மே 4: திப்பு சுல்தான் நினைவு தினம்


மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.

பிறப்பு: நவம்பர் 20, 1750
இறப்பு: மே 04, 1799

`சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் தொடரும்!’ – திப்பு சுல்தான்

இடம்: மெட்ராஸ்

1780-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் மைசூர்போரில், பிரிட்டிஷாரையும் அவர்களுடன் இணைந்து நிற்கும் பிரெஞ்சு வீரர்களையும் எதிர்த்தே ஆக வேண்டும் என முடிவுசெய்துவிட்டார் ஹைதர் அலி. களத்தில் பிரிட்டிஷுக்கு எதிராக முதன்மையாக நிற்கிறார், அவர் மகன் திப்பு சுல்தான். முதலில் ஈட்டி தாங்கிய வீரர்கள், பிறகு வாள் ஏந்திய வீரர்கள், இறுதியில் குதிரைப்படை என்ற போர்ப்படையைத்தான் இந்தியர்கள் அமைப்பார்கள் என்பது பிரிட்டிஷாருக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கு முதல் ட்விஸ்ட்டாக, இந்த அமைப்புக்கு மாறாக திப்பு மற்றும் அவரின் வீரர்கள் சிறிய ஒரு படையாகக் களத்தை நோக்கிப் பயணப்பட்டனர். திப்புவின் படையை நோக்கி எதிர்ப்படை தாக்க ஆயத்தமாகியபோது, `டமார்..!’ என்று ஏதோ புதிய சத்தம். சுற்றிப் புகைமூட்டம். ஒருவழியாக புகையை விளக்கித் தேடியபோது, சுற்றி இருந்த பிரிட்டன், பிரெஞ்சு வீரர்கள் தெறித்து ஓடிக்கொண்டிருந்தனர். செய்வதறியாது கதிகலங்கிய பிரிட்டன், அந்தப் போரில் தன் படைகளைப் பின்வாங்கியது

.

இடம் : நாசா தலைமையகம், அமெரிக்கா

வெர்ஜீனியா ராக்கெட், தொழில்நுட்ப அலுவலக வரவேற்பறையில் ஓர் ஓவியம், காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். குண்டுகள் பாய்ந்து செல்வது, ஓடும் பிரிட்டிஷ் வீரர்கள், மிரளும் குதிரை என அந்த ஓவியத்துக்கான நாயகன் திப்பு சுல்தான்.

ஆம், `அன்று போரில் ஏவுகணை மூலம் 2 கி.மீ தூரம் வரை செல்லும் திப்பு பயன்படுத்திய பீரங்கி குண்டுதான், இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கான முன்னோடி’ என்று உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனம் புகழ்கிறது. 49 வயது வரை வாழ்ந்த திப்புவின் நிர்வாகத்தை, இன்று வரை உலகம் கொண்டாடுகிறது.

வரலாற்றில் ஓர் அரசர், அளவுக்கு மீறிப் புகழப்படுபவராகவும் அல்லது கொடுங்கோலராகவும் காட்டப்படுவார்கள். திப்புவின் வரலாறோ, இரண்டையும் கொண்டுள்ளது. ஒரு சாரார் திப்புவின் செயல்பாடுகளை விமர்சித்தாலும், தொடர்ந்து திப்பு சுல்தான் எப்படிப்பட்டவர் என்ற ஆதாரம் வரலாறு முழுக்கப் படர்ந்து கிடக்கிறது.

`ஹைதர் அலியின் மரணத்துக்குப் பிறகு, மைசூர் நமக்கானது என நினைத்தோம். ஆனால், இளமைத் ததும்பும் அவன் வாரிசு எந்தவொரு தீதுமில்லாமல், கொடுங்கோன்மையில்லாமல் ஆட்சிக்கு வந்திருக்கிறான். அவனது பேராவல், கிழக்கிந்திய கம்பெனியின் அமைதிக்கும் நலத்துக்கும் நியாயமற்றதாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவனது குணநலன்களையும் உணர்வுபூர்வமான எண்ணங்களையும் அவனிடமிருந்து பெற வேண்டும். மனிதாபிமானத்திலும் மேம்பட்ட குணத்திலும் தன் தந்தையைக்காட்டிலும் உயர்ந்து நிற்கிறார்; காரணங்களைப் புரிந்துகொண்டு செயலாற்றுகிறார்’ என்று அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த மெக்கார்ட்னியின் எழுத்தே பிரிட்டிஷாருக்கு எரிச்சலைத் தந்தது.

போர்க்களத்தில் திப்புவின் வீரம் நாம் அறிந்ததே. போரைத் தாண்டி திப்புவின் குணம், நிர்வாகம், மன்னராட்சியிலும் அவர் வழிநடத்திய ஜனநாயக மாண்புகள் அனைத்தும் கவனிக்கவேண்டியவை. குறிப்பாக, மரணதண்டனை, விசாரணையின்றி தண்டனை போன்றவற்றை திப்பு முழுவதும் மறுத்தார். உதாரணமாக, ஆங்கிலேயருக்கு உதவிசெய்யும் வகையில் அரசின் ஆயுதக்கிடங்கிலிருந்து திருடிய 16 குற்றவாளிகளைத் தண்டிப்பது தொடர்பான திப்பு மற்றும் ஆலோசகர் மீர் சாதிக் விவாதத்தைக் கூறலாம்.

“நீ என்னை நேசிப்பாயானால், என் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாதா?” என்று திப்பு, மீர் சாதிக்கிடம் கேட்டார்.

“மன்னிப்பின் மூலம் நீங்கள் உங்கள் அதிகாரத்தைக் குறைத்துக்கொள்கிறீர்கள். கருணையும் நீதியும் ஒரே நேரத்தில் நடக்காது. நீதியை நிலைநாட்ட, சற்று கடுமை அவசியம். நட்பு, கருணை, அன்பு இவையெல்லாம் ஒரு மன்னனுக்குத் தேவையற்றவை. மன்னன் இரும்புபோல் உறுதியாக இருக்க வேண்டும். மன்னிக்கப்படும் துரோகிகள், கழுத்துக்குக் கத்தியாகவே நிற்பார்கள். மன்னர் பற்றிய பயம் மக்களுக்கு இருக்க வேண்டும்” என்று மீர் சாதிக் பதிலளித்தார்.

அதற்கு திப்பு, “பயமா, அன்புக்கும் நன்றிக்கும் அரசு முறையில் இடமில்லையா?” என்று கேட்டார்.

ராஜத்துரோகம் செய்தவர்கள் மீதான திப்புவின் செயல்பாடு, பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், குற்றவாளி தன்னை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு, குறுக்கு விசாரணை, எழுத்துபூர்வமான ஆதாரம், குற்றம் நிரூபிக்கும் வரை தண்டனைக்குத் தடை, மன்னிப்பு, மேல்விசாரணைக்கு வாய்ப்பு, எந்நிலையிலும் மரண தண்டனை கூடாது… போன்ற திப்புவின் செயல்பாடுகள் ஆச்சர்யமூட்டின. ஒவ்வொரு புதிய சட்டத்தையும், மனித உரிமையையும் மக்கள் நலனையும் கருத்தில்கொண்டு உருவாக்கினார்.

மக்களால் நான்… மக்களுக்காக நான்!

பெரும் வியாபாரிகளையும் அவர்கள் மூலம் பெறும் வரிகளையும் மட்டும் நம்பி இல்லாமல், அடித்தட்டு மக்களுக்கான நலனில் அக்கறைக்காட்டினார். அதில் முதன்மையான செயல், நிலவுடைமை சமுதாயத்தில் விவசாயிகளுக்காகப் பல புதிய சலுகைகள் வழங்கப்பட்டன.

அவை,

  • குத்தகைதாரர்களை, நில உரிமையாளர்கள் காரணமின்றி நீக்க முடியாது.
  • தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்றும் வகையில் முதல் மூன்று வருடத்துக்கு விவசாயி குத்தகைத்தொகை தரத் தேவையில்லை.
  • வறட்சி, வெள்ளம் போன்ற சீற்றங்களின்போது குத்தகையைக் குறைக்க அல்லது தள்ளுபடி செய்ய வேண்டும். ஏனெனில், விவசாயிகளின் நலனும் வளமுமே அரசின் லட்சியமாகும் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டன.

இது, பக்கத்து நாடுகளில் வரி வசூல்செய்யும் பிரிட்டிஷார் முதல் திப்புவின் அமைச்சர்கள் வரை பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. `நம் மக்களின் சமூக, பொருளாதார நலனுக்காக முழுமையான மது ஒழிப்பை அமலாக்குவோம். மது உற்பத்தியையும் விற்பனையையும் சட்டவிரோதமாக்குவோம்'' என்றார் திப்பு.இதனால், அரசின் வருமானம் குறைவது முதல், இழப்பும் அதிகமாகும்’ என அமைச்சர்கள் வருத்தப்பட்டனர்.

மதவாதியா… மனிதவாதியா?

வலதுசாரி இயக்கங்களால் திப்புவின் மீது தொடர்ந்து சுமத்தப்படும் அவதூறு, அவர் மதவாதி, இந்துக்களை மதமாற்றம் செய்தவர். முஸ்லிம்களுக்கு மட்டுமே பொறுப்புகளை அளித்தவர், இந்துக் கோயில்களை இடித்தவர் என, அவர் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக எதிர்க்கப்படுகிறார். ஆனால், திப்பு சுல்தான் எப்படிப்பட்டவர் என்பதற்கு, ஆதாரங்கள் பல உள்ளன.

1916-ம் ஆண்டு மைசூரில் தொல்லியல் துறையின் அப்போதைய இயக்குநராகப் பணிபுரிந்த ராவ்பகதூர் கே.நரசிம்மாச்சார், கடிதங்கள் அடங்கிய கட்டு ஒன்றை சிங்கேரி கோயிலில் கண்டெடுத்தார். அவை கோயில் மடாதிபதிக்கு, திப்புவால் எழுதப்பட்டவை.

1791-ம் ஆண்டு மராத்திய குதிரைப்படை ஒன்று சிங்கேரிக்குள் புகுந்து சூறையாடியதால், மடத்தில் உள்ள புனிதப் பொருள்கள் பல அபகரிக்கப்பட்டன. பெண் தெய்வம் சாரதாவின் சிலை தூக்கியெறியப்பட்டது; பலர், கொல்லப்பட்டனர்… படுகாயமடைந்தனர். இதை விளக்கி, சிலையைப் புதுப்பிக்க மடாதிபதி, திப்புவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதைப் படித்துவிட்டு கோபமும் வருத்தமும்கொண்ட திப்பு, அந்தக் கடிதத்துக்கான பதில் கடிதத்தில், புனிதமான அந்த இடத்தில் இதுபோன்ற கேவலமான பாவச்செயல்களில் ஈடுபட்டவர்கள், விளைவுகளை நிச்சயம் அனுபவிப்பார்கள்' என்று எழுதியதோடு, உடனடியாக பெத்தனூர்அசாபுக்கு’ உத்தரவிட்டு 200 ரஹாதிஸ் பணம் ரொக்கமாகவும், 200 பண மதிப்பு உடைய அரிசியும் மற்ற பொருள்களும் கொடுத்து, சாரதா சிலையைப் புதுப்பிக்க உத்தரவிட்டார்.

தன் மக்களுக்காக இறுதிவரை களத்தில் போராடிய திப்புவைப் பற்றி கையறுநிலையாக பிரிட்டிஷ் மூர் இப்படிக் குறிப்பிடுகிறார். “முற்றிலும் வெறுத்து ஒதுக்கிய, தீர்க்கமாக அழிக்கப்பட்ட அவரது பெயரையும் குணாதிசயத்தையும் வெளிப்படுத்த முடியாதபடிக்கு உண்மையிலேயே பிற்காலத்தில் எங்கள் மொழி, வார்த்தைகள் இல்லாமல் சூறையாடப்பட்டிருக்கும். இழிவான சிறப்புப் பெயர்களைக்கொண்டு எழுதுவதால் மொழி ஞானம் தீர்ந்துபோயிருக்கும். அவரது குணாதிசயத்தைப் போற்றிப் புகழும் அளவுக்கு ஆங்கிலமொழியில் வார்த்தைகள் இல்லை. இதுபோன்ற புகழின் உச்சநிலைக்கு, அவர் நினைவுகள் தகுதியானவைதான்” என்று குறிப்பிடுகிறார்.

விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து திப்பு கூறுகிறார், “சர்வாதிகாரத்துக்கு எதிராக நம் போராட்டம் என்றும் தொடரும்…”

 

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...