வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதொரு விடயம்


 

 

 

சர்வதேச அரசியலிலும் சரி, உள்நாட்டு அரசியலிலும் சரி சாத்தியமாகாது எனக் கருதப்படும் விடயங்கள் ஒரு நீண்ட கால வரலாற்றோட்டத்தில் சாத்தியமாகவும் கூடும். எனவே இது சாத்தியமாகும் அல்லது சாத்தியமாகாது என வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு பற்றி எதனையும் ஒற்றை வசனத்தில் கூறி விட முடியாது. உலக வரைபடத்தில் இருந்த பல நாடுகள் காணாமல் போய் விட்டன, இல்லாமல் இருந்த பல நாடுகள் புதிதாக தோற்றம் பெற்றுள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் இன்று இலங்கையில் நிலவும் அரசியற் சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை’.

முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்து தனிமாகாணமாக இருந்த போது, அம்மாகாணத்தின் முதலமைச்சராகவிருந்த அண்ணாமலை வரதராஜப்பெருமாள் எமக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கையில் அதிகாரத்துக்கு வருகின்ற எந்தவொரு கட்சியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்குத் தயாராக இல்லை. கிழக்கு மாகாணத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் அவ்வாறான ஓர் இணைப்பை விரும்பவுமில்லை. கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழர்களிலும் கணிசமானவர்கள் அதனை விரும்பவில்லை. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தோடு வடக்கை இணைப்பது என ஒரு திணிப்பை மேற்கொள்வது சாத்தியமில்லை” என்றும் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது தங்கியுள்ள வரதராஜப்பெருமாள், நேரலை ஊடாக இப்பேட்டியை எமக்கு வழங்கினார்.

கேள்வி: இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பிரச்சினை முடிவின்றித் தொடர்கிறது. இந்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் எவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை இணைந்து முன்னெடுக்க வேண்டும்?

பதில்: தமிழ்க் கட்சிகள் ஒரு நிதானமான அரசியலைக் கொண்டவையாகவோ, இன்றைய காலகட்டத்தில் நிலவும் அகப்புற யதார்த்தங்களைக் கருத்திற் கொண்டவையாகவோ இல்லை. இவர்களின் அரசியல் தேர்தல் போட்டிகளை மையமாகக் கொண்டதாகவே உள்ளது. இங்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று ஒரு பிரிவினரும், அரசாங்கத்தோடு இணங்கிச் செல்லும் கட்சியினர் என இன்னொரு பிரிவினரும் ஒருவரோடு ஒருவர் பகைமை கொண்டவர்களாக உள்ளனர். இங்கு தாங்கள் தியாகிகள், மற்றவர்கள் துரோகிகள் என்ற அரசியலும், தாங்கள்தான் தமிழ் மக்களுக்காக அதிகபட்ச உரிமைகளைக் கோருபவர்கள் என்ற போட்டியுமே பிரதானமான உள்ளன. இந்தக் கட்சிகள் ஆங்கிலத்தில் ஓர் அரசியலையும், தமிழில் வேறொரு அரசியலையும் பேசுகின்றன. இவ்வாறான குழப்பங்களையும் போலித்தனங்களையும் கொண்டதாக உள்ள தமிழ்க் கட்சிகளை ஒரு புள்ளியில் கொண்டு வந்து வந்து நிறுத்துவதென்பது சாத்தியமா என்பதே பெரும் கேள்வியாகும். அரசியற் கட்சிகள் மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சமூக அமைப்புக்களும் ஒட்டுமொத்தத்தில் அவ்வாறுதான் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

இன்றைக்கு ஒரு சமூகத்தின் அரசியற் தலைவர்களை மக்களே தமது வாக்குகள் மூலம் தீர்மானிக்கிறார்கள். மக்களின் வாக்குகளைக் கணிசமாகப் பெற முடியாதவர்களால் சமூக அரசியலில் இன்று எதனையும் சாதிக்க முடியாது. சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள் சமூகம், பல்கலைக் கழக மாணவர் சமூகம், சட்டத்தரணிகள் சங்கம், தொழிற்சங்கத்தவர்கள் என உள்ளவர்கள் அரசியற் போக்குகள் மீது ஓரளவு செல்வாக்கு செலுத்த முடியும். ஆனால் அவர்களும் அரசியற் கட்சிகளை விட மிக அதிகமாகவே கருத்து வேறுபாடுகளால் ஓரணிக்குள் வரத் தயங்குகின்றனர். தமிழர்களின் மத்தியில் உள்ள பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தமிழர்களுக்கு வெறுப்பையும் விரக்தியையும் ஆத்திரத்தையும் நம்பிக்கையீனங்களிலும் ஊட்டுவதிலேயே தமது திறமைகளை நிலைநாட்டுகின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சக்திகளை துண்டு துண்டாக கூறுபடுத்துவதன் மூலமே அத்தரப்புகள் தமது வியாபாரத்தை இலாபகரமாக நடத்துகின்றன.

இவ்வாறாக தமிழர் சமூகத்தை அழிவுப் பாதையிலிருந்து விலக முடியாத வகையில் வைத்திருக்கும் சக்திகள் மிகப் பெரும் வளமும் செல்வாக்கும் கொண்டவையாக உள்ளன. தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சரியான பகுத்தறிவான முற்போக்கான புதிய சக்திகள் எழுச்சி பெறும் வரை பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றே தெரிகிறது. இந்நிலையில் இப்போதுள்ள தமிழ்க் கட்சிகளை ஓர் ஆக்கபூர்வமான பாதையில் பயணிக்க வைப்பது எப்படி என்று முயற்சிப்பதில் பயனில்லை.

கேள்வி: வடக்கு, கிழக்கின் முதலாவது முதலமைச்சர் என்ற வகையில் உங்கள் பார்வையில் தற்போது வடக்கு, கிழக்கு இணைந்திருப்பதால் – அல்லது பிரிந்திருப்பதால் உள்ள சாதக பாதகங்கள் எவை?

 

பதில்: வடக்கு, கிழக்கு இணைந்திருந்தால் தமிழர்களும் முஸ்லிம்களும் மொத்தத்தில் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு, கிழக்கின் மொத்த சனத்தொகையில் 85 சதவீதமானோரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும். வெறுமனே தமிழர்கள் என்று பார்த்தாலும் சுமார் 65 சதவீதமானோரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையும். இலங்கையின் மத்திய ஆட்சியில் சிங்கள மக்களின் பிரதிநிதிகள் மிகப் பெரும்பான்மையாக இருந்து ஆட்சி செய்கையில், வடக்கு கிழக்கு இணைந்ததொரு மாகாண ஆட்சிக் கட்டமைப்பானது இலங்கையின் அரசியலில் இனரீதியான விவகாரங்கள் தொடர்பில் ஒரு சமநிலையைப் பேணுவதற்கு வாய்ப்பாக இருக்கும். தமிழ் பேசும் மக்களின் சமூக பொருளாதார கலாசார மற்றும் நில உரிமைகளையும் மற்றும் அவை தொடர்பான பாதுகாப்புகளையும் உறுதிப்படுத்துவதாக இருக்கும். அத்துடன் அவற்றின் முன்னேற்றகரமான வளர்ச்சிக்கும் துணையாக இருக்கும்.

இதேவேளை வடக்கு, கிழக்கு இணைந்திருந்தால் வடக்கைச் சேரந்தவர்களின் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்குமென கிழக்கு மாகாண தமிழர்களிடையே ஓர் அச்சம் இருக்கிறது. கடந்த கால அனுபவங்கள் இந்த அச்சத்தை உறுதிப்படுத்துகின்றன. அதே போல வடக்கு, கிழக்கு இணைந்தால் தாங்கள் மிகவும் சிறுபான்மையினராகி விடுவர் என்பதனால் தமக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமற் போய் விடும் என இங்குள்ள முஸ்லிம்கள் கருதுகிறார்கள். அவர்களது கடந்த கால அனுபவங்களும் அதனையே உறுதிப்படுத்துகின்றன. அத்தோடு வடக்கு, கிழக்கு இணைப்பானது தமது சமூக பொருளாதார முன்னேற்றங்களுக்குத் தடையாக அமையும் என அவர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறாக வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக எதிரும் புதிருமான உணர்வுகளே இங்கு மேலோங்கி நிற்கின்றன. 1980களில் சமூகங்களுக்கிடையில் இருந்த உறவு நிலைமைகளிலிருந்து பெரும் மாற்றங்களை கடந்த 30 ஆண்டு கால இலங்கையின் அரசியல் ஏற்படுத்தி விட்டது. எனவே இன்று நிலவும் யதார்த்தங்களுக்கு ஏற்றபடியே நாட்டின் அரசியற் பொருளாதாரமும் நகரும்.

கேள்வி: தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் இந்தியா எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளது என்று தாங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாண்டு ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த போது வெளிப்படுத்திய கருத்துதான் இந்தியாவின் நிலைப்பாடு என்பது உறுதியாகத் தெரிகிறது. இதில் புதிதாக எதுவுமில்லை. 'இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதற்காக மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடாத்த வேண்டும்' என்பதையே மீண்டும் மீண்டும் இந்திய அரசாங்கம் தனது அறிக்கைகளில் வெளியிடும் - இந்திய அமைச்சர்கள் பத்திரிகையாளர் மாநாடுகளில் கூறுவர் என எதிர்பார்க்கலாம். அது தொடர்பாக இந்தியா ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாதுள்ளது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டில் தமிழர்களினுடைய மக்கள் பிரதிகளுக்கும் சமூக பிரமுகர்களுக்கும் எவ்வளவு தூரம் உடன்பாடு உண்டு என்பது கேள்விக்குரிய ஒன்றாகும். அவை தொடர்பாக இவர்கள் என்ன நடைமுறை வேலைத் திட்டங்களை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் அக்கறையும் வெளிப்படும். இந்த விடயத்தில் இந்தியாவும் இலங்கையும் முரண்பட்டு இராஜதந்திர ரீதியான மோதல் நிலையை அடையும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம் ஆகும். 'தமிழர்களின் தேசம்', 'தமிழர்களின் சுயநிர்ணய உரிமை' என்ற கருத்துக்களையோ, தமிழர்களுக்கு சமஷ்டியே தீர்வு என்ற கோரிக்கையையோ இந்தியா ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 1983 – 1990 ஆண்டு காலகட்டத்தில் நிலவிய அரசியற் காட்சிகள் மீண்டும் வரப் போவதில்லை.

கேள்வி: இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமாக உள்ளதாக குற்றம் சாட்டப்படுவது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்த அரசாங்கம் மட்டுமல்ல, பிரித்தானியரின் காலனி ஆட்சியின் கீழ் 1931ம் ஆண்டு இலங்கையில் அரச சபை அமைக்கப்பட்ட காலத்தில் இருந்தே அதுதான் நிலைமை. இதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்று எந்த வேறுபாடும் கிடையாது. ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த போதும் அதையேதான் செய்தார். நாளை ஒருவேளை சஜித் பிரேமதாசா ஜனாதிபதியானாலும் அதையேதான் செய்வார். அதுதான் இலங்கையின் ஜனநாயகம் என ஆகி விட்டது. ஜே.வி.பி. எனும் மக்கள் விடுதலை முன்னணி கூட 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு எதிரான கட்சிதான். மாகாண சபை ஆட்சி முறைமையே தேவையில்லை என்பதுதான் அதனுடைய அரசியல் நிலைப்பாடு. வடக்கு, கிழக்கை பிரிப்பதற்கான அனைத்து வேலைகளையும் அந்தக் கட்சிதானே செய்தது!

வி.ரி.சகாதேவராஜா

 Courtesy: Thinakaran.lk Monday, May 17, 2021

No comments:

Post a Comment

US military basing to expand in Australia, directed against China -by Mike Head

  This week’s announcement of a new Australia-UK-US (AUKUS) military alliance, with the US and UK to supply Australia with nuclear-powered s...