உலக எழுத்தாளர் கி.ரா.- சமஸ்,

 

 ki-rajanarayanan

 

 

தமிழ்நாட்டில், அகிலனுக்கு 1975-ல் அளிக்கப்பட்ட பிறகு ‘ஞானபீடம்’ விருதுக்காக கால் நூற்றாண்டு இருவரது பெயர்கள் அவ்வப்போது பேசப்பட்டுவந்தன. ஜெயகாந்தன், அசோகமித்திரன். ஒருசமயம், சுந்தர ராமசாமி எழுதினார், “ஒவ்வொரு வருடமும் ஜெயகாந்தன் பெயரையோ, அசோகமித்திரன் பெயரையோ மாற்றி மாற்றிப் பரிந்துரைக்கிறேன். ஒருவேளை, நான் பரிந்துரைப்பதை நிறுத்திக்கொண்டால் கொடுப்பார்களோ என்னவோ!”

ஜெயகாந்தனுக்கு 2002-ல் ‘ஞானபீடம்’ கொடுக்கப்பட்ட பிறகு, அசோகமித்திரன் முன்னிறுத்தப்பட்டார்; அடுத்த இடத்தில் கி.ரா. மெல்லப் பேசப்படலானார். ஊடாகவே இந்திரா பார்த்தசாரதி முதல் வைரமுத்து வரை வெவ்வேறு பெயர்களும் அடிபட்டுவந்தன என்றாலும், 2017-ல் அசோகமித்திரனும் மறைந்த பிறகுதான் கி.ரா.வின் பெயர் பெரிதும் பேசப்படலானது. கி.ரா.வுக்கு இதில் வருத்தம் உண்டு. ஜெயகாந்தன், அசோகமித்திரன் தொடங்கி ‘ஞானபீடம்’ விருதுக்காக முன்னிறுத்தப்பட்ட பலர் மீதும் அவருக்கு நன்மதிப்பு இருந்தது; அதேசமயம், தான் எந்த விதத்தில் குறைந்துபோனோம், இத்தனை ஆண்டுகள் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டோம் என்ற கேள்வி அவருக்கு இருந்தது. ஜெயகாந்தனைவிட அசோகமித்திரன் 3 வயது மூத்தவர்; கி.ரா. 11 வயது மூத்தவர் என்பதையும், ஒருவேளை 80 வயதை ஒட்டி மறைந்திருந்தால், பத்ம விருதுகளைப் போல ஞானபீட விருதுக்கும் பேசப்படும் இடத்தில்கூடத் தன் பெயர் இருந்திருக்காது என்ற கி.ரா.வின் கவலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவருடைய துயரத்தின் வலி புரியும்.

 தமிழ்நாட்டில், அகிலனுக்கு 1975-ல் அளிக்கப்பட்ட பிறகு ‘ஞானபீடம்’ விருதுக்காக கால் நூற்றாண்டு இருவரது பெயர்கள் அவ்வப்போது பேசப்பட்டுவந்தன. ஜெயகாந்தன், அசோகமித்திரன். ஒருசமயம், சுந்தர ராமசாமி எழுதினார், “ஒவ்வொரு வருடமும் ஜெயகாந்தன் பெயரையோ, அசோகமித்திரன் பெயரையோ மாற்றி மாற்றிப் பரிந்துரைக்கிறேன். ஒருவேளை, நான் பரிந்துரைப்பதை நிறுத்திக்கொண்டால் கொடுப்பார்களோ என்னவோ!”

 

ஜெயகாந்தனுக்கு 2002-ல் ‘ஞானபீடம்’ கொடுக்கப்பட்ட பிறகு, அசோகமித்திரன் முன்னிறுத்தப்பட்டார்; அடுத்த இடத்தில் கி.ரா. மெல்லப் பேசப்படலானார். ஊடாகவே இந்திரா பார்த்தசாரதி முதல் வைரமுத்து வரை வெவ்வேறு பெயர்களும் அடிபட்டுவந்தன என்றாலும், 2017-ல் அசோகமித்திரனும் மறைந்த பிறகுதான் கி.ரா.வின் பெயர் பெரிதும் பேசப்படலானது. கி.ரா.வுக்கு இதில் வருத்தம் உண்டு. ஜெயகாந்தன், அசோகமித்திரன் தொடங்கி ‘ஞானபீடம்’ விருதுக்காக முன்னிறுத்தப்பட்ட பலர் மீதும் அவருக்கு நன்மதிப்பு இருந்தது; அதேசமயம், தான் எந்த விதத்தில் குறைந்துபோனோம், இத்தனை ஆண்டுகள் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டோம் என்ற கேள்வி அவருக்கு இருந்தது. ஜெயகாந்தனைவிட அசோகமித்திரன் 3 வயது மூத்தவர்; கி.ரா. 11 வயது மூத்தவர் என்பதையும், ஒருவேளை 80 வயதை ஒட்டி மறைந்திருந்தால், பத்ம விருதுகளைப் போல ஞானபீட விருதுக்கும் பேசப்படும் இடத்தில்கூடத் தன் பெயர் இருந்திருக்காது என்ற கி.ரா.வின் கவலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவருடைய துயரத்தின் வலி புரியும்.

 

 

இந்த விருதுக்கான பேச்சு ஒரு பெரிய விஷயம் இல்லை. அது இங்கே இருந்த ஒரு முன்வரிசையைச் சுட்டுவதாகும். வயது அல்லது பங்களிப்பு அடிப்படையிலானது அல்ல இந்த முன்வரிசை; அது ஒரு ‘பொது அடையாளம்’ சார்ந்தும் உருவாக்கப்பட்டிருந்தது. அன்றைய பாரதி, புதுமைப்பித்தனில் தொடங்கி இன்றைய ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் வரை இந்தப் பொது அடையாளப் பட்டியலில் வந்துவிடுவார்கள். கி.ரா. இந்த வட்டத்துக்குள் வர மாட்டார்; இமையம், ஜோ டி குரூஸ் வர மாட்டார்கள். பெருமாளுக்கும் அய்யனாருக்கும் இடையே உள்ள வேறுபாடு மாதிரிதான்; சாமியின் மகிமை மீது யாருக்கும் சந்தேகம் கிடையாது; மரியாதைக்கும் குறைச்சல் இல்லை; ஆனால், அந்தஸ்தில் அது பொது சாமி; இது நாட்டுப்புறச் சாமி.

வாழ்நாள் முழுவதும் இந்தப் பாகுபாட்டை அனுபவித்தார் கி.ரா. அவர் எழுதிய கிராமத்தையும் வாழ்வையும் ஒரு வட்டாரத்தின், ஒரு சமூகத்தின் குரலாகக் குறுக்கும் அரசியல் இங்கே தொடர்ந்து நடந்தது. ஒரு உரையாடலில் கி.ரா. கேட்டார், “சரி, என்னோட கதைகள் ஒரு வட்டாரத்தோட, ஒரு சாதியோட கதைகள்னா மத்தவங்களோடதெல்லாம் என்ன?” அடுத்து கி.ரா. கேட்க வரும் கேள்வி புரிந்துகொள்ள முடியாததா என்ன? ‘ஜெயகாந்தனோ, அசோகமித்திரனோ தன் படைப்புகளில் வெளிக்கொணர்ந்த வாழ்க்கையை மட்டும் எப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான அல்லது உலகளாவிய மானுடப் பரப்புக்கானதாகச் சொல்லிட முடியும்?’

இலக்கியத்தை வகைப்படுத்துவது விமர்சன அழகியலின் முக்கியமான அங்கம். வகைமைகளின் அடிப்படையில் படிநிலையை உருவாக்குவது அரசியல், வணிகம். கி.ரா.வின் கரிசல் கதைகளும், ‘கோபல்ல கிராமம்’ நாவலும் ஒரு சின்ன வட்டாரத்தின் புள்ளி என்றால், ஹார்டியின் வெஸ்ஸக்ஸ் நாவல்களையும், மார்குவெஸின் மகோந்தோ புனைகிராமத்தையும் எந்த வரையறைக்குள் அடக்குவது? அப்படியென்றால், ஆர்.கே.நாராயணன் தன்னுடைய மனிதர்கள், அனுபவங்கள், கற்பனைகள் எல்லாவற்றையும் மால்குடி புனைநகரத்தின் மீது ஏவிவிட்டதுபோல, கி.ரா. தன்னுடைய மனிதர்கள், அனுபவங்கள், கற்பனைகள் எல்லாவற்றையும் வெவ்வேறு பெயர்களிலான கரிசல் கிராமங்கள் மீது ஏற்றிவிட்டாரா? “ஆமா, அப்படித்தானே இருக்க முடியும்!” என்று சொன்னார் கி.ரா.

தன்னுடைய 98 வருட வாழ்க்கையில் மூன்றில் இரு பங்கு காலம் மரபார்ந்த இடைசெவல் கிராமத்தில் வாழ்ந்த கி.ரா. ஒரு பங்கு காலம் படுநவீனமான புதுச்சேரியில் வாழ்ந்தார்; பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர் பணிநிமித்தமாக வந்தவர், ஊரும் மக்களும் பிடித்துப்போனதாலேயே கடைசி வரை புதுச்சேரியிலேயே வாழ்ந்தார். பண்பாட்டுரீதியாக பிரெஞ்சு மனநிலையை அவர் உன்னதமானதாகக் கருதினார். “இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோஷமா வாழணும். அப்படின்னா பறவைகளை மாதிரி சுதந்திரமா, சந்தோஷமா மனுஷங்களும் வாழணும். எந்தக் கட்டுப்பாடும் கூடாது. அதுக்கு இந்தியக் கலாச்சாரம் இடம் கொடுக்கலையே? அட, விருப்பப்பட்ட ஒருத்தரோட சேர்ந்து வாழ இந்தக் கலாச்சாரம் இடம் கொடுக்கலையே!” என்றவர் கிராமங்களைப் புனித மதிப்பீடுகளுக்குள் வைத்துப் பார்க்கப்படுவதை வெறுத்தார். “ஒருகாலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாச்சாரம் இருந்துச்சு. விருப்பம்போல புடிச்சவங்களோட வாழலாம்; புடிக்கலைன்னா அத்துக்கிட்டு போய்ட்லாம்; இன்னொன்னு சேத்துக்கிடலாம். புள்ளைங்களுக்கும் இது தெரியும். ஊருக்கும் தெரியும். யாரும் தப்பா நெனைக்கிறது இல்லை. இப்ப நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான். கட்டுப்பாடு, கட்டுப்பாடுன்னு பேசி ஆளாளுக்குப் பைத்தியம் பிடிச்சு அலையுறோம்.”

குடும்பம் என்கிற அமைப்பே உடைய வேண்டும்; ஒரு கலாச்சாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம்தான் அளவுகோல் என்று பேசிய கி.ரா., நவீன தமிழ் இலக்கியத்துக்குக் கொடுத்த முக்கியமான பங்களிப்பு நாட்டார் மரபின் கதைசொல்லல் முறையை இதோடு கொண்டுவந்து இணைத்ததோடு முடியவில்லை; நாட்டார் மரபின் கலகத்தன்மையையும் அப்படியே கொண்டுவந்து சேர்த்தார். நவீன தமிழ் எழுத்தாளர்களில் கி.ரா. அளவுக்குப் பாலுறவை நுட்பமாகவும் விரிவாகவும் கையாண்டவர்கள் யாரும் இல்லை. மிக வலுவானவர்கள் அவருடைய பெண் பாத்திரங்கள். இந்தச் சமூகத்தின் சிக்குப்பிடித்த கலாச்சாரப் பாறையில் விரிசலை உண்டாக்குவதற்குப் பாலியல் கதையாடலை ஒரு சுத்தியலாக அவர் பயன்படுத்தினார் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’, ‘நாட்டுப்புறப் பாலியல் கதைகள்’, ‘கெட்ட வார்த்தைகள் அகராதி’ என்றெல்லாம் கி.ரா. மேற்கொண்ட, திட்டமிட்டிருந்த தொகுப்பு முயற்சிகளை அவர் சமூகத்தை நோக்கி வீசியெறிந்த கற்களாகவும் பார்க்கலாம்.

கிராமங்கள் முழுமையாகக் கட்டுப்பெட்டித்தனத்துக்கும், நேரெதிரே நகரங்கள் முழுமையாகத் தாராளத்தனத்துக்கும் கருப்பு வெள்ளை வடிவங்களாக முன்னிறுத்தப்படுவதை கி.ரா. புறங்கையால் தள்ளினார். நவீனத்தின் மீதான விமர்சனத்தை நவீனத்தின் கருவிகளைக் கொண்டே கையாள முற்பட்ட ஏனைய எழுத்தாளர்கள் மத்தியில், நவீனத்துக்கு முற்பட்ட கருவிகளாலான விமர்சனத்தை நவீனத்துக்குப் பிந்தைய காலகட்டத்தின் மொழிக்கு அருகில் கி.ரா. கொண்டுவந்து நிறுத்தினார். “காலமும் இடமும் கணக்கு இல்லை. மனுஷன் இருக்குற இடமெல்லாம் மனுஷ நாத்தம் இருக்கும்!”

மனித வாழ்வின் ஒரு சின்ன நிகழ்வை எழுதக்கூட மனிதரைச் சுற்றிலும் உள்ள உலகம் கி.ரா.வுக்குத் தேவைப்பட்டது. இதற்குத் தனக்கு நன்கு பரிச்சயமான ஒரு களமே வசதியாகப் பட்டதாக அவர் கருதினார்.

மனிதர்களின் மேன்மையை எழுதும்போது எழுதுகிறவர் யார், எழுதப்படுகிறவர் யார் என்பது இங்கே ஒரு பொருட்டு இல்லை; மனிதர்களின் கீழ்மையை எழுதும்போது எழுத்தாளன் விசாரணைக் கூண்டில் ஏற்றப்பட்டுவிடுவான். அவனது சகலப் பின்னணிகளும் அவனோடு கூண்டுல் ஏற்றப்படும். கி.ரா. இதை உணர்ந்திருந்தார். “ஒரு பொண்ணோட உடல் வதனத்தைக்கூட இங்கெ நாம கொஞ்சம் கூடக்கொறைச்சலா எழுதிட முடியாது. எதுல இங்கே சாதி - மதம் இல்லை?”

இதையெல்லாம் காட்டிலும் மானுடத்தின் ஆதார சுருதியைப் பிடிப்பதையே தன்னுடைய எழுத்தின் குறி என்று அவர் நம்பினார். அதில் காலமோ இடமோ மனிதர்களோ வேறுபடவில்லை என்று அவர் கூறினார். “மேல்வயித்துப் பசி, கீழ்வயித்துப் பசி இது ரெண்டு மட்டும்தான் நெஜம். மிச்ச எல்லாமே கற்பனையும் கருத்துகளும் மட்டும்தான். எவ்வளவோ ஜனங்களைப் பாத்துருக்கேன். மனுஷங்களோட ஆதார குணங்கள்ல எந்த வேறுபாட்டையும் நான் பார்க்கலை. தலைமுறைகள் தாண்டியும் இது மாறலை.”

நீண்ட காலம் இதை மனதுக்குள் அசை போட்டிருக்கிறேன். மனிதர்களின் ஆதார குணங்கள் எல்லாக் காலங்களிலும், உலகெங்கும் ஒன்றுபோலவேதான் இருக்கின்றனவா? தலாய் லாமாவுக்கும் ராமின் ஜஹான்பெக்லூவுக்கும் இடையிலான ஓர் உரையாடலை வாசித்தபோது, கி.ரா. சொன்னதை தலாய் லாமா விரித்துப் பேசியதுபோல இருந்தது. “இத்தனை ஆயிரம் வருஷங்கள் எப்படி இருந்தோமோ அப்படிதான் அடுத்தடுத்து வரும் ஆயிரம் வருஷங்களிலும் இருப்போம். எவ்வளவு காலமானாலும் மனிதர்களின் உணர்வுகளிலோ, மானுடத்தின் மனநிலையிலோ எந்த மாற்றமும் இல்லை.”

கி.ரா.வின் ‘கன்னிமை’ கதையை எதேச்சையாக சென்ற வாரத்தில் மீண்டும் வாசித்தேன். தோட்டத்தில் பருத்திச்சுளையை எடுத்துவிட்டான் என்ற காரணத்துக்காக, நாச்சியாரம்மாளின் தகப்பனாரால் ஊணுக்கம்பால் அடித்து நொறுக்கப்பட்டு, ரத்தக் காயங்களோடு படுக்கையில் படுத்திருக்கும் சிறுவனை நாச்சியாரம்மாள் அவன் வீடு தேடிச் சென்று பார்க்கும் காட்சியை என்னால் கடந்துவர முடியவே இல்லை. சிறுவனின் தகப்பன் சுந்தரத்தேவன் சரியான போக்கிரி. கொலைகாரன். பிள்ளையைக் காயப்படுத்தியவனை வெட்டிப்போடுவதற்காகக் கையில் அரிவாளுடன் தயாராகிக்கொண்டிருக்கிறான். மூர்ச்சையாகிக் கிடக்கும் சிறுவனைச் சூழ்ந்து நிற்கும் பெண்கள் அவன் தாயோடு சேர்ந்து அழுதுகொண்டிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் அங்கே வருகிறாள் நாச்சியாரம்மாள். யாரை அங்கே கருவிக்கொண்டிருக்கிறார்களோ அந்த வீட்டின் பெண். கூட்டம் விலகுகிறது. சிறுவனைப் பார்த்ததும் நாச்சியாரம்மாள் சிலையாகிறாள். தாரை தாரையாக அவளுக்குக் கண்ணீர் கொட்டுகிறது. சிறுவனின் அருகில் அமரும் அவள் ரத்தம் உறைந்த சிறுவனின் முகத்தைத் தன் முந்தானையால் துடைக்கிறாள். மூர்ச்சை தெளிவிக்கிறாள். இதைக் காணும் சுந்தரத்தேவன் அரிவாளைக் கீழே விட்டுவிட்டு முகத்தைக் கையால் புதைத்து ஒரு குழந்தையைப் போல் குமுறிக் குமுறி அழுகிறான். மானுடத்தின் மகத்தான தருணங்களில் ஒன்றாக எனக்கு இந்தக் காட்சி தோன்றுகிறது. இந்த உணர்வைப் பகிர்ந்துகொள்ள ஏதேனும் எல்லைத் தடைகள் இருக்கின்றனவா என்ன?

ஆக, கி.ரா.வின் எழுத்துலகை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன், இந்தப் புவியிலுள்ள நிலப்பரப்பின் நாற்புறமும் கடல் சூழ்ந்திருக்கிறது. கி.ரா. தன்னுடைய ஊர்க்கரையின் பின்னணியில் அந்தக் கடலை எழுதினார். சிற்றூரின் பின்னணியிலிருந்து எழுதப்பட்டதால் அந்த நீர்ப்பரப்பு குளம் அல்ல; பெரும் சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதி அது. ஐந்நூறு ஆண்டுகளில் இந்தத் தமிழ் நிலத்துக்கு வந்த ஒரு சமூகம் இந்த மண்ணில் ஏற்கெனவே நிலைபெற்றிருந்த பல்லாயிரம் ஆண்டு தொன்மரபோடு கலந்தபோது பீறிட்டெழுந்த பண்பாட்டுப் படைப்பாற்றலின் முகிழ் வெளிப்பாடு அது.

கி.ரா.வும் அப்படியே எண்ணினார். புதிதாக எழுந்துவரும் கருத்துகள், கோட்பாடுகள், போக்குகள் எல்லாவற்றையுமே அக்கறையோடு அவர் கவனித்தார். அதேசமயம், ஆழ்மன ரசனையையே கலையை மதிப்பிட சரியான அளவுகோலாக அவர் எண்ணினார். நம்பும் மதிப்பீடுகளைவிடவும், சமூகத்தில் நிலவும் உண்மைகளுக்குக் கதைகள் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். பல நவீன எழுத்தாளர்களைப் போலன்றி பண்டைத் தமிழ் இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றிருந்த அவர் கருத்துகள், கோட்பாடுகளால் நியாயமற்ற வகையில் வெகு நீண்ட காலத்துக்கு எந்தவொரு படைப்பையும் தூக்கிப் பிடித்திருக்கவோ, மறைத்து வைத்திருக்கவோ முடியாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். சொல்லப்போனால், எழுத்து வடிவக் கதையாடல் மீதே நம்பிக்கையற்றிருந்தவர் அவர். பேச்சுவழக்கை அப்படியே எழுத்துவழக்குக்கு மாற்றுபவராக அவர் இல்லை; ஒரு கதை எழுத பல அமர்வுகள் உட்கார்ந்து அடித்து அடித்துத் திருத்தித் திருத்தி எழுதும் வழக்கத்தையே கொண்டிருந்தார்; பேச்சுவழக்கின் அனுகூலமான தொனியை எழுத்துவழக்கின் அனுகூலமான கச்சிதத்துடன் கலந்து அவர் பயன்படுத்தினார் என்றாலும், செவிவழி உள்ளே நுழையும் வாய்மொழி வழக்காறே காலத்துக்கும் நீடிக்கும், எழுத்து வடிவில் நாம் படிக்கும் எல்லாமும் கால ஓட்டத்தில் மறைந்துபோகும் என்று அவர் திரும்பத்திரும்பச் சொன்னார். ஆகையால், அழகியலை நாட்டாரியல், செவ்வியல், நவீனவியல் என்றெல்லாம் பாகுபடுத்திச் சுருக்குவதை அவர் ஒரு கசந்த புன்னகையோடு கடந்தார். உள்ளபடி இவை எல்லாவற்றிலும் ஊடாடும் படைப்புகளைக் கொடுத்ததே அவருடைய தனித்துவம். காலத்திலும் வெளியிலும் வேர் பிடித்திருந்ததே அவருடைய படைப்புகளின் பெரும் பலம்.

கி.ரா.வின் கதைகளில் முற்போக்குக் கூறுகள் குறைவு என்ற குற்றச்சாட்டு உண்டு; வீட்டில் தன் கருத்துக்கேற்ப வாழ்ந்தார். அவருடைய பேத்தி முஸ்லிம் நண்பனை மணந்துகொள்ள விரும்பியபோது பேத்திக்கு முதல் பக்கபலமாக வீட்டில் அவர் நின்றார். ஒருசமயம் வீட்டுக்குச் சென்றிருந்தபோது இருவரையும் அறிமுகப்படுத்திவிட்டு, அவர்கள் சென்ற பின் சொன்னார், “இதுக ரெண்டும் சேர்ந்து வந்து நிக்குறப்போல்லாம் இந்த எடம் முழுக்க சந்தோஷத்தையும் கூட்டுக்கிட்டு வந்துடுதுங்க. வேறுபாடுகள் ஒண்ணுகூடி மறையும்போது ருசி மிகுந்துடுது. சேர்க்கைதான் மனுஷ வாழ்வின் பெரிய ருசி.”

கி.ரா.வின் மரணம் தமிழக வெகுஜனத் தளத்தில் ஒரு பெருஞ்சாவாக எதிர்கொள்ளப்பட்டது. இதுவரை நவீன எழுத்தாளர்கள் யாருக்கும் கிடைத்திருக்காத அங்கீகாரமாக தமிழ்நாடு அரசு மரியாதையுடன் அவர் இறுதிச் சடங்கு நடைபெற்றது; புதுச்சேரி அரசும் தன் பங்குக்கு மரியாதை செய்தது. சொந்த ஊரில் கி.ரா.வுக்குச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இலக்கிய உலகிலோ எல்லாப் புகழுரைகளுக்கும் மத்தியில் வழக்கம்போல அவரைக் குறுக்கும் வார்த்தைகளும் ஊடாடின. மிகக் கவனமாக, ‘கரிசல் எழுத்தாளர்’ என்ற சிமிழ் சிலரால் பயன்படுத்தப்பட்டது.

கன்னட எழுத்தாளரும் அறிவுஜீவியுமான யு.ஆர்.அனந்தமூர்த்தி ஒருமுறை சொன்னதை இந்தச் சமயத்தில் நம் சமூகத்துக்கு நினைவுப்படுத்தலாம் என்று தோன்றுகிறது. “என்னைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளராக இருப்பதானது, ஒரு சமூகத்தின் எழுத்தாளராக அவர் இருப்பதையே குறிக்கிறது. ஹெமிங்வே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் எழுத்தாளர்; அதாவது, முழு அமெரிக்காவுக்குமான எழுத்தாளர் அல்ல அவர். இதுதான் ஒவ்வொரு எழுத்தாளருக்குமே உண்மை… எந்த எழுத்தாளரும் ஒட்டுமொத்த நாட்டுக்குமான எழுத்தாளர் கிடையாது; எல்லோருமே ஒரு நாட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். இப்படிக் குறிப்பிட்ட மொழியைப் பேசும் சமூகத்தை, குறிப்பிட்ட நிலப்பரப்பை, குறிப்பிட்ட கலாச்சாரத்தைச் சார்ந்தவராக இருப்பதென்பது ஒருவருடைய இலக்கியத்தின் மகத்துவத்தை எந்த வகையிலும் குறைத்துவிடாது… அந்த வகையில் பேந்த்ரேவை தார்வாட்டைச் சார்ந்த ஒரு உலக எழுத்தாளர் என்று சொல்வேன்; குவெம்புவை மலநாட்டைச் சார்ந்த ஒரு உலக எழுத்தாளர் என்று சொல்வேன்.”

ஆகவே, கி.ரா.வைக் கரிசலைச் சார்ந்த ஒரு உலக எழுத்தாளர் என்று நாம் சொல்வோம்!

22 May 2021

- சமஸ்,
தொடர்புக்கு: samas@hindutamil.co.in

Courtesy: hindutamil.in.news

 

 

 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...