடு வீடாய்ச் சென்று பறைசாற்றுகிறார்கள். பயமுறுத்தல்கள் செய்கிறார்கள். மதத்திற்கு அப்பால் உண்பவையும் பருகுபவையும் கூட பிரச்சினைகளாக எழுந்துள்ளன. இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

பௌத்த மதம் பலாத்காரமாகக் கைப்பற்றும் மதமல்ல. வரலாறு முழுதும் நாங்கள் பயன்படுத்திய ஆயுதம் எதுவென்றால், சாதுரியம், அறிவு ரீதியிலான ஞானம். இருளை அகற்றுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. ஒருபோதும் பௌத்த மதம் பலாத்காரத்தினால் வியாபிக்கவில்லை. நான் காணும் இன்னொரு விடயம் பௌத்தக் குறியீடு சிற்சில நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை யார் செய்தாலும் குற்றம் குற்றமே. இந்த அடிகள் எல்லாம் பொதுமக்களின் உரிமைகளையே பாதிக்கிறது. பௌத்த மதத்திற்கு உடந்தையில்லாத இந்த தீய நடவடிக்கைகளை, நடத்தைகளை நான் முழுமையாக எதிர்க்கிறேன். பௌத்த துறவிகள் என்ற வட்டத்திலிருந்து இவை அகற்றப்பட வேண்டும். இவர்களை வெற்றியடையச் செய்வது பெரும் தவறு. இவர்கள் சரியாக பௌத்த மதம் பற்றிக் கூட அறியாதவர்கள். போலி விதண்டாவாதங்களை முன்வைத்து மனித சமுதாயத்தை அழிக்க வேண்டாம் என்று அவர்கள் முன் என்கருத்தை முன்வைக்கிறேன்.

அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்கள் என்று கூறுகின்றனரே?

நான் இலங்கை சமசமாஜக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். கட்சியின் கருத்தைத்தான் நான் சொல்கிறேன். அந்த உரிமையை எங்கள் கட்சி எனக்கு வழங்கியுள்ளது. நான் அதனைத்தான் செய்கிறேன்.

நாங்கள் இருப்பது ஐக்கிய மக்கள் கூட்டணியினருடன். எனக்கு நன்றாகத் தெரியும் இந்தக் கூட்டணியினருடன் இருக்கும்போது சில விடயங்களைச் சொல்ல முடியாமற் போகின்றது. எதிர்காலத்தில் இதனை விடவும் சரியான வழிகளைச் செய்யவேண்டிய தேவையுள்ளது. அவ்வாறே, அநியாயங்களுக்கு எதிராக செயப்பட வேண்டிய தேவையும் உள்ளது என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் சொல்கின்ற “சிலவற்றை சொல்லமுடியாது” எனக் குறிப்பிடுபவை வளர்வதற்கு இடமளிக்கும் அல்லவா?

பொதுவாகத்தான் அது அமையும். 18ஆவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு நாங்கள் வாக்களித் தோம். என்றாலும் கட்சிக்குள் அதற்கெதிராக பலத்த எதிர்ப்பு உள்ளது. அதேபோல பிரதம நீதியரசர் தொடர்பான பிரச்சினையின் போது, எங்கள் கட்சியிலுள்ள ஒருவர் ஆதரவாக வாக்களித்தார். எங்கள் கட்சியின் அமைச்சர் எதிராக வாக்களித்தார்.

இவ்வாறான தலையீடுகள் ஏற்படத்தான் செய்கிறது. கூட்டணிகளுடன் இருக்கும்போது சிற்சில விடயங்களில் அளவோடு இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. எங்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. விசேடமாக எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி இதுபற்றி பேசுவதே இல்லை. அவர்கள் மௌனிகளாக இருக்கிறார்கள். பெரும்பாலானோர் இதுபற்றிக் குறிப்பிடும்போது, மகாநாயக்கதேரர்களால் விடை காணப்பட வேண்டிய விடயம் இது என்கிறார்கள். உண்மையில் எல்லோரும் ஒருமித்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேரணி ஏற்பாடு செய்து மக்களை அணிதிரட்டி இவற்றினை இல்லாதொழிக்க வேண்டும்.

பௌத்த பிக்குகளுக்கு இவ்விடயத்தில் கூடுதலான பொறுப்புள்ளதல்லவா?

ஆமாம், அது உண்மைதான். அதனால்தான் நாங்கள் எங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறோம். மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

ஆயினும், இந்த எதிர்ப்புத் தொடர்ந்து நடைபெறுவதில்லையே?

என்னால் இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் முக்கியமான பௌத்த மதகுருமார்கள் பலருடன் கதைத்தேன். மரியாதைக்குரிய சிறந்த மதகுருமார்கள் பலரும் இதற்காக வெட்கப்படுகிறார்கள். பேய்கள் போன்று செயற்படும்போது எந்தவொரு நபரும் பயப்படத்தான் செய்வார். அதற்காக நான் இவர்களின் செயல்களைச் சரிகாண மாட்டேன். நான் எதற்கும் பயப்படமாட்டேன். நான் சொல்வதெல்லாம் என்னவென்றால், இதனை சூட்சுமமான முறையில் இல்லாதொழிக்க வேண்டும்.

இந்நாடு உண்மையிலேயே சிங்களவர்களின் நாடா? இந்நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தானா சொந்தமானது?

இங்கிலாந்தை வெள்ளையர்களின் நாடு என்றுதானே சொல்கிறோம். என்றாலும், இலண்டனுக்குப் போய்ப் பார்த்தால் விளங்கும். அங்கே எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்றும், எத்தனை இனங்கள் வாழ்கின்றன என்றும் தெளிவாகும். இந்நாட்டில் முக்கிய மூன்று இனங்கள் மட்டும்தான் வாழ்கின்றன. இருமொழிகள்தான் பேசப்படுகின்றன. இன்று உலகில் எந்தவொரு நாடும் ஒரு இனத்திற்காக மட்டும் இல்லவே இல்லை. உத்தமர்களாக வேண்டியது மனிதர்களே அன்றி இனமோ, மதமோ அல்ல.

Thanks: samukanookku.

 Courtesy:www.muslimwatchsl.wordpress.com

No comments:

Post a Comment

Oxfam report “Inequality Kills”: Billionaires racked up wealth while millions died during the pandemic by Kevin Reed

  The global charity Oxfam released a briefing on Monday entitled “Inequality Kills” in advance of the World Economic Forum State of the Wor...