பாசிசம் என்றால் என்ன?-– எம்.என்.ராய் எழுதிய ‘பாசிசம்’ நூலை முன்வைத்து பிரளயன்

 


அண்மைக்காலமாக சமூக அரசியலாளர்களால் மட்டுமல்ல ஊடகத்துறையினர் உட்பட பல தரப்பினராலும் ‘பாசிசம்’ என்கிற சொல் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். அதுவும் பி.ஜே.பி முன்னெடுக்கிற அரசியல் செயற்பாடுகளை அடையாளப்படுத்தவும் இனம் காட்டவும் பாசிசம் என்கிற சொல்லை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மையில் ‘பாசிசம்’ என்றால் என்ன?

பாசிசம்என்பதன் மூலச்சொல் இலத்தீனிலிருந்து பெறப்பட்டது. கீரை வாங்கும்போது ஒரு கத்தை கீரை என்று கேட்டு வாங்குவோமில்லையா, அந்த ‘கத்தை’ என்ற சொல்லின் பொருள்தான் பாசிசம் என்பதற்கும். ‘கட்டு’ , ‘கற்றை’ , ‘கத்தை’ அல்லது ‘மூட்டை’ [Bundle] என ‘பாசிசம்’ எனும் இச்சொல்லுக்குப் பொருள்கொள்ள லாமென விக்கிபீடியா சொல்கிறது. தனித்துள்ள ஒரு குச்சியை எளிதாக உடைத்துவிடலாம். அதே நேரத்தில் அவை ஒரு கட்டாக கட்டப்பட்டிருந்தால் குச்சிகளை எளிதில் உடைத்துவிடமுடியாதல்லவா அந்தப் புரிதலிலே இப்பெயர் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது. பலதும் சேர்ந்த ஓர் கூட்டமைப்பு என்ற பெயரிலும் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த ஒரு புரிதலில்தான் இத்தாலியில் தான் ஆரம்பித்த அரசியல் அமைப்புகளுக்கு புரட்சிகர நடவடிக்கைகளுக்கான கற்றை [Fasces of Revolutionary Action] போருக்கான இத்தாலியக் கற்றை [Italian Fasces of Combat] என்று தொடக்கத்தில் பெயர்வைத்த பெனிட்டோ முசோலினி சிலவருடங்களுக்குப்பிறகு தேசிய கற்றைக் கட்சி [National Fascist Party] என்று ஆரம்பித்து 1922 இல் இத்தாலியின் பிரதமராகவே ஆகிவிடுகிறார். முதல் உலகப்போருக்கு பின் இத்தாலியில் தேசிய கற்றைக் கட்சி [National Fascist Party] யினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக அரசியல் ‘சிந்தனைப்போக்கினையே’ வரலாற்றாளர்கள் பாசிசம் என இனம் காண்கிறார்கள்.

அளவற்ற எதேச்சதிகாரம், வன்முறை, ஆயுத பலம் இவற்றால் சமூகத்தைக் கட்டுப்படுத்துவது, இழந்து விட்ட புகழ்மிக்க ரோம சாம்ராஜ்யத்தை மீண்டும் கொண்டுவருவது என்கிற பெயரில் ரோமானிய இத்தாலியப் பெருமிதத்தை மக்களுக்குப் போதைச்சரக்கு போல ஊட்டிவளர்ப்பது, சிறுபான்மையினர் நலன், மாறுபட்ட கருத்துகள், வேறுபட்ட பண்பாடுகள் இவற்றை சுத்தமாக அழித்தொழித்து ஒற்றைப் பண்பாட்டை மிருகபலத்தோடு நிறுவுவது இவையே முசோலினியின் அரசியல் நடவடிக்கைகள்.

கம்யூனிஸ்டுகளின் சர்வதேச அமைப்பான மூன்றாம் அகிலத்தின் 7 வது உலக காங்கிரசுக்கு பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜார்ஜ் டிமிட்ரோவ், உழைக்கும் பெண்கள் இயக்கத்தின் மாபெரும் ஆளுமை கிளாரா ஜெட்கினுடன் இணைந்து 1935, ஆகஸ்ட்டில் அளித்த அதிகாரபூர்வ அறிக்கையில் பாசிசத்தை இவ்வாறு வரையறுக்கிறார்.

டிமிட்ரோவின் கூற்றுப்படி: “பாசிசம் என்பது முதலாளிவர்க்கம் – தொழிலாளி வர்க்கம் என்ற இருவர்க்கங்களுக்கும் மேலே நின்று இயங்குகிற ஓர் அரசு அதிகாரம் அல்ல. மேலும் அரசு இயந்திரத்தைக் கைப்பற்ற குட்டி முதலாளிகள் இயற்றிய ஒரு கலகக் கோட்பாடாகவும் இதனை வரையறுத்துவிடவியலாது. வர்க்கங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அல்லது வர்க்கங்களுக்குப் பொதுவான வர்க்கங்களுக்கு மேலான ஓர் அரசு அதிகாரமாகவோ குட்டி முதலாளிகளின் அரசாகவோ உதிரித் தொழிலாளர்கள் நிதி மூலதனத்தின் மீது மேலாண்மை செலுத்த முயல்கிற ஒன்றாகவோ இவற்றைப் புரிந்துகொள்ளக் கூடாது. பாசிசம் என்பது முற்றும் முதலுமாக நிதி மூலதனத்தின் அதிகாரமாகும். இது தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகள் மற்றும் அறிவுத்துறையினரது புரட்சிகர பிரிவினருக்கும் எதிரான பயங்கரவாத பழிவாங்கலின் வன்மமிக்க ஓர் அமைப்பாகும். வெளியுறவுக் கொள்கையில், பாசிசம், அதன் மிக மிருகத்தனமான வடிவத்தில் தேசிய வீறாப்பு பேசி, பிற நாடுகளின் மீது பகைமையை வெறுப்பைத் தூண்டுகிறது.பாசிசத்தினது வளர்ச்சியும், பாசிச சர்வாதிகாரமும், வெவ்வேறு நாடுகளில் அதனதன் வரலாறு, சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின்படி வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கின்றன. அத்தேசத்தின் தனித்தன்மை மற்றும் சர்வதேச அளவில் அந்நாட்டிற்கு அளிக்கப்படும் அந்தஸ்து, மதிப்பு இவற்றிற்கேற்ப அது வடிவம் கொள்கிறது.”

கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும்தான் பாசிசம் குறித்த கவலைகள் இருந்ததாக வரலாறு நமக்குச் சொல்லவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய எல்லா தரப்பினரும் ‘பாசிச அபாயம்’ குறித்த எச்சரிக்கையுணர்வோடு இருந்துள்ளனர்.  பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுமுள்ளனர்.  ஏனெனில் பாசிசம் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிடுகிறது.  கம்யூனிஸ்டுகள் அல்லாத, ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய சிந்தனையாளர்கள் பாசிசத்தை எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்று நாம் வலைதளத்தில் தேடினால், பலராலும் அதிகம் தேடப்பட்டு கண்டறியப்பட்டதாக நமது பார்வைக்கு வருவது, 2003 ஆம் ஆண்டில் லாரன்ஸ் ப்ரிட் (Laurence W. Britt) என்பவர் தனது “Fascism, Anyone?” (FI, Spring 2003), எனும் நூலில் அளிக்கிற விளக்கங்களாகும். பாசிசத்தை இனங்காண உதவும் 14 பண்புகளை அவர் அந்நூலில் வரிசைப்படுத்துகிறார்.

 1. தேசீய வாதம் : தனது நாடுதான் பிறநாடுகளை விட உயர்ந்தது என குடிமக்களை நம்பவைத்து  தேசபக்தி  உடுக்கடித்து மருள்கொள்ளச் செய்வது.
 2. உரிமை மறுப்பு: மனித உரிமைகள் மீது வெறுப்பினை உமிழ்வது
 3. பலிக்கடாக்கள் தேடல்: நாட்டினது பிரச்சினைகளுக்கு சம்பந்தமில்லாமல் எவரையாவது காரணம் காட்டி அவரைப் பலிகடாவாக்குவது. 
 4. ராணுவ வாதம்: அனைத்திற்கும் மேலாக ராணுவத்தை முன்னிறுத்துவது.
 5. பெண்களை விட ஆண்களே முக்கியமானவர்களென நாசூக்காக பரப்புரை செய்வது; சில நேரங்களில் பகிரங்கமாகவும் செய்வது.
 6. ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது. ஊடகங்கள் மற்றும் அனைத்து விதமான செய்தி தொடர்பு சாதனங்களெல்லாம் மக்களிடம் எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்பதை வரையறுக்கத் தொடங்குவது.
 7. தேசப் பாதுகாப்பின் மீது அதீத கவனத்தைக் குவிப்பது; தேசம் அச்சுறுத்தலுக்கு உள்ளாயிருப்பதாக வதந்திகளைப் பரப்பி பதற்றத்தை உருவாக்குவது
 8. மதத்தோடு  அரசாங்கத்தினை நெருக்கமான உறவுகளால் பின்னிப்பிணைப்பது.
 9. வர்த்தகம்  மற்றும் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களை கண்ணில் வைத்து பாதுகாப்பது.
 10. தொழிலாளர்களை அடக்கியொடுக்குவது; தொழிற்சங்கங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கியெறிந்து அவர்களை எழுந்து நிற்கக்கூட சக்தியற்றவர்களாக மாற்றுவது.
 11. கலைஞர்கள் அறிவுஜீவிகள் மீது வெறுப்பைக் கக்குவது; அறிவியலாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் இவர்களது சொற்களை மதிக்காதீரென மக்களுக்கு அறிவுறுத்துவது.
 12. நடைபெறும் குற்றச்செயல்களையும்  அக்குற்றச்செயல்கள் மீது எடுக்கப்படும் போலீஸ் நடவடிக்கைகளையும் பூதக்கண்ணாடி வைத்து பெரிதுபடுத்திக்காட்டுவது.
 1. ஊழலை அன்றாடமாக்குவது….அதிகாரவர்க்க மேல்தட்டினரும் [Power elite], பொருளாதார மேல்தட்டினரும் [Economic elite]  கூட்டு வைத்துக்கொண்டு, ஊழல் செய்து கொள்ளையடிப்பதை பரவலான நிகழ்வாக்குவது. இவ்வூழல் இருவிதத்தில் செயல்படும் . அதிகார மேல்தட்டினர், பெருமளவு பணத்தையும் சொத்துக்களையும் பரிசாகப்பெறுவர். பதிலுக்கு, ஈவிரக்கமின்றி கொள்ளையடிக்க பொருளாதார மேல்தட்டினருக்கு, தேச வளங்கள் திறந்துவிடப்படும். எல்லா விதிகளும் வளைக்கப்பட்டு, திருத்தப்பட்டு, ஆறுகளை, மலைகளை காடுகளை, கடற்கரையை இன்ன பிற வளங்களை குத்தகைக்கு விடுவது போன்றவை நடக்கும். தனது அதிகார பலத்தாலும் ஊடகங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவதன் மூலமும் இவ்வூழல்கள் பெருமளவுக்கு விவாதத்திற்கும் வெளிச்சத்திற்கும் வராமல் தடுக்கப்படும். அதனால் இவை பொதுமக்களால் சரியாக புரிந்துகொள்ளப்படாமலும் உணரப்படாமலும் போய்விடும்.
 2. தேர்தல் முறைகேடுகளை திட்டமிட்டுச் செய்வது. மக்கள் பெருமளவு பங்கேற்று வாக்களித்தாலும்  அவ்வாக்கு எண்ணிக்கையை நடத்தவிடாது இழுத்தடிப்பது அல்லது அந்நடைமுறையினை சீர்குலைப்பது. சில பாசிச அரசுகள்  தங்களை தேர்தலில் எதிர்த்து நிற்கும் எதிர்க்கட்சித்தலைவர்களை ஆள்வைத்து  தீர்த்துக்கட்டியுமுள்ளன.

உண்மையில் ஒரு ‘பாசிச அரசினை’ பட்டியலிடப்பட்ட இப்பண்புகளைக் கொண்டு மட்டும்  கண்டு பிடித்துவிட இயலாதுதான். எனினும் லாரன்ஸ் ப்ரிட், இதற்கு முன்னால் பாசிச அபாயம் குறித்து சிந்தித்த பலரது சிந்தனையாளர்களின் கருத்துக்களிலிருந்தே இப்பட்டியலை உருவாக்கினார் எனலாம்.

Umberto Eco – உம்பர்ட்டோ ஈகோ

லாரன்ஸ் பிரிட்டுக்கு முன்பே,1995 ஆம் ஆண்டில், குறியீட்டியலாளரும் ஊடகங்கள், பண்பாடு இவை தொழிற்படும் விதம் குறித்து உரத்து சிந்தித்தவருமான உம்பர்ட்டோ-ஈகோ, தனது நிஜ-பாசிசம் [Ur-Fascism]  எனும் நூலில் பாசிசத்தின் 14 பண்புகளை வரிசைப்படுத்துகிறார்.

 1. மரபு குறித்த கண்மூடித்தனமான வழிபாடு.
 2. நவீனத்துவத்தை நிராகரிப்பது.
 3. மேலோட்ட மான செயல்பாடுகளை நடைமுறையாக்குவது. அதாவது ஒப்புக்காவது எதையாவது செய்வது.[இந்திய அரசின் எந்தச் செயல்பாட்டை இதனோடு ஒப்பிடலாமென்பதை நீங்கள் யூகியுங்கள்]
 4. கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதை அல்லது மறுப்பு தெரிவிப்பதை தேசத்துரோகமாகக் கருதுவது.
 5. மாறுபட்ட பண்பாடுகளை, வித்தியாசமான வாழ்முறைகளைக் கண்டு அஞ்சுவது.
 6. விரக்தியடைந்துள்ள நடுத்தர வர்க்கத்தினை தாஜா செய்து அவர்களை அடித்தட்டு மக்களுக்கெதிராக உசுப்பிவிடுவது.
 7. தமக்கு எதிராக பெரிய சதிகள் நடப்பதாக தமது பின்னால் திரண்டவர்களை, தமது ஆதரவாளர்களைஆவேசம் கொள்ளச்செய்வது; சதிகளால் தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக அவர்களை நம்பச்செய்வது.
 8. எதிராளிகளின் பகட்டுமிக்க செல்வத்தினாலும்  அவர்களது பலத்த செல்வாக்கினாலும் தான் அவமானப்படுத்தப்பட்டதாக தனது தொண்டரடிப் பொடிகளை நம்பச்செய்வது; வேப்பிலை அடிப்பது. எதிராளி பலமானவராகவும் இருக்கலாம்; பலவீனராகவுமிருக்கலாம். அவர்களது பலம்,பலவீனம் மீதான கவனக்குவிப்பை தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டேயிருப்பது.
 9. வாழ்க்கையென்பதே ஒரு நிரந்தரமான யுத்தம்தான். இதில் சமாதானம் அமைதி என்று பேசுவதெல்லாம் முற்றிலுமாக எதிரியிடம் நம் தலையைக் கொடுப்பதற்கு ஒப்பாகும் என்று பரப்புரை செய்வது. அதாவது வாழ்க்கையென்பது ஒரு போராட்டம்தான் என்று சொல்வதற்குப்பதிலாக நீ போராடுவதற்குத்தான் ஜென்மம் எடுத்தாய் என மந்திரித்துவிடுவது.
 10. ஏழைகளை, பலவீனமானவர்களை அவமதிப்பது; அவர்களுக்கு இடமில்லாமலாக்குவது. 
 11. எல்லோரும் ஒரு வீரராக [ஹீரோவாக] இருக்க வேண்டுமென பயிற்றுவிப்பது; வீர வழிபாட்டை ஊக்குவிப்பது. வீர வழிபாடு – வீர மரணத்தோடு தொடர்புடையது. அதாவது அவர்களை வீர மரணத்திற்கு தயார்செய்வது. 
 12. ஆணெனும் பெருமிதத்தை ஊட்டிவளர்ப்பது. இங்கே ஆண் பெருமிதமென்பது பெண்களை இழிவாகப்பார்த்தல், கற்புக்கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தல், பாலியல் உறவுகளில் உயர்வு-தாழ்வு என தர நிர்ணயம் செய்தல், குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது, மாற்றுப்பாலியல் விழைவுகளின்  மீது, சகிப்பின்மையினை வெளிப்படுத்துதல், வெறுப்பை உமிழ்தல், வன்மம் கொள்ளுதல் இவற்றோடு  தொடர்புடையது.
 13. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனரஞ்சகவாதம். இப்போது டிவி மற்றும் இணைய வழி பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஒரு குறிப்பிட்ட மக்கள் பகுதியினர் ஆற்றும் எதிர்வினைகளை அவர்களது ரசனையை ஒட்டுமொத்த மக்களது ரசனை உணர்வாக முன்னிறுத்தும் போக்கு இருக்கிறதல்லவா, அது போல அரசியல் தளத்திலும் குறிப்பிட்ட பகுதியினரின் எதிர்வினைகளை ஒட்டுமொத்த மக்களுடைய குரலாக முன்னிறுத்துவது.  
 14. புதுப்பேச்சு [Newspeak] சாரமற்ற சொற்களைப் பேசுவது; வார்த்தை விளையாட்டு. 

பாசிச அரசுகள் உருவாக்கிய பாடநூல்கள் இதற்கு நல்ல உதாரணம். சாரமிழந்த மலினமான தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த சொற்களிலேயே எல்லாவற்றையும் விளக்க முற்பட்டு அர்த்தத்தைக் குறுக்குவது. சிக்கல் மிக்க எதார்த்த சூழலை குறிக்கிற, விமர்சன விழிப்புணர்வை தூண்டக்கூடிய சொற்களை சொற்றொடர்களை திட்டமிட்டு தவிர்ப்பார்கள். இன்றைக்கு இந்தியச்சூழலில் ஆள்வோர் பிதற்றிக்கொண்டிருக்கிற பல சொற்களை உதாரணமாகச்சொல்லலாம். [இந்த ‘நியூ ஸ்பீக்’ எனபது குறித்து மேலும் நாம் ஆழமாக விவாதித்திடவேண்டும்.]

மேலே குறிப்பிட்ட ஜனநாயக விரோத மக்கள் விரோத அடாவடித்தனங்கள் பல,  இன்றைக்கு பல நாடுகளின் அரசுகளது செயல்பாடுகளாக இருந்து வருவதைப் பார்க்கலாம். எனினும் இவற்றை இரண்டாம் உலகப்போருக்கு முன்பிருந்த  இத்தாலி ,ஜெர்மனி போன்ற பாசிச அரசுகளோடு ஒப்பிடமுடியுமா என்கிற கேள்வியும் நமக்கு எழலாம். உண்மையில் பாசிச அரசு என்பது அரசு இயந்திரம் முழுக்க பாசிச மயமாகிவிட்ட  ஓர் அரசினையே குறிக்கும். அப்படியெனில் இந்திய அரசு முழுதுமாய் பாசிச மயமாகிவிட்டதா அப்படி இல்லாதபோது பிஜேபி  அரசினை பாசிச அரசு எனச்சொல்லவியலுமா என சில சிந்தனையாளர்கள் கேள்வியெழுப்பினர். உண்மையில் இந்திய அரசு முற்றிலுமாக பாசிச  மயமாகிவிடவில்லை. இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் அதனை அவ்வாறு மாற்றிவிடுவதற்கு இன்னும் பெருந்தடையாகவே உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்தியா, பாசிச அரசாக மாறிவிடவில்லை. பாசிச சக்திகளால் ஆளப்பட்டு வருகிறது. பாசிச சக்திகள் ஆட்சியதிகாரத்திலிருந்து கொண்டு அரசினையும் நாட்டின் அரசியல் சமூக சூழலையும் ‘பாசிசத்தை நோக்கி’ அழைத்துச்செல்ல  அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கின்றனர் எனச் சொல்லவியலும்.

பொருளாதார அறிஞரும், இடதுசாரி சிந்தனையாளருமான பிரபாத் பட்நாயக்,  அயோத்தியாவிலிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதே பிஜேபியினை ஒரு ‘பாசிச சக்தி’ என்றே வர்ணித்தார். எல்லோரும் பிஜேபியினை ‘வகுப்புவாதிகள்’  ‘வகுப்பு வெறியர்கள்’ என அழைத்துக்கொண்டிருக்கும் போது அவர் இவ்வாறு வரையறுத்தார். 1993 ஆம் ஆண்டில் சோசியல் சயின்டிஸ்ட் இதழுக்கு அவர் எழுதிய ‘நமது காலத்தின் பாசிசம்’ எனும் கட்டுரையில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

 “அயோத்தியாவில் நடைபெற்ற அட்டூழியங்கள், அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல கொடூரங்கள் பற்றி விவரிப்பவர்கள் பலரும் நம் நாட்டில்  பாசிசம் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது எனச் சொல்வதற்குப் பதிலாக ‘வகுப்புவாதம்’ என்கிற வார்த்தைப் பிரயோகத்தோடே நின்றுவிடுகின்றனர்.  

என் பார்வையில், பம்பாய் மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நடந்த இனவாத படுகொலைகள் மற்றும்  திட்டமிட்டு நடத்தப்பட்ட அழித்தொழிப்புகள் என்பவை மிகவும் ஆழமாகப் புரையோடிப் போயுள்ள ஒரு வஞ்சகப்போக்கின் வெளிப்பாடாகும்; பாசிசம் தலையெடுக்கிறது என்பதை நமக்குத் தெளிவாக உரைக்கிற நிகழ்வுகளாகும். சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த  எப்போதோ நடக்கும் ஒரு  நிகழ்வாகவோ, தவறுதலாக நிகழ்ந்துவிட்ட  சம்பவங்களாக மட்டுமோ இவற்றை நாம் கருதவியலாது. வன்முறையின் வகுப்புவாத இயல்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை ஆனால் நம் நாட்டில் பாசிசம் எடுக்கும் வடிவம் வகுப்புவாதம் என்று நான் வாதிடுகிறேன்.”

பி.ஜே.பியினர் தேர்தல் களத்தில் வென்று ஆட்சியைப்பிடிப்பார்களென தெளிவாக அறுதியிட்டுச் சொல்ல முடியாத 28 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட கருத்துகள் இவை. ஆனால், வகுப்புவாத ஹோமம் வளர்த்து இன்றைக்கு பாசிச சக்திகள் ஆட்சியதிகாரத்திலே வந்து அமர்ந்துவிட்டனர். மேலும் இன்றைய ஆளும் சக்திகளை இரண்டாம் உலகப்போருக்குப் பின் அதாவது ஜெர்மன், இத்தாலியின் வீழ்ச்சிக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில்  உருவான ‘நவ-பாசிசம்’ எனும் போக்கோடு ஒப்பிடுகிறார் பிரபாத் பட்நாயக். “நவ பாசிசத்தின் ஓர் அடிப்படையான கூறு அதன் செவ்வியல் முன்னோடிகளைப் போலவே ‘மற்றமையைப்’ பூதமாக்குதலாகும்; அதாவது இந்தியாவில் முஸ்லீம்கள், அமெரிக்கா, பிரேஸில் போன்ற நாடுகளில் இனச் சிறுபான்மையினர் [எ-கா : ஆப்ரிக்க-அமெரிக்கர்கள்] மற்றும் பாலியல் சிறுபான்மையினர்களை [ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கையர் திருநம்பியர் போன்ற மாற்றுப் பாலினத்தவர்]  பூதமாக்குவதாகும்.  நிச்சயமாக இது ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறுவிதமாக வெளிப்படும்; கிளைக்கும். இப்படி ‘மற்றவரை’ வில்லனாக்குவது பூதமாக்குவது என்பது பலவித ரூபங்களை எடுக்கும். 

அது எப்போதும் அச்சமூகத்தில் நிலவுகிற பொருளாதார இக்கட்டுகளை, சீரழிவுகளை கவனத்தில் கொள்ளாது.  மாறாக, கடந்த காலத்தில், சிறுபான்மை சமூகத்தினரால், பெரும்பான்மை சமூகத்தினரின்  பெருமைகள் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக சோடனைகள் செய்து அப்படி ‘இழந்துவிட்ட பெருமைகளை’ மீட்டெடுக்கிற தேவைகளை பெரும்பான்மை சமூகத்தின் கடமைகளாக முன்னிறுத்தும். இந்த சிறுபான்மையினர்களுக்காக மிகவும் அலட்டிக்கொள்பவர்களாகவும் அவர்களைத் தாஜா செய்கிற  அரசியல் செய்கிறவர்களாகவும் பாசிசத்தைப் பின்பற்றாத அரசுகள், அரசியல் சக்திகள் குற்றம் சாட்டப்படும்.’’

பாசிச அரசு வந்தால் பிறகு தேர்தலே இருக்காது. இப்போது தேர்தல்கள் நடக்கிறதே என்பார்கள் சிலர். கடந்த காலத்தவறுகளிலிருந்து யார் கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ ,ஆளும் வர்க்கங்களும், பாசிச சக்திகளும் நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இச்சூழலை பிரபாத் பட்நாயக் மேலும் விளக்குகிறார். “மைக்கேல் கலேக்கி [1943/71] எனும் அறிஞர் உதிர்த்த மிகவும் பிரபலமான   “பாசிசத்தின் கீழ் அடுத்த அரசு என்பதொன்றில்லை” என்கிற கூற்றுக்களெல்லாம்  தற்போது செல்லுபடியாகுமா எனத்தெரியவில்லை . இருப்பினும் சமகால பாசிசம் இன்னும் சில நாள் இருந்துகொண்டிருக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.

பாசிசம், அரசு இயந்திரம் முழுவதையுமே பாசிசத்தினை நோக்கி முடுக்கினால் அதனால் ஏற்படும் பேராபத்து என்பது மிகவும் தெள்ளத் தெளிவானது; வெளிப்படையானது. இருப்பினும் அது ‘தேர்தல் விளையாட்டை’  விளையாடி, மக்களளித்த வாக்குகளால் அதிகாரத்தை விட்டு வெளியேற்றப்பட்டாலும், எதிர்கட்சியாக இருந்து கொண்டு அது இன்னும் ஒரு மாற்றாகத் தொடரவும்,  சிறிது காலம் கழித்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவும், அரசியல் தளத்தை, சமூகத்தை நிச்சயமாக படிப்படியாக பாசிச மயமாக்கவும், மனிதாபிமான அணுகு முறைகளை, ஜனநாயக  உணர்வுகளை, முற்போக்கு என்பது கூட அல்ல குறைந்த பட்ச தாராளவாத சிந்தனைகளைக்கூட  முழுதுமாக மூச்சுத் திணற வைத்து சாகடிக்கவும் செய்துவிடும்.”

எனவே பாசிச அபாயம் என்பது பற்றிய பிரக்ஞை நமக்குள் தணல் விட்டு எரிந்து கொண்டேயிருத்தல் வேண்டும். எல்லா நவீன சமூகங்களின் விளிம்புகளிலும் நவ-பாசிச சக்திகள் இருந்துகொண்டுதானிருக்கின்றன. தேவைப்படும்போது கார்ப்பரேட் மற்றும்  நிதி மூலதனங்களின் ஆதரவோடு அவை மையத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. எனவே பாசிசத்தை, அதன் வரலாற்றை, உரு மாற்றங்களைப் புரிந்து கொண்டு அதன் ஒவ்வொரு அசைவினையும் மக்கள் முன் வெளிச்சமிட்டுக்காட்டி  அம்பலமாக்க வேண்டிய ஓர் அரசியல் கடமை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களது, முற்போக்காளர்களது  தோள்களின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

M.N.Roy

இந்த நெடிய போராட்டத்திற்கான கருத்தாயுதங்களில் ஒன்றாக எம்.என்.ராய் (M.N.Roy) எழுதிய ‘பாசிசம்’ எனும் இந்நூல் நமக்கு உதவக்கூடும். இந்நூலை எழுதிய எம்.என்.ராய் இந்தியாவின் முன்னோடி கம்யூனிஸ்டுகளில் ஒருவர். லெனின்,ஸ்டாலின் ஆகியோரோடு நேரடியான பரிச்சயம் உள்ளவர்; அவர்களோடு இணைந்து பணியாற்றியவர். கம்யூனிஸ்டுகளின் சர்வதேச அமைப்பான மூன்றாவது அகிலத்தில் பணியாற்றியவர். மிகவும் அதிகமாக எழுதியவரும் கூட.

7 அத்தியாயங்களைக்கொண்ட  ‘பாசிசம்’ எனும் இந்நூலுக்கு சிறப்பானதொரு முன்னுரையினை அ. மார்க்ஸ் எழுதியுள்ளார். அம்முன்னுரையில் இந்நூலைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். “பாசிசம் குறித்தும் ஹிட்லர் முசோலினி மற்றும் அன்றைய பாசிச த்தத்துவவியலாளர்கள் குறித்தும் இன்று நூற்றுக்கணக்கான ஆழமான ஆய்வுகள் உலகளவில் வெளி வந்துள்ளன. 1936இல் எழுதப்பட்டு 1938 இல் வெளிவந்த இந்நூல் அவை எல்லாவற்றிலுமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று. இதை நாம் புரிந்து கொள்வது அவசியம். ஐரோப்பிய பாசிசத்தின் தத்துவ மூல கர்த்தாக்களான ஆர்தர் ஷோபன் ஹேயர்,  ஃப்ரெட்ரிக் நீட்ஷே , ஹென்றி பெர்க்சன் ஆகிய மூவரின் கருத்தாக்கங்கள் இந்தியச் சிந்தனை மரபுகளிலிருந்து ஊக்கம் கொண்டு  உருவாயின என்பதை விளக்குவதாகத்தான் 184 பக்கங்கள் உள்ள இந்நூலின் முதல் 90 பக்கங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.” [முன்னுரையில் அ.மார்க்ஸ்,பக்கம்-17]

“மேன்மையான உபநிடதத் தத்துவத்திலிருந்து ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்கான ஒரு கருத்தியலும் அதைத்தொடர்ந்து பாசிசத்திற்கான ஒரு கருத்தியலும் கட்டமைக்கப்பட்டது இப்படித்தான். இவ்வாறு சொல்வது கொச்சைப் படுத்துவதாகவோ அல்லது அவதூறு பொழிவதாகவோ ஆகிவிடாது. எந்த ஒரு சட்டத்திற்கும் கட்டுப்படாமல் இவ்வுலகு சாராத ஒரு பரம்பொருள் இருக்கிறது என்ற ஊகத்தின் தர்க்க ரீதியான விளைவே பூமியில் நடைபெறும் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை நியாயப்படுத்துவதில் முடிவடைகிறது.. இந்த ஊகம் தான் இந்தியத் தத்துவத்தின் அடிப்படையாகும்.” [பக்கம் 68] “நீட்சேயின் ‘ சுதந்திர- ஆன்மாக்கள்’ கடவுளின் வாரிசுகளான ‘பூதேவர்கள்’ [பார்ப்பனர்கள்] வசம் ஒப்படைக்கப்பட் இருந்தது. அதனாலேதான் அவர்கள் இயல்பிலேயே ஆட்சியாளர்களாகவும் அடக்குமுறையாளர்களாகவும் இருந்தனர். ஏதுமற்ற நிலையில் வைக்கப்பட்டதும் அநியாயமான முறையில் கையாளப்பட்டதுமான “மனித மந்தைகளை ஆட்சி செலுத்தவும், அடிமைப்படுத்தவும்” இவர்கள் இயல்பாகவே உரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மனித உறவுகள் குறித்த இந்தக் கொதிப்பூட்டும் கருத்தானது, மனிதனின் தவிர்க்க முடியாத இழிநிலையையும் ,கேடு கெட்ட நிலையையும் பற்றிய ஷோபன் ஹேயர் கோட்பாட்டின்  தர்க்க  ரீதியான விளைவாகும். இந்தக் கருத்துதான் நீட்சேயை ஒரு வெறி பிடித்த சோசலிச-விரோதியாக மாற்றிவிட்டது. மார்க்சியத்திற்கு எதிராக பாசிசம் தொடுத்த போரில் அதன் உடனடிக் கருத்தியல் தூதராக நீட்சே வரலாற்றில் இவ்வாறுதான் இடம் பெற்றார்.”[பக்கம் 69] உபநிடதங்கள் போதிக்கிற இந்திய ஆன்மீகத் தத்துவத்திலிருந்து  உந்துதல் பெற்றுதான் நீட்ஷேவும் , ஆர்தர் ஷோபன் ஹேயரும் தனது ‘அதி மனிதன்’ குறித்த கருத்தாக்கங்களை முன்வைக்கின்றனர்’ . இக் கருத்தாக்கங்கள் தான் உயர் இனம் [Super race]  குறித்த அவர்களது வரைவுகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது.

எம்.என்.ராயின் ‘பாசிசம்’ நூல் இதைத்தான், தெள்ளத்தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தோழர். இல கோவிந்தசாமி, நூலாசிரியர் முன்வைக்கும் கருத்துக்களை  அதன் தர்க்க கட்டமைப்பு சிதையாமல் மொழியாக்கம் செய்துள்ளார். நல்ல பல நூல்களை நமக்குத் தந்துள்ள சிவ.செந்தில்நாதனின் ‘பரிசல்’ பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. பாசிச எதிர்ப்புப் போரில் ஈடுபடும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் இது.

நான்  ஒன்றைச் சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாமென்று நினைக்கிறேன். நான் அண்மையில் ஒரு காணொளிப் பதிவினைப் பார்த்தேன். ஓர் ஆர்.எஸ் எஸ். காரர் அக்காணொளியில் பேசுகிறார். “ஓர் இந்துங்கிறவன் பிறக்கிறபோதே ஒரு அப்பாயிண்மெண்ட் ஆர்டரோடத்தான் பிறக்கிறான். பிறக்கிற போதே அவன் என்னவேலைக்குப் போறதுன்னு தீர்மானம் ஆகிவிடுகிறது. வேறெந்தவொரு மதத்திலும் இப்படியொரு விசேஷம் கிடையாது!”  அரியதோர் உண்மையைக் கண்டறிந்து சொல்வது போல ஒரு பெருமிதமும் உற்சாகமும் பொங்குகிற முகபாவத்தில் ஓர் உடல்மொழியில் அவர் இதனைச் சொல்லிக் கொண்டிருந்தார். சலவைத்தொழிலாளர் வீட்டில் பிறந்த குழந்தை சலவைத்தொழிலாளர் வேலைக்கு அப்பாயிண்மெண்ட் ஆர்டரோடு பிறக்கிறது. பனை ஏறுகிறவர் வீட்டில் பிறந்த குழந்தை, பனை ஏறும் வேலைக்கு, அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு பிறக்கிறது. இப்படி விளக்கமாக அவர் சொல்லாததுதான் ஒரு குறை.

அதனை ‘ஆஹா’ என தலையாட்டியும் சிலாகித்தும் அங்கே கேட்டுக்கொண்டிருந்த எவரும் படிப்பறிவில்லாத பாமரர்கள் அல்ல; நன்கு படித்த நடுத்தரவர்க்கத்தினர்தாம். உண்மையில் இப்படியெல்லாம் பேசுவதற்கு அவர்களுக்கு நெஞ்சுரம் எங்கிருந்து வருகிறது? பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கிற  ‘வர்ண-சாதி’ முறை இந்திய சமூகத்தின் இழிவு என்கிறது நமது பகுத்தறிவு. இப்படி எந்த ஒரு கருத்தாக்கத்தை நவீன உலகும் நாகரீக சமூகமும் இழித்தும் பழித்தும் பேசிக்கொண்டிருக்கிறதோ அது குறித்துப் பெருமிதம் பேசுகிற ஒரு மரபு இங்கே இருந்துகொண்டிருக்கிறது. அம்மரபிலிருந்துதான் பாசிசம் உந்துதல் பெறுகிறது. எம்.என்.ராயின் ‘பாசிசம்’ நூல் சொல்வது அதைத்தான். எனவே நண்பர்களே, நாம் உறங்கச் செல்வதற்கு முன் இன்னும் பல காதங்களைக் கடக்கவேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...