பாராளுமன்றத்தில் ! நாயும், புலியும் விளையாட்டு! (காலக்கண்ணாடி – 38)— அழகு குணசீலன் —

பாராளுமன்றத்தில் ! நாயும், புலியும் விளையாட்டு! (காலக்கண்ணாடி – 38)



பள்ளிப்பருவத்தில், நாயும், புலியும் விளையாடியதை  நினைவூட்டி நிற்கிறது கடந்த வார பாராளுமன்றம். இது ஒரு எதிர் -எதிர் ஆட்டம். நாயைப்  புலிமறிக்கும், புலியை நாய்மறிக்கும். ஒருவரை ஒருவர் மறித்து வெளியேற முடியாதவாறு வழியை அடைத்தல். கல்முனை வடக்கு விவகாரத்திற்கும், மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கும் அச்சொட்டாக பொருந்துகின்ற எதிர்ப்பு அரசியல் விளையாட்டு. காய்களை நகர்த்தி நாயும் புலியும்  ஆடும் சதுரங்க ஆட்டம். 

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமிறக்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் முதலில் குரல் கொடுத்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. இவருடைய ஆங்கில உரையின் உள்ளடக்கத்தையும், அணுகுமுறையையும், முன்வைக்கப்படும் வாதத்தையும் அரங்கம் வாசகர்கள் ஒருமுறை இரைமீட்பு செய்வது நல்லது. அப்போதுதான் அந்த உரையின் தரம், சொல்லப்படும் பக்குவம், அதன் பின்னால் உள்ள கஜேந்திரகுமாரின் அரசியல் அனுபவத்தை கண்டுகொள்ள முடியும். அரசியல் முன்மாதிரியும் வழிகாட்டியும் கூட. 

வெறுமனே சத்தம் போட்டு ஆளுக்காள் ஏசித்திட்டுவதை, சாபம் போட்டு கத்துவதை கிராம மக்கள் “கொம்புதல்” என்று கூறுவார்கள். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த கொம்புதல், அவர்களின் வார்த்தைகளில் புலி உறுமலும், நாய் குரைப்பும். இவை ஒரு பாராளுமன்ற அரசியலின் தகுதியையும், நேர்மையையும், அரசியல் முன்மாதிரியையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன. 

இந்தப் பாணியிலான சண்டித்தன அரசியல், தமிழ் அரசியல் வரலாற்றில் முற்றிலும் புதியது. சிங்கள அரசியலுக்கு உரித்தானது. 

தமிழ் அரசியலில் இதை அறிமுகப்படுத்தியவர் மட்டக்களப்பு  முன்னாள் பா.உ. இராஜன் செல்வநாயகம். அவரது பேச்சுக்கள் “அச்சாறு கத்தாவ” அதாவது “ஊறுகாய் உளறல்” என்று அன்றைய ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டவை.  

அரச அதிகாரிகள் மீதும் அவர் செய்கையாலும், வார்த்தைகளாலும் வன்முறைகளைச் செய்தவர். அவருக்கு வாக்களித்த மட்டக்களப்பு மக்கள் வெட்கித் தலைகுனிந்த காலங்கள் அவை. அவரின் அபிவிருத்தி பணிகளை பார்ட்டியவர்கள் கூட அவரின் இந்த குணாம்சத்தை வெறுத்தார்கள். 

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற சிறப்புரிமை இருக்கிறது என்பதற்காக எப்படியும் பேசலாம், நடந்து கொள்ளலாம் என்பது அரசியல் முன்மாதிரி அற்றதும், தவறான வழிகாட்டலுமாகும். 

இதனை ஒரு சாதாரண நபர் பின்பற்றும் போது அவருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. வேண்டுமானால் இதை வைத்து சிலர் அரசியல் செய்யலாம். 

சாணக்கியன் எம்.பி. முஸ்லீம் எம்.பிக்களுக்கு எதிராக தன் சுட்டு விரலை இவ்வளவு ஆத்திரத்துடனும், ஆவேசத்துடன் நீட்ட, பதிலுக்கு ஹரிஷ் எம்.பி. சாட்டையை கையில் எடுத்து சுருட்டி அடிக்க வேண்டிய காரணங்கள் என்ன? இந்த நாயும், புலியும் அரசியலில் யார் வெல்வது? யார் தோற்பது என்ற போட்டியின்றி வேறென்ன? 

உண்மையில் இது கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பானதா?  

அல்லது இதற்கு பின்னால் ஒழிந்து வேறு ஒரு அரசியல் இலக்கு இருக்கிறதா? 

இது முற்றிலும் கல்முனை வடக்கு விகாரம் என்றால் இவ்வளவு காலமும் சாணக்கியன் எம்.பி. மௌனம் சாதித்தது ஏன்? 

ஆகப் பிந்தியது அன்றைய எம்.பி. கோடீஸ்வரன் அமைச்சரவை பத்திரத்தை காட்டிக்கொடுத்த கதை வெளிவந்த பின்பும் இவர் இது விடயத்தில் வாளாவிருந்தது ஏன்?  

சுமந்திரன் எம்.பி. சம்பந்தப்பட்டதினால் பூட்டிய கதவுக்குள் முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு வழிக்கு கொண்டு வரும் முயற்சிக்கு இந்த கால அவகாசம் தேவைப்பட்டதா?  

முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த ஆதங்கத்தில், அடக்கம் அற்று, பொறுமையிழந்து சாணக்கியன் பாராளுமன்றத்தில் உறுமினார் என்றும், மற்றையவர் குரைத்தார் என்றும் சாணக்கியனின் பாராளுமன்ற தமிழில் கூறலாமா? 

இந்த வினாக்களுக்கு விடை தேடுவதற்கு தமிழ், முஸ்லீம் தரப்பால் நகர்த்தப்பட்ட சில காட்சிகளை காலக்கண்ணாடி இங்கே காட்சிக்கு விடுகிறது. 

காட்சி ஒன்று: சிறுபிள்ளைத்தனம் 

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி கூட்டமொன்றில் சிறிதரன் எம்.பி. எதேச்சையாக வடக்கிற்கு மாவை சேனாதிராஜாவையும் கிழக்கிற்கு சாணக்கியனையும் மாகாணசபை வேட்பாளர்களாக அறிவிக்கிறார். அப்போது முஸ்லீம்களின் ஆதரவைப் பெறக்கூடியவர் சாணக்கியன் என்றும் நியாயம் கற்பித்து வெள்ளோட்டம் விடுகிறார் அவர். 

முஸ்லீம் தரப்போ மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனத்தை சம்மதம் என்று தமிழரசு கருதியிருந்தால் இது போன்ற அரசியல் வரலாறு தெரியாத சிறுபிள்ளைத்தனம் வேறு எதுவும் இருக்கமுடியாது. 

காட்சி இரண்டு: மாடும் மணியும் 

மின்னாமல் முழங்காமல் அடிக்கின்ற மழை போன்று ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த சாணக்கியன் திடீரென “வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபையிலேயே நான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போடுகிறார். 

உண்மையில் இது மாடுவருவதற்கு முந்தி வந்த மணியோசை. முஸ்லீம் காங்கிரஸ் தலைமையுடன் சுமந்திரனும், சாணக்கியனும் பேசியபோது அவர்களின் ஆதரவு கிடைக்கமாட்டாது என்று தெரிந்ததும் சாணக்கியன் தன் வேட்பாளர் நிலைப்பாட்டில் இருந்து பின்னடிக்கிறார். இது பேச்சுவார்த்தை என்ற மாடு வெளிவருவதற்கு  முன்னர் வந்த மணியோசை ஆகிறது. 

வடக்கும், கிழக்கும் எப்போது இணைக்கப்படும்? நீங்கள் வேட்பாளராவது எப்போது? இதற்கு உங்கள் பாராளுமன்ற உரை எந்த வகையில் உந்து சக்தியாக அமையும்.? பகல் கனவுக்கும் ஒரு எல்லை உண்டு. சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களை அடக்கியாள்கிறது என்று கட்சி மாறியதாக கூறும் நீங்கள், வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்படும் என்று நம்புவது வேடிக்கையாகவும், பேரினவாதத்தை நம்பும் முன்னுக்குப்பின் முரணான அரசியலாகவும் இல்லையா? 

காட்சி மூன்று: மாடு வருகிறது 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர்களை சந்தித்துப் பேசியதாக செய்திகள் வருகின்றன. சாதகமாகப் பரிசீலிக்கின்றோம் என்கிறார் நிஷாம் காரியப்பர். 

இப்போது ஜனாவின் மௌனம் கலைகிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்த உத்தியோகபூர்வ பேச்சுக்களையும் முஸ்லீம் காங்கிரஸோடு நடாத்தவில்லை. “சுமந்திரனும், சாணக்கியனும் பேசி இருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து” என்று ஊடகச் சந்திப்பு நடாத்தி தனிநபர்களின் தவறான செயற்பாட்டை அம்பலப்படுத்துகிறார் ஜனா. இது குறித்து இருவரும் இதுவரை மௌனவிரதம் இருக்கிறார்கள். 

காட்சி நான்கு: நாயும், புலியும் 

ரிஷாட் பதியூதீன் கைதை கண்டித்து உரையாற்றிய சாணக்கியன் ஜனாஸாவில் சறுக்கி இருபதில் வீழ்கிறார். இது தற்செயலாக சறுக்கியதோ வீழ்ந்ததோ அல்ல. உண்மையில் முன்கூட்டியே தீர்மானித்து ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு (விடயத்திற்கு) சறுக்குதல். 

முஸ்லீம் காங்கிரஸின் கிழக்கு மாகாண விடயங்களை ஹரிஷ் தலைமையிலான இருபதுக்கு ஆதரவளித்த கிழக்கு எம்.பிக்களே தீர்மானிக்கின்றனர். ரவூப் ஹக்கீம் தலையாட்டாவிட்டால் தலைபோகும். 

இதேபோன்றுதான் கூட்டமைப்பிலும் தீர்மானம் எடுக்கும் சக்தியாக சுமந்திரன், உள்ளார். இது கட்சிக்குள் உள்ள உட்குழு அரசியல். ஜனநாயக ரீதியான முழுக்கட்சி அரசியலுக்கு முரணான விடயம். மாவைக்கும், சம்பந்தன் ஐயாவுக்கும் மெல்லவும், விழுங்கவும் முடியாத நிலை. 

முஸ்லீம் காங்கிரஸ் உடனான கல்முனை வடக்கு, முதலமைச்சர் பதவி போன்றவற்றிற்கு ஹரிஷ் குழுதான் தீர்மானம் எடுக்கும் சக்தியாக இருக்கும் என்று ரவூப் ஹக்கீம் கூறி, எதற்கும் சாதகமாக பரிசீலிக்கிறோம் என்று நிஸாம் காரியப்பரின் பாணியில் வழியனுப்பி வைத்தார். 

இப்போது புரிகிறதா? சாணக்கியன் முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் சறுக்கியதும், ரிஷார்ட் பேச்சில் இருந்து ஜனாஸாவில் சறுக்கி இருபதில் வீழ்ந்ததும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. 

தனது ஆத்திரத்தை கொட்டித் தீர்க்க முள்ளை முள்ளால் எடுப்பது போல் முஸ்லீம்களுக்கு ஆதரவாக பேசுவது போல் தொடங்கி கிழக்கு முஸ்லிம் எம்.பி.க்களை சாடினார். சாடியதற்கு காரணம் தன்னை முதலமைச்சராகக்குவதில் கிழக்கு முஸ்லிம் எம்.பிக்கள் உடன்பட மாட்டார்கள் என்பதன் ஆத்திரமே அவரது உறுமல். 

ஹரிஷ் எம்.பி. எழும்புகிறார். சாணக்கியனை சாடுகிறார். இது எங்கள் அரசியல் வியூகம். இதைக்கேட்க நீங்கள் யார் என்ற பாணியில் பேசுகிறார் ஹரிஷ். 

“அம்பாறையில் ஒரு தமிழ்பேசும் அரசாங்க அதிபரைக் கோர வக்கில்லை, தமிழ் பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டம் ஒன்றைக் கோருவதற்கு வக்கில்லை” என்று சாடுகிறார் அவர். 

எங்களிடம் சிங்களவரை முதலமைச்சர் ஆக்கும் திட்டம் இல்லை என்று சாணக்கியனின் குற்றச்சாட்டை மறுக்கிறார். 

காட்சி ஐந்து: வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக்கூடாது. 

ரிஷார்ட் பதியூதீன் தலைவராக உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட எம்.பி. ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தினார். தான் ஏன்? இருபதை ஆதரித்தேன் என்று விளக்கினார். ரிஷார்ட் விடயமாக வியூகங்களை வகுத்து செயற்படுகிறோம் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்கிறார். 

சாணக்கியன் முஸ்லீம் எம்.பிக்கள் காசுவாங்கிக் கொண்டு இருபதுக்கு வாக்களித்தனர் என்று எழுப்பிய சந்தேகம் உண்மையற்றது என்று சாணக்கியனை பொய்யன் ஆக்குகிறார். 

வடக்கும் கிழக்கும் இணக்கப்படக்கூடாது என்பது எங்களின்- முஸ்லீம்களின் கோரிக்கை -நிலைப்பாடு என்று தெளிவாக பேசுகிறார். முஸ்லீம் எம்.பிக்களின் பாராளுமன்ற செயற்பாடு குறித்து சாணக்கியன் கேள்வி எழுப்பமுடியாது. அது எங்கள் சமூகம் சார்ந்த அரசியலும் வியூகமும் என்கிறார் அந்த முன்னாள் ஊடகவியலாளரான இன்றைய பா.உ.. 

அதேநேரம் சாணக்கியனை நோக்கி அவர் எழுப்பும் கேள்வி இது. 

வரவு செலவுத்திட்ட விவாதத்தில் வாய்கிழிய கத்திவிட்டு வாக்களிப்பில் இருந்து நழுவியது ஏன்? என்றும் அவர் கேட்கத்தவறவில்லை. 

பாதுகாப்புச் செலவினம் அதிகம் என்று பாராளுமன்றத்தில் உறுமியவர்கள் இதற்கு என்ன பதிலைச் சொல்லப்போகிறார்கள். 

சுமந்திரனின் அதிரடிப்படைக்கான செலவும் இதில் அடங்கும். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சிறையில் வாடும் இருபது இளைஞர்கள் குறித்த இவர்களின் வியூகம் என்ன? 

முஸ்லீம் கட்சிகளின் தமது சமூகம் சார்ந்த அரசியல் வியூகங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தமிழ்க் கட்சிகள் தடுமாறுகின்றன. வரலாற்றில் தலைமைத்துவம் சார்ந்தும், செயற்பாடு சார்ந்தும் பெரும் பலவீனமான நிலையில் தமிழர் அரசியல் உள்ளது. 

தேசிய, பிராந்திய, சர்வதேசிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகள், வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும். இல்லையேல் பழம்பெரும் கட்சிப் பெருமைகளை முஸ்லீம் கட்சிகளிடம் அடகு வைத்துத்தான் அரசியல் செய்யவேண்டி இருக்கும்.  

யார் இந்த ரிஷார்ட்? ஏன் இந்த உறுமல்? 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷார்ட் பதியூதீன். முஸ்லீம்களின் சமூக, அரசியல் தலைவர்களில் ஒருவர். 

முன்னாள் அமைச்சர் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர். 

இவை எதுவும் மறுத்து வாதிடமுடியாத சமூகத்தகுதிகள். 

இந்தத் தகுதிகள் ஒரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கு எந்த வகையில் தடையாக இருக்க முடியும்? இதில் அரசியல் பின்னணி ஒழிந்து இருக்கலாம். ஆனால் மறுபக்கத்தில் பயங்கரவாத தாக்குதலும் பெரியளவிலான உயிரிழப்பும் இருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் தமிழ், சிங்கள கிறிஸ்த்தவர்கள்.  

இந்த நிலையில் ரிஷார்ட் கைதை சாணக்கியன் எதிர்த்து குரல் கொடுப்பதன் கனவு முதலமைச்சர் பதவியா? பயங்கரவாத குண்டுத்தாக்குதல் நடாத்திய அமைப்பொன்றின் தலைவருடனான தொடர்புகள் காரணமாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.   

இந்தக் கொலைகள் மட்டக்களப்பு மண்ணிலும் நடாத்தப்பட்டவை. இந்த இழப்புக்களை சந்தித்த மக்களின் கண்ணீர் இன்னும் காயவில்லை. 

பிஞ்சுக் குழந்தைகளை இழந்த துயரம் அவர்களை மனநோயாளிகளாக ஆக்கி இருக்கிறது. இதை எல்லாம் புரிந்தும், உணர்ந்தும் கொள்ளுவதற்கு இராசமாணிக்கத்தின் பெயரை உச்சரிப்பது மட்டும் போதாது. அவரின் அரசியல் ஆளுமையும், தகுதியும் வேண்டும். 

நல்லாட்சியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை இந்த அரசு தொடர்கிறது. குற்றவாளிகளைக் கண்டு பிடியுங்கள், நீதிமன்றில் நிறுத்துங்கள், தண்டனை வழங்குங்கள் என்று கோருகிறீர்கள். கைது செய்யாமல், விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது எப்படி? நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்குவது எப்படி? 

ரிஷார்ட், விசாரணையில் குற்றமற்றவர் என்று உறுதிப்படுத்தப்பட்டால் நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்யப்படுவார். அரசு நீதித்துறையில் தலையிடுகின்றது என்று வாதிடும் நீங்கள் இதன் மூலம் அரசு செய்வதைத்தானே செய்கின்றீர்கள். 

ஒரு சந்தர்ப்பத்தில் பயங்கரவாதச் சட்டத்தை ஆதரிக்கிறீர்கள். ரிஷார்ட் என்றால் பயங்கரவாதச் சட்டத்தை எதிர்க்கிறீர்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து என்றால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்களை உள்ளே தள்ளுகிறீர்கள்.   பயங்கரவாத விசேட பாதுகாப்பு அதிரடிப்படையோடு வாக்குச்சாவடி முதல் வாக்கு எண்ணும் நிலையம் வரை பவனி வருகிறீர்கள்.  

ஆக, இதுவும் ஒரு விளையாட்டு! டபிள் கேம்!!

 Source: arankamnews.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...